Posts

பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்

பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள் டவுண் ரவுணில் எனக்கு பொழுதுபோக்குவதற்கு உகந்த இடங்களாக ஐந்தாறு பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. அண்மையில் ஒரு மாலைநேர டவுண்ரவுண் பயணத்தில் பூமழை தூறி சனிக்கிழமையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தபோது வழமைபோல ஒரு பழைய புத்தகக் கடையை நாடவே நேர்ந்தது. அங்கு பொறுக்கிய சிலவற்றில் அண்;மையில் வாசித்து முடித்த நூலொன்று சிலநாட்களாகவே என்னுள் சஞ்சலம் செய்துகொண்டிருந்தது. VOICES IN THE DESERT - AN ANTHOLOGY OF ARABIC-CANADIAN WOMEN WRITERS என்ற நூல்தான் அது. அது என் கைகளிலிருந்தபோதே அதன் கனதியை நான் உணர்ந்திருந்தேன். நூலின் கனதியென்பது அதன் கனபரிமாணத்தால் கிடைப்பதல்ல. மாறாக நூலின் கனதி, அது வியாபிக்கும் தளங்களும், தளங்களில் அர்த்தம் வியாபிக்கும் முறைமையுமே ஆகும். பெண்ணின் தனித்துவமான குரல்கள் உலக இலக்கியப் பரப்பில் ஒலிக்கத் தொடங்கி நீண்டநாட்கள். அராபிய-கனடாப் பெண்களின் குரலின் வீச்சை இலக்கியம் காணத் தொடங்கி அதிக காலமில்லை. கனடிய மண்ணில் அவர்களின் வருகை கவனிக்கக் கூடியவளவு தொடங்கியது அறுபது எழுபதுக்களில்தான். அதிலும் அதிகமானவர்கள் கியுபெக்கிலேயே குடியேற...

நிகழ்வுகளும் நீரோட்டங்களும்

நிகழ்வுகளும் நீரோட்டங்களும் எனது வலைப்பூவின் சுயவிபரக் குறிப்பில், வாழ்வின் சமச்சீர் குலையும் தருணங்களில் என்னைத் தொலைத்து மீளும் ஒரு தந்திரத்தை அல்லது எனக்கேயான ஒரு வழிமுறையை நான் பதிந்திருக்கிறேன். இந்தத் தொலைதலும் மீள்தலும் என் பதின்ம வயதுப் பிராயம் முதல் தொடர்ந்தே வந்திருக்கிறது. தன்னைத் தொலைத்தலென்பது வேகமாக இயங்கும் ஒரு பிரபஞ்சத்திலும், அதே கதிக்கு ஈடுகொடுத்துச் சுழலும் ஒரு சமூகத்திலும் மிகச் சாதாரணமாக முடிந்துவிடுவதில்லை. அதற்கு ஒரு துறவு மனப்பான்மையே வேண்டும். இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் நான் இந்தத் தொலைப்புகளில் அடைந்தது சர்வ உண்மை. இதை வேறொரு பத்தி எழுத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். தேவதைகளின் சுகங்கள் மட்டுமில்லை, அக்கால அனுபவங்களும் ஆயுள் பரியந்தம் என்னால் மறக்கப்பட முடியாதவை. அதை ஒரு ராசி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை விளக்கும் சமயமல்ல இது. இங்கே இது சார்ந்து வேறொரு விஷயத்தையே சொல்லப்போகிறேன். கடந்த சில காலமாக இந்தத் தொலைப்பு வாழ்க்கையையே நான் நிகழ்த்திக்கொண்டிருப்பினும், இது முன்னவைகள் போலன்றி இந்த மண்ணுக்கும் கால தேச வர்த்தமானங்களுக்க...

எஞ்சிய நாட்குறிப்பின் பக்கங்கள்

கழிந்துபோன ஆண்டும் எஞ்சிய நாட்குறிப்பின் பக்கங்களும் நாட்குறிப்பு எழுதுவது ஒரு கலை என எப்போதோ எவரோ சொன்ன ஒரு வாசகம், கடந்த ஆண்டு (2010) எனது நாட்குறிப்பினைப் பார்த்தபோது ஓர் அதிர்வோடு என் ஞாபகத்தில் பட்டு எதிரொலிக்க நின்றது. முந்நூற்று அறுபத்தைந்து நாட்களைக்கொண்ட நாட்குறிப்பில் பதினெட்டுப் பக்கங்களைத் தவிர மீதி எழுதப்படவேயில்லை. இந்த பதினெட்டுப் பக்க நிகழ்வுகள் மட்டும்தானா கடந்துபோன ஆண்டில் நான் குறிப்பிடக்கூடியதாக என் வாழ்வில் சம்பவித்தவை? நினைத்துப் பார்க்கையில் ஒவ்வோராண்டும்கூட நாட்குறிப்பின் எஞ்சும் பக்கங்கள் என்னை அதிரவைத்தே சென்றிருப்பது ஞாபகமானது. பின் எதற்காகத்தான் ஒவ்வோராண்டின் முடிவிலும் ஏதோ தவறவிட்டுவிடக்கூடாத கைங்கரியம்போல் நாட்குறிப்பினை தேடி, ஓடி வாங்கி எழுத ஆரம்பிக்கின்றேன்? எப்போதும்போல் இந்த ஆண்டும் பக்கங்கள் எஞ்சுவதுபற்றிய விஷயத்தை விட்டுவிட முடியாது. இதுபற்றி தீர்க்கமாக நான் யோசித்தே ஆகவேண்டும். கி.பி.2 ஆம் நூற்றாண்டில் மார்க் அரேலியஸ் எழுத ஆரம்பித்ததிலிருந்து இந்த நாட்குறிப்புப் பழக்கம் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. கிரேக்கச் சொல்லின் மூலத்திலிருந்து இந...

காவல் கோட்டம்:

காவல் கோட்டம்: மறைக்கப்பட்ட வரலாற்றை கண்டடைய முனைந்த நாவல் 1 ‘காவல் கோட்ட’த்தின் மீதான சார்பு, எதிர் விமர்சனங்கள் வீச்சாக எழுந்துகொண்டிருந்த காலத்தில் நூல் என் கைக்கு வந்து சேர்ந்தது. என் வாசிப்பை அவ் விமர்சன வீச்சுக்கள் தள்ளிப்போட வைத்துவிட, மனம் தடுதாளியில்லாத ஒரு சமநிலைக்கு வர நான் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வந்தும், 2008 டிசம்பரில் வெளிவந்த சு.வெங்கடேசனின் 1048 பக்க இந் நாவலை வாசிக்க ஓர் ஆலைத் தொழிலாளியாக இருக்கும் எனக்கு மூன்று மாதங்கள் பிடித்தன. வாசிப்பு மிக மெதுவாகவே சாத்தியமாகியிருந்தது. ஆயினும் வாசிப்பைக் கைவிடுகிற அளவுக்கும் அது சுவாரஸ்யமற்று இருக்கவில்லை. மேலே செல்லச் செல்ல நாவல் அதன் கட்டுமானத்திலும், வெளிப்பாட்டு முறையிலும் ஏறிய உச்சம் ஒரு பரவச நிலைக்கே என்னை நகர்த்தியது என்று சொல்லவேண்டும். என் நண்பர்களிடம் நாவல்பற்றி நான் நிறையக் கூறியிருந்தேன். ஆனால் நாவல்பற்றிய என் அபிப்பிராயத்தை எழுத்தாக்க எண்ணியவேளை, அதுபற்றிய குறிப்புக்களை வாசிப்பின்போது நான் எடுக்கத் தவறி விட்டிருந்தமை தடையாகப் போயிற்று. அவ்வாறு எழுதுவதற்காக நாவலின் வாசிப்பை மீண்டுமொரு ம...

தேவகாந்தன் பக்கம் 2

தற்பாலியர் கடந்த மாதம் (கார்த்திகை, 2010 ) 19ம் திகதி மாலையில் ஒரு வட்ட நண்பர்களாலும், அதற்கு அடுத்தடுத்த இரு நாள்களிலும் ‘பன்முக வெளி’யை நடாத்திய நண்பர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில், தன்பால் புணர்ச்சியாளர் குறித்த விவகாரம் விசாரிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களாதலால் செல்லுவதாக எனக்குத் திட்டமிருந்தது. கடைசியில் முடியாது போனது. சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களான விபசாரர்கள், குற்றவாளிகள், தன்பால் புணர்ச்சியாளர், அரவாணிகள் மீதான விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருக்கிறது. அதனால் கூட்டத்துக்குச் செல்லமுடியாது போனமை எனக்கு வருத்தமே. கூட்டங்கள்பற்றிய அறிவிப்புகள் தெரிந்ததுமே, அந்தப் பொருளைச் சுற்றியே மனம் அலைந்துகொண்டிருந்ததில், ‘தற்பாலியர்’பற்றிய விவகாரத்தையே மார்கழி மாத ‘தாய்வீ’ட்டுக்கு எழுவதற்கான விஷயமாக எடுத்துக்கொள்வதென்று எனக்குத் தீர்மானமாகியிருந்தது. நான் எழுதக்கூடிய விஷயம் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதுவிதத்திலாவது முரணாகிவிடுமோ என ஆரம்பத்தில் எனக்கு எழுதத் தயக்கம். இது கருத்து மாறுபாட...

தேவகாந்தன் பக்கம் 1

‘கலாபன் கதை’ கடந்த ஆவணி இதழோடு நிறைவுற்ற பின்னால் ‘தாய்வீடு’ வாசகர்களைச் சந்திக்க நான் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்திருக்கின்றன. சென்ற மூன்று ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாகவே ‘தாய்வீ’ட்டில் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும், ‘கலாபன் கதை’ எழுதிய பதின்னான்கு மாதங்களும் வித்தியாசமானவை. நேரிலும், தொலைபேசியிலுமாய் வாசகர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் என்னை சிலிர்க்க வைத்தன. தமிழ் வாசகப் பரப்பில் இவ்வாறான படைப்பின் திறம் குறித்த வெளிப்பாடுகள் அரிதானவை என்பதை நானறிவேன். நிர்விகற்பனாய் படைப்பெழுச்சி மிகும் தருணங்களில் எழுதிய பின்னர், படைப்பு எனக்கே திருப்தி தருகிற அளவில் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த படைப்பை எண்ணியிருப்பதே என் இயல்பு. ஆனால் ‘கலாபன் கதை’ வெளிவரத் தொடங்கிய மாதத்திலிருந்து வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை ஒரு சலன நிலைக்கு ஆளாக்கியிருந்தன. இன்னுமின்னும் சிறப்பான தொடராக அது வரவேண்டுமென்று மனதாரவே நான் அக்கறைப்பட்டேன். விலைமாதர் குறித்து நான் எழுதநேர்ந்த சந்தர்ப்பத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு பெண், அவர்கள் குறித்து நான் கௌரவமாக எழ...

கலாபன் கதை: 14

காணாமல் போன கடலோடி கடந்த பதின்னான்கு ஆண்டுகளில் இல்லாததுபோல கலாபன் வேலையற்றிருந்த காலம் அந்தமுறைதான் அதிகமாகவிருந்தது. கடைசிக் கப்பலை விட்டுவந்து ஏழெட்டு மாதங்களாகியிருந்தன. அந்தக் கால இடையில் கொழும்புசெல்லும் வழியில் இரண்டு தடவைகள் திருமலை வந்து ஓரிரு நாட்கள் என்னுடன் தங்கிச் சென்றிருந்தான். அவனது தங்குகைகள் முன்னர்போல் அட்டகாசமாக இருக்கவில்லையென்பதில் அதிசயப்பட ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் மனச்சோர்வுகளும், மன வேக்காடுகளும் அற்று தன்னிலைமையை உள்வாங்கிக்கொண்ட நிறைவோடுதான் அவன் இருந்திருந்தான். வெளித்தோற்றம் இன்னும் போன கிழமை கப்பலைவிட்டு வந்தவன்போல்தான் இருந்தது. அதேயளவு நீளமாக இல்லையெனினும் தலைமயிரை நீளமாகவே விட்டிருந்தான். உடை வி~யங்களிலும் குறைசொல்ல முடியாதேயிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பானால் ஒரு கடலோடியைப் பார்வையிலேயே இனங்கண்டுகொண்டுவிட முடியும். நீளமான தலைமயிர், வெளிநாட்டு உடை, குறிப்பாக லிவைஸ் அல்லது றாங்க்ளர் பான்ட், அடிடாஸ் சப்பாத்துக்களிலிருந்து அதைச் சுலபமாகக் காணமுடிந்தது. ஆனால் நிலைமை பின்னர் அந்தமாதிரி இல்லை. இலங்கையே சுதந்திர வர்த்தக வலயமாகியிருந்தமையும், மக்கள...