பாலமனோகரனின் ‘வட்டம் பூ’ நாவலை முன்வைத்து

‘வன்னி இலக்கியம் வித்தியாசமான கருக்களமுடையது!’
பாலமனோகரனின் ‘வட்டம் பூ’ நாவலை முன்வைத்து…


பாலமனோகரனின் ‘வட்டம்பூ’ நூல் அண்மையில் (ஆவணி 2008) மித்ர பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்திருக்கிறது. பாலமனோகரனின் வீரகேசரிப் பிரசுரமாக 1973இல் வெளிவந்த ‘நிலக்கிளி’யோடு சேர்ந்த ஒற்றைப் பிரசுரம் இது.

அப்பால்தமிழ்.கொம் இணையத்தில் இது வெளிவந்தபோது, கண்டிருந்தும் வாசிக்க முற்படவில்லை நான். இணையம் எப்போதும் நுனிப்புல் மேய்பவர்களுக்கானது என்பது, அந்தச் செயற்பாட்டைக் குறிக்க ஆங்கிலத்தில் வழங்கும் ‘browsing’ என்ற சொல் காரணமாகவோ என்னவோ, ஓர் எண்ணம் எனக்குள் விழுந்துவிட்டிருக்கக் கூடும். அப்படியில்லையென்றாலும், பெரிய வாசிப்புக்களை நான் இணையங்களில் என்றும் மேற்கொண்டதில்லை. அவை அசதி தருபவை. அந்தவகையில் இந்நூல் அச்சு ஊடக வடிவம்பெற்று வரும்வரை காத்திருக்க நான் எண்ணமிட்டேன். பொ.கருணாகரமூர்த்தியின் இந்நாவல் மீதான விமர்சனமும் என் எண்ணத்தைப் பின்போடும்படியாகவே அமைந்து இருந்துவிட்டது.

இது இந்நூலுக்கான விமர்சனமில்லை. ஈழத்து நூல்களை கொஞ்சம் ஆழமாகவே சென்று குறைகுற்றங்களைக் காண்பதான ஓர் அபிப்பிராயம் என்மீது ஏற்பட்டிருக்கிற வேளையிலும்தான், வேறுமாதிரி நான் ஒரு நூலின் தகுதியினை நான் எடைபோட்டுவிட முடியாது.

எழுபதுகளில் நிலக்கிளி நாவலை வாசித்த போது அதுபற்றிக்கொண்டிருந்த என் அபிப்பிராயங்கள் பெரியவை. ஈழத்துத் தமிழிலக்கியம் குறித்து அதிக அக்கறை கொண்டிருந்த அக்காலப் பகுதியில், ‘நிலக்கிளி’ சொல்லும் தரத்தினதாய் வெளிவந்து எதிர்கால நம்பிக்கைகளை வலுப்படுத்தியது. ‘நிலக்கிளி’ இன்றும் ஈழத்து தமிழ்நாவல் இலக்கியமாக தமிழிலக்கியத்தில் இறுமாந்து நிற்கும் வல்லபம் கொண்டது என்பதில் எனக்கு ஐயமில்லை. பாலமனோகரன் ‘நிலக்கிளி’பாலமனோகரனாக ஆனதற்கும் காரணம் சரியானதெனவே எண்ணுகின்றேன்.

ஆனால் ‘வட்டம்பூ’ அப்படியானதல்ல. அதுபற்றிய என் அபிப்பிராயங்கள் வேறானவை.

வட்டம்பூ இரத்த நிறமாய்ப் பூக்கும் ஒரு சிறு தாவரம். அதிகமுமாய் வன்னி மண்ணில் காணக்கிடைப்பது. மணல் விழுந்த படுகையில் அவற்றின் உயிர்ப்பு அற்புதம். அதை ஆண்மையின் அல்லது அடங்காமையின் அடையாளமாக பாலமனோகரன் காட்டியிருப்பதைப் புரிய முடிகிறது. சிங்கராயர் கதாபாத்திரம் ஒருவகையில் வட்டம்பூவின் வீறினைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. நீண்டகாலமாய் பல்வேறு சிரமமான முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியே காணும் அவரது முயற்சி, இறுதியாக கலட்டியனை புதைசேற்றில் சிக்கவைப்பதோடு முடிவுபெறுகிறது. அதேவேளை மரணமும் வந்து கவிந்து அவரது வாழ்வை முடித்துவைக்கிறது. ஒரு புராணனாக அவரை நிலைநிறுத்த கதைசொல்லி bleedingh earth பற்றிய ஒரு கதையை தமிழாசிரியர் கே.பி. கூறுவதாக வெளிப்படுத்தியிருக்கும் காரணமல்லாமலே, அவர் அதிசிறந்த வாழ்க்கையை வாழ்ந்த மனிதராகக் காணப்படவே செய்கிறார்.

வீரமும் தீரமும் உடைய ஒரு வாலிபனை அறிமுகமாகும் ஒரு பெண், அவனை ஒரு பூவாக எண்ணி ‘ஆண்மையுள்ள பூ எது?’ என எனது ‘கனவுச் சிறை’ மகா நாவலின் இரண்டாம் பாகமான ‘வினாக்கால’த்தில் நினைத்துப்பார்ப்பாள். அதற்கு ‘முள்முருக்கம்பூ’ என்று அவளுக்கு சிறிதுநேரத்தில் விடை கிடைக்கும். அதுபோன்ற உறைநிலை எழுத்துக்களின் ஞாபகம் இந்த வட்டம்பூ படிமமாகும் ஒவ்வொரு தடவையிலும் எனக்கு வந்தது. விட்ட தொட்ட எச்சங்களாய் இந்த ஞாபகங்கள் என்னைப் பதறவைத்தன. ரொமான்ரிஸ எழுத்துக்களின் வகைமையானவை இவ்வகைப் படிமங்கள். நாவலிலக்கியத்தில் பலநூறு கல்தொலைவில் நம்மை இட்டுச்சென்று வைப்பவை இந்தச் சிந்தனை முறைமைதான்.

விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ நாவலை இந்த நேரத்தில் ஒரு மனவமைதிக்காக நினைத்துக்கொள்ள முடியும். வெள்ளாவி ஒரு தொழில்முறை அடையாளம். இஸ்திரிபெட்டியைக்கூட வேறு சமூகத்தவர் பாவித்துக்கொள்ள முடியும். ஆனால் வெள்ளாவி வண்ணாரின் தொழிலுக்கான தேவை. வெகுவழுக்கு கொண்டிருக்கும் துணிகளை வெள்ளாவி வைத்தே அவர்கள் தோய்த்தெடுப்பர். பெரும்பாலும் வெள்ளாவி ஒரு தொழிலடையாளமாகிவிடுகிறது சமூகத்தில். அது ஒரு பெரு நாவலில் மிகச் சில இடங்களிலேயே விமல்குழந்தைவேலுவினால் கொண்டுவரப்பட்டிருக்கும். ஆனால் கதையையே காவிக்கொண்டு நகர்வதுபோல வெள்ளாவி எங்கெங்கும் அலைந்து கொண்டிருக்கும் அருமையான நாவல் அது. அதுவும் தன் பலவீனங்களைக் கொண்டதுதான். ஆனாலும் இங்கு தூக்கலாகப் பேச இந்த தகைமை போதும். தி.ஜானகிராமனின் அற்புதமான உணர்வுக் கோலங்களையும், நடை அற்புதத்தையும்கொண்ட ‘செம்பருத்தி’ என்றொரு நாவல், இதுபோல ரொமான்ரிஸ வகையினதாக இருப்பினும், அது ஏறிச்சென்றிருக்கும் எல்லை, சாதாரண யதார்த்தவகை நாவல்களால் அடைதற் சாத்தியமற்றது. ஆனால் வட்டம்பூ? இந்தவகையில் சறுக்கிவிட்டிருக்கிறது.

‘வட்டம்பூ’ 109 பக்கங்களைக்கொண்ட ஒரு வீரகேசரிப் பிரசுரமானவளவு சிறிய நாவல். ‘நிலக்கிளி’யைவிட ஒரு பக்கம் அதிகம். அதில் ஓடியிருக்கும் கதை சிறியது மட்டுமல்ல, பலஹீனமானதும். வன்னி வாழ்நிலைமைகள் அதில் விபரிக்கப்பட்டிருக்கின்றனதான். ஆனால் காட்டப்பட்டிருக்கவில்லை. ஒரு கலைப்படைப்பு சொல்வதைவிட காட்டுவதையும் உணரவைப்பதையும்தான் முதன்மையாய்ச் செய்யவேண்டுமென்பது விதியாகியிருக்கிறது. கதையும் நவத்தின் ‘நந்தாவதி’ கதைபோலத்தான். தமிழ் சிங்கள காதலை காட்டுகின்றது. அதைக் காட்டக்கூடாதென்பதில்லை, அது கலைத்துவமாக இருக்கவேண்டுமென்பதே எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கராயர் பாத்திரம் ஓரளவு நிறைவுகொண்டதாக ஆகியிருக்கிறது. நந்தாவதியும், குணசேகராவும் வலிந்து இழுத்துவரப்பட்ட பாத்திரங்களாகவே கடைசிவரை ஆகிப்போயிருக்கின்றன.

மொத்தத்தில் ‘வட்டம்பூ’ சாதாரண மனிதர்களின் சாதாரண கதை. சாதாரணமான காலத்தில் தொடங்கி, இனமோதல்கள் வலுப்பெறத் தொடங்கும் ஒரு காலத்தோடு முடிகிறது. ஆனாலும் சாதாரண மனிதர்களின் விசேஷேத்த நிகழ்வுகளின் விசேஷேத்த விவரிப்புக்களே நாவலாகக் கூடியன என்ற நிர்மாணங்களில் என் நம்பிக்கை அதிகம். அதனாலேயே ‘வட்டம்பூ’ நாவலாக ஆகாமல் நூலாகத் தேங்கிப் போயிருப்பதாகச் சொல்லமுடியும். களப் பதிவுக்காக கதையைச் சொல்ல வந்ததில் இந்தச் சோகம் சம்பவித்திருக்கிறது.

கருஞ்சிறுத்தையொன்று பசி மேலிட்டு தனக்கான இரையை அடிக்க ஒரு பாறை இடுக்கிலே காத்துக்கிடப்பதாக நூல் தொடங்குகிறது. காட்டெருமைகள் மேய்ச்சல் முடித்துத் திரும்பிவருகின்றன. தன் திட்டப்படி பின்னே வந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய காட்டெருமைக் கன்றின்மீது பாய்ந்து அதைக் கொல்கின்றது கருஞ்சிறுத்தை. காட்டெருமைக் கூட்டத்தின் தலைவனாக வரும் கலட்டியன் எருமை சினங்கொண்டு பாய்கின்றது கருஞ்சிறுத்தை மீது. இரண்டுக்கும் நடைபெறும் கணப்பொழுது யுத்தத்தில் கலட்டியன் கருஞ்சிறுத்தையை அப்படியே தன் வளைந்த வலிய கொம்புகளால் குத்திக்கொன்று விடுகிறது. மட்டுமில்லை. கொம்புகளிலிருந்து கழற்ற முடியாத அதன் உடலை அப்படியே சுமந்துகொண்டு வீறெழ நடந்துபோகிறது. ‘வட்டம்பூ’ நூலின் முதலாம் அத்தியாயம் முழுக்க இதுதான் விவரணை. வாசக மனம் அதிர்ந்துபோகிறது. காட்டெருமையின் வீறும், வீரமும் கண்டு நெஞ்சு உறைந்துபோவதைத் தடுக்கவே முடிவதில்லை.

தமிழின் மகத்தான நாவல்களுள் ஒன்றான ஜெயமோகனின் ‘விஷ்ணுபுர’த்திலும் ஒரு யானை வருகிறது. அது போர் யானை. அது மதங்கொண்ட யானையொன்றை அடக்குகிற இடத்தில் ஒரு வாசகப் பதற்றம் வரும். அடக்குதல் அல்லது கொல்லுதலில் எதைச் செய்வது என்பதைத் தீர்மானிப்பது சூழ்நிலையைப் பொறுத்து போர்யானையாகவே இருக்கும். அசைவுடனும் எச்சரிக்கையுடனும் வரும் போர் யானை அப்படியே மதங்கொண்ட யானையை தன் வலிய தந்தங்களினால் குத்திக்கொல்கிற இடத்தில் வாசகன் உறைந்துபோவான். அந்த உறைதலுக்கு சற்றொப்ப நிகரானது கலட்டியன் கருஞ்சிறுத்தையைக் கொல்கிற இடத்தில் வரும் அதிர்வு.

அதுபோல் நூல் முழுக்க ஒரு வேட்டைமைத் தன்மையே விரவியிருக்கிறது. கோழிப் பொறி வைத்துக் காட்டுக்கோழி பிடித்தல், செம்முதலையை மண்டா எறிந்து கொல்லுதல், தன் கூட்டத்திலிருந்து தனித்துப் போகும் கலட்டியனைப் பிடித்து அடக்கி வசக்கியெடுக்க சிங்கராயர் எடுக்கும் முயற்சிகள் என எங்கும் வேட்டை வினைகளே நிறைந்திருக்கும் இந்நூலுக்கு ‘வேட்டை’ எனத் தலைப்பிட்டிருந்தால் நிறையவே பொருத்தமாக இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.

யாழ் இலக்கியம், மட்டக்கிளப்பு இலக்கியம், முஸ்லிம் இலக்கியம், மலையக இலக்கியம், கொழும்புத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்புக்கள்போல ஈழத்து இலக்கியத்தில் வன்னி இலக்கியம் என்ற ஒரு பிரிவு முகிழ்த்து வெகுகாலமில்லை. ஆனாலும் பாலமனோகரனின் ‘நிலக்கிளி’, தாமரைச்செல்வியின் ‘வன்னியாச்சி’, ‘வீதியெல்லாம் தோரணம்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற நூல்கள்போல் அவ்வன்னி இலக்கியத்தைச் செழுமைப்படுத்தி நிற்கிறது ‘வட்டம்பூ’வும். அது இந்த நூலின் கள விவரிப்பினாலும், மொழி ஆளுமையினாலும் நேர்கிறது.

‘இந்தப் போராட்டத்தில் சிறுத்தையின் ஆக்ரோஷமான உறுமல்களும், கலட்டியனின் வெருட்சி நிறைந்த முக்காரமுமாய் அந்த இடமே திமிலோகப்பட்டது…கலட்டியனோ கொம்புகளில் சிக்கிக்கொண்ட அந்தக் கருஞ்சிறுத்தையின் நெடிய உடலைச் சுமந்தவாறே காடு கரம்பையெல்லாம் பாய்ந்து அதை அகற்றிவிடப் பிரயத்தனம் செய்துகொண்டது’ என பாலமனோகரன் விபரிக்கும் இடத்தில் வன்னித் தமிழ் எவ்வளவு இறுக்கமாகவும் வீரியமாகவும் வந்து விழுகின்றது என்பதைக் கவனிக்கவேண்டும். எஸ்.பொ.வின் முன்னீடு சொல்லும் வளப்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், ‘வன்னி மண்ணின் வாழ்க்கைக் கோலங்களுக்குச் சாகாத வரம்பெற்றுத் தரும் தமிழ் ஊழியத்தினால் தனக்கென நிரந்தர இடம்பெறும் யக்ஞம் இந்நூலின் படைப்பிலே சங்கமித்துள்ளது’ என்ற வாதத்தை மெய்யாக எடுக்கலாம்.

மேலும் இந்நூலின் அழகுகளை வாசகனின் ஒற்றை வாசிப்பில் சுகித்துவிட முடியாது என்ற விஷயத்தையும் இங்கே நான் சொல்வது அவசியம். வன்னிக் களத்தையும், அதன் மொழி அழகையும் ரசிக்க ஓர் இரண்டாம் வாசிப்பு நிச்சயமாக இந்த நூலுக்குத் தேவைப்படும்.

00000

தாய்வீடு , சித்திரை 2009









Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்