கலாபன் கதை: 2-10


மனதில் நங்கூரமிட்ட நினைவு


1984ஆம் ஆண்டின் ஒரு ஆடி மாதம் துபாயிலிருந்து கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய கலாபனை கூட்டிவர சிவபாலன் சென்றிருந்தான். சிவபாலன் தொழில்புரியுமிடம் மட்டக்கிளப்பானாலும் அவனுக்கு கொழும்பையும் நன்கு தெரிந்திருந்தது. அவன் பல கொழும்பு நண்பர்களையும் தெரிந்திருந்தான். அன்று ஒரு லாட்ஜில் தங்கிக்கொண்டு மறுநாள் காலையில் பருத்தித்துறைக்கு பஸ் எடுப்பதே அவர்களின் திட்டமாகவிருந்து.

மாலையில் சிறிதுதூரம் நடந்துவிட்டு வரலாமென வெளியே சென்றிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக கொச்சிக்கடை அந்தோனியார் சேர்ச்சுக்கு முன்னால் தன் நீண்டநாள் கப்பல் நண்பன் அத்துளவை கலாபன் கண்டான்.

தான் அப்போது இலங்கையில் பாட்டா கம்பெனியில் வேலைசெய்வதாகக் கூறிய அவன் ஞானக்கோன் ஏஜன்ஸி உடனடியாக ஒரு கப்பல் என்ஜினியரை தேடிக்கொண்டிருக்கிறதாகவும், கொழும்பு துறைமுகத்தில் தடுக்கப்பட்டிருக்கும் ஒரு கப்பலின் சரக்கை அதை அனுப்பியவர்கள் நீதிமன்ற அனுமதிபெற்று வேறொரு கப்பலில் ஏற்றுகிறவரைக்குமான காலத்துக்கு சுமார் ஒரு மாதம் வரையுமே வேலை செய்யவேண்டியிருக்குமெனவும் தெரிவித்து, கலாபனுக்கு அது விருப்பமா என்றும் கேட்டான். சிங்கள இனத்தைச் சேர்ந்த அவனே கடந்த இரண்டு வருஷங்களாக கப்பலில் சேரமுடியாமலிருக்கிறானென்றால் தனக்கு சுலபமாக வேலைகிடைக்குமென நம்புவது முட்டாள்தனமென நினைத்த கலாபன், தனக்காக அதைப் பேசும்படி தன் சிங்கள நண்பனைக் கேட்டான். அவன் உடனேயே சிலிங்கோ கட்டிடத்துக்கு முன்பாகவுள்ள ஞானக்கோன்  கட்டிடத்திலுள்ள ஏஜன்ஸி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றான். வேலையும் அவனது அனுபவங்களின் அடிப்படையில் உடனடியாகவே கிடைத்தது.

நண்பனை அனுப்பிவிட்டு சிவாவிடம் வந்த கலாபன், “நாளைக்கு காலையில பருத்துறைப் பயணம் இல்லை” என்றுவிட்டு விஷயத்தை விபரித்தான்.

“அங்க மனுஷி  பிள்ளையள் காத்துக்கொண்டிருக்கப் போகினம்” என்ற சிவாவுக்கு, “ஒரு மாசம்தான, கையில சுளையாய் நாளுக்கு ஐஞ்நூறு ரூவாயும் கிடைக்கும்” என்றான் கலாபன்.

அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஞாயிறு காலைவரை சிவபாலன் கூடநிற்பதாகவும், செல்லும்போது கலாபனின் இரண்டு சூட்கேஸ்களையும் கொண்டுசெல்வதென்றும், அடுத்த வாரம் பருத்தித்துறை செல்லும்போது அவற்றை கலாபனின் வீட்டில் அவன் கொடுப்பதென்றும் முடிவாகியது.

திங்கட் கிழமை காலையில் கலாபன் ஏஜன்ஸியிடம் சென்றபோது,  சரக்கை மாற்றி ஏற்றவேண்டிய கப்பல் வரும் திகதி விரைவில் தெரியவருமென்றும், அதற்கிடையில் கப்பலில் மின்சார உற்பத்திக்கான ஜெனரேட்டர்களையும், சரக்கை தூக்கும் கிரேன்களையும் எந்த நேரத்திலும் இயங்குவதற்கான தயார்நிலையில் வைத்திருப்பது அவனின் பொறுப்பென்றும் சொல்லப்பட்டது.

மறுநாள் காலையில் கப்பலுக்குச் சென்று தேவையானவற்றைக் கவனிக்க அவனுக்கு உதவியாக நான்கு பேரையும் ஏஜன்ஸி கொடுத்திருந்தது.
அதில் ஒருவன் நிமால். சிங்கள இனத்தைச் சேர்ந்தவன். மற்ற மூவரில் இருவர் தமிழர், ஒருவன் முஸ்லிம். 1983இன் இனக்க லவரத்துக்குப் பின்னான உடனடிக் காலமாக இருந்ததாலேயே அவ்வாறான ஒரு பார்வை கலாபனிடத்தில் தோன்றியிருக்கலாம்.

பகலில் சென்று ஜெனரேட்டரை இயங்கச் செய்து தேவையானவற்றை கவனிப்பதும், பெரிய ஆயத்தங்கள் செய்யவேண்டி இல்லாததால் மத்தியான சாப்பாட்டை கடையில் எடுப்பிக்கும்போதே சாராயத்தையும் எடுப்பித்து குடித்துக்கொண்டு மாலை ஐந்து மணிவரை இருந்துவிட்டு ஜெனரேட்டரை நிறுத்திவிட்டு அதற்கென ஏஜன்ஸியால் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அலுவலரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கரை வருவதும்தான் கலாபனின் வேலையாக இருந்தது.

இரண்டு நாட்களின் பின் அங்கே தன்னுடன் வேலைசெய்த மூவரையும்விட நிமால் அவனுடன் வெகுவாய் ஒட்டிப்போகக்கூடியவனாய் இருந்தான். மேலும் நிமால் வேலை தெரிந்தவனாகவும், ஏஜன்ஸிக்குப் போய்வர என வெளிக்காரியங்களைக் கவனிக்க வல்லவனாயும் இருந்தான். அவனிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது எல்லாவற்றுக்கும் வசதியாகவிருந்தது.

அன்று ஒரு புதன்கிழமை. ஆமர்ஸ்றீற் றெஸ்ரோறன்ருக்கு சென்ற கலாபனும், நிமாலும் எட்டு மணிவரை பேசிக்கொண்டே மதுவருந்தினார்கள். அவர்களது பேச்சுகளும் முந்திய கப்பல்களில் வேலைசெய்த காலத்தில் துறைமுக நகரங்களில் அடைந்த இன்ப அனுபவங்கள்பற்றிவையாகவே இருந்தன. ஒருபோது கலாபன், “நிமால், தரவெண்ட எப்பா. கொழும்பக்க வடு ஹோமத?” என்று கேட்டான். அதற்கு நிமால், தனக்கு அப்போது திருமணமாகிவிட்டதென்றும்,  வேண்டுமானால் அவனை தனக்குத் தெரிந்த ஒரு நண்பனின் இடத்துக்கு கூட்டிச்செல்வதாகவும் கூறினான்.

ஒரு மணிநேர பயணமாகவிருந்தது அது. இருந்தும் கலாபனுக்கு தூரப் பிரக்ஞை எழவேயில்லை. கடைசியாக பிரதான பாதையிலிருந்து இடதுபுறம் திரும்பிய மோட்டார் சைக்கிள் சிறிதுநேரத்தில் ஒரு சிறிய வீட்டின் முன்னால் நின்றது.

கலாபன் இறங்கினான். சூழ இருள் குமைந்து விழுந்திருந்தது. தூரத்துக்கொன்றாக இருந்த மின்சாரத் தூண்களில் ஒளி குறைந்த குமிழ் விளக்குகள் மஞ்சள் நிறத்தில் அவ்வளவுதான் முடியுமென்பதுபோல் ஒளியைக் கசியவிட்டுக்கொண்டிருந்தன. தூரத்தில் யாரோ நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். கடைசி பஸ்ஸிலிருந்து வந்திறங்கி வீடு போகிற பிரயாணியாக இருக்கலாம். அந்த இடத்தை அமைதி விழுங்கியிருந்தது. எங்கோ றேடியோவில் கடைசி நிகழ்ச்சியின் முடிப்புரைபோன்ற அவசரமான தொனி கேட்டது. இன்னும் எங்கோ ஒரு குழந்தை அழுதது. யாரோ ஒரு பெண்ணின் சிரிப்புக் கேட்டது. அவை இன்னும் அந்த அமைதியை இறுக்கமாய்க் காட்டவே முயன்றுகொண்டிருந்தன. சற்றுநேரத்தில்தான் தெரிந்தது தாம் பிரதான பாதையைவிட்டும் ஏறக்குறைய இரண்டு மைல்களாவது உள்ளே வந்திருப்போமென்பது.

எண்பத்து நான்கில் இலங்கைக்கு வரவிருந்த திட்டத்தை மாற்றக் காரணமானதும், தூபாயிலிருந்து விமானம் பகலிலே பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடையுமாயிருந்தாலும் தனிப் பயணத்தைத் தவிர்க்க சிவபாலனை மட்டக்கிளப்பிலிருந்து கொழும்பு விமானநிலையம் வந்து தன்னை எதிர்கொள்ளச் செய்யவும் காரணமாகவிருந்தது எதுவோ அது இன்னும் உள்ளடங்கிருந்து அவனுள் மெல்ல அனுங்கியது.

மோட்டார் சைக்கிளை உள்ளே நிறுத்தி வந்த நிமால், “வாருங்கள்” என்றான். அசைவேதுமற்று நின்றிருந்த கலாபனைக் கண்டு, “ஏன்?” என்றான். கலாபன் மேலும் தன் உணர்வை அடக்காமல், “ஒன்றும் பயமில்லையே, நிமால்?” என்று கேட்டான். “அப்படியான இடத்துக்கு உங்களை அழைத்து வரமாட்டேன், அண்ணா” என்று கூறி நிமால் அவனை உள்ளே கூட்டிச்சென்றான்.

ஓட்டு வீடு. கற்சுவர்கள் சாந்து பூசப்படாமலிருந்தன. ஜன்னல்கள் இருந்தன. மறைப்புக்காக அவற்றுக்கு சாக்குகள் போடப்பட்டிருந்தன. உள்ளே லாந்தர் அளவு வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது ஒரு மின்குமிழ். அவையே அச்சத்தைக் கிளப்புவனவாக இருந்தன.

கலாபனிடத்தில் இன்னும் அச்ச அலைகள் அடங்காமலேயிருப்பது கண்டு அங்கிருந்த ஒரு முதியபெண்ணிடம் மெதுவாக ஏதோ சொன்னான் நிமால். அவள் இரண்டு கிளாஸ்களையும் சோடா போத்தலில் ஊற்றிய சாராயத்தையும் கொண்டுவந்து முன்னால் வைத்தாள்.

நேரமாகவாக அச்சம் அடங்கிவரப்பெற்றான் கலாபன். அந்த முதியவளின் மகள்போல் தோன்றிய ஒருபெண் அறை வாசலோரம் நிலத்திலமர்ந்து கால்நீட்டிச் சாய்ந்திருந்தாள். துண்டு கட்டியிருந்தாள். பெருங்கழுத்துச் சட்டையணிந்திருந்தாள். ஆனாலும் அடக்கமாகவே  மார்பகங்கள் முட்டிநின்றிருந்தன. தாய்போல் அன்றி வெண்மை மினுங்க இருந்தது அவள் மேனி. அவள் மிகஅழகாக இருந்தாள். அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவளது சிவந்த அதரங்கள் மினுங்கித் தெரிந்தன. மடிப்பு விழாதிருந்த இடுப்பு அவளது மெலிவைச் சொல்லியது. அது வறுமையின் மெலிவென்பது கலாபனுக்குப் புலனாகியது. அவ்வப்போது நிமாலோடு மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். அவள் கலாபனின் பக்கம் திருப்பிய பார்வையில் கசிந்த சிரிப்பு அவளை இன்னும் அழகானவளாகக் காட்டியது.
கலாபனின் கலகலப்பின்மையை ஒருவாறு கண்டுகொண்ட தாயார் காரணத்தை நிமாலிடம் வினவினாள். அவர்கள் பேசியது பூரணமாக விளங்காவிட்டாலும் கடைசியில் அவள் சொன்னவற்றை நன்கு புரிந்தான் கலாபன். “மொக்கட்டத பயவென்ட ஓண? மே அபே கெதர.”

அந்தப் பேச்சே எப்படியென்றில்லாமல் ஒரு தைரியத்தை கலாபனுக்குள் உருட்டிவிட்டது. அவளது வீட்டில் அவளை யாரும் எதுவும் கேட்டுவிட முடியாது என்ற அர்த்தம் மட்டுமில்லை, அவளது வீட்டில் அவனுக்கு அல்லது எவருக்கும்கூட எந்த அசம்பாவிதத்தையும் அவள் அனுமதித்துவிட மாட்டாளென்ற உறுதிமொழியின் தொனிப்பும் அதில் இருந்தது. அது அவன் மனத்தில் இறுகி உறைந்தது.

மேலே சிறிதுசிறிதாக கலாபன் நிதானமடைந்து வந்தான். அவர்களது பேச்சில் சிறிதுசிறிதாய் இடையிடவும், சிரிக்கவும் செய்தான்.

அவர்கள் திரும்பத் தயாரானபோது மணி அதிகாலை ஒன்று.

லொட்ஜுக்கு திரும்பிய கலாபன் தூங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். பெரும்பாலும் அவனொரு பரவச நிலையில் இருந்திருந்தான். அவன் சென்று வந்த இடம் கம்பஹா என்பது தெரிந்தபோதுகூட அவனுக்கு யோசிக்க பெரிதாக அதில் எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை. கம்பஹா சரியாக கொழும்பிலிருந்து கண்டி செல்லும் பாதையில் இருபத்தேழாவது மைல் கல்லிலிருந்து ஆரம்பித்தது. தனிச் சிங்களப் பகுதி. நாம் சிங்களர் கட்சித் தலைவராயிருந்த கே.எம்.பி.ராஜரத்தினாவின் அரசியல் தொகுதியும் அது.

மட்டுமில்லை, இருபத்தேழாவது கல்லில் இடப்புறம் திரும்பி மேலும் சுமார் மூன்று மைல் தூரத்திலிருந்தது அவன் சந்தித்துவந்த பெண்ணான சுமத்திராவின் வீடு. வெகு சமீபத்தில் பன்சால இருந்தது. அவன் பயத்தை வென்றானா? அல்லது அந்த அளப்பரிய அழகு அதை வெல்லவைத்ததா?
அவன் அங்கிருந்து புறப்படுவதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான் சுமத்திரா அவனுக்கு இலங்கை அழகு ராணிப் போட்டியில் இரண்டாவது இடத்தை வென்று கிரீடம் சூடியபோது எடுத்திருந்த தனது போட்டோவைக் காட்டியிருந்தாள். அதை நம்பாமல்விட கலாபனுக்குக் காரணமில்லை.

ஜனதா ஜாதிக விமுக்தி பெரமுனவின் ஆயுதப் புரட்சிக் காலத்தில் இறந்துபோன தந்தைக்குப் பிறகு குடும்பத்தில் வந்து விழுந்த வறுமையை தாய் எப்படியோ சமாளித்து வந்தாளென்றும், தாயாரின் நீண்டகால நோய்ப்படுக்கையின் பின்தான் அவ்வாறு அவள் சீல் சாராயம் விற்கத் தொடங்கினாளென்றும், அதையும் ஒளிவுமறைவாகவே செய்ததில் பெரும்பாலும் தங்களை வளர்த்தது கூப்பன் முத்திரையென்றும் அவள் சொல்லியிருந்தது அவனை என்னவோ செய்துகொண்டிருந்தது.

அவளது மேனியின் ஸ்பரிசம் அவனது உள்ளத்தில் ஆழமாய் எழுதப்பட்டாயிற்று. அவள் அழகாய் இருந்தாள். அதைவிட ஆசை மிக்கவளாய் இருந்தாள். அளவின் மேலான ஆசையிலிருந்து காமம் கிளைக்கிறது. அவள் இரண்டினதும் மத்திய புள்ளியிலிருந்தாள். ஒருவெறியை அவனிடத்தில் ஏற்றி தன்னைத் தணிவிக்கும் வித்தை அவளுக்குத் தெரிந்திருந்தது. சுமத்திரா அவன் மனத்தில் விழுந்த ஆசையின் நங்கூரம். காலமே கலாபனின் இனிவரும் நாட்களை வழிநடத்தவேண்டியிருந்தது.

மேலும் ஒருமுறை நிமாலுடன் சென்றவன், மிகவும் இளக்காரமாக தன்னை அவன் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக பின்னால் ஓட்டோவில் தனியே செல்ல ஆரம்பித்தான். ஒரு முஸ்லிம் ஓட்டோக்காரன் அவனோடு மிக அணுக்கமாக வந்திருந்தான். முதல்முறை சென்றிருந்தபோது வீட்டின் சமீபத்தில் அவனை நிற்கக் கேட்க, அதுவொரு மோசமான இடமென்றும், பக்கத்திலேதான் கசிப்பு காய்ச்சுகிற இடமிருக்கிறதென்றும் கூறி வேண்டுமானால் தான் கண்டி வீதி சந்தியில் நிற்பதாகச் சொன்னான் நளீம். சரியாக ஒரு மணிநேரம் கழித்து வரச்சொல்லி அந்தப் பிரச்னையை கலாபன் சமாளித்தான். அது அறிந்த சுமத்திரா அப்படி அவன் செய்யவேண்டியதில்லையென்றும், விரும்பினால் அவன் அங்கே தங்கி காலையிலேயே புறப்படலாமென்றும் தெரிவித்தாள்.

அவ்வாறு மூன்று முறை அவன் அங்கே தங்கினான். அந்த இரவுகளில்தான் சுமத்திரா தன் கடந்த காலத்தை மனந்திறந்து விரித்தது.

அவள் ஒரு சிறையில் இருப்பதாக அப்போது அவன் எண்ணினான். அவளை சுகபோகத்துக்காய், ஒரு விதத்தில் பெருமிதத்துக்காகவும், அவளது சிறகையுடைத்து வைத்திருக்கும் பிக்குவிடமிருந்து அவளைக் காப்பாற்றவேண்டியது தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற விதியென அவன் நம்பினான். அவளது சிறகுகளை மீட்டு அவளுக்கு மீள அளிப்பதே அவளை அனுபவித்ததற்கான சரியான கூலியென்பது அவனுக்குத் தீர்மானமாயிற்று.
திடீரென சரக்கை மாற்றியேற்றவேண்டிய கப்பல் அடுத்தநாள் துறைமுகம் வரவிருக்கும் செய்தி ஏஜன்ஸிமூலம் அவனுக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து அவன் கப்பலிலேயே தங்கவேண்டியிருந்தது. மட்டுமன்றி, வேலையும் பதினைந்து இருபது நாட்களுக்குள் முடிந்துவிடும். அதற்குள் சுமத்திரா குறித்து அவன் ஏதாவது நடவடிக்கையை எடுத்தாகவேண்டும்.

அவனது ஓட்டோ நண்பன் நளீம் அவனுக்கு உதவியாக இருக்க வாக்களித்தான். தனக்குத் தெரிந்த ஏஜன்ஸி மூலம் அவளை விரைவில் மத்திய கிழக்குக்கு அனுப்பிவிடலாமென ஆலோசனை கூறினான். அதற்கு கலாபனுக்கு நிறைய பணம் வேண்டியிருக்கும். அவனும் தயாராகவே இருந்தான்.

இரவிலே கப்பலிலேயே அவன் தங்கவேண்டி நேர்ந்ததால் முன்புபோல் சுமத்திராவீடு செல்ல அவனுக்கு வசதிப்படவில்லை. ஒருநாள் அப்துல்லா அகப்படாத நிலையில் பஸ்ஸிலேயே புறப்பட்டு கம்பஹா எல்லையை அடைந்தான். ஒன்பது மணிக்கு முன்பாகவே சுமத்திரா வீடடைந்த கலாபன் தன் எண்;ணத்தை சுமத்திராவிடம் விளங்கப்படுத்தினான். தெரிந்த உறவினர் யாராவது வீட்டில் தங்கியிருந்து ஏஜன்ஸி மூலமாய் மத்திய கிழக்கில் ஒரு வேலைக்கு அவளை முயற்சிக்க வற்புறுத்தினான். தேவையான பணத்தை தான் தருவதாக அவளிடம் உறுதிகூறினான். அவள் தன் சம்மதத்தை தன் கண்ணீரில் தெரிவித்தாள். விபரமறிந்த தாயார் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு புத்தபகவான் அவனைக் காக்கவேண்டுமென்று மன்றாடினாள்.

அடுத்த சனிக்கிழமை தான் வந்து அவளை அழைத்துப்போய் கொழும்பில் விடுவதாகக் கூறிக்கொண்டு கலாபன் திரும்பிவிட்டான். அன்று அவன் அங்கே தங்கக்கூடயில்லை.

அங்கேயிருந்து அவளை வெளியே கொண்டுவருவதில் எதுவித சிரமமும் அவன் எதிர்கொள்ள இருக்கவில்லை என்பது வெளிப்படை. பணம்தான் முக்கியமான பிரச்னையாகவிருந்தது. அவளது கடவுச்சீட்டுக்கும், ஏஜன்ஸிக்கும் இருபதாயிரம் ரூபாயாவது தேவைப்படும். கொழும்புக் கப்பலில் வேலைசெய்த பணம் முழுவதையுமே கொடுக்கவேண்டி இருக்கும். அது பெரிய தொகைதான். ஆனாலும் அவன் வாக்குக் கொடுத்துவிட்டான்.
சனிக்கிழமை வந்தது. இரவு பத்து மணியளவில் நளீம் துறைமுக வாசலில் ஓட்டோவோடு தயாராகவிருந்தான். கலாபனை ஏற்றிக்கொண்ட ஓட்டோ கம்பஹாநோக்கிப் பறந்தது.

தனியார் பஸ்களின் பொலிஸ் சோதனை, சனிக்கிழமைகளின் வழக்கமான வாகன போக்குவரத்து நெரிசலென நீண்டநேரம் எடுத்ததில் கலாபனால் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அணித்தாகத்தான் இருபத்தேழாம் கட்டைச் சந்தியை அடைய முடிந்தது.

சந்தியே இருள் படிந்துதான் இருந்தது. இரண்டு பலசரக்குக் கடைகள், ஒரு தேநீர்க்கடை. ஒரு சைக்கிள் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையென நான்கைந்து கடைகள் தான் அந்தச் சந்தியில். அனைத்தும் அந்தவளவில் பூட்டியிருந்தன. நீண்ட பயண பஸ்கள் தவிர இனி அந்த இடத்துக்கு பஸ்களும் இல்லை. பயணிகள் காத்துநிற்குமிடத்தில் நான்கைந்து நாய்கள்மட்டும்  ஒரு பெட்டை நாய்க்காக உறுமிக்கொண்டும் கடிபட்டுக்கொண்டுமிருந்தன. மற்றும்படி அமானுஷ்யம் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது சந்தி.

ஓட்டோ வேகம் தணிந்து இடதுபுறப் பாதையில் திரும்புகிறவேளை எங்கோவிருந்துபோல் திடீரென இருளிலிருந்து வெளிவந்து கையை நீட்டி ஓட்டோவை நிறத்தினாள் சுமத்திரா. கூட தாயார். நெருங்கிவந்த சுமத்திரா, “கலாபன், நீங்கள் உடனேயே திரும்பிப் போய்விடுங்கள். தாமதிக்கவேண்டாம். உங்களைத் தாக்க எங்கள் வீட்டருகில் நேற்றுக்கூட ஆட்கள் காத்திருந்தார்கள்” என்று அவசரத்துடன் கூறினாள்.

“சரி, நீயும் ஏறு. இப்படியே நாம் போய்விடலாம், சுமத்திரா. இனி இங்கே வரவேண்டியதில்லை, ஏறு” என்றான் கலாபன்.

“சாத்தியமில்லை, கலாபன். கொழும்புக்குச் செல்வதுபோல் மாலை மூன்று மணிக்குப் புறப்பட்டு வந்து எங்கெல்லாமோ அலைந்துவிட்டு இருட்டியதிலிருந்து இந்த பஸ் நிறுத்தத்திலும் அந்த பஸ் நிறுத்தத்திலுமாய் இவ்வளவுநேரம் காத்துநிற்கிறோம். ஒட்டிநின்று எங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்களோவென்று இப்போதுகூட எனக்கு பயமாகவே இருக்கிறது. நீங்கள் என்னை பாலியல் அடிமையாய் வைத்திருக்கும் புத்த பிக்குவைவிட ஆயிரம் மடங்கு மேலானவர். உங்களுக்கு என்னால் எது காரணம் சுட்டியும் ஒரு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது. உடனே புறப்படுங்கள். ட்றைவர் அண்ணா, தயவுசெய்து தாமதிக்காதீர்கள். அது உங்கள் இரண்டுபேருக்குமே ஆபத்து” என்றாள்.

அவளை எதற்காக நம்பாமல்விட வேண்டும்? கலாபனின் மறுப்பையும் பொருட்படுத்தாமல் ஓட்டோவைத் திருப்பினான் நலீம்.

அவ்வேளை நான்கைந்து சைக்கிள்கள் குறுக்குத் தெருவிலிருந்து சரசரவென வந்து சந்தியில் மிதந்தன. “அடோவ்… வேசிக புத்த…” என பல்வேறு வசைமொழிகளைத் தொடர்ந்து ஓட்டோவைநோக்கி கற்கள் பறந்துவந்தன. அதே திசையில் வீசப்பட்ட போத்தல்கள் நெடுஞ்சாலையில் விழுந்து சிதறின.
ஓட்டோ பறந்தது.

பின்னால் இரண்டு பெண்களின் கதறல் ஒரு கணம் கேட்டு மறைந்தது.
கலாபன் வெறி முறிந்து நிதானமாயிருந்து எல்லாம் யோசித்தான். அவனுக்கு மனம் கரிந்து கண்ணீர் கசிந்தது.

தமக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடும் என்ற நிலைமையிலிருந்தும்தான் அவனைக் காக்க சுமத்திராவும் தாயாரும் அவ்வாறு நடக்க முனைந்திருந்தார்கள். அவனைக் காப்பாற்றுவது ஏதோ தங்களின் கடமைபோல் அதை அவர்கள் செய்திருந்தார்கள். தான் அவர்களைக் காப்பாற்ற முனைவதாகத்தான் அவன் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் சுமத்திராவின் தாயின் வாயிலிருந்து ‘மே அபே கெதர’ என்ற சொல் பிறந்த நாளிலிருந்து அவனை அவர்கள்தான் காப்பாற்றுமெண்ணத்தோடு இருந்திருக்கிறார்கள் என்பது அப்போது அறிகையானது.

சுமத்திரா தாக்கப்பட்டிருக்கலாம். கொலைகூடச் செய்யப்பட்டிருக்கலாம். சாட்சிகள் இருக்கக்கூடாதென்பதற்காய் கூட அவள் தாயாரும். சுமத்திரா உடம்பால் தாக்கப்பட்டதோடு பெண்மையாலும் சிதைக்கப்பட்டிருக்கலாம். அவனே நேரடிக் காரணமில்லை. ஆனாலும் அவன் காரணமாயும்தான் அது நடந்திருக்க முடியும். இனி கண்ணீரைத்தவிர கொடுப்பதற்கு உரிய எதுவும் அவனிடமில்லை.


00000

தாய்வீடு, அக். 2015

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்