உட்கனல்




நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிருந்த நினைவுகள் திடீரென சுழிப்பெடுத்துப் பெருகின.
      நாவற்குழிப் பாலம், செம்மணி உப்பளம், அப்பால் மயானவெளி தாண்டி நல்லூர்ப் பாதையில் முதல் வருகிற குடிமனைத் தொகுதி நாயன்மார்கட்டு. சுமார் இருபது வருஷங்களுக்கு முந்தி சுற்று மதிலும், வாசல் கொட்டகையும், வெளியே தெருமடமும் கொண்ட அந்த வீடிருந்த இடத்தில் அப்போது வேறொரு வீடு இருந்துகொண்டிருந்தது. மட்டுமில்லை. சற்றுத் தள்ளி நல்லூர்த் தெருவிலிருந்து அரியாலைக்கு கிளை பிரிந்த சந்தியிலிருந்த கிணற்றுக் கட்டும் மேடையும், அருகிலிருந்த சுமைதாங்கியும்கூட இல்லாது போயிருந்தன. இருந்தும்  செம்மணி தாண்டி கார் குடிமனைக்குள் பிரவேசித்ததுமே அந்த இடத்தை நவநீதம் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.
      அப்போதுள்ள, குடும்பத்தின் நிம்மதி, செழிப்பு எல்லாமும் ஒரு பொறியில் பஸ்மமாகவிருந்த ஒரு காலத்தை அப்போது அவர் எண்ணினார். அதிலிருந்தான மீட்சி அப்பொழுது இல்லாமல் போயிருக்கிற அந்த வீட்டிலேதான் சாத்தியமாயிற்று.
      புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்திருந்த காலத்தில் அவ்வப்போது அதை அவர் எண்ணினார். கச்சிதமாக நிலைமையை அனுசரித்த தனது சாமர்த்தியத்தை எண்ணி அப்போதெல்லாம் அவர் தன்னை மெச்சிக்கொள்ளத் தவறவில்லை. ஆயினும் வள்ளிநாயகி அந்த துரோகத்தை அனுசரித்துப் போன  புதிர் எப்போதும்போல் விடுபடாததாகவே அவரில் இருந்துகொண்டிருந்தது. அதுகூட பின்னர் பின்னராக நினைவின் எட்டாத் தொலைவுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து போயிருந்தது.
      திரும்பி அருகிலிருந்த மனைவியைப் பார்த்தார். அந்த இடத்தோடும், அங்கு நடந்த சம்பவங்களோடும் அவளுக்கு மிகுந்த தொடர்பிருந்தது. அந்த நிகழ்வுகளின் முக்கிய பாத்திரம் அவள். இருந்தும் கண்ணாடிப் பக்கமாக முகத்தை முழுவதுமாய்த் திருப்பி வெளியே பார்த்தபடி தன்னை அவரிலிருந்து ஒளித்துக் கொண்டிருந்தாள்.
      அவளது ஒதுக்கம் எது காரணத்தாலானதென நிச்சயிக்க முடியாதிருந்தபோதும் அவரது மனத்தில் ஒரு பதற்றம் இறங்கத் துவங்கியது. ஊர்காணும் அந்தப் பயணத்துக்கு தான் வரவில்லையென்றிருந்தவளை வற்புறுத்தி அழைத்து வந்தது வேண்டாத வினையாய் ஆகிவிட்டதோவென அவர் அஞ்சத் துவங்கினார்.
      நல்லூர் சென்றவர்கள் சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு முன்பாகவே மிருசுவிலில் தாங்கள் தங்கியிருந்த உறவினர் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். முன்னறையின் ஒற்றைக் கட்டிலில் அவரும், கீழே பாய்விரித்து அவளுமாய் சாப்பிட்டு வந்து படுத்திருந்தபோதுகூட கார்ப் பயணத்தில்போல் அவருக்கு முகத்தை மறைத்தபடியேதான் வள்ளிநாயகி திரும்பிப் படுத்திருந்தாள். 
      அவ்வாறு அந்த எண்பதுகளிலும் அவள் இருந்திருக்கிறாள். அவர்கள் உறவுக்குள் விரிசல் விழுந்துவிட்டதின் அடையாளம் அது. அது பெரிய பாதிப்பை அவரிடத்திலோ, அவரது குடும்ப ஸ்திரத்திலோ இனி எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தாதென்றபோதும் தனக்குள் அச்சம் துளிர்ப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை. அது தனது அன்றைய தந்திரங்களின் வெற்றியால் ஒரு சிக்கலான குடும்ப நிலைமை நேர்கண்டதென்ற தன் அதுவரை காலத்திய பெருமையின் தோல்வியாக முடியுமென்பதோடு, அதை முழுவதுமாய் நம்பிக்கொண்டு தன் மனைவி தன்னோடு இயல்பில் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கவில்லையென்ற தோல்வியாகவும் முடிந்துவிடும்.
      அவர் எல்லாம் எண்ணிப்பார்த்தார்.
      ஒருகாலத்தில் விசுவமடு, தருமபுரம் பகுதிகளுக்குச் சென்று செத்தல் மிளகாய்க் கொள்வனவும், கொழும்புக்கு மரக்கறி ஏற்றுமதியும் அவர் செய்துகொண்டிருந்தார். தூக்குத் தராசில் அவர் புரிந்துவைத்த சூக்குமத்தில் ஒன்றுக்கு இரண்டாக லாபத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது வியாபாரம். அது அவரது பழக்கத்தின் திசைமாற்று விசையாகவும் காலப்போக்கில் ஆகிப்போனது.
      இரவுகளில் தாமதமாக வருவதும், சில இரவுகளில் வராமலே இருந்துவிடுவதும்பற்றி வள்ளிநாயகி கேட்டபோதெல்லாம் நண்பர்களோடு கடுதாசி விளையாடுவதாக அவர் சொன்ன காரணத்தை அவள் ஆரம்பத்தில் சுணக்கத்தோடெனினும் நம்பவே செய்தாள். ஆனால் அதன் உண்மைக் காரணம் ஊரிலே சலசலக்கத் தொடங்கியபோது வள்ளிநாயகி சிதறிப்போனாள். அவரின் இரவு வெளித் தங்குகைகளுக்கு திட்டமாக தடைபோட்டாள். பிள்ளையின் தலையிலறைந்து, மீறினால் செத்துவிடுவேனென ஆணையிட்டாள். என்றைக்கு அவர் அவளது ஆணையை மீறியது தெரிந்தாளோ, அன்றைக்கே அவரைத் திரஸ்கரித்து குழந்தைகளோடு வீட்டைவிட்டு வெளியேறினாள்.
      தாய் வீடு போனவளுக்கு அயல் நகரத்திலும் மாநகரத்திலும் கணிசமாயிருந்த பல கண்கொத்திப் பாம்புகளின் கதைகளைச் சொல்லிற்று. அப்புக்காத்து பிரக்கிராஸி கிளார்க்குகளென பலர் அவற்றால் அழிந்தொழிந்து போனமைக்கு சாட்சியங்கள் காட்டிற்று. அவளெடுத்தது சரியான முடிவென பரிந்துரையும் செய்தது.
      ஆனால் மன்னாரிலிருந்து வந்த பெரியம்மா வேறுமாதிரிச் சொன்னாள். ‘காசு புழங்கிற ஆம்பிளயளுக்கு கடிக்காமயே விஷமேத்த சில பாம்புகளுக்குத் தெரியும், பிள்ளை. இந்தமாதிரிப் பாம்புகளிட்ட ஒருக்காப் போய் மாட்டியிட்டா கையில காசு தீருமட்டும் தங்கட பிடியை லேசில விட்டிடாதுகள். நீ எதுக்கும்  நாயன்மார்க்கட்டு பசுபதி அய்யரிட்ட நவநீதத்தை ஒருக்கா கொண்டுபோட்டு வா. எல்லாம் சரியாயிடும்.’
      ‘நவநீதம் நல்லாய்த்தான இருந்தது. பிறகெப்பிடி அதுக்கு புத்தி இந்தமாதிரிப் போச்சுது?  அது அந்த கண்கொத்தியளின்ர வேலையாய்த்தான் இருக்கும். பெரியம்மா சொன்னமாதிரி ஒருக்காச் செய்துபாரன்’ என்றாள் அம்மாவும்.
      ‘அது கண்கொத்தியளின்ர விஷமில்லை, அந்தாளின்ர அமர்’ என்று வாதம் புரிந்தாள் வள்ளிநாயகி. இரண்டு பிள்ளைகளோடு அவள் அந்தமாதிரி அவரை உதறியெறிந்துவிட்டு வந்து தன் வாழ்வைக் கழித்துவிட முடியாதென்று அம்மா அவளைத் துரத்திவிட்டாள்.
      அடுத்த நாள் காலையில் குழந்தைகளோடு வீடு வந்தாள் வள்ளிநாயகி. உள்ளே கூடத்துக்குள் நவநீதம் பாய்விரித்துப் படுத்திருந்தது.
      ‘உடம்புக்கென்ன?’
      ‘காய்ச்சல்.’
      ‘உது சும்மா காய்ச்சலாயிராது, விஷக் காய்ச்சலாய்த்தான் இருக்கும். காய்ச்சலுக்கு இப்ப பனடோல் குளிசை தாறன். விஷத்துக்கு நாளையிண்டைக்கு வெள்ளிக்கிழமை பசுபதி அய்யரிட்டதான் கூட்டிக்கொண்டு போப்போறன்.’
      தன் சிதைவை அவள் அவ்வாறு விளங்கியது கண்டு, அதுவே குடும்பத்தைக் கட்டாக வைத்திருக்கக்கூடிய சமயோசிதமாகத் துணிந்து சம்மதித்தார்.
      அவளும் தனக்கில்லாது தன் தாயாருக்கும், பெரிய தாயாருக்குமிருந்த  நம்பிக்கையைப் பரீட்சிக்கும் ஒரு முயற்சியாக அவரை ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் நல்லூர் கூட்டிவந்தாள்.
      அப்போது புதிதாய் முளைத்திருந்த அந்த பலசரக்குக் கடைக்கு எதிரேதான் பிரமாண்டமான சுற்று மதிலுக்குள்ளே பசுபரி ஐயரின் சிறிய கூரைபோட்ட சுண்ணாம்புக்கல் வீடு இருந்திருந்தது. காட்டுக் கல்லும், முருகைக் கல்லும் கலந்து கட்டப்பட்ட சுற்றுமதில் ஆளுயரத்திற்கு மேலானதாயிருந்தது. அதன்மேலே படிந்து படிந்து கருமையேறிக் கனத்துக் கிடந்த பாசியின் தடிப்பம் மதிலின் நூற்றாண்டு கடந்த வயதைச் சொல்லிக்கொண்டிருந்தது. மதிலுக்கு மேலால் தூங்கு செம்பரத்தம் பூக்கள் மாந்திரீகத்தின் இழைகளாய் வெளியே தொங்கி அசைந்துகொண்டிருந்தன.
      உள்ளே அவர் சென்றபோது கைமணி கிணுகிணுத்துக் கேட்டது. வீட்டின் பின்புறத்தில் தூண்டாமணிவிளக்குகள் மினுக்கியது. கோவிலின் அமைவும், மரங்களின் செறிவும் அவரை மெஸ்மரிசத்துக்கு உள்ளாக்கின. அவர் அவள் பின்னால் ஊர்ந்துபோனார்.
      நவநீதத்தை குளித்துவரச் சொன்ன அய்யர், எலுமிச்சம் பழம் சுற்றி வெட்டிப்பார்க்க, பிளந்து இரண்டாய்க் கிடந்த பழத்தின் விதைகளில் விஷத்தின் அளவும் வீர்யமும் கறுப்பாய்ப் படிந்திருக்கக் காணக்கிடந்தது.
      அதில் அய்யரே ஆச்சரியப்பட்டபடிதான் நவநீதத்திற்கு காப்பு நூல் கட்டினார். குடும்பத்தையே மறக்கச் செய்யுமளவு நவநீதத்தின் மேல் வீசப்பட்டிருந்த கடூர வசியத்தினைச் சொல்லி, அவரை அடுத்த வெள்ளிவரை அங்கே தங்க வேண்டுமென்றார். ‘அதுக்குள்ள வசியத்தை முறிச்சிடுவன். ஆனா எந்தக் காரணத்தைக்கொண்டும் நவநீதம் கேற்றைத் தாண்டக்குடாது. இவரில ஏவிவிட்டிருக்கிற வசியத்தின்ர வீறு கொஞ்சங்கொஞ்சமாய்க் கழண்டு வெளிய ஓடியிட்டாலும், வாசலில அது ஆள் எப்ப வருமெண்டு காத்திருக்கும். இப்ப நான் கையிலே கட்டியிருக்கிற காப்பு ஒரளவுக்குத்தான் இவருக்குப் பாதுகாப்பு. சொல்லிப்போட்டன், கவனம்.’
      எல்லாம் கேட்ட நவநீதம் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு தலையை ஆட்டினார்.
      அந்த கோட்டைபோன்ற சுவர்களின் உள்ளிருந்த பழைய வீட்டுக்குள்ளே நவநீதம் எட்டு நாட்கள் தங்கி இருந்தார். ஏழாம் நாள் பகல்தவிர்ந்த நேரமெல்லாம்  வள்ளிநாயகியும் அவரோடு உடனிருந்தாள்.
      எல்லாம் நல்லமாதிரி நடந்துகொண்டிருந்த அந்த ஏழாம் நாள் பகலில், தாயார் வீட்டில் விட்டுவந்த வள்ளிநாயகியின் மூத்த பிள்ளை சைக்கிளில் மோதுண்டு காயம்பட்டிருக்கிறானென்ற செய்தியைக் கொண்டு அவளது தம்பி காசி அங்கே வந்தான்.
      செய்தியறிந்த அப்போதும் அவள் அவரைத் திரும்பியும் பாராமல் அவ்வண்ணமே இருந்திருந்தாள். அவரது எந்த உணர்வு வெளிப்பாட்டினையும்  முற்றுமாய் அவள் செய்த உதாசீனத்தின் அடையாளம் அது.
      பின்னால் வழக்கம்போல தனக்குள்ளே புலம்பினாள். ‘வீட்டு ஆம்பிள சரியா இருந்திருந்தா இந்த இடியெல்லாம் என்ர தலையில ஏன் வந்து விழப்போகுது?’
      அவர் மௌனமாய் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தார். அவளின் சீற்றத்தினது நியாயத்தை அவர் புரிந்திருப்பார்போல.
      அன்றிலிருந்து ஏழு நாட்கள் ஒழுங்கு எதுவும் பிசகவில்லை.
      ஆனால் வீட்டிலேதான் கெட்டது நடந்திருந்தது.
      செய்தி கொண்டுவந்த காசி, ‘நீ சனிக்கிழமை காலமயே எல்லாம் முடிச்சுக்கொண்டு வாக்கா. போட்ட தையலோட அவன் இப்ப விளையாடிக்கொண்டுதான் திரியுறான்’ எனச் சொன்னபோதும், வள்ளிநாயகியால் அடங்கியிருக்க முடியவில்லை. எப்படியும் மாலைக்குள் வந்துவிடுவதாக அய்யரம்மாவிடம் சொல்லிக்கொண்டு காசியுடன் வீடு புறப்பட்டாள்.
      அன்று மாலை அவள் பொழுது சாய்கிற வேளையில் வேர்த்து விறுவிறுத்து அவசர அவசரமாக  அய்யர் வீடு வந்தபோது நவநீதம் அங்கே காணப்படவில்லை.
      அய்யரம்மா சொன்னது கேட்டு வள்ளிநாயகி திடுக்கிட்டுப் போனாள்.
      தனது கட்டளையை மீறி நடக்குமிடத்தில் வெகுண்டு உடனேயே பையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடும்படி விரட்டுவதுதான் பசுபதி அய்யரின் இயல்பு. அன்றைக்கு ஏனோ அவளைப் பார்த்தபடி திண்ணைக் கதிரையில் நிலைகுத்தி அமர்ந்திருந்தார். அவள் இதயமாய் நின்று துடித்துக்கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்திருக்கவேண்டும்.
      பிறகு அவளை கிட்ட வரச்சொன்னார்: ‘நீ அழவேண்டாம். வசியத்தின்ர வீறு குறைஞ்சுவாற கடைசிநேரத்தில இப்படித்தான் அது ஒரு மூச்சோட ஆளை வெளிய இழுத்துக்கொண்டு ஓடப்பாக்கும். எண்டாலும் இந்த ஆறு நாளாய் விட்டிருக்கிற காப்பு மந்திரம் கூடஇருக்கு. அது ஆளை திருப்பிக்கொண்டுவர தெண்டிச்சுக்கொண்டுதான் இருக்கும். எதுக்கும் காய்வெட்டுற  நேரம்மட்டும் இருந்து பார். நவநீதம் வந்தாலும் வரும்.’
      ‘இனி வேண்டாம், அய்யா’ என்றாள் அவள்.
      ‘ஏன்?’ அய்யர் திகைப்போடு கேட்டார்.
      ‘கூடித் திரியிற ஆக்களாலதான் அந்தமாதிரிக் கெட்ட சகவாசம் இந்த மனிஷனுக்கு வந்ததெண்டு நினச்சு இஞ்ச கூட்டிவந்தன். எல்லாம் நல்லமாதிரி முடியிறதுக்கு ரண்டு நாள் இருக்கேக்க இப்பிடி திரும்பவும் எடுபட்டு ஓடியிருக்கெண்டா, காப்புக் கட்டி வீட்டை கூட்டிக்கொண்டு போனாப் பிறகும் அந்தாள் திரும்ப அவளிட்ட ஓடும்.’
      அய்யர் மௌனமாயிருந்தார். பிறகு மனத்துள் என்ன கணக்குத் தீட்டினாரோ, அவளைக் கேட்டார்: ‘என்னில உனக்கு நம்பிக்கை இருக்கோ?’
      ‘நம்பித்தான அய்யா, இஞ்ச கூட்டிவந்தனான்.’
      ‘ம். காலடி மண், தலைமயிரை வைச்சுச் செய்யிற இந்தமாதிரி வசியங்களப்பற்றி எனக்குத் தெரியும். அதை அழிக்கிற விதமும் தெரியும். அதாலதான் சொல்லுறன். இது வசியம் முழுக்கவுமாய் முறியிற கடைசிநேரம். அதுதான் ஆளை இழுத்துக்கொண்டு இப்பிடி ஓடியிருக்கு. எண்டாலும் நவநீதம் தெளியிறதுக்கு ஒரு நொடிப் பொழுதிருக்கு. அதில தெளிஞ்சிட்டா, இண்டைக்கு காய் வெட்டிற நேரத்துக்குள்ள ஆள் இஞ்ச திரும்பிவரும். அப்பிடி வராட்டி… காலமை பையை எடுத்துக்கொண்டு நீ போ.’
      பசுபதி அய்யர் எழுந்து உள்ளே போய்விட்டார். அய்யரம்மா ஒரு பரிதாபமான பார்வையை அவளில் வீசியபடி அய்யரைப் பின்தொடர்ந்தாள்.
      அப்போது கேற் திறபட்ட சத்தம் கேட்டது.
      வள்ளிநாயகி திரும்பினாள். நவநீதம் வந்துகொண்டிருந்தார்.
      அவளது சிவந்த கண்களைப் பார்த்து சிரிக்கமுயன்றார். ‘உன்னையும் காணம்… விசராயிருந்திது… ஒரு சிகரட் பத்தலாமெண்டு வெளிய போனன்… சுத்திவர கடையொண்டயும் காணேல்லை… அப்பிடியே நடந்து போய்ப் பாத்தா… திரும்பிவாற பாதையை விட்டிட்டன்… அப்பிடியே அலைஞ்சு அலைஞ்சு…’
      அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள் வள்ளிநாயகி. நம்பினாளோ இல்லையோ, ஒன்றும் பேசவில்லை.
      வெள்ளிக்கிழமை காய்வெட்டி செய்யவேண்டிய இறுதி வசிய முறிப்புக் காரியங்களை முடித்து நவநீதத்தை அவள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
      1985க்குமேல் அவர்கள் நாட்டிலிருக்கவில்லை.
      அவருக்கு புதிர் இருந்தது. ஆனால் வள்ளிநாயகி எல்லாவற்றையும் மறந்துவிட்டாளென்றே அவர் அத்தனை காலமாய் நினைத்திருந்தார். அதற்கு மேலே மூன்றாவதொன்றின் பிறப்பு அதையே உறதிசெய்தது. ஜேர்மனி சென்ற பிறகு குடும்பச் செழிப்புக்கான அவளது உழைப்பின் பங்கு அதை மேலும் உறுதிப்படுத்தியது. அதன் பிரத்தியட்சம்தானே அன்றைக்கு அவர் காணும் குடும்ப ஸ்திதி, வளமான அந்த வாழ்க்கை எல்லாமும்.
      ஆனால் இப்போது அவருக்குள் சந்தேகம் முளைத்திருக்கிறது. அவள் அவரை மன்னித்திருக்கலாம், ஆனால் எதையும் மறந்திருக்கவில்லை.
      அந்த இடம் பழைய ஞாபகங்களை அவளில் கிளறிவிட்டிருக்க நிறைந்த வாய்ப்பு இருக்கிறது. அந்த நினைப்பில் எந்த மனைவியும்தான் அவ்வாறான மனவுளைச்சலில் தப்பிவிட முடியாது.  
      தலையை நிமிர்த்தி மனைவியிடம், “என்ன, நித்திரையோ?” என்றார் அனுங்கும் குரலில்.
      அவள் திரும்பாமலே அசைந்தாள். பிறகு, “இல்லை. சும்மாதான் கிடக்கிறன்” என்றாள்.
      “வேற ஒண்டுமில்லையே?”
      “வேறயென்ன இருக்கு?” அவள் திரும்பினாள். “அந்தச் சுடலைக்குள்ளதான அந்தளவு சனங்களையும் சாக்கொண்டு ஆமிக்காறன் புதைச்சு வைச்சான்? அதைத்தான் யோசிச்சுக்கொண்டு கிடந்தன்.”
      “ஓ… அதுவோ…?” என்றார் அவர், தான் அவசரப்பட்டு வேறு சாத்தியங்களை எண்ணிவிட்டதான துக்கம் வெளித் தோன்றிவிடாதவாறு. பின், “அதில ஒரு கொலையில சம்பந்தப்பட்ட ஆறு ஆமிப் பொலிசுக்கு தூக்குத் தண்டனையெல்லே கிடைச்சது, தெரியுமோ உனக்கு? கிரிஷாந்தியெண்ட அந்தப் பள்ளிக்குடப் பெட்டை…” என கட்டிலில் எழுந்திருந்து அவர் கதை சொல்லத் தொடங்கினார்.
      வள்ளிநாயகி கேட்டுக்கொண்டு கிடந்தாள். எத்தனை இரவுகளில் அவள் தூக்கம் இடறுப்பட்டாள்! எத்தனை கனவுகளில் அவளது மெல்லிய சிவந்த உடம்பின் வைரித்த, அழகு ஆளுமைகளை அர்த்தமற்றதாக்கிய பளபள பாம்புகள் மகுடியின்றி ஆடிப்போயின! அவள் அவரை மன்னித்திருந்தாலும் மறக்கவில்லை என்பதன் அடையாளங்களல்லவா அவை?
      பழைய சம்பவங்கள் கிளர்ந்தெழுந்த இடத்தில் இன்னும் வெம்மை கனன்றுகொண்டிருந்தது. ஆயினும் அந்தக் குடும்பத்தின் நன்மை கருதியே  அப்பொழுதும் வள்ளிநாயகி அக்கனலை உள்ளே அடக்கிக்கொண்டாள்.
      நவநீதம் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

000

ஞானம் மார்ச் 2019Pictures

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்