
'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து… -தேவகாந்தன்- மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது. 'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் 'தென்னிலங்கைக் கவிதைகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை. 'அம்மை'யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினைய...