சாம்பரில் திரண்ட சொற்கள் 3

5 மார்கழி பிறந்திருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கலண்டர்ப்படியான குளிர் காலம் தொடங்கிவிடும். குளிரிருந்தது. ஆனாலும் குளிர் காலத்துக்கான குளிராக வெளி இருக்கவில்லை. ஜாக்கெற்றைப் போட்டுக்கொண்டு சுந்தரம் யாழ்ரன் தமிழ்க் கடைவரை போய்வர நடையில் கிளம்பினார். பின்முற்றத்தின் சாய்வுப் பாதைவழி மேலேறி அவர் முன்புற தெருவுக்கு வர, பள்ளி முடிந்து பள்ளிவேனில் வரும் மகனுக்காகக் காத்திருந்த சாந்தரூபிணியை வீட்டு வாசலில் கண்டார். முன்பெல்லாம் அவளேதான் மகனை பள்ளியில் விட்டும், திரும்ப வீட்டுக்கு அழைத்தும் வந்துகொண்டிருந்தாள். அப்போது அவளுக்கென்றொரு கார் இருந்தது. குளிர்கோட்டும், தலையில் கம்பளித் தொப்பியுமாக நின்றவளை முதலில் இனங்காண அவருக்குச் சிரமமாக இருந்தது. அவள் புன்முறுவல் காட்டியபோது அடையாளம் கண்டுகொண்டார். அவ்வாறான சமயங்கள் அபூர்வமானவை. ஒரே வீட்டில் கீழும் மேலுமாக இருப்பவர்களானாலும் அவரவரையும் வாழ்வின் விசைகள் தத்தம் திசையில் இழுத்துச் சென்றவாறிருக்கையில், அவ்வாறான தருணங்களை தம் குறைநிறைகளைத் தெரிக்கவோ, குறைந்தபட்சம் ஓர் உசாவலைச் செய்துகொள்ளவோ வீட்டுக்காரரும் குடியிருப்...