நினைவேற்றம்: ‘தந்தையொடு கல்வி போம்!’


 

ஒருநாள் வசந்தாக்காவின் சீற்றத்தை காரணம் புரியாமலே எதிர்கொண்ட பின்னால், ஓர் உறைவோடு வீடு திரும்பியது ஞாபகமிருக்கிறது. மறுநாள் நேரத்தைக் கழிக்க வழியற்று திசைழிந்ததுபோல் நின்றிருந்தேன். ஏது செய்யவும் கூடவில்லை.  அலைந்து திரிவதற்கும் பெரிதாக மனம் பிடிக்காதிருந்தது.

இவ்வாறு எதையும் செய்யமுடியாமல் மனம் உழன்றுகொண்டிருப்பதன் காரணம், இதைதான் செய்யவேண்டுமென்று மனம் குறியற்றுப் போயிருப்பதேயென நான் மெல்ல உணரத் தலைப்பட்டேன். மாலைகளில் அம்மாவுக்கு உதவியாக வீட்டுவேலைகள் செய்துகொடுத்தேன். அது பயன் செய்தது. அதனால் பொழுதுபட்டுவிட்டால் படிப்பது, வாசிப்பது தவிர வேறு வேலைகள் இருக்கவில்லை.

எனது இந்த திடீர் மாற்றத்தை அம்மா கவனித்திருக்க வேண்டும். என் தறுதலைப் போக்கினால் அதுவரை காலமாய் அவர் எவ்வளவு மன ஈறலை அடைந்திருந்தாரென்பதை, அதுமுதற்கொண்டு தெரியவாரம்பித்த  அவரது முகப் பிரகாசத்தில் கண்டு தெளிந்தேன்.

அதை மிகுப்பிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து விளைந்தன.

என் சிறுபிள்ளைப் பருவத்தில் என்னைப் பீடித்திருந்த நோய்கள் சிறுகச் சிறுக அகன்று பதின்னான்கு பதினைந்து வயதளவில் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுமளவு நான் உடல்நலம் மீண்டுகொண்டிருந்தேன். அவ்வாண்டு விளையாட்டுப் போட்டியில் பரிசுகளும் பெற முடிந்திருந்தன.

ஒரு திரைபோல விலகியகன்ற பழைய காலத்தின் கடினங்களுக்குப் பிறகான அந்த வெளிச்சம், அம்மாவுக்கு மட்டுமன்றி, என்னளவிலும் இனிமை செய்வதாயே இருந்தது. அதுவரை கவனமாகாத பல விஷயங்கள் என் கவனத்தில் வந்தன.

எமது வீட்டுக்கு எதிர்ப்பக்கத்திலுள்ள சங்கரப்பிள்ளையின் வீட்டைக் கடக்கும் நேரமெல்லாம், முன்புபோல் அவசரத்தில் குனிந்த தலையோடன்றி, அம்மா மிக்க பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நடந்தமை அவ்வாறு அவதானமாகியவற்றுள் ஒன்று.

ஐயாவுக்கு நெருக்கமான உறவினர்தான் சங்கரப்பிள்ளை குடும்பத்தார். ஆனாலும் ஐயா உயிருடன் இருந்தபோதுகூட அந்த வீட்டின் முற்றத்தை  அம்மாவோ நானோ மிதித்ததில்லை. ஐயா மட்டும் அவசியமான பொழுதுகளில் அந்த வீட்டுப் படலையில் நின்று சங்கரப்பிள்ளையுடனோ அவரது மனைவியுடனோ பேசியிருக்கிறார். அவ்வாறான நிலைமைகள் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு இருக்கவே செய்கின்றன. உறவுகளுக்குள்ளான அந்த விரிசல்கள் மிக மிக அற்பமான காரணங்களில் ஏற்பட்டுவிடுவதுதான் துக்கமான விஷயம்.

சங்கரப்பிள்ளைக்கு ஒரு மகள் இருந்தாள். எனக்கு ஒரு வகுப்பு கீழே படித்தாள். அவள் அந்தளவு அழகில்லாததோடு தாயைப்போல் கறுப்பாகவும் இருந்திருந்தாள். ஆனால் அழகாக சிரிக்கத் தெரிந்திருந்ததில் அயலிலே அனைவர் கண்களும் அவளைக் கண்டதும் விகசிக்கும் பெற்றி வாய்ந்துபோனாள்.

எனக்கு அவளது சிரிப்போ, அந்த முகமலர்ச்சியோ ஊரிலே அடைந்திருந்த பிரபல்யம் என்னில் எந்த விகற்பத்தையும் உண்டாக்கவில்லைத்தான். ஆனால் அம்மாவுக்கு அது பிடிப்பில்லையென்பதை  அந்தப் பெண் லீலாவதியின் பேச்சு வரும் வேளைகளில் அவரின் முகம் கோணுவதில் புரிந்துகொண்டிருந்தேன்.

அவளது தாயாருக்கும் அம்மாவுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட வாய்த் தகராறுதான், அவர்களுக்குள் ஏற்கனவே நொறுநொறுத்திருந்த சௌஜன்யத்தை  வெடிக்கச்செய்து பெரும் பிளவாக்கியதை நான் அறிவேன்.

முந்திய ஆண்டு வகுப்பேற்றுப் பரீட்சை நடந்த நேரம் எனக்கு சுகவீனமாகி பரீட்சையெழுத முடியாது போனதில், அந்த ஆண்டு நான் வகுப்பேற்றப்படவில்லை. அது எனக்கு பெரும் மன விழுக்காடாய்ப் போனது. அது அறிந்த அம்மா சாம்பிப்போனார். அதேவேளை லீலாவின் தாயாருக்கு அது உச்சபட்ச மகிழ்ச்சி. அந்தக் குடும்பத்திற்கே பெரிய தலைநிமிர்வாக அமையவும் அது காரணமாகிப் போனது. வகுப்பேற்றம் கண்ட லீலாவதி கெட்டிக்காரியாகவும், வகுப்பேற்றப்படாத நான் சக்கட்டையாகவுமான ஊர்ப் பேச்சு குடும்பத்துக்கு பெரும் அகௌரவமாய் ஆனது. அது காரணமாய் விளைந்ததுதான் அவர்களது வாய்த் தகராறு.

அதன்மேல் என் விளையாட்டுத் தனங்களுக்கு அனுசரணையாயிருந்த ஐயாவின் போக்கு தலைகீழாக மாறியது. என்னால் விளையாட்டு, படிப்பு என ஒன்றிலேனும்  கெட்டிக்காரனாய் வர முடியவில்லையென்பதே அவரின் துக்கத்தின் காரணமென்பது தெரிந்தபோது, என்னையுமே அது பாரமாக அழுத்தத் தொடங்கிவிட்டது.

ஆனால் அந்த நிலைமை அடுத்த ஆண்டின் தவணைப் பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வெளியாகத் தொடங்க திடீரென மாறிப்போனது. அந்தப் பரீட்சையில் வழக்கமாக முதலாவது நிலையில் தேறும் மகாலட்சுமி அம்மா தன்னிடத்தைப் பிடித்திருக்க, மீதி எல்லாரையும் பின்னே தள்ளிக்கொண்டு இரண்டாம் நிலைக்கு நான் முன்னேறியிருந்தேன்.

தவணை இறுதிநாளில் வழிபாட்டுக் கூடத்தில் கூடும்  கூட்டத்திலே ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று நிலைகளை எடுக்கும் மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை மேடையில் வைத்து அதிபரால் வழங்கப்படும். அன்றுதான் நானும் என் பள்ளி வாழ்வில் முதன் முறையாக மேடையேறி எனது தேர்ச்சி அறிக்கையை வாங்கினேன். பெற்றாரும் அழைக்கப்பட்டிருந்ததில் அன்று அக் கூட்டத்திற்கு வேட்டியும் சேர்ட்டும் சால்வையும் அணிந்து வந்திருந்த என் தந்தையும் அந்தக் காட்சியை பெரிய மகிழ்வோடு நின்று கண்டின்புற்றார்.

வீடு சென்ற எனக்கு, அன்றுபோல் அவ்வளவு கரிசனையோடு என்றுமே என் தந்தை என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றதில்லைப்போல மனமெல்லாம் உருகிக்கொண்டிருந்தது.

அன்று மட்டுமில்லை, வெடிகொளுத்தாத கொண்டாட்டமாக அது எங்கள் வீட்டிலே ஒரு கிழமையாக நடந்தது. ‘வீட்டில எதோ விசேஷம்போல?’ என விசாரித்த தன் நண்பர் ஒருவருக்கு, ‘ஓமோம்… ஓமோம்’ என வாய் தடுமாறி நின்றுகொண்டிருந்தார் என் தந்தை. பின் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, ‘என்ர மோன் ரண்டாம் பிள்ளையாய் வந்திருக்கிறார்…. அதுதான்….’ என்று சொன்னபோது அவரின் கண்களிலிருந்து கண்ணீரே சிந்தியதை நான் பார்த்தேன். சொந்தங்கள், நண்பர் குடும்பங்கள் வீட்டுக்கு வந்து அந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டு ஆட்டுப்பால் தேநீர் குடித்துப் போயின.

அத்தனை நாட்களில் சங்கரப்பிள்ளை குடும்பத்தினரை வழி தெருவில்கூட காணமுடியவில்லை. நான் ஒருமுறை தோற்றதாக எண்ணிய என் பெற்றோரின் மனக் குலைவு அன்று நிமிர்வு கண்டதாய் நானும் பெருமிதமேகொண்டேன்.

ஐயாவுக்கு  அந்த ஆண்டில்தான் அந்த அவத்தான மரணம் நிகழ்ந்தது. அதன் பிறகு எனது படிப்பு மறுபடி பாய்ந்து கீழே சென்றுவிட்டது. அம்மா அடுப்புப் புகட்டின் முன்னாலும், தனியே சுவரோரம் சாய்ந்திருந்தும் விடும் கண்ணீருக்கு நானே காரணமென்பதுகூட கவனத்தில் படாதவனாய் நான் இருந்துகொண்டிருந்தேன்.

ஏற்கனவே நான் ‘விஷய’ங்களால் வயதுக்கு அதிகமாக வளர்ந்திருந்தேன். உண்மையில் அது அறியாதவரும் அந்த மீட்சியைக் கனவுகூடக் கண்டிருக்கமுடியாது.

நான் அக்கறையோடு படித்தேனென்றால், அன்று காரணமெதுவுமில்லாமல் வசந்தாக்கா என்மீது கோபித்துப் பாய்ந்ததைத்தான் முதன்மையாகச் சொல்லவேண்டும்.

கடவுளே! என்னவொரு உக்கிரம் அவளது வார்த்தைகளில்! ஒருவேளை வண்ணக்கிளி என்னை ஏதாவதொருபொழுதில் திட்டியிருந்தால்கூட  பாவத்தில் பாதியேனும் காரணஸ்தனாய் இருந்ததில் நான் அந்தளவு சிதறியிருக்கமாட்டேன். ஆனால் வசந்தாக்கா பேச்சில் நான் சிகறு தேங்காயாய்ப் போனேன்.

அதை நான் விரும்பவில்லையெனினும் அதுவே எனக்கு நன்மையைச் செய்திருந்தது. அது என்னை அவமானமாய் அழுத்தியிருந்தும் பெருமைகளைக் குவிக்கும் வழியையும் திறந்துவிட்டது. என் விளையாட்டுத் திறமைகள் உயரத் தொடங்கியதோடு, கல்வி நிலையிலும் பெரிதான முன்னேற்றம் தெரிந்தது. கணக்குப் பயிற்சிகளில், கேள்வி-பதில் வீட்டு வேலைகளில் அதிகபட்ச மதிப்பெண்களை நான் பெற்றேன்

மூன்றாம் தவணைப் பரீட்சை நெருங்கியது. சங்கரப்பிள்ளை வீட்டில் லீலாவதிமேல் படி… படியென அழுத்தமேறியது. பத்து பத்தரை மணிவரை விறாந்தையில் மேசைமேல் படிக்கும் விளக்கெரிந்தது கண்டேன். அம்மாவும் தன் தேநீர் வைத்துத் தந்து என் உறக்க நிலை கலைத்துக்கொண்டிருந்தார்.

தவணைப் பரீட்சை முடிந்தது. அந்த முறை நான் மகாலட்சுமி அம்மாவையுமே முந்திவிட்டிருந்தேன். அந்த முறை நான்தான் வுகுப்பில் முதலாவது பிள்ளை.

அறிந்தபோது மகாலட்சுமி அம்மா மேசையில் தலையைக் கவிழ்ந்து கிடந்து வெகுநேரமாய்க் குலுங்கினாள்.

வெகு உற்சாகமாகவே வீடு சென்றேன்.

முதல்நாளே எனது வகுப்பு நிலை ஓரளவு அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. அம்மாவும், தங்கச்சியும்கூட மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

அன்றிலிருந்து சுமார் ஒரு மாத காலத்துக்கு விடுமுறை. அந்தக் காலத்தில் முயல்வேட்டைக்குச் செல்லலாமென இரத்தினம் சொல்லியிருந்தான். அவனிடமிருந்த வீமன் அருமையான வேட்டை நாய். முயலைக் கிளப்பிவிட்டால் கழுத்துப் பிடியில் இறைச்சியாய்க் கொண்டுவரக் கூடிய வல்லபம் அதற்கு இருந்தது. நாய்க்குத் தப்பினாலும் இரத்தினத்தின் கொட்டன் வீச்சுக்கு எந்த வேக முயலும்கூட தப்பிவிட முடியாது.

கோடை வேட்டையைவிட மாரி வேட்டை வித்தியாசமானது. அதை இரத்தினம் சொல்லும்போது கேட்டால் அப்போதே வேட்டைக்குக் கிளம்ப மனம் உந்தும். பொழுதுபடுகிற வேளையில் அவ்வழி வந்த இரத்தினம் படலையில் நின்று கூப்பிட போனேன். ‘ராவைக்கு மழை வரும்போல கிடக்கு. காலமை வெளிச்சிருந்தா வெளிக்கிடுவம்’ என்று சொல்லிப் போனான்.

எல்லாம் கவனித்திருந்த அம்மா, ‘என்னவாம், ரத்தினம்?’ என்று கேட்டார். நான் வேட்டைக்குப் போகவிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். அம்மா யோசித்துவிட்டு, ‘கவனம்’ என்றுமட்டும் சொன்னார். ஐயா, இரத்தினத்தின் தகப்பனோடு கூடி வேட்டைக்கு முன்பு சென்றிருந்ததை அவர் நினைத்திருக்கக்கூடும்.

அன்று இரவாக பழைய புத்தகங்களைக் கட்டி வைத்துவிட்டு நான் நிமிர, வெளியே சென்றிருந்த அம்மா ஒரு கட்டு புத்தகங்களோடு வந்துசேர்ந்தார். போன ஆண்டு அரசாங்க இறுதிப் பரீட்சை எழுதியிருந்த மாணிக்கவாசகத்திடம் பழைய புத்தகங்களுக்குச் சொல்லி வைத்திருப்பதாக அவர் சொல்லியது ஞாபகம் வந்தது.

மேசையிலிருந்து நான்  மாணிக்கவாசகத்தின் புத்தகக் கட்டைப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சொல்லியிருந்தபடி தமிழ்ப் புத்தகங்களும் சுகாதாரப் புத்தகமும் சமயப் புத்தகமுமே அம்மா வாங்கி வந்திருந்தார். மேலே சரித்திரம், குடியியல் புத்தகங்களை வாங்குவதா இல்லையாவென்பது தெரியாதிருந்தது.

அப்போது எட்டாம் வகுப்பு எனப்பட்ட ஜே.எஸ்.ஸி.க்கு மேலே ஜி.ஸி.இ. சாதாரண தர வகுப்பு. அது இரண்டு பிரிவுகளைக்கொண்டு இருந்தது. ஒன்று, இரண்டாண்டுகளைக்கொண்ட கலைப் பிரிவு. மற்றது மூன்று ஆண்டுகளைக்கொண்ட விஞ்ஞானப் பிரிவு. அந்தப் பிரிவில் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சிறந்த புள்ளிகளைப் பெற்றவர்களே அனுமதிக்கப்பட்டார்கள். அம்மாவின் விருப்பம் எப்படி இருந்ததோ, எனது விருப்பம் கலைப் பிரிவாகவே இருந்தது. சரித்திரம், குடியியல், பூமிசாத்திரம்போன்ற பாடங்களில் எனக்கு இயல்பாக இருந்த விருப்பத்தினாலன்றி, இரண்டு வருடங்களில் அரசாங்கப் பரீட்சை எடுக்கலாமென்பதால் அது.

இருபத்தைந்து மாணவர்களுள்ள வகுப்பில் பதினைந்தாவது இருபதாவது இடத்தை எடுத்துவந்த நான், ஒருமுறை இரண்டாம் இடத்தை எடுத்ததற்கே ஐயா கண்ணீர்விட்டுக் கசிந்திருக்கிறார். இன்று நான் முதலாம் பிள்ளையாக வந்திருக்கிறேன். ஐயாதான் இல்லை. இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமடைந்திருப்பார்! எவ்வளவு ஆதரவாக என்னை சைக்கிளில் ஏற்றி வீட்டுக்கு கூட்டிவந்திருப்பார்!

எண்ணியபோது எனக்குக் கண் கலங்கியது.

தந்தை மகற்காற்றும் நன்றியைச் சொன்ன திருக்குறளை ஐயா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘தாயொடு அறுசுவை போம்; தந்தையொடு கல்வி போம்’ என்ற பழம்பாடல் அடிகளையாவது கேட்டிருப்பாரோ தெரியாது.

ஆனால் அந்த உணர்வு உள்ளதாகவே பெரும்பாலும் எல்லா தந்தையரின் மனநிலையும் இருப்பதாக எனக்குப் படுகிறது. அதனாலேயே எனது முதலாவது நாவலான ‘உயிர் பயண’த்தை என் தந்தைக்குச் சமர்ப்பணமாய் வெளியிட்டேன்.

0


தாய்வீடு, மார்ச் 2021

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்