கலாபன் கதை: 9
ஒரு கூண்டும் சில மஞ்சள் கிளிகளும் லண்டன் துறைமுகத்தில் ஈரானியப் பெண்ணினதும், கப்பலின் இரண்டாவது அலுவலரினதும் காதலைக் கேட்ட பிறகு, கலாபன் அதிர்வுகளை அடைந்திருந்தானெனினும் மாறிப் போய்விடவில்லை. உள்ளுள்ளாய் ஒரு தினவு விளைந்துகொண்டே இருந்தது. ஆனால் அது அவன் முந்திய கப்பல்களில் இருந்ததுபோன்ற அளவுக்கோ, முறைமையிலோ இருக்கவில்லைத்தான். அந்த உண்மை தென்கொரியாவில் தெரியவந்தது. அவனே அறிய அது தெரியவந்தது என்பதே அதன் விசேடம். புசான் என்கிற தென்கொரிய துறைமுகத்தை அவனது கப்பல் அடைந்தபோது நண்பகலை அண்மிக்கின்ற பொழுதாகவிருந்தது. கடந்த ஒரு வாரமாக புசான் துறைமுகம்பற்றிய பேச்சாகவிருந்த கப்பலில், அந்த நிமிடத்திலிருந்து உற்சாகம் கரைபுரள ஆரம்பித்துவிட்டது. இரவு வேலை முடித்துவந்த கலாபன் உறக்கம் கலைந்து மதிய உணவை முடித்துவிட்டு கீழே மாலுமிகள் உணவறைக்குச் சென்றபோது, இரண்டொருவரைத் தவிர மீதிப்பேரைக் காணக்கிடைக்கவில்லை. கபின்களுக்குச் செல்லும் நடைபாதையில் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்க கலாபன் தன் புதிய நண்பன் ரோனியின் அறைக்குச் சென்றான். அங்கேயும் லேசான மது பாவனையும் சல்லாபம்பற்றிய பேச்சுமாகவே இருந்தது. ...