முகங்களும் மூடிகளும்


முகங்களும் மூடிகளும்



சில நல்ல கதைகளையும், சில சுமாரான கதைகளையும் கொண்டு மொத்தமாய்ப் பதினெட்டுக் கதைகள் அடங்கிய தொகுப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது கோகிலா மகேந்திரனின் ‘முகங்களும் மூடிகளும்’.
முகங்களும் மூடிகளும் என்ற முதல் கதையே தலைப்பாக வந்திருப்பதாலேயே அக்கதை விசேட தன்மையெதையும் கொண்டிருப்பதாகக் கருதத் தேவையில்லை. அதைப் படைப்பாளி, பதிப்பாளர் விருப்பத்தின்படியான ஒரு தேர்வென்றே கொள்ளவேண்டும். தலைப்புகள் நூல்களில் முக்கியமான பங்கு வகிப்பவை. இந்நூலில் அப்படியில்லை. தலைப்பு ஒரு அடையாளம்- அடையாளம் மட்டுமே- என்று கொண்டு இந்த விடயத்தை அப்படியே விட்டவிடலாம்.

அண்மையில் பிற தமிழ்ப்புலங்கள் உட்பட வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுப்புகளில் ‘முகங்களும் மூடிகளும்’ குறிப்பிடக்கூடிய ஒன்று என்பதை முதலில் தெரிவித்துக்கொள்வது வசதியானது. அதன்மேலேயே அதன் தரம் குறித்த விசாரணையை நாம் செய்தாக வேண்டியுள்ளது.

எடுப்பிலேயே ஈழத்து தமிழ்ச் சூழலில் படைப்பாளி, தீவிர வாசக மட்டங்கள், சிலவேளைகளில் வசதிக்காக விமர்சன மட்டமும், சிறுகதை , சின்னக் கதை இரண்டுக்குமான பிரிகோட்டைக் கண்டுகொள்ளாமலேயே ஒரு நீண்ட காலத்துக்கு இருந்துவருகிறதென்ற சங்கதியை ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஒரு நல்ல நாவல் எழுதுவதைவிட ஒரு நல்ல சிறுகதை  எழுதுவது மிகக் கடினமானதொன்று என ஆங்கில விமர்சகர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். சிறுகதையானது எழுத்துருவில் வார்பட்ட பிறகுகூட அது செதுக்கிச் செதுக்கிச் செம்மையாக்கப்பட வேண்டுமென்று கலாநிதி நா.சுப்பிரமணியன், எமக்கிடையிலான ஒரு நேர்ப் பேச்சில் ஒருபோது கூறியதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். இவற்றின் அடிப்படையிலேயே நாம் தர எடைபோடல் விடயத்தைச் செய்தாகவேண்டும்.
தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிக் காலகட்டத்தில் சொல்லப்பட்டதுபோல் சிறுகதையென்பது ஒரு மைய சம்பவத்தைச் சுற்றி ஒன்று அல்லது மேற்பட்ட சம்பவங்களினூடாக அவற்றின் ஒருமை சிதையாவண்ணம் வரையப்படுகவதென்ற கருத்து, இப்போது பெரும்பாலும் அப்படியில்லை. ஒரு சிறுகதையானது ஒரு பொறியைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பொறியை அவிழ்த்துவிடாத சம்பவ விரிவுதான் சிறுகதையின் சாத்தியம். உலகச் சிறுகதையே தன் பிரசுர களத்தின் வசதிசார்ந்து தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்தவகையான உலக நிலைவர மாற்றங்களும் தமிழில் உள்வாங்கப்பட்டாக வேண்டும். 300 பக்க தாகூரின் சிறுகதையே உண்டு எனச் சொல்லிக்கொண்டிருப்பதில் இனிமேலும் அர்த்தமில்லை. இந்தச் சட்டங்களை அங்கீகரித்துக்கொண்டே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையும் பார்க்கப்பட வேண்டுமென்பதில் நிறைந்த நியாயமிருக்கிறது. ‘முகங்களும் மூடிகளும்’ இதற்கு விதிவலக்கல்ல.

‘தலையீடு’ போன்ற சிறுவர்க்கான படிப்பினைக் கதைகளாயும், ‘மெத்தென்ற மௌனம்’ போன்ற உளவியல் பேசவருவதுபோல் பாவனையும், அந்த முயற்சியில் பிழையான அணுகுமுறையும் கருத்தும் காட்டும் கதைகளாயும் தொகுப்பில் வேறு சிலவும் இருக்கின்றன. ஒரு பதத்துக்காக ‘மெத்தென்ற மௌன’த்தையே எடுக்கலாம். உளவியல் கூறுகளை முன்னிறுத்திக்கூட இதன்மேலான ஒரு விவாதத்தை முன்வைக்க முடியும். உளநலம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒருவரை மருத்துவ ரீதியாகவும் அணுகுவதற்கான வரைமுறைகள் உண்டு. அதை உடைக்கும் கணத்திலேயே ‘மெத்தென்ற மௌனம்’ பொதுப்புத்திக்கும் ஒப்பமுடியாததாகப் போய்விடுகிறது.

ஆனாலும் ‘நெருஞ்சி’, ‘பூக்குளிப்பு’, ‘முகாமுக்குப் போகாத அகதி’ போன்ற வடிவ உள்ளடக்க உணர்வு நேர்த்தியுடனான சில கதைகள் தொகுப்பில் உண்டென்பதைச் சொல்லவேண்டும். எனினும், நான் இங்கு பேசப்போகிற விடயம் அவைபற்றியுமல்ல.

இன்னும் ஒரு உயர்ந்த தளத்தை தமிழ்ச் சிறுகதை அடையவேண்டியே இருக்கிறது. வடிவம், மொழிநடை, சுழிகொள்ளவேண்டிய அர்த்தம் யாவும் இன்னும் எவ்வளவோ செழுமைப்பட்டாகவேண்டும். ஈழத்துச் சிறுகதை தன் இறுக்கமுடைத்து அது குறித்த திசையில் தன் கவனத்தைக் குவிக்கத் தொடங்கியிருப்பதன் அடையாளங்களை ‘முகங்களும் மூடிகளும்’ நூலில் காணமுடிகிறது. உதாரணமாக ‘புலன்களுக்கு அப்பால் உள்வாங்குதல்’ சிறுகதை மிகஇயல்பில் தொடங்கி, யதார்த்தமாய் நடந்து ஒரு புதிரில் முடிகின்றபோது வாசக மனத்தில் விழும் அடி அல்லது அதிர்வு எனக்கு முக்கியமாய்ப் பட்டது. ஒரு சி றுகதை என்ன சொன்னதென்பதைவிடவும் எப்படிச் சொன்னது என்பதே என் இலக்கிய கரிசனையாகும். கதை முடிவில் வரும் புதிர் வாசகனால் அவிழ்க்கப்பட முடியாமலேகூடப் போகலாம். இருந்தும்தான் அந்தப் புதிரை நான் சிலாகிப்பேன்.

மேலும் ‘வாழ்வுந்துதலும்’, ‘மலைகளைச் சுமத்தல் என்பது’ ஆகிய சிறுகதைகள் அவற்றின் வனைவு காரணமாய் தமிழ்ப் பரப்பில் குறிப்பிடப்படவேண்டிய கதைகளாகும். ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு கதையையும், ஒரு யதார்த்த நிகழ்வையும் அக்கதைகள் மிக அற்புதமாய் இணைத்து வனைவு செய்திருக்கும். ‘மலையைச் சுமத்தல் என்பது’ அது சொல்லும் காலமும் களமும் தெரியாமலேகூட அனுபவத்தில் பதிவாகிறபடிக்கு வனைவு சிறப்புப்பெற்ற கதை. அப்போதும் அது ஒரு புரிவின்மையைக் கொண்டேயிருக்கும். அது முக்கியமேயில்லை. வாசக மனம் அடையும் பாதிப்பே இலக்கியத்தில் கணக்கு.

மொத்தத்தில், இவை காரணமாகவே தன் அமைப்பின்(குறிப்பாக முன்னும் பின்னும் வரும் வாழ்த்துப்பா போன்ற இலக்கியம் சாராத விடயங்கள்) குறைபாட்டை மீறியும் கவனம் பெறும் தொகுப்பாகிறது கோகிலா மகேந்திரனின் இந்நூல். மற்றும்படி முன்னுரையிலும், அணிந்துரையிலும் சொல்லப்பட்டதுபோல் உளவியல் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த கதைகளின் தொகுப்பென்பதெல்லாம் சும்மா. படைப்பாளி இக்கதைகளின் கலாரீதியான அம்சங்களைத் தன் வரும் படைப்புகளில் முன்னெடுத்தால் ஈழத் தமிழ்ச் சிறுகதைக்குப் பலம் சேர்க்க முடியும். அதுவே என் விருப்பமும்.

00000

தினக்குரல், 24ஜூலை2004

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்