‘நீர்வழிப்படூஉம்’ நாவல்

 

தேவிபாரதியின் நிலமொழியில் இயன்ற

‘நீர்வழிப்படூஉம்’ நாவல்


 

‘தனிமையின் நிழல்’, ‘நட்ராஜ் மகராஜ்’ ஆகிய நாவல்களுக்குப் பிறகு மூன்றாவதாக வெளிவந்திருக்கிற தேவிபாரதியின்   அளபெடைத் தலைப்புக்கொண்ட நாவல் ‘நீர்வழிப்படூஉம்’.

நாவலின் மதிப்பீட்டைச் செய்வதற்கு முன்பாக ‘நீர்வழிப்படூஉம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்துகொள்வது அதன் புரிதலை இலகுவாக்கும்படிக்கான ஒரு ஊடுவழியினைத் திறந்துவிடுமென நம்பலாம். ஏனெனில் முதன்மையாய் ஒரு கதையைச் சொல்கிற நாவலாகவன்றி, உறவு மனங்களின் இறுகும் கனிவுகொள்ளும் தன்மையின் மூலத்தைப் பேசவந்த நாவலாக இது இருப்பதில், தலைப்பின் பொருளை ஒரு மர்மம்போல் இறுதிவரை காப்பாற்றிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமில்லை.  கார்ட்டுகளெல்லாம் விரித்துப்போட்டு விளையாடும் ஒரு விளையாட்டாக இதை மாற்றிக்கொள்ளலாம்.

பள்ளம் கண்ட இடமெல்லாம் பாய்ந்தோடும் இயல்பு நீருக்குண்டு. நீர்வழிப்படூஉம் என்பது, நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என்பதுமாகும். மனிதர்கள் நீர்வழிப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். மனித இயல்பு அதுதான். இந் நாவலில் வரும் மனிதர்களும் தத்தம் பூர்வீக ஊர்களிலிருந்து வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மனித சமுதாயம் விரிவுகொள்ளக் கொள்ள வாழ்வின் இறுகிவரும் சூழ்நிலைமையிலிருந்து தப்புவதற்காக அது இயல்பாக நடக்கவே செய்யும். அதுபோல் தினசரிகளின் நெருக்குதல்களால் வாழ்வு கடினமாவதும், பின் தெளிந்து இளகுவதுமாய் தண்ணென்ற நீரின் தன்மையை மனிதர் அடைந்துகொள்கிறார்கள்.

சென்னை திருச்சி மதுரை கோயம்புத்தூர் திருநெல்வேலியென நாம் (இலங்கைத் தமிழர்) அதிகமும் அறிந்த நிலப் பகுதியல்ல நாவல் விரியும் களம். அது கானல் விரிந்து கோடையில் தீப்பிடித்துவிடும்படி கனலும் ஈரோட்டுக்கு அயலிலுள்ள உடையாம்பாளையம், நாச்சிபாளையம், ரங்கபாளையம், தாராபுரம், வெள்ளகோயில் போன்ற ஊர்களாக இருக்கிறது.

காருமாமா என்ற, இந் நாவலின் கதையைச் சொல்லும் தன்னிலைப் பாத்திரமான ராசனின் மாமன் ஒருவரின் மரணத்திற்கு,  போக்குவரத்துக் குறைவுள்ள அயலூர்களின் உறவினர்கள் பல்வேறு வசதிகளில் உடையாம்பாளையம் வந்து கூடுவதிலிருந்து நாவல் துவங்குகிறது.

எவ்வளவு இயல்பானது மரணம்! ஆனால் உறவினர்களை எவ்வளவு தூரம் உடைத்துப்போடும்படியாகப் பாதித்துவிடுகிறது! தெரிந்த விஷயம்தானெனினும் தெரியாத காட்சிகளாய் விரிந்து நாவல் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மரணங்கள்கூட மனித உணர்வுகளின் வேட்கை குரோதம் பழி அவா ஆகினவற்றின் காரணமாய் இப்பவோ எப்பவோ விளைந்த துவேஷங்களையும் அகற்றவே செய்கின்றன என்கிறது நாவல். உறவுகளின் ஒன்றுகூடலில் பின்னால் விளைவதுகூட ஒரு கொண்டாட்டமாகவே ஆகிவிடுகிறது. நிஜத்திதன் அத்தனை அழகுகளும் நாவலில் வந்து நிரைத்து நிற்கின்றன.

புருஷன் காருவை தனியே கைவிட்டு செட்டி ஒருவனுடன் தன்னிரு குழந்தைகளையும் கொண்டு ஓடிவிட்ட  மனைவி ராசம்மாவை, அவரது அக்கா தங்கை மச்சான் ஆதிய உறவுகளெல்லாம் , அதுவே அவரது உடல்நிலையைச் சிதைவுறுத்தியும், மனநிலையைப் பேதலிப்பாக்கியும் அவரை அந்த வயதில் மரணிக்க வைத்ததென திட்டுகிறார்கள். காகிதம்கூட பொசுங்கும்படியான கிராமத்தின் அத்தனை கடுமையான  வைதலின் மொழியாக அது இருக்கிறது.

உடையாம்பாளையத்திலும் இன்னும் அக்கம்பக்கமுள்ள சிற்றூர்களிலும் பண்ணயக்காரருக்கு குடிமைகளாக இருக்கும் இந்த நாவிதர்களின் வாழ்நிலையை, அதன் வலியை, மனச் சள்ளைகளை நாவல் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. பண்ணயக்காரருக்கு குடிமைகளாகவிருப்பதன் மூலமே ஒரு சமூகத்தின் எத்தனை பேர் வாழ்க்கையை நடத்திவிட முடியும்? அதனால்தான் தொழிலின்மையென்ற பளு உறவு வளையத்துள் உள்ளவர்களையும் அதை மீறிய கோபதாபங்களைக் கொள்ளும்படி ஆக்கிவிடுகிறது. கதைசொல்லியின் முத்தையன்வலசுப் பெரியப்பாவின் மனைவி சவுந்திரா  தன் நோய் விழுத்திய உடம்போடும் அதன் நொம்பலங்களோடும் தன் உறவுக்கார்மேல்,குறிப்பாக காருவின்மீதும் அவரது தமக்கைமீதும் கொள்ளும் குரோதம்  அத்தனை ஆக்ரோஷமாக இருக்கிறது. அவர்கள் அழிவைக் காணாமல் தன் சாவு விழாதென்று அவள் நிலமே அறைகிறாள்.

இவ்வாறான தொழில் நெருக்கடிக் காலகட்டத்தில் மனித வாழ்வு சுகமாக இருந்திடாது. அதனால் அவர்கள் பல்வேறு தொழில்களைத் தொடங்குகிறார்கள். சில வாய்ப்பாக அமைகின்றன; சில தேய்ந்திறுகின்றன. ஆனாலும் அவர்கள் வாழ்கிறார்கள். விதிக்கப்பட்ட வாழ்வை வேறு என்ன செய்துதான் தொலைப்பது?

தன் முந்திய நாவல்கள் இரண்டையும்விட தேவிபாரதி இதில் காட்டும் வறுமையின் வெளிச்சம் மிகக் கூர்மையானது. பகட்டில்லாதது. இவற்றையெல்லாம் பார்க்கிறபோது படைப்பாளிக்கு அவர் கையாண்ட மொழியானது வெகுவாகக் கைகொடுத்திருக்கிறதென்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வெகுஜன நூல் வாசிப்பின் வேகத்தில் பக்கங்களைக் கடந்துவிடவே முடிவதில்லை. மொழி தன்னை ரசிக்காமல் செல்ல அனுமதி மறுக்கிறது. தாண்டிச் செல்வதையும் தடுக்கிறது.

மொழி ஊடகமானது மிக்க வலுவுடன் இந்த நாவலில் பிரயோகமாகியிருப்பதாய் நான் காண்கிறேன். மொழியென்று நான் சொல்வது கதைப் பிரசன்னத்தின் மொழியல்ல ; நிலமொழி. அந்த மண்ணின் மக்களின் வாயிலிருந்து கால காலமான பயில்வில் தேய்ந்தும் வளர்ந்தும் இழுபட்டுமான மொழி அது. தலைப்பின் சொல் அளபெடை இந்த மொழிப் பாவனையின் கூரான அடையாளக் கூறாக இருக்க முடியும்.  அவர்களது பேச்சு ஒரு ரசனையாயிருந்ததெனில், இறப்புத் துக்கத்தை ஒலியாய்ச் சொரியவிடும் அவர்களது ஒப்பாரி இன்னொரு ரசனையாயிருக்கிறது. ‘துக்கத்தைக் கடந்த இசையாக அவை அப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கும்’ என்கிறார் தேவிபாரதி. அது மெய்.

ஒப்பாரியும் ஒப்பாரிபற்றியும் ஐந்து பக்கங்களுக்கு நாவலில் விவரமிருக்கிறது. இவ்வாறு எந்த மண்ணிலும் துக்கத்தை ஒலித்து அடங்கும்முறை இருக்கவே செய்கிறது. ஆம்பராந்துக்கரைப் பெண்கள் அவற்றை ஒரு முயற்சியில் தங்கள் குரு உடுமலைப்பேட்டை லிங்க நாவிதனிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். அதையே சாவு வீடுகளில் அவர்கள் ஒலித்தார்கள். காருவின் செத்த வீட்டில் பெண்களின் ஒப்பாரி எழுகிறது. அயல்வந்து கூடுகிறது.  ‘துக்கம் கேட்க வந்தவர்கள் மாமாவின் சடலத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு அம்மாவின் பாடல்களைக் கேட்பதற்காகவும், பெரியப்பாவின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவும் சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்’ எனக் கூறும் தன்னிலைக் கதைசொல்லியான ராசன், அவ்வாறு கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் தொடர்ந்து செய்வதை, ‘அதன் பிறகே மாமாவின் மரணத்தைப்பற்றி அறிந்துகொண்டார்கள்’ என்பதன்மூலம் அவர்களை முதன்மையாய் ஈர்த்த அம்சத்தை விபரிக்கிறார். அத்தனைக்கு  உக்கிரம் பெற்றிருந்திருக்கின்றன ஒப்பாரி இசைப்பும், உடுக்கையொலி எடுப்பும்.

கணவனின் சாவு வீட்டுக்கு, ஓடிப்போன ராசம்மா வருகிறாள். மட்டுமில்லை, அவளது மகன் சுந்தரத்தையும் யாரோ சென்று நேரத்தோடு அழைத்துவந்திருக்கிறார்கள். அவ்வாறெல்லாம் இறுதிநேரத்தில் இசைவுகள் நடக்கும்.

மேலே வானம் போட்ட பெருமழையோடு வெகு விமரிசையாக காருவின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டு முடிகிறது. உற்றார் உறவினர் தத்தம் ஊர் திரும்புகிறார்கள். தன்னிலைக் கதைசொல்லியும் தன் முறைப் பெண் சாவித்திரியை அங்கே கண்டு உரையாடித் திரும்புகிறான்.

 பின்னாலேதான் நினைவோட்டமாக லோகநாதபுரத்தில் காரு இறப்பதற்கு முன்னான காலத்தின் அவர்களது வாழ்வு நாவலில் சொல்லப்படுகிறது. அப்பா அம்மா தங்கைகள் அக்கா ஆகிய முழுக் குடும்பத்தின் கதையும் விரிகிறது. அதன் பின்னால் ஆசிரியப் பணி புரிந்த தந்தையின் மரணத்தோடு ஐந்து பிள்ளைகளைக்கொண்ட அந்தக் குடும்பத்தின் வறுமை வெளிப்படுத்தப் படுகிறது. இணையாக அந்தச் சமூகம் சுமந்த பொருளாதார நலிவுகளும் விவரிப்பாகின்றன.

முந்திய தலைமுறை நாசுவர்களாகவும் குடி நாசுவத்திகளாகவும் ஒடுங்க, அடுத்த தலைமுறை ஈரோட்டின் சாய பட்டறைத் தொழிலில் சென்று முடங்கிக்கொள்கிறது. ஏற்படும் நீர் வரட்சியும் அவர்கள் படும் அவலமும் கிராமமொன்றில் இயல்பாக எதிர்பார்க்கப்படக்கூடுமாயினும், அதை அவர்கள் தீர்க்க எடுக்கும் முயற்சியானது மனத்தை உலுப்புகின்றது. நீர் நிழல் பசுமைவெளியென சகலதும் இழந்த வறட்சி ஒருபோது விவரிக்கப்பட்டிருக்க, மறுபொழுதொன்றில் மாமழையால் அவர்கள் படும் அவத்தை சொல்லப்படுகிறது.

ஆயினும் அந்த அவலங்களுள்ளும் வறுமையினுள்ளும் அவர்களுக்கு காதலும் வருகின்றது. காதல் வந்தால் தோல்விகள் வராதிருக்குமா? அப்போது தற்கொலைகள் நிகழ்கின்றன. சாயப் பட்டறை வேலையில் அங்கு பயன்படுத்தப்படும் நைற்ரேட் என்ற விஷத்தை களவிலெடுத்துப் பாவித்து அவர்கள் தற்கொலைகளை மிகச் சுலபமாகச் செய்துகொள்கிறார்கள். இவற்றின் மூலமாக சாயத் தொழில் செய்யும் ஒரு இளைய சமூகத்தின் ஒரு புறம் தெளிவாகக் காட்டப்படுகிறது.

இந்த வாழ்க்கையானது இதுவரை நாவலில் சொல்லப்பட்ட வாழ்க்கையிலிருந்து மாறிப்போன ஒன்றாக இருந்தபோதிலும், அவர்களது வாழ்க்கைதான் அது. றேடியோ ரெலிவிஷன் என வசதி வாய்ப்புகளையும் அந்த வாழ்க்கை கொண்டிருக்கிறது. மூத்த தலைமுறை முதல் இளைய சமதாயம் ஈறாக சினிமாப் பாடல் கேட்டு மகிழ்கிறது. சினிமா பார்க்கிறது. பல தசாப்த காலத்தின் ஒரு சமூக வளர்ச்சி நாவலின் சில அத்தியாயங்களிலேயே அடக்கிவைக்கப்படுகின்றது. காலத்தில் மறந்துவிடாதபடி நினைவின் சுவடுகளைப் பாதுகாத்து படைப்பில் பதிவாக்கும் படைப்பாளியின் முயற்சியை இங்கே கவனம்கொள்ள முடிகிறது.

இனி, காருவின் இறுதிச் சடங்கின் பின் தாலியறுப்பு நிகழ்வு நடக்கவேண்டும். சாவு வீட்டுக்கு வந்த ராசம்மா அந்தச் சடங்கிற்கும் தன் மகள் ஈஸ்வரியுடனும் மகன் சுந்தருடனும் வருகிறாள். தன்னிலைக் கதைசொல்லியான ராசனும் அவனது தாயார் முத்துவும் அவளின் சகோதரிகளும் அவர்கள் பிள்ளைகளும் வருகிறார்கள். ராசனின் அக்காக்களும் அத்தைகளும் முறைப்பெண் சாவித்திரியும்கூட வருகிறார்கள். அது ஊரினது அல்ல, குடும்ப உறவினர்களின் சடங்கு.

முறை மாப்பிள்ளையாதலால் சாவித்திரி மனத்தில் அவன்மீதான கனவுகள் எழவில்லையென யார் சொல்ல முடியும்? அல்லது அவனுக்குத்தான் தன் முறைப்பெண்மீது விருப்பமெழுவதைத் தடுக்க முடியுமா? ஒருவர்மீதான ஒருவரின் பிரியம் பேச்சுவாக்கில் சொற்களில் ஏறித் தொனிக்கிறது. ஆனால் ஈஸ்வரிக்கு அவ்வாறான எண்ணமேதும் அதுவரை இருந்ததாகத் தடயமில்லை. அந்த வயதும் அவளுக்கில்லை.

ராசம்மா தான் ஓடிப் போன ஆறு மாதங்களின் பின் செட்டி தன்னையும் குழந்தைகளையும் கைவிட்டுப்போன சோகத்தை தன் மைத்துனிகளுக்குச் சொல்கிறாள். பட்ட சீர்கேடுகளெல்லாம் கூறி கண்ணீராய்க் கொட்டுகிறாள். கேட்ட உறவுகள் தம் கோப தாபம் மறந்து துடித்துப் போகின்றன. பிள்ளைகளின் கோலமும் ராசம்மாவின் நிலையும் அவர்கள்மேல் இரக்கமாய்ப் படிகின்றன. பெண்பிள்ளை ஈஸ்வரியை எண்ணி அவர்களை அங்கேயே தங்கவைக்க யோசனை மனத்தில் கொள்கிறார்கள். அதனால் சடங்கு முடிந்ததும் புறப்படும் ராசம்மாவை இரண்டொரு நாள்கள் தங்கிப் போக வற்புறுத்துகிறார்கள். ராசம்மா சம்மதிக்கிறாள்.

அப்போது தான் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள் கிளர  காரு வீட்டுள் செல்லும் ராசம்மாவுக்கு அங்கு கிடந்த உலோகத் தாயக் கட்டைகள் கிடைக்கின்றன. பெண்களும் பிள்ளைகளும் தாயம் விளையாடத் தொடங்குகிறார்கள். ராசம்மாவும் விளையாடுகிறாள்.

அவர்களில் சிலர் தாயக் கட்டைகளில் மந்திரம் செய்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் எண்ணிக்கைகள், கேட்டது கேட்டபடி விழுந்துகொண்டு இருக்கின்றன.

விளையாட்டு முடிவடையும் நேரம். ராசம்மா தாயக் கட்டை வீசும் முறை வருகிறது. இரண்டே இரண்டு எண் அவள் போட்டுவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும். அவளும், அவளுடன் கூடவிளையாடும் முத்துவும் வென்றுவிடுவார்கள். அதனால் ராசம்மாவை இரண்டே இரண்டு போட்டுவிட கேட்கிறாள் அவள். இரண்டு போட்டுவிட்டால் அவள் எது கேட்டாலும் தருவேன் என்கிறாள்.

அதுவொரு மாயத்தின் தருணம். அதுவே அவளை அவ்வாறு பேசவும் வைத்திருக்கிறதுபோலும்.

அப்போது ராசம்மா கேட்கிறாள், ‘போட்டால் என்ன தருவாய்’ என்று.

மாயம் வேலை செய்கிறது. ராசம்மாவுக்கு மைத்துனி சொல்கிறாள், ‘உன் பெண்ணை என் மருமகளாக்கிக் கொள்கிறேன்’ என.

சாவித்திரி திரும்புகிறாள். ராசன் நிமிர்கிறான். என்ன நடந்துகொண்டிருக்கிறது அங்கேயென அதிர்வுகள் வெடிக்கின்றன.

ராசம்மா ஒரு புளகிப்பில். அவள் தாயத்தில் இரண்டு எண் போட்டுவிட்டால் அந்தக் கணத்திலிருந்து அவளது வாழ்வே தலைகீழ் மாற்றம் கண்டுவிடும். பழி பாறி விழுந்துவிடும். அறுத்த சொந்தங்களின் இழைகள் கொஞ்சமேனும் வந்து இணைந்துவிடும்.

அந்த எண் விளையாட்டுச் சித்தியாலும் இரண்டு போட்டுவிட முடியும்.

எல்லோரது மனங்களும் பேருவகைகொண்டு அவள் வீசப் போகிற தாயக் கட்டைகளில் எண் இரண்டை எதிர்பார்த்து பார்வை பரத்துகின்றன.

ஆனால் நாவல், தாயக் கட்டையை உருட்ட ராசம்மாவை கடைசிவரை அனுமதிக்கவேயில்லை. அப்படியே நின்றுவிடுகிறது. வாசகன் அந்தரத்தில் மிதக்கிறான். அது ஒரு அற்புதமானதும் உச்சமானதுமான அடைவுதான்.

உறவுகளின் அன்பு பாசம் கருணை ஆதியாய உணர்வுகளின் சிதைவுறும் கணங்களைக் கொண்டதாக நாவலின் முற்பகுதி அமைய, சிற்றூர்களின் நாவித சமூகத்தினதும் பண்ணயக்கார சமூகத்தினதும் வாழ்முறையை இடையிலுள்ள பகுதி விளக்குகிறது. பிற்பகுதியை உறவுகளின் கோப தாபங்கள் இறப்பு, திருமண சடங்காசாரங்களில் மறந்து மனித இயல்பான மாண்பு வெளிப்படும் பகுதியாக மாறிப்போகிறது. இலக்கியத்தின் பண்பும் பயனுமான கதியில் பிரதி நன்கு அழுந்திக்கொள்வது நாவலின் வெற்றியாகிறது.

ஆனாலும்…

நாவல் வாசக மனத்தை தூக்கிச் தூக்கிச் சென்று உச்சத்தில் மிதக்கவைக்கும் முடிவோடு நிறைவுறுகையில், அது நாவலின் பண்புதானா என்ற கேள்வி வாசகனிடத்தில் எழாமலிருக்க முடியாது.

                                                0


தாய்வீடு, ஏப். 2021

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்