நினைவேற்றம் 7
முனை 7 மனிதப் பரம்பல் உயிர்வாழ்தலின் நிமித்தத்தில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்த காலத்தில் உருவான கிராமமது. அதன் மூன்று திக்குகளிலும் வயல் நிலங்கள் இருந்திருந்தன. அவற்றினுக்குமப்பால் தரைவைக் கடல்கள். மழை காலத்தில்மட்டும் நீர் கொண்டு, கோடையில் காய்ந்து சுரிபட்டும் பொருக்கு நிறைந்துமாய்க் கிடக்கும் வெளி. அவை தம்முள் தொடுப்புண்டிருந்தன. மேற்குத் தரைவைக் கடல் தீவின் மேற்குச் சமுத்திரத்தோடு ஓடி இணைவதாய் இருந்தது. குடியிருப்பு அமைந்த காலத்தில் அதன் நீரோடு வழிகள் வாய்க்கால்களெனப் பெயர்கொண்டிருந்தன. பின்னால் அவையே மக்களின் வண்டி மற்றும் நடைப் பயணங்களுக்கு பாதையாகியபோது ஒழுங்கைகள் எனப் பெயரெடுத்தன. நான் சிறுவனாயிருந்த காலத்தில் கோடையில் மணலும், மாரியில் நீரும் தவிர வேறேதும் நான் அவற்றில் கண்டிருக்கவில்லை. பனை மரங்கள் நிறைந்த காடுகள் எங்கெங்கும் காணக்கிடந்தன அக்கிராமத்தில். அவற்றுள் பாளை கங்குமட்டை காவோலைகள் பொறுக்கவெனவும் இயற்கை உபாதைகள் கழிக்கவுமென அக்காட்டை ஊடறுக்கையில் வடலிக் கருக்குக் கிழித்த காயத்தோடு எப்போதும் ஒருவராவது காணப்பட்டனர். காற்றுக் காலத்தில் பனையின் தலைகளில் தொங்கிக...