உண்மையைத் தேடுதல் 3




மனத்தில் அசரீரியாய் ஒலிக்கின்றது
காலத்தின் சுருதிபேதம்

(வதிரி இ.ராஜேஸ் கண்ணனின் இரு சிறுகதைத்
தொகுப்புகளை முன்வைத்து…)


‘முதுசொமாய் ’ (2002), ‘தொலையும் பொக்கிஷங்கள்’ (2009) ஆகிய இரண்டு தொகுப்புகளும் ஏறக்குறைய இவ்வாண்டு மாசியிலேயே கிடைத்துவிட்டிருந்தபோதும், அவற்றினுள் பிரவேசிப்பதற்கான காலத்துக்காக சிறிது நான் காத்திருக்கவேண்டி நேர்ந்தது. பரிசுகளை அவ்வப்போது பெற்றிருக்கும் சில கதைகளை உள்ளடக்கியிருப்பினும் பரவலாகப் பேசப்படாதவை இத்தொகுப்புகள். கல்விப்புலம் சார்ந்த ஒருவரிடமிருந்து வந்த தொகுப்புகள் சாதாரண ஒரு வாசகனாய் என்னில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்ற ஆவலில் என் வாசிப்பு துவங்கியது.

இரண்டு தொகுப்புகளிலும் இருபது சிறுகதைகள். அளவிலும் சிறிதான இந்தக் கதைகளினூடாக நான் அடைந்த தரிசனம் பிரமாண்டமானது. அவ்வாசிப்பின் அனுபவங்களையே இச்சாளரத்தினூடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
முதலாவது தொகுப்பான ‘முதுசொமாய்’ மிகச்சிறந்த கதைகளைக் கொண்டிருக்காதபோதிலும், அவற்றிலிருந்த உணர்வுவீச்சு இயல்பாய் அமைந்து கதைகளுக்கான வீர்யத்தை அளித்திருந்தது. 1993இலிருந்து 2002வரையான பத்து வருட காலப்பகுதியில் வெளிவந்திருந்த கதைகளின் அத் தொகுப்பு, வடமராட்சி யுத்தத்திற்கும், வலிகாமம் புலப்பெயர்வுக்கும் பின்னரான காலக்களத்தைக் கொண்டிருக்கிறது. யுத்தத்தின் வலி நிறைந்த கதைகள் அவை. ஆனாலும் யுத்தத்தின் வலிகளை மட்டுமன்றி, யுத்தத்தினால் சமூகத்தில் விளைந்த பாதிப்புக்களை ஓரளவு சமூகவியல்ரீதியான பார்வையில் ஆய்ந்து வெளியிட்ட கருத்துக்களைச் சுமந்தவையாயுமிருந்தன.

இரண்டாவது தொகுப்பான ‘தொலையும் பொங்கிஷங்கள்’ இறுதியுத்தம் தொடங்குகிற காலத்தில் வெளிவந்திருந்தாலும், அதில் ஓரளவு சமாதான காலத்தில் நிலவிய சமூகநிலைமையிலிருந்து சமூகத்தில் அதுவரை விளைந்த இடப்பெயர்வு, புலப்பெயர்வு, மிகையான பணப்புழக்கம் ஆதியவற்றாலான பாதிப்புக்களை  கருப்பொருளாகக் கொண்ட கதைகளின் தொகுப்பாக எனக்குத் தோன்றுகிறது. இவ்விரண்டும் இவற்றின் கலாநேர்த்தியையும் மீறி எனக்கு முக்கியப்படுவது இதிலுள்ள சமூகவியல் நோக்கே எனக் கருதுகிறேன்.

‘கிராமிய வாழ்வில் நகரவாழ்வுக் கூறுகளின் அபரிமிதமான ஊடுருவலும், குடியகல்வுகளின் வழியான அனுபவ விரிவாக்கமும் வாழ்வின் தரங்குறித்த பதற்றங்களை கிராமிய மனிதர்களிடையே ஏற்படுத்தியுள்ளது’ என படைப்பாளி தனது ‘கிராமியம்-கல்வி-மேம்பாடு’ நூலில் கூறியதை அளந்து பார்க்கிற கதைகள் இவை. கதைகளின் மூலமாக கருத்தையும், கருத்தின் மூலமாக கதைகளையும் எடைபோடுகிற இந்த வசதி வெகுஅபூர்வமானது. விமர்சகனே படைப்பாளியாகவும், படைப்பாளியே விமர்சகனாகவும் இருக்கிறமாதரியான இந்த நிலைமை வெகு சிலாக்கியமானது. இரண்டு தளங்களுமே ஒன்று ஒன்றினால் பயன்பாடடைகிற வாய்ப்பு இதிலே அதிகம்.

முன்னே குறிப்பிட்டதுபோல, ஒரு இயல்பான வீச்சு முதலாவது தொகுதியில் காணப்பட்டது உண்மையே. அந்த பத்துக் கதைகளில் இரண்டு அதுவரை வெளியாகாதிருந்தவை. மீதியில் ஐந்து கதைகள் ‘சஞ்சீவி’ சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. ஒன்று வானொலிக் கதை. அடுத்தது ‘தூண்டி’யிலும், மற்றது ‘தினக்குர’லிலும் பிரசுரமாகியிருக்கின்றன. அவற்றிலிருந்த துடிப்பும், பன்முனை நோக்கும் படைப்பாளியின் தனித்துவத்தை நிலைநாட்டியிருந்தன.
இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வருகையோடுதான் ஈழத் தமிழிலக்கியம் தனக்கான பாதையில் நடைபோடத் தொடங்கியதென்பதை விடவும், அது அடையாளம் காணப்பட்டதே அதன் பின்னர்தான் என்கிற அறிகை, இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடியதே. ஆனாலும் தனக்கான ஒரு இலக்கிய முறைமையை, தனித்துவத்தை உருவாக்கிக்கொண்ட பின்னரும், வளர்ந்தும் கைவண்டியில் நடக்கிற பிள்ளைபோல அது தொடர்ந்தும் ஆரம்பப் புள்ளியிலேயே நின்றுவிடுவது வளர்ச்சிக்கான எடுகோளல்ல என்பதைச் சொல்லவே வேண்டியிருக்கிறது.

ராஜேஸ் கண்ணனின் கதைகள் யதார்த்தமானவை. அவையும் மிக எளிய பதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றின் பாதை புதியதடத்தில் செல்லவில்லையென்பதை கசப்பாகவிருந்தாலும் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. மிகவும் சிலாகிக்கிற விஷயம் இதில் என்னவெனில், இக்கதைகளில் எங்கேயும் பிரச்சார தொனி இருக்கவில்லை என்பதுதான்.
முதலாவது தொகுப்பிலுள்ள முக்கியமான கதையாக ‘மனிதம் மட்டுமல்ல’ என்ற கதையைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. வளர்ப்பு மிருகமான ஒரு நாயின் அச்சம் போர்க்கால சூழலில் எவ்வாறிருந்தது என்பதை மிகநேர்த்தியாக எடுத்துரைத்த கதை அது. கதையில் வரும் நாயான நிக்ஸன் ஒரு குழந்தைபோலவே நடந்துகொண்டது. மிருகமென்ன, மனிதனென்ன மரண அச்சமென்பது ஒன்றாகவே இருக்கிறதென்பதை தெளிவாக உணர்த்தியது அக்கதை. அதுவே யுத்தத்தின் கொடுமுகத்தையும் மிக அச்சொட்டாகக் காட்டியிருக்கிறது.

‘மாரீசம்’ நல்ல கதை. ஜனனி அக்காவின் துயரங்கள் சொல்லி மாளாதவை. குடும்பத்தையே சுமக்கும் நிர்ப்பந்தம்  இருக்கிறது அவளுக்கு. தங்கை, தம்பிமீதான அக்கறையால் திருமணத்தையே மறுக்கிறாள் அவள். குறைந்தபட்சம் வெளிநாட்டு சம்பந்தம் அவளுக்கு ஒப்பாகவே இருக்கவில்லை. அதுதான் அவளைத் தற்கொலை முயற்சியளவுக்கு உந்தித்தள்ளுகிறது. இது நஞ்சுண்ட காட்டின் அக்காவுக்கும் மூத்தவளாக என்னை உணரவைத்த பாத்திரமும்கூட. ‘லீவு போம்’, ‘அகதி அந்தஸ்து’ ஆகிய கதைகள் கவனம்பெறக் கூடியவை.

இரண்டாவது தொகுப்பான ‘தொலையும் பொக்கி~ங்க’ளிலுள்ள கதைகள் முதிர்ச்சிபெற்றவை, நடையாலும், அர்த்த வெளிப்பாட்டாலும். இதிலுள்ள முக்;கியமான கதை ‘குதறப்படும் இரவுகள்’ என்று எனக்குப் படுகிறது.
ஒரு படைப்பின் நோக்கம் செய்திப் பரிமாற்றமில்லையெனில், தன் உணர்வை தேர்ந்த மொழிகொண்டு வெளிப்படுத்துவதின்மூலம் அதன் கலைப்பண்பு அடையப்படுகிறதெனில், இத் தொகுப்பில் அதற்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய கதை ‘குதறப்படும் இரவுக’ளே. ‘இரவு என்பது ஒரு அற்பதமான உற்பவிப்பின் ரகசியம்’ என்று தொடங்குகிறது அந்தக் கதை. ‘என் செல்லத்தை அணைத்தபடி அவள். தலைமாட்டிலே அதிகாலை நான்கரைக்காக அலாரம் வைத்த மணிக்கூடு இயந்திர இயக்கத்துடன். அந்தகார இருள்மட்டும் அப்படியே’ என முடிகிறவரை நீண்ட அதன் மொழியாட்சி கதையைச் செறிவடைய வைத்திருக்கிறது. இருள் பிரத்தியட்சமாய்க் காட்டப்பட்ட உலகமாயிருக்கிறது அது.

மொத்தத்தில் இரண்டு தொகுப்புகளுமே வாசித்த பின்பும் நீண்டநேரமாய் வாசகன் மனத்துள் கிடந்து அசரீரியின் குரலாய் காலத்தின் சுருதிபேதத்தை ஒலிக்கச்செய்கிற கதைகளைக் கொண்டிருக்கிறதாய்ச் சொல்லமுடியும்.
ராஜேஸ்கண்ணனின் நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு சிறுகதைத் தொகுப்புகளோடு, ‘கிராமியம்-கல்வி-மேம்பாடு’ என்ற ஆய்வுத்துறை சார்ந்த நூலொன்றும், ‘போர்வைக்குள் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுப்பொன்றும் இவற்றுள் அடங்கும். சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளராய் யாழ். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ராஜேஸ்கண்ணனிடம் நிறைய எதிர்பார்க்க இவ்விரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்  இலக்கிய வாசகனைத் தூண்டச் செய்யுமென நிச்சயமாக நம்புகிறேன்.

0

இ-குருவி, ஆக. 2015

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்