நினைவேற்றம்: நாணயமூர்த்தியின் கடன்


 

நான் உயர்கல்வி பயின்ற டிறிபேர்க் கல்லூரியை எப்போதாவது நினைக்கிற தருணங்களில் தானும் அதனோடு ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது சாவகச்சேரி பஸ் நிலையம். அத்தனைக்கு  நெடுஞ்சாலையின் ஒடுங்கிய அவ்விடத்தில் கல்லூரி வாசலுக்கு நேரெதிரில் மிக அணுக்கமாக இருந்திருந்தது அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக் காலில் கல்லூரி ஸ்தாபிதமாகியிருந்ததால், அதற்குப் பிறகுதான் பஸ் நிலையத்தை அந்த இடத்திலே அமைத்திருப்பார்களென்றாலும், அந்த இடத்தில் அதன் அமைவு ஏட்டிக்குப் போட்டியானதுபோல் நீண்டகாலமாய் எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.

பஸ் நிலையத்தின் ஓர் ஓரத்தில் கைவாளிக் கிணறு ஒன்று இருந்தது. மறுவோரத்தில் ஒரு பயணிகள் தங்குமிடம், தள்ளி ஒரு மலசலகூடம் ஆதியனவும். அருகிலே சந்தைக் கட்டிடம் இருந்தது. கட்டிடமென்பது திறந்தவெளியில் அமைந்த சில கூடங்களும் இரண்டு பக்க ஓரங்களிலுமிருந்த பலசரக்குக் கடைகளும்தான்.

எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்  கட்டிட கூடத்தில் பிரபலமாயிருந்தவை உடுப்பு மற்றும் துணிக் கடைகளும், ‘மணிக் கடை’களும்தான். அங்கே பெண்கள் அதிகமாகக் கூடியதனாலேயே ஆண்களின் தொகையும் அதிகமாக இருந்ததுபோல் தெரிந்தது. சண்டியர்களின்  பலப்பரீட்சை  மேடையாக  இருந்ததில் அங்கே சந்தை நாட்களில்  அங்கே அதிகமான கொளுவல்களும் சண்டைகளும் நடந்தன. ஒருவகையில் சந்தையானது அந்தச் சமூகத்தின்  வாழ்வியல் கலாச்சாரத்தின் ஒரு பக்கத்தைக்  காட்டும் ஒரு மாயக் கண்ணாடியாக இருந்ததென்பது மிகையான கூற்றல்ல.

அங்கேதான் எத்தனை எத்தனை சம்பவங்கள்! எத்தனையெத்தனை வன்மம் கோபம் பொறாமை அன்பு அரவணைப்புகளின் உணர்வுக் கோலங்களின் வெளிப்பாடுகள்!

வல்லிபுரநாதன் – சரோஜாதேவி கூத்து நடந்தது அங்கேதான். பல காலமாக அந்தப் பகுதியிலும் அது கடந்தும் பேசப்பட்ட துக்கமும் நகைப்பும் கலந்த சம்பவம் அது.

கச்சாயிலுள்ள தினக்கூலி வல்லிபுரநாதனும் சரோஜாதேவியும் கணவன் மனைவியர். சனிக் கிழமைகளில் தினக்கூலித் தொழிலாளருக்கு வேலை இருப்பதில்லை. முழுக்கு நாளென அந்த நாள் வகுக்கப்பட்டிருந்தது காரணமாயிருக்கலாம். ஆனாலும் அன்றைக்குத்தான் அந்த வார வேலைக்கான சம்பளம் அவர்களுக்குக் கிடைப்பதனால் வல்லிபுரநாதனுக்கு சனிக்கிழமைகளிலும் பாதி வேளைக்கு மேலே நேரமொழியாது. அவர்களுக்கிருந்த வீட்டுத் தோட்டத்திலும் காணியிலும் விளைந்த பயத்தை, தக்காளி, கத்தரி, பாகல் மற்றும் மாங்காய் தேங்காய் முருக்கங்காய் ஆகியவற்றை விற்க சரோஜாதேவிதான்  சாவகச்சேரிச் சந்தைக்கு வந்து அவற்றை விற்றுவிட்டு மீன் மற்றும் வீட்டுக்குத் தேவையான  சாமான்களை வாங்கிச் செல்வாள்.

ஒரு சனிக்கிழமை நாளில் நேரத்தோடு வாரக் கூலியைப் பெற்றுக்கொண்ட வல்லிபுரநாதனுக்கு,  சந்தைக்கு  வந்திருந்த  மனைவியையும்  கூட்டிக்கொண்டு போகலாமென்ற எண்ணம் எழுந்திருக்கிறது. நேரே சைக்கிளை மிதித்துக்கொண்டு சந்தைக்கு வந்திருக்கிறான். வரி செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு சில்லறை வியாபாரிகள் தம் விளைபொருட்களை விற்பனை செய்யும் இடத்தில் மனைவியைத் தேடினான். சரோஜாதேவி அங்கே காணப்படவில்லை.  பஸ் நிலையத்தில் வந்து பஸ்ஸிற்கு காத்துநிற்கிறாளோவென தேடினான். அங்கும் அவளைக் காணமுடியவில்லை. அது அவனுக்குப் புதுமையாகவிருந்தது. அவன் மேலும் காத்திருந்து களைத்து மதியம் இரண்டு மணிக்கு மேலே  வீட்டுக்கு வந்திருக்கிறான். வீட்டிலே சரோஜாதேவி மிகவும் கலகலப்பான மனநிலையில் எம்.ஜி.ஆரின் கலங்கரை விளக்கம் பட பாடலொன்றை முணுமுணுத்தபடி சமையலை ஆரம்பித்துக்கொண்டிருந்தாள்.

தான் சந்தையில் சென்று அவளைத் தேடிய விபரத்தைச் சொல்லி, அவள் எப்படி தன் கண்ணில் தட்டுப்படாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தாளென வல்லிபுரநாதன் விசாரித்தான். அவளும் நேரத்தோடு அன்று வியாபாரம் முடிந்துவிட்டதால், தான் நடந்தே  வீடு வந்துவிட்டதைச் சொன்னாள். வெய்யில் அன்று தணிந்திருந்ததென காரணத்தை வேறு அழுத்தினாள்.

வல்லிபுரநாதனுக்கு அவள் பதில் சொன்ன விதத்தில் திருப்தியிருக்கவில்லை. அவளுக்கு நடையென்றால் கொலைக்களம் போறமாதிரி என்பது அவகுக்குத் தெரியும். சாவகச்சேரி தேவேந்திரா தியேட்டரில் ‘கலங்கரை விளக்கம்’  ஓடுவதும், அன்றைய சனியில் பகல் பத்து மணிக்கு மெற்னி காட்சி இருந்ததும்  அவனுக்கு உடனடியாக ஞாபகம் வந்து  அவளது பாடல் முணுமுணுப்பை  அதனோடு இணைத்துவைத்தது. ஆயினும்  மேலே ஒன்றும் கேளாமல் விட்டுவிட்டான்.

ஆனால் தமக்குள் மெல்லிதாய் விழுந்த படுக்கையின் ஒரு பிரிநிலையை உணர்ந்த வல்லிபுரநாதன், சனிக் கிழமைச் சந்தை நாளின் சரோஜாதேவியது போக்கு வரத்துக்களை  கவனிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் இடையிட்ட செய்தியாக அவள் யாரோ ஒருவனுடன் சரசாலைப் பக்கமெல்லாம் சைக்கிளில்  திரிவதாக அவனுக்குத் தெரியவந்திருக்கிறது. தன் மனைவிக்கும் சாவகச்சேரிச் சண்டியன் ஆனந்தனுக்குமிடையே இருந்த  தொடர்பு மேலுமான விசாரணையில் அவனுக்குத் தெளிவாகிப் போனது.

சண்டியன் ஆனந்தனை வல்லிபுரநாதனால் என்ன செய்துவிட முடியும்? மேலும் என்னதான் செய்துவிடவும்  வேண்டும்? ஊசி இணங்காமல் நூலை எப்படிக் கோர்ப்பதென்ற ஒரு தர்க்கம் இருக்கிறதல்லவா. அதனால் வீடு வந்த சரோஜாதேவியுடன்தான் பிரச்னைப்பட முடிந்தது. விசாரிப்புகள் கோபமாகி, கோபம் அடிபிடியாகி வல்லிபுரநாதன் வீட்டைவிட்டு வெளியேறி தனது தாய் வீட்டிற்குப் போய்விட்டான்.

பிறகு உறவினர்கள் மூலமாய் பேச்சு வார்த்தை நடந்து வல்லிபுரநாதனும் சமாதானமாகி வீட்டில் வந்திருந்து குடும்பம் நடத்த ஆரம்பித்தான். சரோஜாதேவியும் அடக்கமான வீட்டுப் பெண்ணாக இருந்து வர, அவனே ஒருநாள் அவளை மறுபடி சந்தைக்குப் போய்வர கேட்டான். சனிச் சந்தைகள் அப்படியே சரோஜாதேவிக்குத் தொடர ஆரம்பித்தன. ஆனால் நடந்த சண்டையில் தன் பல் போன சோகத்தை சரோஜாதேவியால் பொறுத்துப்போக முடியவில்லையென்றே தெரிந்தது.

காலம் அவ்வாறு நகர திரும்பவும் வல்லிபுரநாதனுக்கு சந்தையிலிருந்து தன் மனைவியது வீடு திரும்புகையின் தாமதங்களால்  மறுபடி சந்தேகம் தொட்டிருக்கிறது. ஒருநாள் மாலை ஐந்து மணியாகியும் சரோஜாதேவி வீடு திரும்பாதிருக்க, சைக்கிளை எடுத்துக்கொண்டு  சென்றபோது ஆனந்தனுக்கு முன்னால் அழுது புலம்பி   தன்னைக் கூட்டிக்கொண்டு எங்காவது போய்விடும்படியும், தான் இனிமேலும் தன் பற்களை இழக்க முடியாதென்றும்  கூறி ஒரே பிடிவாதமாய் நின்றிருக்கிறாள் சரோஜாதேவி. சந்தை  பூட்டப்படவிருந்த அந்த கடைசிச் சமயத்தில்  சொற்பமான மனிதர்களே அங்கே நின்றிருந்ததால்   நிகழ்வு  அநேகரின் கண்களுக்கும் பார்வையாகிப் போனது. மட்டுமில்லை. வல்லிபுரநாதனும் அதைத் தெளிவாகக் கண்டான்.

ஆனந்தன் பெரிய சந்தைச் சண்டியன் என்பதை  மட்டுமில்லை, சூழலையே மறந்துபோனான் வல்லிபுரநாதன். தான் ஒருமுறை மன்னித்த பிறகும் தன் காமத் திளைப்பை விட்டுவிடாத மனைவிமேல் தீயாய் வெகுண்டெழுந்தான். ‘நீ அவனோட போறதெண்டா உப்பிடியே போயிடு, ஆனா நீ கட்டியிருக்கிற சீலை என்ர உழைப்பில வாங்கினது; பாவாடை சட்டை என்ர உழைப்பில வாங்கினது; அதுகளை அவிட்டுத் தந்திட்டுப் போ’வென கத்திக்கொண்டு போய், அவளது கதறலையும்   பொருட்படுத்தாமல், அவளது சேலையை வலுக்கட்டாயமாய் உரிந்தெடுத்துவிட்டான். அவளது பாவாடை சட்டைகளைக் கிழித்தெடுக்கவும் அவன் முயல, கூச்சலிட்டபடி பெண்களின் மலசலகூடத்துள் ஓடி தப்பித்துக்கொண்டாள் சரோஜாதேவி.

பெண்கள் மலசலகூடத்துள் நுழைய துணியாத வல்லிபுரநாதன் ஆனந்தனை ஒரு மிறாய்ப்புப் பார்வை பார்த்தபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு வந்துவிட்டான்.

இத்தனை களேபரம் நடந்த வேளையிலும் ஆனந்தன்  தூண்களுக்கும் மரங்களுக்கும் பின்னாலே ஒதுங்கி நின்றுகொண்டான். ஒரு வார்த்தை வாய் திறந்து பேசவில்லை. ஆனால் வல்லிபுரநாதன் அங்கிருந்து போன பின்னால் சரோஜாதேவியைக் கூப்பிட்டு தனது வேட்டியை அவிழ்த்துக் கொடுத்துவிட்டு   சஸ்பென்ரர் மட்டுமாக சைக்கிளில் ஏறி தன் வீடு போனானாம். விபரமறிந்த  பார்வையாளரிடமிருந்து ஒரு அனுதாபக் குரல் சரோஜாதேவிக்காக  கிளரவில்லையாம். மாறாக, ‘அமர் பிடிச்சுத் திரியிறவளவைக்கு உதுதான் சரியான பாட’மென்றும் புறுபுறுத்ததாம்.

இதுதான் வல்லிபுரநாதன் – சரோஜாதேவி கூத்து.

சந்தைக்குள் அம்பாள் தேநீர்க்கடை இருந்தது. அங்கேதான் எங்கள் வயதினைப் பொருட்தாமல் சிகரெட்டோ பீடியோ தருகிறவராக கடைக்காரர் இருந்தார். மட்டுமில்லை, அந்த தேநீர்க் கடை சந்தைக் கட்டிடத்துக்குள்ளிருந்த ‘மணிக்கடை’க்கு நேரேயும் இருந்திருந்தது. அங்கே காப்பு வாங்க, மணிமாலை வாங்கவென  பெட்டைகள் பெண்களின் கூட்டம் அதிகமாயிருக்கும். அழகுகள் தேடிய எங்களின் படையெடுப்பு அங்கிருந்த தியேட்டர்களைப்போலவே  ‘மணிக் கடை’க்கு எதிரிலுள்ள அம்பாள் தேநீர்க் கடையிலும் அதிகமாகவிருந்தது.

அப்படியான ஒருநாளில்தான் நான் வல்லிபுரநாதன் – சரோஜாதேவி கூத்தை யாரோ கூறக் கேட்டேன்.

சாவகச்சேரி சந்தை வாரத்தில் செவ்வாய் வியாழன் சனி ஆகிய மூன்று நாட்களில் கூடியதென்றாலும் சனிக்கிழமைச் சந்தைதான் விசேஷம். சுற்றுப் பக்கத்திலுள்ள  தோட்ட கிராமங்களிலிருந்தெல்லாம் விற்பனைக்கு  வந்துசேரும் விளைபொருட்களால் கொள்வோரும் கொடுப்போருமாய் சந்தை நிறைந்துபோய்க் கிடக்கும். அங்கிருந்து கொள்முதல் செய்து கொழும்புக்கு காய்கறிகளும் பழவகைகளும் லொறிகளில் அனுப்புமளவு அவை நிறைய வந்து குவிந்த சந்தையும் அது.

1960களின் ஆரம்பத்தில் மாதத்தின் போயா நாளை முன்வைத்தே வார விடுமுறைகள் கணிக்கப்பட்டன. போயாவென்பது பூரணை நாள். பூரணைக்கு அடுத்து வரும் ஏழாம் நாளில் கால் போயாவும், பதின்நான்காம் நாளில் அரைப் போயாவும், இருபத்தோராம் நாளில் முக்கால் போயாவுமென கணிப்பிருந்தது. இருபத்தெட்டாம் நாளில் முழுப் போயா. இவ்வாறான கால் அரைப் போயா நாட்களும் அதற்கு முந்திய  பிறி – போயா நாட்களுமே விடுமுறை நாட்களாக வரும். அது எந்த நாளிலும் வரலாம்.  பிறி-போயா நாளில் அரை நாள் பள்ளி நடைபெற்றது. பள்ளிகளுக்கு மட்டுமில்லை, அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களெல்லாம் இந்த முறையிலேயே இயங்கின. அப்போது சனிகளிலும் பள்ளி நடக்க வாய்ப்பிருந்ததால், சனிக்கிழமைச் சந்தை நாளில்  பாடங்கள் நடத்துவதற்கு அங்கே சிரமமேதும் இருந்ததாவெனத் தெரியவில்லை.

1985க்குப் பின்னால் நவீன சந்தையின் மாடிக் கட்டிடம் அங்கே எழுந்துவிட்டது. அப்போதே சந்தையின் ரூபம் மாறத் தொடங்கியிருந்தது. பின்னால் யுத்த காலத்தில் எவ்வளவோ மாறிப் போயிற்று.  இறுதி யுத்தத்தின் பின்னால் ஒருமுறை நான் அங்கு சென்றிருந்தபோது திகைத்துப் போனேன். அது நானறிந்த சாவகச்சேரி பஸ் நிலையமாகவோ, சந்தையாகவோ இருந்திருக்கவில்லை. அவற்றின் திசுமங்களே மாறிப்போயினபோல் அவை வேறெவையோவாக நின்றுகொண்டிருந்தன.

ஆனால் அப்போதும் அந்த அந்தக பிச்சைக்காரனின் மாய உருவும், ‘தம்பீ, ஒரு சதம்’ என யாசிக்கும் குரலும் என் மனக் கண்களிலும் செவிகளிலும் விழுந்துகொண்டு இருக்கத் தவறவில்லை.  சந்தை நாளிலென்றில்லாமல் எந்த நாளிலும் அந்த பஸ் நிலையத்தில் பிச்சையெடுத்துத் திரிந்த, வாழ்ந்த பிச்சைக்காரன் அவன். பஸ் நிலையம் சந்தை ஆகியவற்றின் எல்லா பழைய ஸ்திதிகளையும்  மறைத்துக்கொண்டு, தானே அவை அனைத்தினதும் ஒற்றைப் பிரதிநிதியாய் அவன் நின்றுகொண்டிருந்தான்.

எத்தனை கலகலப்பு, ஜன சந்தடி இருந்தாலும் தன்னை அந்த இடத்தில் தனியாய் நிறுத்தியிருப்பான் அவன். ஒருவேளை  நெடுத்த, மெலிந்த, முழு நரையோடிய அந்த உருவமாக அன்றி, அவனது ‘கண் தெரியாது… தம்பீ, ஒரு சதம்’ என்று யாசித்துத் திரிந்த அந்தக் குரலும் சொற்களுமே  நினைவழியா என் நெஞ்சத் தடத்தில் அவனை நிறுத்திவிட்டிருந்தனவோ?

அவ் அந்தக பிச்சைக்காரனுக்கு தம்பு என பெயரென்று தெரிந்தது. ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்தவனென்றும் சொல்லிக்கொண்டார்கள். பார்வையும் பின்னாலேதான் போனதென அறியமுடிந்தது. அவனுக்கு எவரையும் தம்பியென்று கூப்பிடுகிற வயதுதான். ஆனாலும் பெண்களை எதிர்ப்படுகிறபோதுமட்டும், ‘அம்மா… ஒரு சதம்’ என கேட்டுவிடுவான். அது எப்படி அவனால் முடிகிறதென்று நாங்கள் சிலவேளை யோசித்து, அவனுக்கு கண் தெரியுமோவெனக் குழம்பியிருக்கிறோம். அதை அவன் தன்  பிற புலன்களால் உணர்ந்துகொள்வதாய் பின்னால் தெளிவுகொண்டும் இருக்கிறோம். 

‘தம்பீ, ஒரு சத’மென யாசிக்கும் தம்பு, இரண்டு சதமோ ஐந்து சதமோ கொடுத்தால் மறுப்பவனில்லை. ஆனாலும் ஒரு சதத்தையே தன் மிக மிகக் குறைந்த தேவைகளுக்காக அவர்களிடமிருந்து அவன் எதிர்பார்க்கும் மிகக்  கூடிய  தொகையாக அதுவே இருந்திருக்கிறது.

ஒரு சதம் ஒரு சதமாக வாங்கி என்னதான் செய்துவிட முடியும் அவனால்?

நான் யோசித்திருக்கிறேன்.

அந்தக் காலத்தில் எவ்வளவோ செய்யலாம்தான்.

ஐந்து பேரிடம் ஒரு சதம் வாங்கினால் ஒரு தேநீர் குடித்துவிடலாம். பத்துப் பேரிடம் வாங்கிவிட்டால் தேநீரோடு ஒரு வடையும் சாப்பிடலாம். முப்பத்தைந்து பேரிடம் வாங்கிவிட்டால் மதியத்துக்கு ஒரு மரக்கறிச் சாப்பாடே வாங்கிச் சாப்பிடலாம்; அல்லது அரை மீன் சாப்பாடு வாங்கலாம். அரைச் சாப்பாடென்றாலும் சூரையோ சூடையோ ஒரு மீன் பொரியலுடன் கிடைக்கும்.

அதனாலேயே அவன் ஒவ்வொருவரிடமும் ஒரு சதத்தை  யாசிப்பதாகவும் கொண்டுவிட முடியாது. தொழில் தந்திரமென்றுகூட சொல்லிவிட  ஏலாது. அது அவனது பணிவின் தன்மையாக இருந்தது. அது ‘வேலை செய்தது’ என்பது வேறு விஷயம். ஆனால் அந்தப் பணிவோடும் அமைந்ததே அந்த உருவமென்றுதான் எனக்குப் பட்டது.

அப்போதிருந்த இலங்கை நாணயங்கள் மிக அழகியனவாக இருந்தமை ஞாபகம் வருகின்றது. ஒரு சதம் செப்பிலும், இரண்டு ஐந்து பத்து இருபத்தைந்து ஐம்பது சத நாணயங்கள் பித்தளையிலும் இருந்திருந்தன. மேலே ஒன்று இரண்டு ஐந்து பத்து ஐம்பது நூறு ரூபா எல்லாம் தாள் காசுகள். ஐந்து சத நாணயம் சதுரமாய் இருந்திருந்தது. இரண்டு மற்றும் பத்து சத நாணயங்கள் வட்டத்தில் நெளிவுகள் கொண்டவை. மீதிக் குத்திகள் வட்டமாக அமைந்திருந்தன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரச நாணய சாலையில்  வார்க்கப்பட்ட காசுகள் அவை.  அவற்றின்  வார்ப்பு ஆண்டுகள் நாணயங்களில் பதிவாகியிருந்தன.  அவற்றின் ஒருபுறத்தில் ராணியினதோ ராஜாவினதோ உருவங்ககள் பொறிபட்டிருந்தன. மறுபுறத்தில் சிலுவை அடையாளம் அல்லது தென்னை மர உருவமிருந்தது.

ஒரு சத நாணயத்தில் மட்டும் இரண்டு வகைகள் இருந்தன. ஒரு வகை சப்பையானது. இதை    முழங்கையால்   தேங்காய் உடைக்கும் ஆற்றல்கொண்ட அருச்சுனன்மட்டுமே இரண்டு கை விரல்களாலும்  நெளிக்கக்கூடியவனாய் இருந்தான். மற்ற வகையானது மொத்தமாயிருக்கும். இந்த மொத்த நாணயம்தான் சிறுவர்களின் ‘காசு கட்டு’ விளையாட்டில் விரும்பப்படுவது. காசுப் பந்தயம் வைத்து  ‘கடுதாசி’ விளையாடக்கூடாதென்று சட்டமிருந்தது.  காசையே விளையாடுவதைத் தடுக்க சட்டமிருந்ததா தெரியவில்லை. ஆனால் ‘காசுகட்டி’ விளையாடும்போது தூரத்தில் சனிற்றரிக்காரரினதோ நுளம்பெண்ணை அடிப்பவர்களதோ காக்கி நிற யூனிபோர்மைக் கண்டாலே பொலிஸென நினைத்து சிறுவர்களெல்லாம் கூவிக்கொண்டு பயந்தொழிவார்கள்.

இலங்கையின் பழைய ஒரு சதம்பற்றி எண்ணமெழும் இத் தருணத்தில் இன்றைய கனடிய ஒரு சத நாணயத்தின் நினைவு வராமல்போகாது. ஏழெட்டு ஆண்டுகளின் முன்னால் இங்கேயும் ஒரு சத செப்பு நாணயம் புழக்கத்தில் இருந்தது. இப்போது இல்லை.  ஒரு சத நாணயம் புழக்கத்தில் இல்லையெனில், வியாபார மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்களில் கணக்குகள் எவ்வாறு செய்யப்படுகின்றன?

அதுவொரு நல்ல தமாஷான சங்கதி. அதை விட்டுக் கொடுப்பும், விட்டு எடுப்புமென சொல்லலாம்போல் தோன்றுகிறது. உதாரணமாக, 27 சதம் கணக்கில் வந்தால் 25 சதம் கொடுத்தால் கணக்கு சரியாகிவிடும். அதில் வாடிக்கையாளருக்கு இரண்டு சதம் லாபமாக நிற்கும். 28 சதம் கணக்கில் வந்தாலோ முப்பது சதம் கொடுக்கவேண்டும். அப்போது இரண்டு சதம் அவருக்கு நஷ்டமாக வரும். சட்டப்படியாகவே இந்த அமைவு. யாரும் அதை பெரிதாக எடுப்பதில்லை. ஒருபோது இரண்டு சதம் நஷ்டமாகிறவேளை, இன்னொருபோது இரண்டு சதம் லாபமாகிறதுதானே என்ற நினைப்புப்போலும். ஆனால் கணக்கு என்னவோ பிழையாகத்தானே இருக்கிறது.

அந்தப் பிச்சைக்காரனின் குரல் என் உட்செவிகளில் ஒலிக்கும்போதெல்லாம் எனக்கு வேறொரு நிலபரத்தின் கதையும் மறதி கிழித்து ஞாபகமாய் மேலேறும். அப்போது ‘தம்பீ, ஒரு சத’மென நானே அந்த வார்த்தைகளை ஒலித்த திடுக்காட்டுப் போவேன். ஒரு சதத்தால் என்ன செய்துவிட முடியுமென நினைத்த நான், ஒருமுறை ஒரு சதத்துக்காக பட்டபாட்டை எப்படியென்று  விளக்குவது?

‘யானை எருத்தம் பொலிய குடைநிழற் கீழ் சேனைத் தலைவராய்ச் சென்றாரும் சென்றிரப்பர் ஓர் நாள்’ காலம் மாறி உற்றக்காலென்ற  பழம்பாடல் தெரிந்திருந்தது. ‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்ற குறள் ஞாபகமிருந்தது. ஆனாலும் எச்சரிக்கையுடன் வாழ்க்கையை நடத்த  முடியாது போய்விட்டதே.

இவ்வளவு பின்னணியுடன்  இந்தப் பதிவைத் துவங்கியதே நாணயமூர்த்தியின் கடன் விஷயத்தைச் சொல்வதற்காகத்தான்.

கதை இதுதான்:

அப்போது நான் ஈழநாடு தினசரியின் ஆசிரிய குழுப் பணியிலிருந்தேன். அந்த வாரத்தில் எனக்கு மாலை 5–10 மணி நேர வேலை. ஏதோ பிராக்கில் நானிருக்க மாலை நான்கு மணி ஆகிவிட்டிருந்தது. அவசரமாய் வெளிக்கிட்டுக்கொண்டு பொக்கற்றைத் தடவினால் 24 சதம்தான் வந்தது. சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல பஸ் ரிக்கற்றுக்கு 25 சதம் வேண்டுமே! அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கேட்கலாமென்றால் அந்தக் கடைசி நிமிஷத்தில் ஓடிப்போய் யாரிடமும் வாய்விட மனம் ஒப்பவில்லை. அது பழக்கமுமில்லை. வரட்டுக் கௌரவமென்றில்லை. அடங்கி ஒடுங்கி இருந்தாலும் வாழ்ந்தது அப்படித்தான். ‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இழி வந்ததில்’லையாமே!

சைக்கிளில் போகலாம். ஆனால் சுமார் பத்து மைல் தூரத்தை இடைஞ்சலின்றிக் கடக்கும்படியான நிலைமையில் சைக்கிள் இருக்கவில்லை.

ஒரு சதம் இருந்தால் போதும், யாழ்ப்பாணம் போய்விடலாம். திரும்பி வருவதற்கு அலுவலக நண்பர்களிடம் கேட்டுக்கொள்ள முடியும். அவ்வாறான கொடுக்கல் வாங்கல் எங்களிடையே சகஜமாகவிருந்தது.

உடனடியாக ஒரு தந்திரம் மனத்தில் உதயமாகியது.

வீட்டுக்குக் கிட்ட நாணயமூர்த்தியின் கொட்டில் கடை இருந்தது. நாணயமூர்த்திதான் பெயரோ, நாராயணமூர்த்தி என்ற பெயரைத்தான் அவ்வாறு திரித்துச் சொல்கிறார்களோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாணயமூர்த்தியென்று இலங்கையில் யாருக்கேனும் பெயரிருந்ததாய் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

ஆபத்து அந்தரத்துக்கென்று ஒரு சதமாவது கடன் கொடுக்காத ஒரு கடை எங்காவது இருக்குமென்றால், அது நாணயமூர்த்தியின்  கடைதான். இருந்தும் கடையை மிகவும் துணிச்சலாகவும் நம்பிக்கையோடும் அணுகி, சைக்கிள் பிறேக் கம்பியின் ஸ்குறூ அடிக்கடி கழருகிறது, அதை இறுக்குவதற்கு ஒரு மெல்லிய ஒரு சதம் தேவையென்று அவனைக் கேட்டேன். காலையில் கொண்டுவந்து தந்துவிடுவதாக வேறு நம்பிக்கையும் சொன்னேன். நாணயமூர்த்தி எதுவும் சொல்லாமல் மேசை லாசச்சியை இழுத்து ஒரு மெல்லிய ஒரு சத நாணயத்தைத் தேடியெடுத்துத் தந்தான்.

நானும் வேலைக்குப் போய்வந்தேன்.

நாணயமூர்த்தி கடையிலேதான் இருந்தான்; நானும் அந்த வழியால் போய்வந்துகொண்டுதான் இருந்தேன்; அவ்வப்போது கடையிலே  சிகரெட் வாங்கவும் செய்தேன். ஆனால் அந்த ஒரு சதம்பற்றிய நினைவு எனக்கு  எழவேயில்லை. அவ்வளவிற்கு மனம் பல்வேறு அந்தரங்களுக்குள் மூழ்கிப்போய் இருந்ததுதான் காரணமெனினும், எந்தவகையிலும் அதுவொரு சமாதானமாகிவிடாது. பின்னால் நானும்  கிளிநொச்சி வாசமென்றும் கப்பல் வேலையென்றும் அலைந்ததில் அந்த ஒரு சதத்தை நினைக்க நேரமற்றுப் போனேன்.

கொஞ்ச காலத்துக்குப் பின்னால் நாணயமூர்த்தியும் செத்துப்போனான்.

இப்போது ஊர் செல்கிறபோதெல்லாம் அந்தப் பிச்சைக்காரன் ஞாபகமாகிறவேளை ‘தம்பீ, ஒரு சதம்’ என்று யாசிக்கும் அவனது பணிவின் சொற்களும் கூடவந்துகொண்டு இருக்கின்றனபோல்,  நாணயமூர்த்தியின் ஒரு சதக் கடனும்.

கடன் என்னவோ ஒரு சதமெனினும்,  அவனிடம் நான் அரை நூற்றாண்டுக்கு முன் பட்ட அந்தக் கடன் மிக மிகப் பெரியது. அது கடன்கூட அல்ல, ஒரு தந்திரத்தில் நான் செய்த மோசடி.

அதை எத்தனை டொலர்களாலும் என்னால் இனி ஈடுகட்டிவிட முடியாது.

தாளாத் துக்கமொன்று என் நெஞ்சில் கவிந்து விரிந்தது.

0

 தாய்வீடு, ஓகஸ்ற் 2020

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்