மதிப்புரை: ‘சூல்’
ஊரின் வறட்சிக்கான காரணத்தைத் தேடும் பயணத்தின் கதை! சோ.தர்மனின் பரவலாக அறியப்பட்ட ‘கூகை’ நாவலுக்குப் பிறகு வெளிவந்த படைப்பு ‘சூல்’ (2016). எண்பதுகளில் எழுத வந்தவரின் இரண்டாவது நாவல். 2019இல் இந்திய சாஹித்ய அகடமி விருதுட்பட நான்கு தமிழ்நாட்டு இலக்கியப் பரிசுகளையும் இது பெற்றிருக்கிறது. ‘சூல்’ வெளிவந்ததின் பின்னாக ‘தூர்வை’ (2017) மற்றும் ‘பதிமூனாவது மையவாடி’ (2020) ஆகிய அவரின் இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளபோதும் ‘சூல்’ முக்கியமாவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக கரிசல்காட்டு நிலத்தின் வறட்சியையும், வாழ்வின் அவலத்தையும் கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன், பொன்னீலன், மு.சுயம்புலிங்கம் போன்றோரின் படைப்புகள்போல் பேசிய வேறு படைப்புகள் தமிழில் குறைவு. ஆயினும் ‘கோபல்ல கிராமம்’, ‘அஞ்ஞாடி’, ‘கூகை’ ஆகியவைபோலன்றி ‘சூல்’ தன் கதையைச் சொல்ல அமைத்திருப்பது வித்தியாசமான தளம். ஏனைய நாவல்கள் கரிசல்காட்டின் வறட்சியைக் காட்டின. ஆனால் ‘சூல்’ அதனுடைய வளத்த...