நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.) கேள்வி 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் அண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற்றியும் குறிப்பாக உங்களது முக்கியமான நாவல்கள்பற்றியுமே இந்நேர்காணலில் முக்கியப்படுத்த எண்ணியிருக்கிறோம். உங்களது முக்கியமான நாவல்கள்பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் முதல் நாவல்பற்றிய எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா? பதில்: இந்த வித்தியாசமான ஆரம்பம் எனக்குப் பிடித்திருக்கிறது. பள்ளியில் வினாக்களுக்கான விடையெழுதுதல், தமிழ்ப் பாடத்தில் கட்டுரை மற்றும் சுருக்கம் எழுதுதல...