கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ (நாவல்) பற்றி

‘மொழிபெயர்ப்பானது கருத்தைப்போலவே படைப்பாளியின் அடையாளத்தையும் தவற விட்டுவிடக் கூடாது’ கத்யானா அமரசிங்ஹவின் மூன்றாவது சிங்கள நாவலான ‘தரணி’, எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக சென்றவாண்டு (2020) வெளிவந்திருக்கிறது. சாருலதா அபயசேகர தேவரதந்திரியின் ‘Stories’ போன்ற வலு வீச்சானவை இலங்கை ஆங்கில நாவலுலகில் படைப்பாகிக்கொண்டிருக்கும் தருணத்தில், தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ள சிங்கள மொழி நாவலான ‘தரணி’ ஒரு வாசகனின் வாசிப்பார்வத்தை இயல்பாகவே கிளர்த்துவதாகும். எனது பிரவேசமும் அத்தகைய ஆர்வம் காரணமாகவே ஏற்பட்டது. ‘தரணி’யை விமர்சிப்பதில் ஒரு சிக்கலான நிலைமையை இயல்பாகவே எதிர்கொள்ள நேரும். மொழிபெயர்ப்புபற்றி பல்வேறு வகையானதும் புதிது புதிதானதுமான கருத்துக்கள் கூறப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கான கவிதைப் பெயர்ப்பு கவிஞனுக்கான ஒரு துரோகமென்றுகூட சொல்லப்பட்டுள்ளது. நாவல்கள் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, தழுவல் என்கிற பிரச்னைகளைத் தாண்டி அவ்வாறான கடுமையான கருத்துக்கள் பகரப்படவில்லையெனினும், ஒரு விஷயத்தை இங்கே...