‘மாயினி’யும், நாவலும், எஸ்.பொ.வும்
எஸ்.பொ.வென இலக்கியவாதிகளாலும், ‘பொன்னு’வென நண்பர்களாலும் அழைக்கப்பட்ட எஸ்.பொன்னுத்துரை (1932-2014)யின் படைப்புகள்பற்றி 2006இலும் 2011இலுமாக என்னால் எழுதப்பட்ட இரண்டு வியாசங்கள் அண்மையில் வெளிவந்த எனது ‘எதிர்க் குரல்கள்’ தொகுப்பு நூலில் உள்ளன. சிறுகதை நாவல் நாடகம் அபுனைவெழுத்து மொழிபெயர்ப்பு மற்றும் விமர்சனமென அவரது படைப்புகள் அனைத்தின் மேலாகவுமான பார்வையாக இருந்தவகையில், முரண்ணிலைக் கருத்துக்களின் அழுத்தமான வெளிப்பாடின்றி, படைப்பின் தன்மைகள் எதார்த்தமாய்த் தம்மை வெளிப்படுத்தி நிற்கும் தளங்களாக அவை ஆக முடிந்திருந்தன. மேலும் அப்போது அவர் ஜீவியவந்தராகவும் இருந்தவகையில் மனக் கிலேசம் கொள்ளாது தீவிர அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற்கான வெளியும் இருந்திருந்தது. ஆனால் ‘ஜீவநதி’யின் காலவரையறை (2000-2020)க்கு உட்பட்டதாக அவரது ‘மாயினி’ நாவல் மட்டுமே தேறுகிறவகையில், அதை மய்யமாகக்கொண்ட ஒரு திறனாய்வானது எதிர்நிலை முடிவுகளை மிகத் தூக்கலாய்க் காட்டிவிடுமாகையால் ஒரு நிறைந்த அவதானம் அதில் தேவைப்படும். ரசனை நிலை மற்றும் காலநீட்சியின் முன்னிலைத்துவக் காரணங்களில் தொடர்ந்தேர்ச்சியாக ஒரு பிரதியின்...