சிவகாமி, நானுன் சிதம்பரனே (சிறுகதை)
எட்டு மணி தாண்டி அரை மணி நேரமாகியும் பரமகுருவை இன்னும் காணவில்லை. ‘5 ஸ்ரார்’ றெஸ்ரோறன்ரின் எதிர்ப் பக்க ஒற்றை வரிசை வாடிக்கையாளர் பார்க்கில் காரை நிறுத்திவிட்டு டெய்ஸி உள்ளே காத்திருந்தாள். அவருடனான ஒரு சந்திப்புக்கு அவளிடம் முன்னேற்பாடேதும் இருந்திருக்கவில்லை. திடீரென யோசித்து, திடீரென போட்ட திட்டம். அதுபோல் முன்பும் அவள் செய்திருக்கிறாள். அவள் காத்திருப்பதும், அவர் வந்து எதையெதையோ சொல்லி அல்லது திட்டி அல்லது கோபித்து கலைப்பதும் அவளுக்குப் புதியதில்லை. உள்ளிருந்து வெளியே வந்துபோகும் வாடிக்கையாளர் சிலரின் கண்களில் ஓடிய சபலத்தையும், நையாண்டியையும் துச்சமென எதிர்கொள்ளும் விதத்தில் நிமிர்ந்து பார்த்தபடி டெய்ஸி அவர் வரவு பார்த்திருந்தாள். அந்தக் காட்சி ‘5 ஸ்ரார்’ தமிழ் வாடிக்கையாளருக்கு அதிசயமாய்த் தென்படக் காரணமில்லை. அடிக்கடி இல்லாவிட்டாலும் அது நடப்பதுதான். இரண்டு கிளாஸ் சிவப்பு வைனை விழுங்கிக்கொண்டுகூட அவள் அங்கே வந்திருக்கலாம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். பரமகுருவும் டெய்ஸியும் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துகொண்டிருந...