தேநீர்: முரண்களின் கலவை
1. கவிதையின் ஊற்று பற்றிய, கவிதை எதுவென்பதுபற்றிய, அதன் தரம் தேரும் விமர்சனம்பற்றிய, ரசத்தைக் கண்டடையும் வழிகள்பற்றிய உசாவலானது கவிதையினளவான பழைமை வாய்ந்ததெனினும், புதிய உணர்வானுபவங்களின் மேலான அறிகைகளால் பழைய முடிவுகளின் சிதைவும், புதிய பரிமாணங்களின் தோற்றமும் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. ஆயினும் கவிதை வாசிப்பின் காலமும், மனோநிலையும் எந்த கலா ஊடகத்துக்கும்போல் கவிதைக்கும் பொதுவான அளவைகளென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையென்று தோன்றுகிறது. எதுபற்றியும் கவிதை எழுகிறது. புல்பற்றி, மரம்பற்றி, மேகம்பற்றி, பிரபஞ்சம்பற்றி, மனிதன்பற்றி, மனித உறவுகள்பற்றி, இன்ப துன்பங்கள்பற்றி, வாழ்வும் மரணமும்பற்றியென அது அடக்கிக்கொண்டிராத பேசுபொருள் இல்லை. செய்யுளின் இலக்கணம் மீறப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இப்பொருள்கள் முதன்மை பெறுவதைக் காணமுடியும். கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மணி, ஞானக்கூத்தன், பிரமிள், பசுவய்யாபோன்றோரின் கவிதைகளின் உன்னிப்பு ஒரு வாசகரை மேற்கண்ட முடிவில்தான் கொண்டுவந்து சேர்க்கும். எனவே தேநீர்பற்றியும், கோப்பிபற்றியும், அவற்றின் சுவைப் பரவசத்தில் விரியும் உரையாடல்கள் மு...