இசையில்லாத இலையில்லை -- மதிப்புரை

இசையில்லாத இலையில்லை
(கவிதைத் தொகுப்பு)
தேன்மொழி



ஐந்து சஞ்சிகைகளில் வெளியான ஏழே கவிதைகளையும், பிற எழுபது கவிதைகளையும் உள்ளடக்கிக்கொண்டு எழுபத்தேழு கவிதைகளுடனான ஒரு தொகுப்பாய் வெளிவந்திருக்கிறது ‘இசையில்லாத இலையில்லை’ என்கிற இக் கவிதை நூல். இதன் உள்ளடக்கத்தை ஒரு பிரதேசத்தின் பதிவு என்று பொதுவில் கொள்ளலாம். அவரவர் மண்ணை, அவரவர் பயிரை, அவரவர் மனிதரைப் பதிவுசெய்கிற விசயம் நல்லது. ஆனால் பதிவுசெய்வதற்குக் கையாளப்படும் ஊடக விசயத்திலிருந்துதான் பிரச்னை துவங்குகிறது. இந் நூலும் பிரச்னையைத் சந்திக்கிற இடம் இதுதான்.

 ஊடக விசயத்தை இந்நூல் அலட்சியப்படுத்திவிட்டமை துலக்கமாயே தெரிகிறது. அதேவேளை ஒரேயடியாய் அப்படிக் கூளிவிடவும் முடியாதுதான். பாதிக்குப் பாதிஅளவில் கவிதையாய்த் தேறுவனவும், நல்ல கவிதைகள் ஆவன சிலவும், சிறந்த கவிதைகளாவன ஓரிரண்டும்கூட இதில் உண்டு. இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அளவுதான், தன் முதல் நூலைஅவசர அவசரமாக வெளியிட்டிருக்கிற ஒரு கவிஞருக்கு.

கவிதைபற்றிச் சொல்ல, வரையறைகள் செய்ய நிறைய விசயங்களுண்டு. அவை விவகாரத்துக்கும் உரியன. அவற்றைவிட்டு ஒட்டுமொத்தமாய் ஒரு விசயத்தைத் தெளிவாக இங்கே சொல்லிக்கொண்டு நூல் மதிப்பீட்டைக் கவனிக்கலாம்.

உரைநடையில் எதைச் சொல்ல
முடியாதோ அதை கவிதை தன் பொருளாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் அதன் முதல் விதி. கவிஞர்கள் இன்னும் கடிதங்கள உரைநடையில்தானே  எழுதுகிறார்கள்? அது இதுமாதிரியான  ஒரு  விசயம்தான்.

அவதியும் அவசரமும் மிகுந்த இந்த உலகத்தில் உழலும் மனசுக்கு தேன்மொழியின் கவிதைகள் பலவும் அர்த்தமாயும் சொல்லாயும் கவிதைச் சாமரம் வீசுகின்றன. ஆனாலும் எவ்வளவு தூரத்துக்குத்தான், ‘என் அப்பாவிடம் ஒரு சைக்கிள் இருந்தது, அதற்கு இரு சில்லுகள் இருந்தன, அதனிடையே நிறைய கம்பிகள் போட்டிருக்கும்’ என்பது மாதிரியானதும், ‘எங்கள் பனிக் காடுகளிலே மழை சளசளவெனப் பொழியும், இலைகள் சரசரவெனப் பாடும், மேகம் நீலமாய்ச் சிரிக்கும்’ என்பது மாதிரயானதுமான கவிதைகளை அனுபவிக்க முடியும்? எவ்வளவு பெரிய வனம்! எவ்வளவு வளர்ந்துயர்ந்த நீலமலைகள்! எங்கும் பூஞ்சிட்டும் பசுமையும் வர்ணமுமாயே இருந்துவிடுவது எங்ஙனம் சாத்தியப்பட்டது? ஒரு கூராங் கல், ஒரு முள் கூடவா பாதத்தில் தைத்திருக்கவில்லை? அப்படியொருஉலகம் எங்கே இருக்கிறது? எங்கேயும்கூட அப்படியொரு உலகம் நிஜத்தில் இருக்கமுடியாது. நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறீர்கள். ‘இக் கவிதை நூலில் மிகக் குறைந்த சமூக அக்கறைதானுமில்லை’ என்று பாலுமகேந்திராபோலும் சொல்லிவிடமாட்டேன். ‘எதைக் கவிதையாக்குவது என்பது கவிஞனின் இஷ்டம்., கவிதை மனதுள்ளிருந்து பீரிட்டெழுவது, அதை வற்புறுத்தி வரவழைத்துவிட முடியாது’ என பாரதிராஜாபோலும் சொல்லிவிடக் கூடாது. வனத்தின் பெருவனப்புக்குள்ளே மிகுஅபாயங்கள் இருக்கின்றன. இந்தப் புவிப் பரப்பில் இன்பங்கள் மட்டுமில்லை, துன்பங்களும் இருக்கின்றன. அதைப் பார்ப்பதற்கான கண்ணை மூடிக்கொண்டு உலகமே இன்பமயமென்று லாகிரி வயப்பட்டதனமாய்ப்  பேசிவிடக்கூடாது என்பதே என் தரப்பு.

இந்திரன் இந்நூலில் சொல்லியுள்ளதுபோல் கவிதைப் பாலை சுண்டக் காய்ச்சியிருக்கலாம். அதுகூடப் போதுமானதில்லை. பலவற்றை நீக்கியுமிருக்கவேண்டும். சுமார் நாற்பது கவிதைகளைத் தேர்ந்து நல்ல ஒரு கவிதை நூலைத் தந்திருக்கமுடியும். சில கவிதைகள் நேராய் எழுதக்கூடிய வசனத்தை துண்டுதுண்டாய்ப் போட்டு கவிதைமாதிரியாய்ச் செய்யப்பட்டவையே.

சில கவிதைகளின் குறையீனங்களுக்கு பதிப்புவாரியான கணினித் தட்டெழுத்துக் குறைபாட்டைஒருகாரணமாய்ச் சொல்லாதிருக்க முடியாது. ‘திரி நடனம்’ (க 40),‘தார் ஊற்றி நெய்தது’ (41) போன்றனவற்றில் பக்கத்தை அடைக்கப்போலும் எழுந்தமானத்துக்கு செய்யப்பட்டுள்ள பத்தி பிரிப்பு கவிதையைக் கொன்றே விட்டிருக்கிறது. புதுக் கவிதையானது கட்புலவாசிப்புக்கான ஒரு வடிவம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்தவிடயத்தை அணுகினால், பத்தி பிரிப்பும் சொற்களுக்கிடையிலான இடைவெளிகளும்  சேர்ப்புகளும்கூட எவ்வளவு முக்கியமானவை என்பது விளங்கும்.

‘அருகம்புல் ஆடைவுடுத்தி’ (க 54) என்ற ஒரு கவிதைத் தலைப்பில் அந்தச் சொற்புணர்ப்பின் விதி என்ன? ஆடையுடுத்தி என்பதுதானே சரி? ஒருவேளை அச்சுப் பிழையா? அப்படியானால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் மீறல், அவசியமில்லாத தருணங்களில் அபத்தமாகிவிடும் அபாயமிருக்கிறது என்ற ஞாபகம் படைப்பாளிகளுக்கு மிகஅவசியம்.

நூல், ‘வாவிக் கரையோரம்’ (க 6) என்ற கவிதையின் ஓரடியைத் தன் தலைப்பாய்க் கொண்டிருக்கிறது. தனது வாவிக் கரையோரத்தின் அழகை தேன்மொழி நன்றாகவே கவிதையாக்கியிருக்கிறார். ‘கொய்னா பூமரத்தடியில்  பூவைவிடவும்  நிழல் மெதுவாய்ச் சரிந்தது’ என்று புதிய விவரணங்களுடன் கவிதைதொடங்கும். அங்கேதான் இலைகளின் அழகு தேன்மொழியைச் சிறைப்பிடிக்கிறது. பௌர்ணமிகளாய்த் தோன்றுகின்றன இலைகளெல்லாம். மட்டுமில்லை. அவை இசைக்கவும் செய்கின்றன. அப்போதுதான் ஓங்கி முழங்குகிறார்,‘இசையில்லா இலையில்லை’யென்று. இந்தக் கவிதை இப்படியே வளர்ந்து வளர்ந்துசென்று, ‘மருந்தடித்தபடி தேயிலை கிள்ளியபடி விறகுகள் சுமந்தபடி மணலாற்று வாவிக்கரையோரம்   பேசிப் போனார்கள்  மனசு வலிக்க’ என்று தொடர்ந்து, ‘மல்லாந்து கிடக்கிற மண்தான் வாழ்க்கை’ என்று பேசுவதில் கவிதைஉச்சமடையும். தொடர்ந்து மூன்று பகுதிகளாய் அது அங்கேயே தங்கியும்விடும். பிறகு ‘வாவிக் கரையோரம் திரும்பினேன்  அவர்கள் பேசிப்போன வார்த்தைகள்   துளிர்விட்டிருந்தன சின்னதாய்’ என்று மனத்தை அதிரவைத்துக்கொண்டு அது முடியும். சொல் துளிர்த்திருக்கும் விந்தைக் காட்சி கவிதையின் அற்புதம்.

இதுபோன்ற இன்னொருகவிதைதான் தலைப்பற்றிருக்கும் 42ஆம் கவிதை. அது உயர்ந்த விடயமெதனையும் பேசுவதில்லை. ஒரு பறவை பறத்தலின் சின்ன நிகழ்வை மனத்தில் நிகழ்த்திக் காட்டுவதைமட்டுமே செய்வது. ஆனாலும் அது கவிதையாகிவிடுகிறது. அதன் பாதிப்பு வெகுநேரத்துக்கு நெஞ்சைவிட்டு அகலாது.

அந்தக் கவிதை இது:

‘பறவைஒன்று
பறந்து பறந்து
தொலைந்து போனது

மிச்சமிருக்கிறது
காதுவழி புகுந்து
நெஞ்சுக்குள்
இறங்கிவிட்ட
இறகுகளின்
ஓசை’.

சொற் பிரயோகத்திலேதான்,அதை வைக்கும் ஒழுங்கின் முறைமையிலேதான் கவிதைக்கு ஜீவன் கிடைக்கிறது. இம்மாதிரி ஜீவன் பெறும் கவிதைகள்போல் சில இத் தொகுப்பிலும் உள. அதேவேளை…அர்த்தத்தையே கவிதையாக்கும் அற்புதங்களும் கவிதையுலகில் சிலபோது நடத்திக் காட்டப்படுகிறது. அதுபோன்ற ஒரு கவிதைதான் இத் தொகுப்பிலுள்ள ‘அடையாளம்’ (க 30)  என்கிற கவிதை.

‘வாழ்வென்பது
ஒன்றுமில்லையென யோசித்தபடி
நடக்கையில்தான்
வாங்கினேன்
மயிற் பீலி

இறந்திருக்கிறதே
ஒரு மயில்
வாழ்ந்ததற்குச் சாட்சியாய்
இறகுகளை
விட்டுவிட்டு’

என்பது அர்த்தத்தையே கவிதையாய்க் கட்டியெழுப்பிய அற்புதம்.

இதேயளவு அர்த்தபரிமாணமும், சொற் பரப்பும் கொண்ட இன்னொரு கவிதை, ‘கனிவின் கசிவு’(க 75).  ‘குஞ்சுகளைத் தூக்க வழியின்றித் தவித்த அணில்  என்னைத் தூக்கிக்கொண்டு போனதைப் பார்த்தேன்  அதன் கண்களில்’ என்ற அடிகளில் ஒருமனப் பாதிப்பையே ஏற்படுத்திவிடுகிறது கவிதை. அணிலின் கண்களால் தூக்கிச் செல்லப்படும் அனுபவத்தை வாசகன் அவனவனும் அனுபவிக்கிறமாதிரிச் செய்கிற கவிதை இது. ‘காட்டுப்  பாடம்’ (க 50), ‘கரையாத நீலம்’(51), ‘மிச்சம்’(க  54)போன்ற கவிதைகள் கவிஞரின் கூர்த்த கவனிப்புக்கான அத்தாட்சிகள்.

இந்த அவதானிப்புகளும் அனுபவங்களும் எல்லோருக்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. அதற்கு கவி மனசு வேண்டும். தேன்மொழியிடம் அது இருக்கிறது. நிறையவே. வாசிப்பு, கல்வி என்பனவெல்லாம் தன்தன் அனுபவங்களை உரைத்துப் பார்க்கும் உரைகல்கள் மட்டுமே எனப்படுகிறது. ஆனால், ‘கவிதைப் புத்தகங்களோ, கதைப் புத்தகங்களோ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை என் விரல்களில் பட்டதில்லை’ என்பது தேன்மொழியின் ஒப்புமூலம். அது அவரது படைப்பாளுமைக்கு அவசியமான பின்புலமின்மையது அடையாளமுமாகும்.  ஒருவேளை இப் பின்புலப் பலகீனங்கள் இல்லாதிருப்பின் இன்னும் சிறந்த பல கவிதைகளை நாம் பெற்றிருக்கமுடியுமோவென்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்த வாசிப்பு, படிப்பு, அனுபவப் பலங்கள் அவரிடத்தில் சேருகிறபோது தமிழ் ஒரு வளமான கவிஞரைக் காணுமென்று நம்ப போதுமான ஆதாரங்கள் இந்தத் தொகுப்பல் உள்ளன.



கணையாழி,  ஏப். 2002

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்