சாம்பரில் திரண்ட சொற்கள் 8

15 வெளியே சுந்தரம் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் மலர். அது தூங்குகிற நேரமது. தூங்கி, விழித்த பின் படுக்கையில் கிடந்து என்ன செய்யுமோ? அப்போதும் தூங்குமென்றுதான் அவள் நினைத்திருக்கிறாள். கூடத்துள் அமைதி நிலவியிருந்தது. வெளி மரங்களில் குருவிகள் சில துயிலருண்டு கிலுகிலுத்து மறுபடி அமைதியாயின. தூரத்து நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் ‘சர்…’ரென்ற பேரிரைச்சல் அவ்வப்போது மெதுவாய் காற்றில் வந்தடைந்தது. அத்தகு சூழ்நிலை அவளுக்குப் பிடிக்கும். மனப் பறவையை கதவு திறந்து அவள் வெளிவிடுகிற சமயமது. அவளே கூட்டின் கதவு திறந்து பறவையை வெளிவிடும் சுதந்திரப் பிரகடனப்படுத்தல் இல்லையது. பறவையே தன் கூடு திறந்து வெளிவந்து அவள் கால காலமும் உலவிய இடமெல்லாம் பறந்துசென்று , அவள் கண்ட கனவுகளெல்லாம் மீளக் கண்டு, அவளனுபவித்த இன்பம் துன்பம் ஏக்கம் ஆதியவற்றுள்ளெல்லாம் மீண்டும் திளைத்துவிட்டு திரும்ப ஒரு சத்தத்தில் ‘டபக்’கென கூட்டுக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு கதவைச் சாத்திவிடும் பெற்றி கொண்டது. அவளும் யதார்த்தத்தில் வந்து விழுந்து சமகால உடல் உபாதைகளையும் மன வேக்காடுகளையும் அனுபவிக்க...