கதை: சாப மோட்சம்
சாப மோட்சம்
இமய மலைச் சாரல் விடிந்தது.
கௌதமன் கண்கள் விழித்தன. என்றுமில்லாதபடி மனத்தில் தவிப்பு.
தன்னந்தனியாகிவிட்ட வாழ்வின் ஸ்திதி பிரக்ஞையாகிற்று.
அந்த துர்ப்பாக்கிய நாளின் பின், அந்த சம்பவத்தினதும் அவளதும்
நினைப்பை அவன் அடைந்தே வந்திருந்தான். ஆனால்
அவ்வாறான தீவிரத்திலல்ல.
அந்த நாளின் நிகழ்வு கணம் கணமாய் அவனுள் ஊறியது.
கோழி கூவுகிறது. கௌதமன் எழுந்து இன்னும் வெளிச்சக் கீறு அடிக்கத்
துவங்கியிராத வைகறை இருளில் கால் வைக்கிறான். அந்த இருளும் வழமையான பனிமையற்றுக் கிடக்கிறது.
மனத்தில் ஒரு இடையூற்றின் சமிக்ஞை. ஆனாலும் முனிவனாக இருப்பதாலேயே அந்தத் தயக்கத்தை
அவன் வென்றாகவேண்டும். தன் தெளிவை நிரூபணமாக்க அவன் மேலே நடக்கிறான்.
நீராடி, அன்றைக்கு வேண்டிய ஹோமத்துக்கான தர்ப்பையும் சமித்துக்களும்
சேகரித்துக்கொண்டு, மேலே சுணங்க மனதற்றவனாய் கொளதமன் ஓர் அவசரத்தில்போல் வருகிறான்.
இன்னும் விடிந்துவிடாப் பிரபஞ்சம் ஒரு கெடுதியின் தவிர்க்கமுடியாத முன்னறிவிப்பை அவனுக்குச்
செய்கிறதா?
பன்னசாலை நெருங்குகிறது. அவன் வேகம் அடங்கவில்லை.
அந்தப்பொழுதில்தான் உள்ளிருந்தவர்களின் உச்சஸ்தான வெடிப்பு.
இருவரும் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள். முதலில் தெளிவடையும் இந்திரன் அவளுடலிலிருந்து
வழிந்து இறங்குகிறான். அவளின் நிலாப் பிறை நெற்றியை ஆதரவாய் வருடுகிறது அவனது கரம்.
‘பாவம்!’ என்று வாய் முணுமுணுக்கிறான். அப்போதுதான் அவனாலும் இரங்க முடிகிறதுபோலும்.
இன்னும் அடங்கிய புலன்கள் முழுதான மீட்சி பெற்றுவிடாத அகலிகை
மெதுவாய்க் கண் விழிக்கிறாள்.
பன்னசாலையில் இன்னுமிருந்த நிறையிருளில் சடுதியாய்ப் பிரவேசிக்கிறான்
கௌதமன்.
தொலைந்தது!
கண்ட இந்திரன் நெஞ்சத்தில் இடியேறு வீழ்ந்தது. நேர்ந்துவிடக்கூடாதென
எண்ணியிருந்த அவ்வாறான ஒரு தருணம், தான் சில கணங்கள் தாமதமாகிவிட்டதில் பயங்கர உருவெடுத்து
வந்திருப்பதை நேரில் கண்டு நடுங்கத் துவங்குகிறான். வந்திருக்கும் அதிபயங்கரத்தின்
பெயர் கௌதமன். இந்திரன் கைவைத்திருப்பது அவனது பாரியாளில். அதிலிருந்து தப்பிக்க ஒரு
வழியும் அவனுக்குப் புலப்படவில்லை. அறிவு மழுங்கிப்போயிருக்கிறான்.
அவனுக்கு ஆசை இருந்ததுதான். அந்த ஆசையும் அத்தனை நாளில் நாள்
நாளாய் வளர்ந்து வந்த ஆசையாகயிருந்தது. அத்துடன் தன் பன்னியென கௌதம முனிவன் கொண்டிருந்த
கர்வத்தை அழித்தொழிக்கும் வன்மமும் கூடவிருந்தது.
தேவரும் அசுரரும் வாசுகியை நாணாகவும் மந்தர மலையை மத்தாகவும்
கொண்டு அமிர்தத்துக்காய் மாகடலைக் கடைந்தபோது திரண்டு வந்த ஆலகால விஷத்துடன் நிகழ்ந்தது
மாபெரும் அழகுக் கன்னியான அகலிகையின் அவதாரம்.
அந்த அழகில் தேவரும் முனிவரும் இந்திரனும் மதிகெட்டுப் போயிருந்தார்கள்.
இந்திரன் பிரம்மனை அணுகி அவளை தனக்கு மணஞ்செய்து தரக் கேட்கிறான். நாரதருக்கு, அவளை
கௌதம ரிஷிக்கு மனைவியாக்க எண்ணம். அது அகலிகையை கௌதமனுக்கு மனைவியாக்குகிறது.
இந்திரன் அந்த ஆசையை மறப்பானா? தன்னில் விழுந்த தோல்வியை
மறப்பானா?
தன்னுள் சிதைந்துகொண்டிருந்த இந்திரன் இறுதியில் தானுமொரு
சூழ்ச்சி புனைவதின்மூலம் அவளை அனுபவிக்கும் திருப்திபெற தீர்மானிக்கிறான்.
ஒருநாள் நள்ளிரவில் வந்து கௌதமனின் செவியெட்ட கொக்கரக்கோ
சொன்னான்.
விடிந்துவிட்டதென விழித்தெழுந்த முனி ஆற்றுக்குப் புறப்பட்டான்.
வெளியிருளில் கால் வைக்கவே பனி கலக்காத காற்றில் இரவு இன்னும் விடியல் கொள்ளவில்லை
என்பது அவனுக்குத் தெரிந்தது. ஆனாலும் சந்தேகம் எதுவும் மனத்தில் கிளரவில்லை.
ஆறு நோக்கி நடந்துகொண்டிருந்த கௌதமன் நடையில் தயக்கத்தின்
சிற்றசைவும் தென்படாத இந்திரன், அப்போதே தெரிந்துகொண்டான், அது தன் ஆசை நிறைவேற்றத்தின்
அற்புத நாளாகிவிட்டதென்று. அவன் பன்னசாலையுள் நுழைந்தான்.கௌதமன் படுக்கைக்கு சற்றுத்
தள்ளியாக தன் புற்பாயில் கைகளை எறிந்துகொண்டு மதர்ப்புகள் கச்சைகளை மீறித் தெரிய கிடக்கிறாள்
அழகற்ற எதுவும் தன்னில் இல்லாத அழகியான அகலிகை. இடைத்துணி நெகிழ்ந்து கிடக்கிறது. துடை
விரிசலில் இருள் இன்னும் அப்பியபடி. நெடுங்காலம் காத்திருந்த இந்திரனுக்கு தன் ஆசையை,
கௌதமன் ஆற்றிலிருந்து திரும்புமுன் முடித்துவிடுகிற அவசரம் இருந்திருந்தாலும், அவன்
அவதானமாக அவளை அணுகவேண்டும்.
அவளுடம்பில் வியர்வைத் துளிர்ப்புகள் சீறி அடங்குவதுபோல்
அவனுக்கு ஒரு தோற்றத்தின் உதயம். அது அவள் ஒரு கனலை தன் உடம்பின் உட்பொதிந்துள்ளாள்
என்பதாக அவனுக்கு தோன்றச் செய்கிறது. அவள் அறியாமல் அவன் அவளை எப்படி எப்படியெல்லாமோ
கண்டிருக்கிறான். அக் காட்சிகள் தடைசொல்லும் சாத்தியத்தை அவளுடம்பு இழந்துவிட்டிருந்ததின்
சாட்சியங்களென அவனை நிச்சயிக்கச் செய்ய இந்திரன் மெதுவாய் நெருங்கி கௌதமன் படுக்கையில்
சரிந்து உருண்டபடி அகலிகை படுத்திருந்த பாய்வரை நெருங்கி அவளருகு ஆனான்.
அப்போது ஓர் எண்ணம். கௌதமன், தானே அவளை அணுகாமல், ‘ஹே, அஹல்யே!’
என விளித்து தன் படுக்கைக்கு அவளை அழைப்பானோவென.
இடையிட்ட நிச்சலனப் பொழுது மனத்தைத் துணிவிக்கிறது.
அவன் கை அவள் மார்மேல் பதிந்தது.
அகலிகை அசைந்தாள். அப்போதுதான் விழித்தாளா?
அவன், அவளது ஒளிர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். பார்வையின்
உணர்வுறுத்தலில் அவள் சொண்டு நெளிந்து துடித்தது. உடம்பு முழுக்க தினவின் கெழுமுகை
தெரிந்தது. அது, அவனை யாராக நினைந்திருந்தாலும், அவள் அக் கணம் அந்த அணுக்கத்தை அனுமதிபாளென
உறுதியளித்தது.
அவன் தன் எண்ணம் தீர்த்தான்.
அப் போகம் ஒரு பெருங்காலத்திற்கு நீட்டித்திருந்ததாய், தவற
விட்ட காலங்களை ஈடுகட்டுவதாய், இருவருக்குமே தோன்றிப்போயிற்று. ஆயினும் களவு நீடித்த
அந்த உபரி நேரமே அப்போது பாதகமாக அமைந்துவிட்டது.
இந்திரனின் உள்விளைந்த அச்சம் அவன் மேனியில் வியர்வையாய்
வடிந்தது.
உள்ளெழுந்த பாத அதிர்வில் இன்னுமே கிடந்திருந்த அகலிகை திடுக்கிட்டு
பாய்ந்தெழுந்தாள்.
கோபாக்கினியில் தகதகத்தபடி நின்றுகொண்டிருந்தான் கௌதம முனி.
யார் குற்றவாளியெனவோ, அது குற்றம்தானா எனவோ தேரும் அவசியம்
அங்கே காணப்படவில்லை.
இந்திரனது நடுக்கம் அவன் குற்றம் செய்தானென்பதை ஐயமின்றிக்
காட்டுகிறது.
‘நீ மேனியெங்கும் புண்ணாய்ப் போவா’யென இந்திரனுக்கான சாபம்
கௌதமனிலிருந்து உருள்கிறது.
அவளில் பயமில்லை. ஆனாலும் குற்றவாளி தானும்தான் என்பதாக அவள்
கருதுவதாய், அவன் முகம் பார்க்க கூசி நிலம் கவிழ்ந்த அவளது பார்வையால், முனி நிச்சயிக்கிறான்.
அதுகாலவரையான அவளது தொண்டெல்லாம் அவன் எண்ணிப்பார்ப்பானா?
எதையும் ஓரும் திறன் எவருக்கும்போல் அவனுக்கும் அற்றிருந்த
தருணம் அது.
அவன் தன் லோகம் முழுதுமறிந்த புகழ் மறப்பான்; தன் நீண்ட ஆயுசு
மறப்பான்; தன் தபோபலம் மறப்பான்; ஆனால் தான் ஓர் ஆணென்ற எண்ணம் மறவான். அவள் அவனுக்குத்
துரோகம் செய்தாள். அவன் சரியான ஆணில்லையென முப்பத்து முக்கோடி தேவர்க்கும் காட்டினாள்.
அதன்வழி இந்த உலகம் முழுவதற்கும் பிரசித்தம் பண்ணினாள். ஒரு முனி பன்னியின் எந்தக்
குற்றமும் மன்னிக்கப்படலாம்; ஆனால் இந்தக் குற்றம் அப்படியானதல்ல அவனுலகத்தில்.
அடுத்த கணம் அவன் வாயிலிருந்து தெறிக்கிறது: ‘நீ ஆகுதி கல்!’
அதுவொரு சிறப்பான தண்டனைதான். எண்ணாமலே இட்டிருந்தாலும் அந்தச்
சாபம் அவனுக்குத் திருப்தியாய் இருக்கிறது.
உடம்பின் அவயவமெல்லாம் கல்லாகும். ஆனால் உயிர்…? உள்ளம்…?
அவை கல்லாக மாட்டா. அவள் தீச்செயலை நினைக்க அவை திறன்கொண்டிருக்கும்.
அது கௌதம முனியின் எண்ணம்.
ஆனால் அவை அவளது சொந்த இழப்புகளை எண்ணியும் உணர்ச்சிகொண்டு
ஏங்கும்… உருகும்… அழும்… தாங்கமுடியாத வலியில் தவிக்கும். ஒரு கணம் வாழ்ந்துவிட எவரையும்
மன்றாட்டமிடும். அது கொடுமையான ஒரு சாபம்.
பொழுதூர்கிறது. அகலிகை இன்னும் கல்லாகவில்லை.
முனியின் மனத்தில் அதிர்ச்சி.
மாயத்தின் எது கூறு அவளைப் புரக்கிறது?
ஆனால் சிறிது பொழுது நகர, அந்தச் சாபத்தை மிகுந்த பிரியமுடன்
ஏற்றுக்கொண்டதைப்போல அகலிகை முகத்தில் ஒரு மலர்ச்சி.
அந்த மலர்ச்சியோடு கௌதமனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு
கல்லாய் விழுகிறாள் அகலிகை. இந்தா பிடி சாபமென முனிவன் புகலுமுன்னமே, கொண்டு வா சாபத்தையென
பறித்துக்கொண்டு அவள் கல்லானதுபோல்தான் அந்தச் சாப ஏற்பிருந்தது.
அகலிகை தன் மென் திசுக்களெல்லாம் கல்லாகி நிலத்தில் வீழ்ந்தமை,
கௌதமனையே திகைக்க வைத்தது. ஆனாலும் அந்தச் சாப ஏற்பின் விதம் ‘சரி, பிழைத்தேன், கல்லாகிறேன்’
என அவள் ஏற்றுக்கொண்டதாய் அவன் தெளிந்து மேலும் சினமடைந்தான்.
பன்னசாலையைவிட்டு முனி வெளியேறினான். இமய மலைச் சாரலைநோக்கி
அவன் பயணம் துவங்கிற்று.
தவமும் பூஜைகளும் எவ்வளவு நிம்மதியைக் கொடுத்துவிடும், தன்
பன்னியைக் கல்லாய்ச் சபித்துவிட்டு வந்த ஒரு முனிவனுக்கு?
அவனுக்கும் அவ்வப்போது அவள் நினைவு எழத்தான் செய்தது. சிலவேளை
துன்பமாக; சிலவேளை தேவையுடனாக.
அன்றைக்கு பன்னசாலை சென்று அந்தக் கல்லை, ஒரு காலத்தில் பாரியாளாய்
இருந்த கல்லை, காணவேண்டுமென தீராப் பிரவாகத்துடன் ஓர் எண்ணம் அவனில் சுரக்கிறது.
மிதிலா நகருக்குச் சமீபமாகயிருக்கிறது கௌதமனின் பழைய பன்னசாலை. அவன் தன் நீள் பயணத்தைத் துவங்குகிறான். காலம்,
நாழிகைகளாய் நாள்களாய் தொடர்கிறது.
அதோ தெரிகிறது, காலங்கடந்த அழிமானத்தில் அகலிகை கல்லாய்க்
கிடக்கும் அந்த பன்னசாலை.
நினைவில் எந்த உணர்வு தூக்கலாய் நின்றது அவனில்? கோபம்…?
துக்கம்…? ஏக்கம்…?
சரியாகச் சொன்னால் அந்த மூன்றுமே.
கௌதமன் உள்ளே நுழைகிறான்.
குடில் வெறுமையாய்க் கிடக்கிறது.
முனி ஏங்கிப் போகிறான்.
அகலிகைக் கல் எங்கே?
அவன் வெளியே வந்து, அயல் முனிவர் பன்னசாலைகளை நோக்கி ஓடுகிறான்.
அவனை யாரென்று அறியாத ஒரு பெண் வெளியே வருகிறாள். கௌதமன் கேட்கிறான், ‘அந்த பன்னசாலையில்
கிடந்த கல் எங்கே?’ என.
கல் எங்கேயென்று கேட்கும் முனிவனைப் பார்த்து, அவனது உக்கிரமான
கோப குணம் அறியாதவள், சிரிக்கிறாள்.
கௌதமன் அடுத்த பன்னசாலையைத் தேடி ஓடுகிறான். அங்கே இருந்தவளிடம்,
‘நான் கல்லாக்கிவிட்டுச் சென்ற அகலிகை எங்கே?’ என உசாவுகிறான்.
பதில் அவனைத் திகைக்க வைக்கிறது.
‘நீ கண்டாயா?’
‘நான் கண்டேன். அவள் அங்கிருந்து கடினமாய் நடந்துபோனாள்.’
‘எங்கே?’
அவள் மேலே கையினால் சுட்டிவிட்டு அவனைத் தீர்க்கமாய்ப் பார்க்கிறாள்.
குழம்பி நின்றிருந்த கௌதமன் தன் பன்னசாலைக்குத் திரும்பினான்.
எப்படி நடந்தது அது? அவன் செய்த கடும் தவத்தின் உக்கிரம்
தாளாமல் நேரில் தோன்றி கடவுள் அளித்த வரபலம் காலம் தாங்காது நீர்த்துப்போயிருக்கிறது.
எங்கோ தவறு நடந்திருக்கிறது. இல்லாவிடின் இவ்வாறெல்லாம் நடக்கச் சாத்தியமேயில்லை.
தேடிய அனுபவங்கள், பெற்ற ஞானம் எல்லாம் எதுவுமில்லையென ஆவது
எவ்வளவு புதுமை! அவன் எதுவும் புரியாமல், ‘கடவுளே…!’ எனக் கூவுகிறான்.
இருண்டு வந்த வானில் மின்னல் அடிக்கிறது. சிரிப்பலைகள் முழங்குகின்றன.
மழைத் துளிகள்போல் சொல்கள் உதிருகின்றன. ‘தவங்களால் வர மகிமை அளிக்கும் ஒவ்வொரு தருணத்திலும்
நான் தவறாமல் வற்புறுத்தும் செய்தியொன்றிருக்கிறது, கௌதமா. அதை நீ மறந்துவிட்டாய்.’
மறந்தேனா, என்ன அது என தன்னை விசாரிக்கிறான் முனிவன்.
‘மறந்தேதான் போனாய். இல்லையெனில் இந்நிலை உன்னில் ஏற்பட்டிருக்காது.
ஒவ்வொரு சாபமும் அதன் இன்னொரு பகுதியாக விமோசனத்தைக் கொண்டிருக்கவேண்டும். நீ அகலிகை
கல்லாகச் சாபமிட்ட அன்று, விமோசனத்தை அனுக்கிரகிக்க மறந்தாய். ஆனால் நீ மறந்ததை நான்
நினைவில் கொண்டிருந்தேன். கல்லறைக்குள் சிறைவைக்கப்பட்ட தன்னை விடுவிக்க அகலிகையும்
எனைநோக்கி சொல் அர்ச்சனைகள் புரிந்துகொண்டே இருந்தாள். கடைசியில் வென்றது அவளாயிற்று.
‘அகலிகையின் அழகு நிகரற்றதாயிருந்தது. அதனாலேயே அதன்மீது
பதியும் ஒவ்வொரு நோக்கும் அவள் மனத்தில் அழுக்கைச் சுமத்திக்கொண்டே இருந்தது. இந்திரனை
அகலிகை விரும்பியதன் அல்லது ஏற்றுக்கொண்டதன் அறம் இங்கே இருக்கிறது. அவளுடலைக் கல்லாக்கிய உன் சாபம்
விமோசனமற்றிருந்ததால் வலுக்குறைந்து போக, மீதிக் கன்னிலை என்னால் இல்லாமல் ஆக்கப்பட்டது.
‘புணர்ச்சியே மேலேழ் கீழேழ் உலகங்களினதும் நியாயம். அதன்மீது
வரைபடும் ஒழுங்குகளே வாழ்வின் அறம். உயிர்கொள்ளும் புணர்ச்சி விதுப்புக்கு ஒழுங்குண்டு.
ஆனாலும் தன்னிச்சையானது. தனக்கே தனக்காய் தான் எல்லைகளிடுவது. அது எந்தவொரு இணைக்கும்
தனித்வொரு வாழ்க்கையை அளிக்கிறது. அவ்வாறு இருமுனை வாழ்வு கொள்பவர்கள் பாக்கியவான்கள்.
அவர்கள் மண்ணில் வாழ்ந்தாலும் மோட்ச நிலையை உணர்வார்கள். அவர்களின் ஆன்ம விடுதலை என்னால்
எப்போதும் அங்கீகரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அகலிகையின் கன்னிலை தீர்ந்தது;
மோட்சம் சித்தித்தது.’
மழை தூறவாரம்பித்தது.
கௌதமன் பன்னசாலையுள் வந்தான்.
இன்னும் அவள் அங்கே கல்லாய் விழுந்திருப்பதான ஒரு பலகீன உணர்வு.
யோசிக்க, அவளின் அந்த நிலைக்கு தானேயாகிய காரணம் புலனானான்
அவன்.
இல்லறத்துக்குத்தான் பெண் துணை; துறவறத்துக்கு அத் துணை அதீதம்.
அவனுக்கு எல்லாம் விளங்கிப் போயிற்று.
இனி அவன் அங்கே நிற்கவேண்டியதில்லை. இமய மலைச் சாரலைநோக்கி
பயணத்தைத் தொடங்கினான்.
000
Comments