அதை அதுவாக 20

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 20

‘இரத்தல் இனிது என்று சொல்ல எவனால் முடியும், வள்ளுவனைத் தவிர?’


- தேவகாந்தன் -



(50)

கரப்பிலா செஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏர் உடைத்து.
(பொருள், குடி, இரவு 3) குறள் 1053

உள்ளதை ஒளித்து வைக்காததும், ஈவதை ஒரு கடமையாகவும் கொண்ட நெஞ்சமிருக்கிறவருக்கு முன்னே நின்று இரப்பதைக்கூட தன்மானம் இழக்காமல் செய்யமுடியும்.


ஏர் என்பதற்கு அழகு என்றே பலரும் பொருள் கொண்டு உரை செய்துள்ளனர். கலைஞர் மு.கருணாநிதி அதற்குப் பெருமையென்று சரியாகவே பொருள் கொண்டிருக்கிறார்.

இரந்து உயிர்வாழ்தலே பலராலும் செய்ய முடிந்திருந்த ஒரு சமுதாயத்தில், இரத்தலைச் செய்யக் கூச்சப்படக்கூடாதெனச் சொல்வது அக் காலகட்டத்துக்குத் தர்மம்.

சாதாரணர்களின் ஜீவனோபாயம் நிலத்தில் தொழில் புரிதல் என்றிருந்த நிலைமையில், அச் சமூகத்தில் பல்லாயிரம் பேர் வேலையற்றும், பசி பட்டினியோடும் அலைந்திருப்பர் என்பதைச் சந்தேகிக்க வேண்டியதில்லை. அந்தச் சமூகத்தில் வாழ்ந்துவிட இரப்பதில் தவறில்லையென்பது கால அறம்.

‘இன்பம் ஒருவருக்கு இரத்தல்’ என்று கூறுகிற குறளே இருக்கிறது. அதற்கு அடுத்துவரும் குறள்தான் இது. இரக்கப் பின்னின்ற சமூகத்துக்கான நம்பிக்கையுரை இதுவெனக் கொள்ளலாம். அப்படியெனில்…இரக்கவும் மனமின்;றி மடிந்தவர்களைப்பற்றி இப் புலவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். ஒருவேளை தன் கண்ணாரக் கண்டிருக்கவும் கூடும்.

எந்தச் சிந்தனா போக்குடைய கவிஞனும் ஏதோ ஒரு கட்டத்தில் தன் கவிக்குணம் மேவி, சிந்தனைப் போக்கையே தூக்கி வீசிவிடுகிறமாதிரி நடந்துவிடுகிற சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வள்ளுவன் இதற்கு விதிவிலக்கில்லை.

வாழு…வாழு…நன்கு வாழு.. பொருள் இந்த புவன வாழ்வுக்கு அவசியம்…கூடு…கூடி வாழ்…இன்பம் நுகர்…என்பதெல்லாம் அவன் சார்ந்த காலத்தினது சிந்தனா போக்குகளை மறுதலிக்கும் பொருண்மை மிக்கவை.

இரத்தல் இனிது என்று சொல்ல எவனால் முடியும், வள்ளுவனைத் தவிர? ஆனாலும் அதற்கு அவன் விதி சொல்லியிருக்கிறான் என்பதையும் மறக்கக்கூடாது. ‘கரப்பிலா நெஞ்சின் கடனறிவா’ராய் இரக்கப்படுபவர் இருக்கவேண்டும்.

வள்ளுவன் கூற்றுக்கள் சில வேளைகளில் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதுபோல் தோன்றும். ஒருசில பொழுதுகளில் அது வள்ளுவனின் கவிக்குணக் கிளர்ச்சிகளின் விளைவாக வரும். ஒருசில பொழுதுகளில், பிற உரையாசிரியர் கூற்றுக்களுள் போய் மழுங்கிவிடாமல் வள்ளுவனை, அவனது காலத்தை உணர்ந்த தகைமைகளோடு பிரதியுள் புகுந்தால் அவை முரண் இல்லையென்று விளங்கும்.

‘இரப்பது இனிது, இரந்துவிடு தக்கவரைக் காணின்’ என்றெல்லாம் இரக்கச் சொல்கிற இந்த வள்ளுவன்தான், ஒருவன் இரந்துதான் உயிர்வாழ முடியுமென்கிற நிலை ஏற்படுமானால் இந்த உலகைப் படைத்தவன் செத்தொழிந்து போகட்டும் என்று பின்னால் சாபமிடுகிறான். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ (குறள் 1062) என்பது அக் குறள்.

இது அதிசயமானதுதான் மேம்போக்கான நோக்குகைக்கு. ஆனால் தீர ஆராய்ந்தால் அதிலுள்ள நுட்பம் புரியும். ‘ஈதலும் துன்பமானது இரப்போர் இன்முகம் காணுமளவும்’ என்பான் ஒரு மன்னன் புறநானூற்றிலக்கியத்திலே. இவை கருதத் தக்கவை.

அவ்வைகூட ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று ஒருபோதும், ‘ஐயம் இட்டுண்’ என்று இன்னொருபோதுமாய்ப் புகன்றிருக்கிறாள்தான். இதுவும் முரணில்லை.

இரப்போர் பக்கம்நின்று சொன்னதே ஏற்பதிகழ்ச்சியானது என்ற கருத்து. இரக்கப்பட்டோர் பக்கலில் நின்று சொன்னது கொடுத்துச் சாப்பிடு என்ற கருத்து.

இறைவன் கெட்டழியட்டும் என்று சபித்ததும், இரந்தும் உயிர் வாழ் என்று போதம் சொன்னதும் எல்லாம் முரண்களில்லை. இரந்தாவது வாழ்ந்துவிடு, வாழ்தல் இனிது என்பதே வள்ளுவ அறம். இது உணர்ச்சி மேவுகைகளின் கவிக்குண வெளிப்பாடுமில்லை.

அப்படியானால் வள்ளுவனின் நிலைப்பாடென்ன என்று கேள்வியெழும். அதற்குப் பதில் இரண்டும்தான் என்பேன் நான். வாழ் நிலைமைகளை வைத்துக்கொண்டு வழிகளைக் கண்டடைந்தவன் அவன். அவையும் கவிகளாய் வந்திறங்கின என்பதுதான் வள்ளுவனின் பெருமை. வறுமை தீர்வதற்கான விஞ்ஞான சித்தாந்தம் பின்னாலேதான் வரவிருந்தது.

மனுக்குலத்தின் வறுமை தீர்க்கும் சிந்தனையைச் செய்ய இந்த உலகம் வள்ளுவனுக்கும் பின் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு வரு~ங்கள் கார்ல் மார்க்ஸ் என்ற முனிவனுக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது என்பதே வரலாறு.

அடுத்து வரப்போவது காமத்துப்பால். இதை இன்பத்துப்பாலெனவும் சொல்வர். எனினும் காமத்துப்பாலெனலே எனக்கு உவப்பு. ஏனெனில் அது சங்கத் தமிழ்ச் சொல். விருப்பம், விரும்புதல் என்ற பொருள்களில் சங்கக் கவிதைகளில் பவனிவந்த வார்த்தை.

தமிழின் காமம் இருவர் மனம் சார்ந்திருந்த உன்னதத்தை வள்ளுவனூடாய் அதில் பார்க்கலாம்.


000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்