கலாபன் கதை 5
இருள் அசைந்து உள்ளே நகர்ந்தது கலாபன் தன் விடுப்பு முடிந்து மறுபடி கப்பலுக்கு வந்தாகிவிட்டது. அது அவன் முன்பு வேலைசெய்த அதே கப்பல் அல்லவெனினும், எழுபதுகளில் ஜேர்மனியில் கட்டப்பெற்ற ஓரளவு நல்ல நிலையிலிருந்த கப்பல். அவன் ஏற்கனவே கப்பல் அனுபவம் வாய்த்திருப்பதறிந்த இரண்டாம் நிலைக் கப்பல் என்ஜினியர் காலை நான்கு-எட்டு மணிவரையான வேலைநேரத்துக்கு அவனை எடுத்துக்கொண்டான். என்ஜின் அறையிலுள்ள எந்திரங்களின் செயற்பாடுபற்றிய தொழில்நுட்ப அறிவினை ஓரளவு பெற்றிருந்த கலாபனுக்கு, புதிய கப்பலில் வேலைசெய்வது அப்படியொன்றும் கடினமானதாகத் தெரியவில்லை. அவன் கப்பலில் சேர்ந்த மூன்றாவது நாள் கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானில் கராச்சி துறைமுகத்தைநோக்கி தன் பயணத்தைத் தொடக்கியது. எல்லோரும் நட்பாளர்களாக, பழக்கத்துக்கு இனியவர்களாக இருந்தாலும் கப்பலில் அவரவரும் பெரும்பாலும் தனித்தனி உலகம்தான். ஒரு மகிழ்ச்சி, ஒரு துக்கம் என்று எதுவிதமான குடும்பம் சார்ந்த காரியமும் உடனுக்குடன் அறிய வாய்ப்பில்லாத தொழில் அது. வெளிநாட்டு மண்ணில் வேலை செய்கிற ஒருவன், தன் தாய் அல்லது தந்தை அல்லது மனைவியரின் மரணத்துக்கு ஒர...