Posts

நினைவேற்றம்: பிள்ளை பிடிக்கும் குரங்கு

  நிலைபேறற்ற மனத்தின் இயக்கத்தை குரங்கின் செயலுக்கு ஒப்பிடும் மரபு கீழ்த்திசையில் உண்டு. என் விஷயத்தில் இது சிறிது மாற்றமாகி, குரங்குகளே என் மனத்தில் சிறிதுகாலம் தாவிக்கொண்டிருக்கும் அபூர்வம் நிகழ்ந்து போயிற்று.   காலப் பெருவெளியில் நினைவின் அடுக்குகள் என்றோ ஒருநாள், ஏதோவொரு காரணத்தில் குலையவே செய்கின்றன. அதனால் ஒரு ஞாபகத் துணுக்கு கால ஒழுங்கில் பதிவாகிவிடும் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் மனித மன அமைப்பு தந்துவிடவில்லை. சுமார் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட   என் நினைவின் பதிவு இது. எனினும் அந்த நிகழ்வையன்றி அந்தக் காலத்தின் பதிவையே முதன்மையாகக் கருதியிருக்கிறேன் என்பதை இங்கே சொல்லிவிடல் தக்கது. நான் ஆரம்பக் கல்வி கற்ற பள்ளிக்கு அப்போது ‘கந்தர் மடம்’ என்ற பெயர் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கான இடைத்தூரம் சுமார் அரை மைலுக்கு மேலேயும் ஒரு மைலுக்கு உள்ளாகவும் இருக்கலாம். நான் பள்ளி செல்வதற்கு எனக்கு இரண்டு பாதைகள் இருந்திருந்தன. வீட்டிலிருந்து மக்கி ரோட்டில் இறங்கி தார் வீதியில் ஏறிச் செல்கிற நேர்வழி ஒன்று. மற்றது ஒழுங்கையால் நடந்து வயலுக்குள் இறங்கி வாய்க்கால் கடந்து ப...

நினைவேற்றம்: மூலைக் கல்

  ‘கடந்த காலப் பிரதேசங்களுக்குத் திரும்ப வரும்போது எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திக்கொள்ளவே ஞாபகங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன’ என   ‘கடல்’ நாவல் நாயகனது எண்ணமாக வரும் ஒரு சந்தர்ப்பத்தை ஆசிரியர் ஜோன் பான்வில் விவரித்திருப்பார். மனங்களும் ஞாபகங்களும் சார்ந்த சரியான கணிப்பாக, கடந்த 2018இல் நான் எனதூர் சென்று திரும்பிய பின் கிளர்ந்த ஞாபகங்களின் பொருந்திப்போதல் சம்பந்தமான இடர்ப்பாடுகளினால் உணர முடிந்திருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அண்மையில்தான் இருந்தது நடேசபிள்ளையின் வீடு. இடையிலே சில வீடுகளும், குடிமனையற்ற ஒரு பெரிய வெறுங்காணியும். அதை பாம்புக் காணியென்று யாரும் சொல்லாவிட்டாலும், பாம்புகள் பிணைந்து முறுகி ஊர்ந்து திரியும்   அயல் என்பதன் பயம்மட்டும் இருந்துகொண்டிருந்தது. அந்தக் காணிக்குள் ஒரு அழிநிலை எய்திய ஒரு கட்டுக் கிணறும், அலைந்து திரியும் கால்நடைகள் வெளியிலிருந்து நீரருந்துவதற்காக   கட்டப்பட்ட   உடைந்த தொட்டியும், அதற்கு கிணற்றிலிருந்து நீரிறைப்பதற்கான ஒரு செடிகள் முளைத்த, வெடிப்புகள் விழுந்ததுமான சுமார் நூற்றைம்பது அடி நீள வாய்க்கா...

மலர் அன்ரி (சிறுகதை)

    மலர் அன்ரி எனக்கு நேரடியான சொந்தமில்லை. ஆனாலும் மலர் அன்ரியென்றே அழைத்தேன். அவளது அக்காளை மேரி மாமி என்று அழைத்து வருகையில், அவளேதான் தன்னை மலர் அன்ரியென அழைக்கச் சொன்னாள். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அந்தப் புதிய சொல் மாமியென அர்த்தம் கொண்டதென. அவள் என்னோடு வெகு அன்பாயிருந்தவள். என்னை அரவணைத்து எந்நேரமும் அருகில் வைத்துக்கொண்டவள். இப்போது அவளையேயல்ல, என்னையே எழுதப்போகிறேனாயினும், இதில் அவளின் உள்ளும் வெளியும் தெரியவரவேதான் போகின்றன. எனினும் இது வேறொரு அர்த்தமும் நோக்கமும் கொண்டது. இக் கதை நிகழ் காலத்தில் அவளுக்கு சுமார் இருபது வயதிருக்கலாம். எனக்கு ஏழுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட ஒரு வயது. அவள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அந்த வயதில் என்னில் எவ்வாறு புரிதலாகினவென்பதை, இவ்வளவு காலத்துக்குப் பின்னான அறிவு அனுபவங்களின் விளக்கப் பின்புலத்தில் நான் எழுதுவதென்பது சிரமமான விஷயம். ஆனாலும் அவள்மீதான பிரியமுடனும், சிறுபிள்ளைத்தனத்தின்   சிந்தனை செயற்பாங்குகள் வெளிப்பாடு அடையும்படியுமே இதைச் செய்ய நான் முனைவேன். மலர் அன்ரி மாநிறம். கல்யாணமாகி வாழப்போய் கணவனை இழந்த பின...

நினைவேற்றம்: நாணயமூர்த்தியின் கடன்

  நான் உயர்கல்வி பயின்ற டிறிபேர்க் கல்லூரியை எப்போதாவது நினைக்கிற தருணங்களில் தானும் அதனோடு ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது சாவகச்சேரி பஸ் நிலையம். அத்தனைக்கு   நெடுஞ்சாலையின் ஒடுங்கிய அவ்விடத்தில் கல்லூரி வாசலுக்கு நேரெதிரில் மிக அணுக்கமாக இருந்திருந்தது அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக் காலில் கல்லூரி ஸ்தாபிதமாகியிருந்ததால், அதற்குப் பிறகுதான் பஸ் நிலையத்தை அந்த இடத்திலே அமைத்திருப்பார்களென்றாலும், அந்த இடத்தில் அதன் அமைவு ஏட்டிக்குப் போட்டியானதுபோல் நீண்டகாலமாய் எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. பஸ் நிலையத்தின் ஓர் ஓரத்தில் கைவாளிக் கிணறு ஒன்று இருந்தது. மறுவோரத்தில் ஒரு பயணிகள் தங்குமிடம், தள்ளி ஒரு மலசலகூடம் ஆதியனவும். அருகிலே சந்தைக் கட்டிடம் இருந்தது. கட்டிடமென்பது திறந்தவெளியில் அமைந்த சில கூடங்களும் இரண்டு பக்க ஓரங்களிலுமிருந்த பலசரக்குக் கடைகளும்தான். எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்   கட்டிட கூடத்தில் பிரபலமாயிருந்தவை உடுப்பு மற்றும் துணிக் கடைகளும், ‘மணிக் கடை’களும்தான். அங்கே பெண்கள் அதிகமாகக் கூடியதனாலேயே ஆண்களின் தொகையும் அதிகமாக இருந்ததுபோல் தெரிந்தது. ச...