அதை அதுவாக 16

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 16


‘கவிக் கனவுகளின்போது எண்ணுச்சங்கள் அடையப்படுகின்றன.’


- தேவகாந்தன் -




(42)


பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
(பொருள், அங்கவியல், அமைச்சு 9) குறள் 639


கேடு நினைக்கின்ற ஒரு மந்திரிக்கு எழுபது கோடி பகைவர் சமம்.


இங்கே என்னில் சுடர் விரிக்கும் சொல் ‘எழுபது கோடி’ என்பது.

பாரதி காலத்தில் பாரதத்தின் ஜனத்; தொகையே முப்பது கோடிதான். ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்ற பாடலடி அதையே சொல்கிறது. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தின் ஜனத்தொகை சில லட்சங்களையே கொண்டிருத்தல் கூடும். இந்தச் சில லட்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் ‘எழுபது கோடி’ என்ற ஓர் எண்ணின் உச்சம் பிறந்திருக்கிறது வள்ளுவனுக்கு.

இது ஒரு கனவு…எண் பற்றிய கனவு… எண் உச்சம்.

மகிமைப் படுத்தப்பட்டுள்ள சில ஏழுகள் நம்மிடையே உண்டு. ஏழு நிறங்கள், ஏழு சமுத்திரங்கள், எழு சுரங்கள், எழு பிறவிகள் என்பன உதாரணங்களாகக்கூடிய சில.
‘ஏரெழுபது’ என்று ஓர் இடைக்கால நூல் ஒட்டக்கூத்தர் பாடியதாக உண்டு. இவற்றோடு எவ்விதத்திலும் தொடர்புறாதது வள்ளுவனின் இந்த எழுபது.

‘எழுபது கோடி’யென்பது அவன் அடைந்த எண் உச்சம்…எண்ணின் பிரமாண்டம்.

‘ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல’ என்ற குறளில் ஒரு கோடி வரும்.

இந்தப் பாடலில், இந்தப் பொழுதில் அவனடைந்த எண்ணுச்சம் இது.

ஆங்கிலக் கல்விபற்றிக் கூறுகையில் பாரதி சொல்வான், ‘நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்’ என்று. அங்கே அந்தப் பொழுதில் நாற்பதாயிரம் ஒரு எண்ணுச்சம் பாரதிக்கு.

கவிக் கனவுகளின்போது இவ் எண்ணுச்சங்கள் அடையப்படுகின்றன.


(43)


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
(பொருள், அங்கம், சொல்வன்மை 5) குறள் 645

இன்னொருவர் அதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒருவர் பேச்சு இருக்கவேண்டும்.


சொல் வன்மையென்பது இங்கே எழுத்து சார்ந்தது அல்ல. நாவு சார்ந்தது.

நா நலம் மிகப் பெற்றவன் அனுமன். அதற்கு உதாரணங்கள் கம்பராமாயணத்தில் மிகப் பல. அதிலொன்று ‘கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்ற பாடல்.

‘நா காக்க’ என்று முன்பு சொல்லியிருக்கிறான் வள்ளுவனே. காவாது போனால் ‘சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்பது அவனது எச்சரிக்கை.

இந்த அதிகாரத்திலும் அம்மாதிரி ஓர் எச்சரிக்கையுண்டு. ‘ஆக்கமும் கேடும் அதனால் வரும்’ என்பது அது.

இவையெல்லாம் சொல்மேலிருக்கவேண்டிய பொது அவதானங்கள்.

இந்தக் குறளில் உள்ளதோ, விதி!

சொல் ஒன்று சொல்லப்பட்டால் அதை வெல்லும் சொல் இல்லையென்று ஆதல் வேண்டும். மொழி மீதான, சிந்தனையின் மீதான, இவற்றின் பயில்வுகள்மீதான ஆர்வம் வள்ளுவனுக்கு எவ்வாறு இருந்தது என யோசிக்கும்போது வியப்பு பிறக்கிறது.

இவை அறநூல் செய்பவனின் அவதானங்களில்லை.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்