கலாபன் கதை: 9


ஒரு கூண்டும்
சில மஞ்சள் கிளிகளும்



லண்டன் துறைமுகத்தில் ஈரானியப் பெண்ணினதும், கப்பலின் இரண்டாவது அலுவலரினதும் காதலைக் கேட்ட பிறகு, கலாபன் அதிர்வுகளை அடைந்திருந்தானெனினும் மாறிப் போய்விடவில்லை. உள்ளுள்ளாய் ஒரு தினவு விளைந்துகொண்டே இருந்தது. ஆனால் அது அவன் முந்திய கப்பல்களில் இருந்ததுபோன்ற அளவுக்கோ, முறைமையிலோ இருக்கவில்லைத்தான். அந்த உண்மை தென்கொரியாவில் தெரியவந்தது. அவனே அறிய அது தெரியவந்தது என்பதே அதன் விசேடம்.

புசான் என்கிற தென்கொரிய துறைமுகத்தை அவனது கப்பல் அடைந்தபோது நண்பகலை அண்மிக்கின்ற பொழுதாகவிருந்தது.

கடந்த ஒரு வாரமாக புசான் துறைமுகம்பற்றிய பேச்சாகவிருந்த கப்பலில், அந்த நிமிடத்திலிருந்து உற்சாகம் கரைபுரள ஆரம்பித்துவிட்டது. இரவு வேலை முடித்துவந்த கலாபன் உறக்கம் கலைந்து மதிய உணவை முடித்துவிட்டு கீழே மாலுமிகள் உணவறைக்குச் சென்றபோது, இரண்டொருவரைத் தவிர மீதிப்பேரைக் காணக்கிடைக்கவில்லை. கபின்களுக்குச் செல்லும் நடைபாதையில் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்க கலாபன் தன் புதிய நண்பன் ரோனியின் அறைக்குச் சென்றான்.

அங்கேயும் லேசான மது பாவனையும் சல்லாபம்பற்றிய பேச்சுமாகவே இருந்தது. கூடவிருந்த ஓர் ஆபிரிக்கன் புசான்பற்றிய தன் முந்திய அனுபவங்களை ரோனிக்குச் சொல்லிக்கொண்டிருந்தான். விலைமாதர் குடியிருக்கும் பகுதியை லுநடடழற ர்ழரளந என்பார்களெனவும், தென்கொரியாவில் இன்சான் என அதேபோன்று இன்னொரு துறைமுகம் இருப்பதாகவும், அந்த இரண்டு நகரங்களில் ஒன்றிலாவது அங்குள்ள சின்னஞ்சிறு மஞ்சட் கிளிகளின் காதல் சிறகடிப்புக்களை அனுபவிக்காதவன் கடலோடியாக இருந்து பிரயோசனமில்லையெனவும் அளந்துகொண்டிருந்தான்.

கலாபனையும் குடிக்கக் கேட்ட ரோனியிடம் தான் சாப்பிட்டுவிட்டதாகவும், மாலையில் பார்க்கலாம் என்றும் கூறிக்கொண்டு அவன் இயந்திர அறைக்கு இறங்கினான்.
சொற்ப நேரத்தில் அவன் வெளியே வந்துவிடலாம். ஆனாலும் அந்த 12-04 மணி வேலைநேரத்தில் இயந்திர அறைக்கு அவன்தான் பொறுப்பு. பயணத்தில் போலவே கப்பல் நங்கூரத்தில் நிற்கும்போதும், துறைமுகத்தில் கட்டிநிற்கும் வேளையிலும் சரி அந்தப் பொறுப்பு மாற்றங்கண்டுவிடாது.

மாலையில் அவன் குளித்து வெளிக்கிட்டிருந்த வேளையில் ரோனி வந்தான். ‘இரு போகலாம்’ என்றுவிட்டு ஜொனி வோக்கரை உள்ளே சிறிதுசிறிதாய் இறக்கியபடி லியோ சேயர் என்றும், நீல் டைமன் என்றும் கசெற்றுக்களைப்போட்டு மெல்லிய சத்தத்தில் ரசித்துக்கொண்டிருந்தான் கலாபன்.
ரோனி சிறீலங்காவிலிருந்து வந்தவன். பறங்கி இனத்தைச் சேர்ந்தவன். ஆங்கிலம், சிங்களம் இரு மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவன். வாழ்விடம், கல்வி ஆகிய காரணங்களால் ஒரு சிங்களவின ஈர்ப்பு இருந்தாலும் ரோனி நல்லவன். கலாபன் நெருங்கிப் பழக அந்தளவு நல்ல குணம் போதும்.

நேரமாக ஆக ரோனி பொறுமை இழப்பது தெரிந்தது. இன்னும் சற்று வேளையாக அவன் குழம்பவே ஆரம்பித்துவிடுவான்போலத் தோன்ற, ‘ரோனி, மன்னித்துவிடு. நான் என்ன நேரம் புறப்படுவேன் எனச் சொல்ல முடியாது. சிலவேளை வெறி ஏறினால் இப்படியே போகாமலும் படுத்துவிடக்கூடும். கப்பல் இங்கே மூன்று நான்கு நாட்கள் நிற்கப்போகின்றது. நாளைக்கும் பார்க்கலாம்தானே. உன்னை இனிமேலும் தாமதப்படுத்த நான் விரும்பவில்லை. போவதானால் போய்க்கொள். கடைசிவரை நீ எனக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை’ எனக் கூறினான்.

ரோனி, ‘பரவாயில்லை, கலாபா. அநேகமாக சாமான்களை நாளைக்கு ஏற்ற ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு மேற்றள காவல்வேலை இருக்கிறது. நேரத்தோடு திரும்பினால்தான் சரியாகவிருக்கும்’ என்றுவிட்டு அவன் பின்னிற்பதின் அதிசயம் மேவ அவனைப் பார்த்தபடி விடைபெற்றுச் சென்றான்.

ரோனிக்கு மட்டுமில்லை, அவனுக்குமே தனது செயல் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
வந்த அம்மாவின் கடிதத்தில் ஊரிலே பிரச்சினைகள் வெகுத்துவிட்டன, 83க் கலவரத்துக்குப் பின் பெடியள் ராணுவத்தையும் பொலிசையும் தாக்கும் செயல்கள் அதிகரித்து, அதனால் ராணுவத்தினதும் பொலிசினதும் கடற்படையினரதும் கெடுபிடிகள் பெருகியதில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்தது. இந்த இயல்பு நிலைப் பாதிப்பில் மனோ கடிதமெழுதாதிருக்கக்கூடிய சாத்தியத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் மனைவியின் கடிதம் கிடைக்காதபோதும் அவன் ஆத்திரப்படவோ, வேறுவேறு சாத்தியங்களை எண்ணி அந்தரப்படவோ செய்யவில்லை.

ஆனால் காதலிழந்திருப்பதை எதனால் சாந்திப்படுத்த முடியும்? ஓர் அன்பான வார்த்தை, ஓர் ஆதரவான அரவணைப்பு எந்த உயிருக்கும் தேவையாக இருக்கிறதே! உடற்சுகங்களை அவன் பணம் கொடுத்து வாங்கிவிடுவான். ஆனால் காதலை எங்கே, எதைக் கொடுத்து வாங்குவது? ஆனாலும் சரீர உறவுகளினூடாகக் காதலை அடைதல் என்பது ஒரு காரியார்த்தமான மார்க்கமாக அவனுக்குள் நிச்சயமாகியிருந்தது.

நிறைந்த போதை ஏறிய ஒரு தருணத்தில் கீழே இறங்கிய கலாபன், யாரையோ எந்தக் கப்பலிலோ இறக்கிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு டாக்ஸியை மறித்தான். தான் செல்லவேண்டிய இடம் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் சொல்லியிருக்காவிட்டாலும் டாக்ஸிக்காரன் அவன் செல்லவேண்டிய இடத்துக்கு இம்மி பிசகாமல் அவனைக் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பான். டாக்ஸிக்காரர்களுக்கு, குறிப்பாக துறைமுகக் கரைகளில் டாக்ஸி ஓட்டுபவர்களுக்கு, அந்தச் சாமர்த்தியம் அதிகம்.

புசான் அழகானது. மலைகள் சூழ்ந்த பகுதி. உயர உயரச் செல்லும் வரிசை வரிசையான வீட்டு அடுக்குகளால் மலையை அமைத்திருப்பதுபோன்ற தோற்றம். கப்பல் துறைமுகத்தை அண்மித்துக்கொண்டிருந்த வேளையில் தொலைவிலிருந்தே அவ்வழகைக் கண்டிருந்தான் கலாபன். அதிகாலையில் அந்த மெல்லிய விளக்குகள் தெரிந்த நகரம் ஒரு கனவுலமாகவே அவனுக்குத் தோன்றியிருந்தது.

கலாபன் நேரத்தைப் பார்த்தான். பன்னிரண்டு ஆகிக்கொண்டிருந்தது.
அமைதியும் அழகும் கொண்டு உறைந்துகிடந்த அந்த நகரத்தின் மஞ்சள் வீடு என அழைக்கப்பட்ட பகுதியில் டாக்ஸி நுழைந்துவிட்டது என்பதை ஊகிக்கக்கூடியதாகவிருந்தது கலாபனால். களிமக்கள் ஆடியும் தள்ளாடியும் ஆங்காங்கே நடந்தபடியிருந்தனர். ஆனாலும் ஒரு அடக்கம், அமைதி நேரத்தின் அகாலம் காரணமாய் அங்கே விழுந்துகிடப்பதாகவே தோன்றிக்கொண்டிருந்தது.
அவன் டாக்ஸிக்காரனிடம் கேட்டான்: ‘நேரம் அதிகமாக ஆகிவிட்டதோ இந்தப் பகுதிக்கு வருவதற்கு?’

டாக்ஸிக்காரன் சிரித்துவிட்டு, ‘இந்தப் பகுதிக்கு எப்போதும் நேரம் சென்றுவிடுவதில்லை. ஏனெனில் இது பகல் காணாதது. பகலும் இரவும் மழையும் வெய்யிலும் இதற்கில்லை. ஆனாலும் மாலையில் வருவது நல்லது ஒருவகையில். அழகான பெண்களைத் தெரிந்தெடுக்க அதுதான் ஏற்ற நேரம்’ என்றான்.

டாக்ஸிக்காரன் இறக்கிவிட்ட வீட்டினுள் நுழைந்தான் கலாபன்.

உள்ளே கூடத்துள் சதுரப்பாங்கில் ஆறேழு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். சில கொரிய இளைஞர்கள் சுற்றிச்சுற்றி வந்து அவர்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். கலாபன் போதையோடு செய்வதறியாது சிகரெட் எடுத்துப் புகைத்தவண்ணம் நின்றிருந்தான். பெண்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த இளைஞர்களில் இருவர் இரண்டு பெண்களைச் சுட்டிக் கையசைக்க அவர்கள் மலர்ந்த முகங்களோடு எழுந்து ஒரு பகுதியால் வெளியே வந்தனர். அப்போதுதான் தெரிந்தது கலாபனுக்கு, அவர்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்திருந்தார்கள் என்பது.

அவனுக்கு அதிசயமாக இருந்தது. ‘கப்பலில் ஒரு நாய்கூட இதுபற்றிச் சொல்லவில்லையே’ என யாரையென்றில்லாமல் ஒரு திட்டைத் திட்டிவிட்டு, இனியும் நேரமாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தனக்கான பெண்ணைத் தேடத் தயாரானான்.

அப்போது அய்ந்து பெண்கள் இருந்திருந்தார்கள் கண்ணாடிக் கூண்டினுள். ஒவ்வொரு பெண்ணின் முன்னாலும் அவன் வரும்போது முட்டுக்கால் பதித்து குதிக்கால்களில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் விழிகளில் படபடத்த ஆவல் அவனை என்னவோ செய்தது. தன்னை இவன் தேர்ந்தெடுத்துக் கூப்பிட்டுவிடமாட்டானா என்ற ஏக்கம் அவளது கண்களில் தனியாகத் தெரிந்தது. ஒரு கெஞ்சுதலாய் அது வெடித்தெழுந்தது. அவளைத் தாண்;டிச் சென்று நீ நான் தேடும் அழகும் கவர்ச்சியுமான பெண்ணில்லையெனச் சொல்லாமல் சொல்லி அவளது யாசகத்தை நிராகரிக்கும் காரியத்தை நிறைவேற்ற அவனது மனம் பின்னின்றது. ஆனாலும் தயக்கத்துடனேனும் அதை அவன் செய்யவேவேண்டியிருந்தது.

ஒரு பெண்ணைத் தாண்டி மற்றப் பெண்ணுக்கு முன்னால் வந்தபோது அந்தப் பெண்ணின் முகமும் அதே ஏக்கத்தை, ஆவலைத் தெரிவிப்பதாய் இருந்தது.

ஒரு விலைமாது என்பவள் எந்த ஆணாலும் ஏற்கப்படுபவளாக இருக்கவேண்டும். ஏற்கப்படுவதற்கான அழகும், இளமையும், உடல்வாகும்தான் அவர்களது தொழிலின் மூலதனம். அவை உதாசீனப்படுத்தப்படுமானால் ஒரு விலைமாது துவண்டே போகிறாள். அது அவளது கர்வத்தின் சிதைவு மட்டுமல்ல, எதிர்காலத்தின் அச்சத்தையும் கொண்டிருக்கிறது.

ஒரு விலைமாதில், அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளானாலும், ஓர் அனுதாபம் கலாபனிடத்தில் என்றும் இருந்துகொண்டே இருந்தது. தம் நிலைமை காரணமாக அதை ஒரு தொழிலாக ஏற்றுக்கொண்ட பாவப்பட்ட ஜென்மங்கள் என்பதுதான் பொதுவாக அவனது அபிப்பிராயம்.

ஓர் இரவு கப்பலுக்கு வந்த ஒரு விலைமாது மிகவும் மோசமான காமலீலையை மறுத்ததால், வெறிகொண்டிருந்திருந்த ஓர் எகிப்தியனிடம் உதடு பிரிய அடிவாங்கிக்கொண்டு அரையும் குறையுமாய் ஓடிவந்து அவனது அறைக் கதவைத் தட்டி அபயம் கேட்ட சமயத்தில், அவளை உள்ளே அனுமதித்து ஆதரவளித்தான் கலாபன். ஆயினும் அவளது நிலைமையில் பின்னர் சினந்து, ‘இந்தத் தொழிலைவிட வேறு ஏதாவது தொழில்செய்து பிழைக்க உனக்குத் தெரியாதா? ஒருவேளை இந்தத் தொழில்தான் உனக்குப் பிடித்தமான தொழிலோ!’ என வைதான். அதற்கு அழுதுகொண்டே, தன்னிடத்தில் உள்ள எந்தத் தொழில் திறமையையும்விட தன் உடம்புதான் இந்த உலகத்தில் இலகுவாகவும் விருப்பமாகவும் வாங்கப்படுகிறது, அதற்கு தான் என்ன செய்யமுடியுமென்று என்று வெம்பிவெம்பி அந்த விலைமாது அழுதாள்.

அன்று அவளது பதில் அவனைச் சுட்டிருந்தது. அவளைச் சேராதிருந்தபோதும் அவளுக்கான பணத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவைத்தான் கலாபன்.

அவனால் இரங்க முடியும். ஆனால் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டதுபோலிருந்து எவனொருவன் முன்னேவந்து அவளது முகத்தையும் உருவரை சிறிது தெரியும்படியான சட்டைக்கூடாக மார்பகங்களையும், இடையினையும் உற்றுப் பார்க்கும்பொழுது இவன்தான் இன்றைக்கு தன் உழைப்புக்கு கூலிபோடும் தேவனோ என்று ஏக்கத்தோடு நோக்கும் அந்தப் பெண்கள்மீது சொல்லொணாத அனுதாபம் பிறந்தது கலாபனுக்கு.

கூண்டினுள் இருந்த நான்கு பேரது நிலைமை இவ்வாறெனில் அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தன்னைவிட அழகும் கவர்ச்சியும் மிக்க மற்ற நான்குபேர்கள் இருக்க இவ்வளவு வசதியும் வலிவும் இருக்கும் இவன் தன்னையா தேர்ந்தெடுக்கப்போகிறான் என்று எண்ணியதுபோல் எந்த எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் காட்டாத ஒரு பெண் அவனது கவனத்தைக் கவர்ந்தாள்.

கலாபன் அவள் முன்னால் நின்றான்.

அவளின் அந்த உள்மனக் கோட்டம் அவனை கவனம் குவிக்கச் செய்தது.

அவள் மற்றைய பெண்களைவிட அழகானவளில்லை. மற்றையவர்களைவிட

கவர்ச்சியானவளில்லை. அவளில் ஓர் அடக்கம் மெல்லிய இழையாக ஊடாடியிருந்தது. அது தம் மார்புக் குவடுகள் தெரிய ஆடை அணிந்திருந்த மற்றப் பெண்களைப்போலன்றி, அவள் கழுத்துவரை அணிந்திருந்த ரி சேர்ட்டில் காணக்கிடந்தது. மட்டுமில்லை. அவள் அவனது கண்களை ஏறிட்டு நோக்க சிறிய கூச்சமொன்றைக் காட்டியதாகவும் அவன் கண்டான். இவை மட்டுமேதானா? இல்லை. இன்னும் ஏதோவொன்றிருக்கிறது. அதுவே அவளை அவன் தேர்வுசெய்யக் காரணமெனினும் கலாபன் இருந்த தலைதொங்கு நிலையில் அது பெரிதாகப் படவில்லை அவனுக்கு.

அவன் அவளைச் சுட்டி வர அழைத்தான்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள். பின் பழையபடி தலையைக் குனிந்துகொண்டு ஆர்வமறுத்த அமைதிநிலை அடைந்தாள்.

கலாபன் திகைத்தான். மறுபடி கையசைத்து அவளை வர அழைத்தான்.

அவள் இன்னமும் அவன் தன் முன்னே நிற்பதுணர்ந்து தலைநிமிர்ந்தாள். அவனது அழைப்புக் கண்டாள். ஆயினும் அது தன்னையென நம்ப மறுத்தவள்போல் நிர்சலனமாய் அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அவன் அவளை மறுபடியும் அழைத்தான்.

தன்னையேதான் என நிச்சயமாகிய கணத்தில் அவள் முகம் மலர்ந்ததே, ஆயிரம் மலர்கள் ஒரேபொழுதில் தம் இதழ்கள் மலர்த்தி சுடர் விரித்ததுபோலிருந்தது அவனுக்கு. கலாபன் நிலைகுத்தினான்.

அவள் எழுந்து நடந்த நடையில் காலகாலமாய் தான் அடைந்திருந்த அத்தனை இகழ்வுகளையும் நம்பிக்கையீனங்களையும் தூக்கிப்போட்டு மிதித்துக்கொண்டு செல்கின்ற ஒரு பெருமிதம் கண்டான் கலாபன்.

அறையில் அதுவரை காலமும் தான் அவனுக்காகவே காத்திருந்ததுபோன்ற மனநிலையில் அவளும், தனக்கு காலகாலமாய்ப் பழக்கமான ஓர் உடலுடன் கொள்ளும் உறவுபோல் அவனும் உணர்ந்தார்கள்போல் சேர்க்கை முடிய முடியத் தொடர்ந்துகொண்டிருந்தது.
ஒரு விடிவேளையில் அவள் சிரிப்பின் முகவரி மறந்தவள்போல் இருப்பதின் காரணத்தைக் கேட்டான் கலாபன்.

அவள் நகைத்தாள். அது சிரிப்பல்ல. சிரிப்பு இதயம் விகசித்துப் பிறப்பது. அதுவோ துயரத்தின் எறியம். தன் விதியை எழுதிய காலத்தின் கொடுங் கரங்களை நோக்கி அது. பிறகு சொன்னாள்: ‘நான் இந்த தென்கொரியாவிலே அநாதை. எனக்கு அம்மா, அப்பா எல்லோரும் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் நோயிலும் விபத்திலுமாய் ஒருவர் பின் ஒருவராய்ப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அந்தக் கரையிலே, வடகொரியாவிலே, எனக்கு இன்னும் உறவுகள் இருக்கின்றன. என் தாத்தா, பாட்டி, மாமன் மாமிகள் எல்லாம் அங்கே இருக்கிறார்கள். ஆனால் ஒரு தொடர்புகூட கிடையாது. அவர்கள் இங்கே வரவோ, நான் அங்கே போவதோகூட நடவாத காரியம். உயிர்வாழ உடலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சக் காலம் எப்படியோ வாழ்ந்துவிடலாம்தான். பிறகு…? இத்தனை நிச்சயமற்ற வாழ்க்கையோடும், வலிகளோடும், வதைகளோடும் யாராவது சிரிக்க முடியுமா?’
அவளைச் சிரித்தபடி வாழவைக்கவேண்டும்போன்ற ஓர் ஆராமை எழுந்தது அவனில். ‘நான் உன்னை வாழவைக்கிறேன். என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்றான் அவன். அவள் அதுபோன்ற ஆயிரம் கதைகளைக் கேட்டிருக்கமுடியும். அவனை அவள் நம்பினாளோ இல்லையோ, அவனது மார்புக்குள் இணக்கமாய் அடங்கினாள்.
விடியும்வரை அவள் அவனுக்கானவள்தான்.

மறுநாள் காலையில் கப்பலுக்குப் புறப்பட்டபோது, ஏதோ கேட்க நினைத்து தயங்குவதுபோல் அவள் நிற்க அவன், ‘என்ன?’ என்றான். அவள் மெல்ல, ‘இன்றிரவு வருவாயா?’ என்றாள். அவன், ‘கண்டிப்பாக’ என்றுவிட்டு நடந்தான்.

கப்பலில் மாலை எப்போது ஆகும் என்றிருந்தது கலாபனுக்கு. அவள் மெதுமெதுவாய் உணர்ச்சி கிளர்ந்து எரிமலைபோல் வெடித்து அடங்கிய தருணங்களில் நகங்கள் கிழித்த இளங்கோடுகள் இன்னும் முதுகினில் இனிமை செய்துகொண்டிருந்தன அவனுக்கு. தனக்காகவே படைக்கப்பட்ட தேவதைபோல் அவளையே எண்ணியெண்ணி மது போதையை ஏற்றிக்கொண்டிருந்தான் அவன்.

ஒருபோது இன்னும் மனத்தின் மர்மமூலையில் அவளிடம் தான் கண்ட பரிச்சயத்தின் கூறு அவனுக்குப் புலனாகியது. அவன் திகைத்துப்போனான். ஆனாலும் அது அப்படித்தான் என்றே மீண்டும்மீண்டும் அவனுக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.

அவளது தோலில் இருந்த மஞ்சளை வழித்தெடுத்துவிட்டு கம்பிபோல் நீளநீளமாய் விறைத்துத் தொங்கும் அந்தக் கூந்தலில் சில நொய்மையின் நெளிகளை இட்டுவிட்டால் அவள் உயரம் மொத்தம் முகஅமைப்பில் அவனது மனோபோலவே இருப்பாள்.
இருட்டிவந்தபோது விறுவிறுவென டாக்ஸி எடுத்து மஞ்சள்வீடு பகுதிக்குச் சென்றான். இறங்கி டாக்ஸியை அனுப்பிவிட்டு சுற்றிவர நோட்டமிட்டான். அவன் நேற்று வந்திருந்த பகுதி அதுதானா? தெரு அதுதானா? வீடு எது? அவனது சம்யா இருக்கும் வீடு எது?
முதல்நாள் வந்த பகுதியை அவனால் அடையாளம் காண முடியவேயில்லை. இரவு ஒரு மணி இரண்டு மணிவரை தெருத்தெருவாக அலைந்தான். வேறெங்கு செல்லவும் மனம் பிடிக்கவில்லை. கப்பலுக்குத் திரும்பிவிட்டான் மறுநாளைய நம்பிக்கையோடு.

மூன்று நாட்களாக வீடுவீடாக ஏறி இறங்கினான் கலாபன். வெட்கத்தைவிட்டு அந்தப் பகுதியில் சஞ்சரிப்பவர்கள்போல் தென்பட்ட சிலரை விசாரிக்கவும் செய்தான். முதல்நாள் கொண்டுவந்து சேர்த்த டாக்ஸிக்காரன்போலத் தோன்றிய சிலரை, சிலவேளை டாக்ஸிகளை நிறுத்தியே, விசாரித்தான். சம்யாவைக் கண்டுபிடிக்கவே முடியாது போனது அவனால்.

அய்ந்தாம் நாள் மாலையில் கப்பல் துறைமுகத்தைவிட்டுப் புறப்பட்டது. அது அவனது வேலைநேரமாக இருந்தது. ளுவயனெ டீல நிலையிலிருந்து கப்பல் மிகமெதுவாக பின்னே நகர்வதற்கான கட்டளை மணி அடித்தபோது, எந்திரத்தை இயக்கிய கலாபனின் கண்களில் மெல்லிய நீரரும்பு கட்டியிருந்தது.

0

அய்க்கிய அமெரிக்காவைக் கப்பல் அடைந்ததும் தென்கொரியாவில் தான் கண்டுபிடித்த சம்யாபற்றியும், அவளை ஒரேநாளில் தொலைத்ததுபற்றியும் கடிதத்தில் நிறைய எழுதியிருந்தான் கலாபன்.

மனித மனங்களின் வௌ;வேறு நிலைத் தரிசனங்கள் அவனுக்குக் கிடைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனாலும் விரைவில் குடும்பகாரன் ஆகப்போகிறவன் என்ற வகையில் கலாபனின் இந்தத் தொடர்புகளையும், அனுபவங்களையும் முன்புபோல் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அடுத்த வாரமோ, அதற்கும் அடுத்த வாரமோ நான் ஊர் போகிற வேளையில் கலாபனின் மனைவியைப் பார்க்க நேர்கிற சமயம் ஏற்பட்டால், எனக்கு சம்யாவின் நினைவுதான் வரப்போகிறது. அவனுக்கு எப்படி இருக்குமோ?

‘இதெல்லாம் நல்லதுக்கில்லை’ என ஏனோ என் மனம் சொல்லிக்கொண்டது.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்