நினைவேற்றம்: மூலைக் கல்
‘கடந்த காலப் பிரதேசங்களுக்குத் திரும்ப வரும்போது எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திக்கொள்ளவே ஞாபகங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன’ என ‘கடல்’ நாவல் நாயகனது எண்ணமாக வரும் ஒரு சந்தர்ப்பத்தை ஆசிரியர் ஜோன் பான்வில் விவரித்திருப்பார். மனங்களும் ஞாபகங்களும் சார்ந்த சரியான கணிப்பாக, கடந்த 2018இல் நான் எனதூர் சென்று திரும்பிய பின் கிளர்ந்த ஞாபகங்களின் பொருந்திப்போதல் சம்பந்தமான இடர்ப்பாடுகளினால் உணர முடிந்திருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அண்மையில்தான் இருந்தது நடேசபிள்ளையின் வீடு. இடையிலே சில வீடுகளும், குடிமனையற்ற ஒரு பெரிய வெறுங்காணியும். அதை பாம்புக் காணியென்று யாரும் சொல்லாவிட்டாலும், பாம்புகள் பிணைந்து முறுகி ஊர்ந்து திரியும் அயல் என்பதன் பயம்மட்டும் இருந்துகொண்டிருந்தது. அந்தக் காணிக்குள் ஒரு அழிநிலை எய்திய ஒரு கட்டுக் கிணறும், அலைந்து திரியும் கால்நடைகள் வெளியிலிருந்து நீரருந்துவதற்காக கட்டப்பட்ட உடைந்த தொட்டியும், அதற்கு கிணற்றிலிருந்து நீரிறைப்பதற்கான ஒரு செடிகள் முளைத்த, வெடிப்புகள் விழுந்ததுமான சுமார் நூற்றைம்பது அடி நீள வாய்க்கா...