கதை: சகுனியின் சிரம்
1 கிருஷ்ணனால் தூங்க முடியவில்லை. அன்று மாலை முடிவுற்றிருந்த முதலாம் நாள் பாரதப் போரின் அவலங்களெல்லாம் மீள மீளவெழுந்து அவன் மனத்தை உலுப்பிக்கொண்டிருந்தன. கையிழந்த காலிழந்த மெய்பிளந்த மனிதர்கள் எழுப்பிய வதைப்பாட்டின் பெருவோலம், குலைந்த சுருளின் விசையுடன் விரிந்தெழுந்துகொண்டு இருந்தது. போலவே, சரங்களைத் தம் தொண்டைக் குழிகளிலும் பழுவிலும் வயிற்றிலும் தாங்கிய யானை குதிரை ஆதியாம் படை மிருகங்களின் பெருந்தொனி அவனால் தாங்கமுடியாததாய் இருந்தது. அர்ச்சுனனுக்கான சாரதியத்தைச் செலுத்தியபொழுதிலும் கிருஷ்ணன் கவனம் கள நிகழ்வுகளில் பிசகாதேயிருந்தது. அந்த அவலமும் ஓலமும் தன்னுள் நினைவுகளாய் உறையவிட்டு தான் எப்போதும் எவர்க்கும் எடுத்துரைக்கும் கருமத்தில் கண்ணாயிருத்தலை மேற்கொண்டான். இரவின் படுக்கையில் உடல் களைத்துக் கிடந்திருந்தபோது அவை மறுசுழல் கொண்டெழுந்து தாங்கமுடியாமையின் எல்லைக்கு அவனை நகர்த்தின. அன்றைய யுத்தத்தின் தோல்வி முகம்கூட எந்த அழுத்தத்தையும் அவனில் செய்திருக்கவில்லை. அவன் போர்கள் கண்டவன்; யுத்தங்கள் புரிந்தவன். ஆயினும் அவன் அதுவரை கண்டதும் புரிந்ததும் இரண்டு,...