ஒரு மரணமும் சில மனிதர்களும்

‘விடுவிக்கப்பட்ட பகுதிக’ளிலிருந்து எழும்
அவலங்களின் இலக்கிய சாட்சியம்


அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த நூல் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’. தாட்சாயணி எழுதியது. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. இதை எழுதியவரைப்பற்றி ஏற்கனவே கேள்வியில் பட்டிருந்தபோதும், இந்நூலைக் கண்டபோது மணிமேகலைப் பிரசுரமாக இது வெளிவந்திருந்த காரணம் சுட்டியே இதை வாங்க மனம் பின்னடித்துவிட்டது.
வாசிப்பு என்பது தொழில் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. பசி வந்தால் ருசி வேண்டாம், நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடையுண்டு. பசிக்கு ருசி வேண்டாமென்றாலும், மனப் பசிக்கு ருசியும் தேவை. அந்த ருசியை அடைவதற்கான பண்டத்தின் பரிமாற்றமும் அழகியலோடு இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும்தான் இருக்கிறது. பண்டத்தின் தன்மையைக்கூட இந்தப் பரிமாற்றத்தின் அழகியல் காட்டிக்கொடுத்துவிடுகிறது என்பதையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையில் என் தயக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்.

வாசிப்பை, மைதுனத்தின் கிளர்ச்சி தரும் கூறாகக் கூட விமர்சகர்கள் சிலர் சுட்டியிருக்கிறார்கள். என்றாலும் வாசிப்பு தன்னை மறப்பதற்கான உத்தி, தன்னை அடையாளம் காண்பதற்கான திறவுகோல் என்ற கருத்துக்களையாவது நாம் விவாதமின்றி ஒப்புக்கொண்டுவிட முடியும். அதன் பண்பாட்டுத் தேவை சார்ந்த கூறுகளையும் மறுப்பதற்கில்லை. ஒரு காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளாகவும் இலக்கியம் அமைந்துவிடுகிறது. வாசிப்பின் சுகிப்பு என்ற தனிமனித எல்லையைத் தாண்டி, இந்த பதிவாகுதல் என்ற அம்சம் ஆகக்கூடுதலான நன்மையைச் சமூகரீதியாக நிறைவேற்றியிருக்கிறது என்பது ஒரு சரியான கணிப்பீடேயாகும்.

காலகாலமாக வரலாற்றில் இடம்பெற்று வந்திருந்த மோசடிகள் மற்றும் மறைப்புகளை, பின்னால் எழுந்த சில இலக்கிய முயற்சிகள் தோலுரித்து அம்பலப்படுத்தியுள்ளதை இந்நேரத்தில் எண்ணிக்கொள்ள முடிகிறது. இலக்கியத்தின் புனைவுத் தன்மை மூலமாகவே விடுபட்ட வரலாற்றின் சில பக்கங்கள் மீளக் கண்டடையப்பட்டன என பின்நவீனத்துவ விமர்சகர் கூறுவர். Alternative History  என்ற ஒரு வகைப்பாடே இலக்கியத்தில் உண்டு. இதுபற்றி மிகச் சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன. அதன் விவரணம் இப்போது இங்கே அவசியமில்லை.

வாசிப்பு சூழ்நிலைமை சார்ந்ததும் ஆகும். வாசிப்போனின் அனுபவம் ஒரு கூறாக, வாசிப்பின் சூழ்நிலை இன்னொரு கூறாக பிரதியின் அர்த்தமும் பயனும் அமையும் என்பது பொதுப்புத்தியிலும் விளங்கக்கூடியதே. ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதைத் தொகுதியின் வாசிப்பு, ஒரு மகத்தான அவலத்தை என் முன் நிறுத்தியது. அந்த உணர்வையும், அதன் மூலமாக இலக்கியப் பிரதியொன்று பதிவேடாக ஆகியிருக்கின்ற தன்மையையும் எடுத்துக்காட்டுவதே இந்த உரைக்கட்டின் நோக்கம்.

வாசிப்பு இப்போதெல்லாம் மந்தமாகவே இருக்கிறது. நாட்டில் நாள்தோறும், நாள்கள் தந்த வாரம்தோறும், வாரங்கள் தந்த மாதம்தோறும் தமிழ் உடன்பிறப்புக்களின் மரணங்களை அறிந்து அறிந்து மனம் மறுகிக்கொண்டிருக்கிற வேளையிது. உயிர்ப்பு, உணவு, அதற்கான உழைப்பு என்றளவில் வாழ்க்கையின் பரிமாணம் அடங்கிப்போயிருக்கிறது. தமிழ் மக்களின் அழிப்பினது உச்சம் என்றளவில் மட்டுமல்லாது, அதன் முன்னெடுப்பில் காட்டப்படும் அக்கிரமங்களிலும் அநீதிகளிலும் மனம் கொதித்துப் போயிருக்கிறது. இத்தகைய அதி உச்சபட்ச மோசமான கட்டமானதால்தான் ஈழத் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பான அந்த நூலை வாங்கவும் நேர்ந்திருக்கிறது என இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழ்நில அபகரிப்பின் மறைமுக நடவடிக்கைகளுக்கு ஒரு நூற்றாண்டுச் சரித்திரமுண்டு. ஆனால் நேரடி நடவடிக்கைகள் ‘பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டு வெகுகாலமில்லை. யாழ்ப்பாணம் அபகரிக்கப்பட்டபோது, அந்தப் பகுதியை பயங்கரவாதத்திலிருந்து மீட்டுவிட்டதாகவே அரசு தெரிவித்தது. அதை ‘விடுவிக்கப்பட்ட பகுதி’யாகவும் அறிவித்தது. அதுபோல் ஏனைய பகுதிகளும் விடுவிக்கப்படும் என முன்னறிவிப்புச் செய்தது. அதன் பிரகாரம் கிழக்கினை விடுவிக்கும் யுத்தம் தொடங்கியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பு அடைந்த மகத்தான வெற்றியை சிங்களப் பேரினவாதத்தினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது இன்னுமின்னும், இத்தனை இனக்கலவரங்களின் பின்னும்கூட எப்படி தமிழ்நிலமாக இருக்கமுடியுமென அது அங்கலாய்த்தது. திருகோணமலையை அது இழக்க தயாராகவே இல்லை. அதை திட்டமிட்ட அல்லது திட்டமிடாத வகையிலேனும் சிங்கள நிலமாக மாற்ற அது தீர்மானமெடுத்தது. அதன் வெளிப்படையான நடவடிக்கைதான் புத்தகோயில் நிர்மாணம்.

பின்னர் வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பு சிதறிடிக்கப்பட்டு, படையெடுப்பு தொடங்கியது. கிழக்கும் அரசாங்கம் வசமானது. எஞ்சிய பகுதி வன்னிதான். அதன்மேலும் யுத்தம் தொடர்ந்தது. யுத்தத்தில் முக்கியமான பக்க விளைவு இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம். தமிழ் மக்கள் உத்தரித்த அவலம் சொல்லி மாளாது. சொல்லிலும் மாளாது. இன்று சிங்களப் பேரினவாத அரசு யுத்தத்துள் அகப்பட்ட மக்களை வவுனியா சென்றுசேரும்படி அறிவித்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு சென்று சேர்வதில் மக்கள் காட்டிய தயக்கத்தை சர்வதேச சமூகமே ஏதேதோ காரணங்களைக் கூறி குற்றஞ்சாட்டியது. பாதுகாப்பு வலயம் தமிழர்களின் கல்லறையாக ஆவதைப்போல, வவுனியாவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதி அங்கு செல்லும் தமிழர்களுக்கு சிறையாக, சித்திரவதைக்கூடமாக மாறியிருக்கிறது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறையாகவே இருக்கிறதென்பது எவ்வளவு உண்மை! அது தன் இனச் சூறையில் கொதித்துப்போயிருந்த மண். அதை அடங்கியிருக்கச் செய்வதற்கான வன்முறையின் கோரம் எத்தகையதாக இருந்திருக்க முடியும்! நினைத்தாலே நெஞ்சு பதைக்கிறது.

இதை இலக்கியப் பதிவாக முன்வைத்திருக்கிறது, தாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதை.

கதைகளாக, கவிதைகளாக இதேபோல் பல்வேறு படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் இதை இங்கே நான் எடுத்துக்கொண்டிருப்பதற்கு இதன் வீறார்ந்த இலக்கியத் தகைமையே முக்கிய காரணமாகிறது.

1999இல் ‘சஞ்சீவி’ இதழில் வெளியான தாட்சாயணியின் இச் சிறுகதை, 2001இல் பல்கலைக் கழக வெளியீடாக வந்த தொகுப்பிலும் இடம்பெற்றிருக்கிறது. யாழ் பல்கலைக்கழகம் போராட்ட முன்னெடுப்பிலும், இலக்கிய விழிப்பிலும் காட்டிய அக்கறைகள் மகத்தானவை. இவற்றின் சவஅடக்கப் பூமியாக இன்று ஆக்கப்பட்டிருக்கிறது அது. ஆனாலும் உள்ளிருந்து கிளரும் உணர்வுகளின் வெளிப்பாடு எழுத்துக்களில் பதிவாகிவிடுகின்றது. அவ்வாறானவை இலக்கியத் தரமாகிறபோது கவனம்பெறுகின்றன. அவ்வாறு என் கவனத்திலான ஒரு சிறுகதைதான் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’.

இன்று சிறுகதையின் இலக்கணங்கள் மாறிவிட்டிருக்கின்றன. சிறுகதையென்றால் என்ன என்பது மாதிரியான நூறு புத்தகங்களாவது தமிழில் உண்டு. புதுமைப்பித்தன்கூட சிறுகதைக்கான விளக்கத்தைக் கூறியிருக்கிறார். எனினும் இன்றைய சிறுகதையின் இலக்கணம் அன்றுபோல் இல்லை. மாறியிருக்கின்றது. அது மாறியிருப்பதைவிட, மாறி உணரப்பட்டடிருப்பதுதான் அதிகம். வாசிப்புக்கான ஒரு சிறிய வடிவத்தில் எதுவுமேதான் இன்று சிறுகதையெனப்படுகிறது. இதன் சரியையோ பிழையையோ நான் பேசவரவில்லை. பத்திரிகை, சஞ்சிகைகளின் தேவைக்கான ஒரு வார்ப்பாக அல்லது வடிப்பாகவே நான் இதைக் காண்கிறேன். ஆனாலும் பிரதியின் உள்ளடங்கிய தொனி, ஊடோடிய மவுனம் என்பன எழுத்தின் அசைவிறுக்கத்தைக் குலைக்கக்கூடியன என்பதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை.

‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதை, வன்னியிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலிருக்கும் அம்மம்மாவினதும், சின்னம்மா குடும்பத்தினதும் வீட்டுக்கு நயனியின் வருகை ஏற்படுத்தும் மகிழ்வு கலந்த சந்தடியோடு ஆரம்பிக்கிறது. சிலநாட்களே அங்கே தங்கப்போகும் நயனி, தன் இளமைக்கால நிகழ்வுகளின் சுகிப்பிலும், உறவுகளின் அரவணைப்பிலுமாய் நாட்களைக் கழிக்கிறாள். திடீரென அவள் பிரிந்து செல்லவேண்டிய நாள் வருகிறது. எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு நயனி செல்கிறாள்.
அடுத்தடுத்த நாள் பத்திரிகையில் வரும் போட்டோவுடன்கூடிய கரும்புலியின் தற்கொலைத் தாக்குதல்பற்றிய செய்தியிலிருந்து நயனி இல்லாமற்போய்விட்டமையை அறிந்து குடும்பமே துடித்துப்போகிறது. ஆனால் மனத்துள்ளாய்க் கதறுபவர்களால் நயனிக்காக வாய்விட்டு அழுது மனம் ஆறமுடியாத நிலை. அந்த வீட்டில் இருக்கும் இளையோரின் பாதுகாப்புக் கருதி ஒரு மரணத்தின் அவலம் அந்த வீட்டாரினால் மூடிவைக்கப்படுகிறது.

நான்கைந்து நாட்களின் பின் அடுத்தடுத்த வீட்டில் ஒரு விபத்து மரணம் சம்பவிக்கிறது. அந்தச் சாவு வீட்டிற்குச் செல்லும் அம்மம்மா, சிறியதாயார் ஆகியோர் அங்கு எழுப்பும் அழுகையிலும் ஒப்பாரியிலுமாக தமது சொந்த இழப்பினை ஆற்றிக்கொள்வதாகத் தெரிவிப்பதோடு கதை முடிகிறது.

யாழ் மண்ணில் தமது சொந்த உறவுகளின் இறப்புக்குக்கூட வாய்விட்டு அழமுடியாத மக்களின் சோகத்துக்கு நிகரான சோகம் எங்கேனும் இருக்கமுடியுமா? மனம் பதைத்து விறைத்துப்போகிறது.

சம்பவங்களின்மூலம் இந்த முடிவினை வாசகன் அனுமானித்துக்கொள்ளத்தான் முடிகிறது. எதுவுமே விபரமான பதிவாக சிறுகதையில் அமைந்திருக்கவில்லை. இந்த மவுனத்தின் இலக்கியத் தகுதி மகத்தானது. எதையும் இயல்பாகச் சொல்லிவந்து வாழ்வின் இயல்பிழப்பை ஒரு சூட்சுமத்தில் சொல்லிச் செல்லும் இந்த உத்திதான் தென்னமெரிக்க கலைஞர்களிடம் ஒருகாலத்தே காணப்பட்ட இலக்கியக் குணாம்சம். இன்றும்தான் அங்கு பெருமளவில் இந்த நிலைமை மாறிவிடவில்லை. ஆனால் ஈழத்தில், குறிப்பாக ‘விடுவிக்கப்பட்ட பகுதிக’ளில், இதுதான் இன்றைய எதார்த்தம்.

இது இலக்கிய உத்தியாக அல்ல, வாழ்வியலாக வருகிறபோது மனம் அதிர்கிறது.

இம்மாதிரி உத்தியில் அமையும் கதைகளில் மொழியின் வலு அசாதாரணமாகக் கூடியிருக்கும். ஆனால் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதை இந்தப் பலமின்றியே தன் இருப்பைப் பலமாக்கியிருக்கிறது.

நீண்டகாலத்துக்கு நின்று நிலைக்கக்கூடிய சிறுகதை.

தாட்சாயணியின் உண்மையான பெயரென்ன, அவரது பிறந்த வளர்ந்த வாழும் இடம் பற்றியெல்லாம் இவ்வளவு தொலைவிலிருந்தும்கூட எனக்கு எழுதப் பயமாக இருக்கிறது. சிறீலங்கா ஜனநாயகம் செத்திருக்கிற நிலம்.


00000

  தாய்வீடு ,  மே 2009



Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்