நினைவேற்றம்: நாணயமூர்த்தியின் கடன்
நான் உயர்கல்வி பயின்ற டிறிபேர்க் கல்லூரியை எப்போதாவது நினைக்கிற தருணங்களில் தானும் அதனோடு ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது சாவகச்சேரி பஸ் நிலையம். அத்தனைக்கு நெடுஞ்சாலையின் ஒடுங்கிய அவ்விடத்தில் கல்லூரி வாசலுக்கு நேரெதிரில் மிக அணுக்கமாக இருந்திருந்தது அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக் காலில் கல்லூரி ஸ்தாபிதமாகியிருந்ததால், அதற்குப் பிறகுதான் பஸ் நிலையத்தை அந்த இடத்திலே அமைத்திருப்பார்களென்றாலும், அந்த இடத்தில் அதன் அமைவு ஏட்டிக்குப் போட்டியானதுபோல் நீண்டகாலமாய் எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. பஸ் நிலையத்தின் ஓர் ஓரத்தில் கைவாளிக் கிணறு ஒன்று இருந்தது. மறுவோரத்தில் ஒரு பயணிகள் தங்குமிடம், தள்ளி ஒரு மலசலகூடம் ஆதியனவும். அருகிலே சந்தைக் கட்டிடம் இருந்தது. கட்டிடமென்பது திறந்தவெளியில் அமைந்த சில கூடங்களும் இரண்டு பக்க ஓரங்களிலுமிருந்த பலசரக்குக் கடைகளும்தான். எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் கட்டிட கூடத்தில் பிரபலமாயிருந்தவை உடுப்பு மற்றும் துணிக் கடைகளும், ‘மணிக் கடை’களும்தான். அங்கே பெண்கள் அதிகமாகக் கூடியதனாலேயே ஆண்களின் தொகையும் அதிகமாக இருந்ததுபோல் தெரிந்தது. ச...