காவல் கோட்டம்:
காவல் கோட்டம்: மறைக்கப்பட்ட வரலாற்றை கண்டடைய முனைந்த நாவல் 1 ‘காவல் கோட்ட’த்தின் மீதான சார்பு, எதிர் விமர்சனங்கள் வீச்சாக எழுந்துகொண்டிருந்த காலத்தில் நூல் என் கைக்கு வந்து சேர்ந்தது. என் வாசிப்பை அவ் விமர்சன வீச்சுக்கள் தள்ளிப்போட வைத்துவிட, மனம் தடுதாளியில்லாத ஒரு சமநிலைக்கு வர நான் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வந்தும், 2008 டிசம்பரில் வெளிவந்த சு.வெங்கடேசனின் 1048 பக்க இந் நாவலை வாசிக்க ஓர் ஆலைத் தொழிலாளியாக இருக்கும் எனக்கு மூன்று மாதங்கள் பிடித்தன. வாசிப்பு மிக மெதுவாகவே சாத்தியமாகியிருந்தது. ஆயினும் வாசிப்பைக் கைவிடுகிற அளவுக்கும் அது சுவாரஸ்யமற்று இருக்கவில்லை. மேலே செல்லச் செல்ல நாவல் அதன் கட்டுமானத்திலும், வெளிப்பாட்டு முறையிலும் ஏறிய உச்சம் ஒரு பரவச நிலைக்கே என்னை நகர்த்தியது என்று சொல்லவேண்டும். என் நண்பர்களிடம் நாவல்பற்றி நான் நிறையக் கூறியிருந்தேன். ஆனால் நாவல்பற்றிய என் அபிப்பிராயத்தை எழுத்தாக்க எண்ணியவேளை, அதுபற்றிய குறிப்புக்களை வாசிப்பின்போது நான் எடுக்கத் தவறி விட்டிருந்தமை தடையாகப் போயிற்று. அவ்வாறு எழுதுவதற்காக நாவலின் வாசிப்பை மீண்டுமொரு ம...