ஊர்
சொந்த ஊருக்கு வந்திருந்தான் தனபாலன். மிக நீண்ட காலத்துக்குப் பிறகு. யுத்தம் முடிந்து பலர் ஊர் போய் வருகிறார்களென்பது தெரிந்த பிறகு அவனெடுத்த முடிவு. ஒரு மாதத்துக்கு அங்கே தங்குகிற மாதிரித்தான் வந்துமிருந்தான். இரத்த அழுத்த நோய்க்கும், லேசான நீரிழிவு நோய்க்குமாக ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துக் குளிசைகள் கொண்டுவந்திருந்தான். மனைவி வற்புறுத்திக் கொடுத்தனுப்பிய நுளம்புகளை விரட்டுவதற்கு உடம்பிலே பூசுகிற களிம்பும் அவனிடம் இருந்தது. இவையெல்லாம் புறப்படுகிற முதல் வாரத்தில் செய்யப்பட்ட ஆயத்தங்கள். மூன்று மாதங்களுக்கு முன்னரே வீட்டுவேலைகள் சிற்றப்பாமூலம் ஊரிலே முடிக்கப்பட்டிருந்தன. யுத்த காலத்தில் சுவர்களில் விழுந்திருந்த குண்டுக் காயங்கள் பூசப்பட்டன. உடைந்த ஓடுகள் மாற்றப்பட்டன. கழன்றிருந்த ஜன்னல் கதவுகள் புதிதாகப் பொருத்தப்பட்டன. தூசி தட்டி, கழுவி குடியிருப்பதற்குத் தயாராக வீடு சகலமும் செய்யப்பட்டிருந்தன. தனபாலன் வருவதுதான் பாக்கியாக இருந்தது. அவனது சிற்றப்பா குடும்பம், தனபாலன் வருவதாகச் சொல்லும் ஒவ்வொரு புதிய திகதியிலும் ஆவலாதியாய் அலைந்துகொண்டிருந்தது. ஒருநாள் திடீரென ...