ஏ.எச்.எம்.நவாஷின் நூல் குறித்த ஒரு கண்ணோட்டம் -தேவகாந்தன்-
‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது ஜீவநதி அலுவலகத்தில் வாங்கிவந்திருந்த ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி) ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ என்கிற நூலை சமீபத்தில் வாசிக்க முடிந்திருந்தது. நூலையும் ஜீவநதியே வெளியிட்டிருக்கிறது. அதன் 54வது வெளியீடு அது. அடக்கமான அழகிய பதிப்பு. ஆச்சரியமாக இருந்தது, இன்றைய காலகட்டத்து இலங்கைத் தமிழிலக்கியத்திற்குத் தேவையான விமர்சனக் கூறுகளையும் கண்ணோட்டத்தையும் நூல் தாங்கியிருந்தது காண. 2015இல் வெளிவந்த நூல் இன்றுவரை கவனம் ஆகியிருக்கவில்லையே என மனம் கனத்தது. ஜீவநதியைப் பாராட்டுகிற வேளையில் அதற்கான வருத்தத்தையும் கொஞ்சம் பட்டுக்கொள்ளவேண்டும். இதை வாசிக்க நேர்ந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. அண்மைக் காலமாக ‘வாசிப்பு’ பற்றிய மீளாய்வுகளும் தேடல்களும் ஓர் அவசியத் தேவையாய் என் மனத்தில் ஊன்றியிருந்த வேளையில், இந்நூல் ஓரெல்லையை நோக்கி நகர்வதற்கான வழியினைத் திறந்துவிட்டதாய்ப் பட்டது. அது வாசிப்பு, குறிப்பாக வாசக மைய விமர்சனம், சார்ந்தது. பரவசத்தின் எல்லையில் நிற்க வாசகனைக் கூவி அழைத்துக்கொண்டிருந்த ...