எம்மா- சிறுகதை
எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவைக்க அவளால் கூடவில்லை. அங்கேயே நடந்திருந்ததும், வெவ்வேறு இடங்களில் நடந்ததாய்க் கேட்டிருந்ததுமான அதுபோன்ற சம்பவங்கள்கூட எம்மாவுக்கும் சண்முகநாதனுக்குமிடையே உள்ளோடியிருந்த மனவுணர்வைப் புரிந்துகொள்ள போதுமானவையல்ல என்பதாய் அவளுக்குத் தெரிந்தது. பழகியவர்களும் புரிந்திட முடியாதளவு அதில் புதிர்கள் நிறைந்து கிடந்தன. அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆறு வருஷ அனுபவத்தில் ஒரு ஆணினதும் பெண்ணினதுமான நெருக்கத்தில் எழுந்த கதைகள் வெறும் வதந்திகளாய்க் கரைந்தழிந்ததை அவள் நிறையக் கண்டிருந்தாள். இருந்தும் அவர்கள் விஷயத்தில் ஏதோவொன்று இருக்கவே செய்கிறதென்று மனத்துள் குடைந்துகொண்டிருந்த எண்ணத்தை அவளால் துடைக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாகவெனினும் எம்மாவோடு நெருக்கமான பழக்கமுண்டு லட்சுமிக்கு . வீடுகள் அண்மையில் இருந்ததில், வாகன வசதியற்றவர்களுக்கு அந்தச் சமீபத்தின் வெளிகூட சிரமத்தில் க...