காவல் கோட்டம்:

காவல் கோட்டம்:
மறைக்கப்பட்ட வரலாற்றை
கண்டடைய முனைந்த நாவல்



1

‘காவல் கோட்ட’த்தின் மீதான சார்பு, எதிர் விமர்சனங்கள் வீச்சாக எழுந்துகொண்டிருந்த காலத்தில் நூல் என் கைக்கு வந்து சேர்ந்தது. என் வாசிப்பை அவ் விமர்சன வீச்சுக்கள் தள்ளிப்போட வைத்துவிட, மனம் தடுதாளியில்லாத ஒரு சமநிலைக்கு வர நான் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வந்தும், 2008 டிசம்பரில் வெளிவந்த சு.வெங்கடேசனின் 1048 பக்க இந் நாவலை வாசிக்க ஓர் ஆலைத் தொழிலாளியாக இருக்கும் எனக்கு மூன்று மாதங்கள் பிடித்தன.

வாசிப்பு மிக மெதுவாகவே சாத்தியமாகியிருந்தது. ஆயினும் வாசிப்பைக் கைவிடுகிற அளவுக்கும் அது சுவாரஸ்யமற்று இருக்கவில்லை. மேலே செல்லச் செல்ல நாவல் அதன் கட்டுமானத்திலும், வெளிப்பாட்டு முறையிலும் ஏறிய உச்சம் ஒரு பரவச நிலைக்கே என்னை நகர்த்தியது என்று சொல்லவேண்டும்.

என் நண்பர்களிடம் நாவல்பற்றி நான் நிறையக் கூறியிருந்தேன். ஆனால் நாவல்பற்றிய என் அபிப்பிராயத்தை எழுத்தாக்க எண்ணியவேளை, அதுபற்றிய குறிப்புக்களை வாசிப்பின்போது நான் எடுக்கத் தவறி விட்டிருந்தமை தடையாகப் போயிற்று. அவ்வாறு எழுதுவதற்காக நாவலின் வாசிப்பை மீண்டுமொரு முறை செய்யவேண்டி நேர்ந்தபோதும் அது எனக்கு அலுப்பைத் தரவில்லை.

2008இலும் அதற்கு முந்திய ஆண்டிலும்கூட வெளிவந்த நாவல்களுள் ‘காவல் கோட்டம்’ மிகமுக்கியமானதொன்று என்பதில் எனக்கு இரண்டாவது அபிப்பிராயம் இல்லை. இதனால் மட்டுமில்லை, இந் நாவல்பற்றி விரிவாகப் பார்ப்பது தமிழ் நாவலின் புதிய போக்குகளை அறிவதற்கான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும்தான் இதுபற்றி எழுதுவது தவிர்க்க முடியாததானது.





2

வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடாத பண்பு பொதுவாக வெகுஜனரீதியான எழுத்துக்களிலேயே அதிகமும் காணப்படுவது. வாசிப்பின் இன்பம் பிரதியின் கதைப்போக்கிலோ, அதன் நடையிலோ இல்லாமல் தன் கட்டுமானத்திலும், அது தனக்குள் வைத்திருக்கும் மாற்றுப் பிரதியின் அமைவிலும் உள்ளதாக பின்னைய இலக்கியப் போக்குகள் நமக்குத் தெளிவாகச் சுட்டிநிற்கின்றன.

ஒரு கதையின் கட்டமைப்பை வரலாற்றுப் புலத்தில் பதிக்கையில் உருவாகும் பிரதி வரலாற்றுப் புதினமாவதில்லை. மாறாக அது வரலாற்றுக் கால நாவல்வகையினமாகவே ஆகிறது. வரலாற்றுப் புனைவு நாவல் என இதை ஓரளவு சொல்லமுடியும். ஒரு வரலாற்றுக் கதையைப் புனைவின்மூலம் விஸ்தாரப்படுத்தி உருவாகும் நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். பௌராணிகக் கதையொன்றை ஒரு படைப்பாளி தன் புனைவின் ஆற்றலினால் சுவாரஸ்யத்திற்கான அல்லது அதனினும் மேலான தன் நோக்கத்துக்கான திசையில் கால தேச வர்த்தமானங்களுக்குட்பட்ட திரையில் விரிப்பதும் இவ்வகைப்பட்டதாகவே கருதப்படுகிறது. ஆங்கில, தமிழ் நாவல்பற்றிய விவரணங்களிலிருந்து இவ் வகையினப்பாட்டை நாம் சுலபமாகவே வந்தடைய முடியும்.

எட்டாம் ஹென்றியின் ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் மத அதிகாரத்தை இங்கிலாந்தில் ஒழித்து இங்கிலாந்துத் திருச்சபையின் ஆதிக்கத்தை நிறுவ நிகழ்ந்த போராட்டத்தின் பின்னணியில் புனையப்பட்ட Hilary Mantelஇன் ‘Wolf Hall’ நாவலை மிக அண்மைக்கால சரித்திர நாவலுக்கு உதாரணமாகக் கொண்டால், சேர் வால்டர் ஸ்கொட்டின் ‘Ivanhoe’ மற்றும் ‘Waverley’ நாவல்களை சரித்திர நாவல்களின் தோற்றுவாய்க் கால நாவல்களாகச் சொல்ல முடியும். டானியல் டீபோவின் ‘றொபின்சன் குரூசோ’ நாவலும் தோற்றுவாய்க் கால நாவல்களில் முக்கியமானதே. இந்தியப் புலத்தில் எழுந்த அண்மைக்கால நாவல்களுக்கு 2007இல் வெளிவந்த தீபக் சோப்ராவின் ‘Bhudda’ என்ற நாவலையும், 2010இல் வெளிவந்த ஒமெய்ர் அகமத்தின் ‘The Story Teller's Tale’ ஐயும்கூட நாம் உதாரணத்துக்குக் கொள்ளமுடியும்.

கனடிய மண்ணில் ஆங்கிலத்தில் வெளிவந்த இரண்டு நாவல்கள் இது குறித்த நம் விசாரணைக்கு உதவக்கூடியவை. சந்ரா கலான்ட் உடைய ‘The many lives &  Secret sorrows of Josdphine B’ , ‘Tales of Passion, Tales of Woe’ ஆகிய இரண்டு நூல்களும் வரலாற்றுப் புனைவு எழுத்துவகையான நாவல்களுக்கு மிக்க உதாரணமாகக் கூடியவை. ஜோசபின் உடைய இளமையும், முதல் திருமணமும், முதல் கணவனின் மரணத்தின் பின் ஆரம்பிக்கும் நெப்போலியன் போனபார்ட்டுடனான திருமணமுமாக தொடர்வன நாவல்கள். பிரெஞ்சுப் புரட்சியையும், அதன் பின்னான குடியரசு ஆட்சியையும், நெப்போலியனது எழுச்சியையும் ஐரோப்பிய சரித்திரத்தில் விரிவாக அறிந்திருக்கும் ஒருவர் இந் நாவல்களில் அதன் வரலாற்றுப் புலம் அச்சொட்டாகப் பதிவாகியிருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். முதலாவது நாவல்பற்றி தி குளோப் அன்ட் மெயில் பத்திரிகையில் வெளிவந்த விமர்சனத்தின் பின்வரும் அடி அதன் தரத்தை உள்ளுணர வைக்கிறது: ‘…accomplishes what the best of historical novel does’.

ஆங்கிலமொழி வரலாற்று நாவலையும், வரலாற்றுப் புனைவு நாவலையும் மிகத் துல்லியமாக historical novel எனவும் historical fiction எனவும் வரையறைசெய்து வைத்துள்ளது. தமிழிலும் இந்த வரையறுப்பு உண்டெனினும் அச்சொட்டான வாசகப் புரிதலாவது குறைவாகவே இருக்கிறது.

ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ ஒரு பௌராணிகப் புலத்தை ஓரளவு கண்டடையப்பட்ட வரலாற்றுத் தகவல்களின்மீது தன் புனைவின் வன்மையால் உரைநடையில் நிர்மாணித்த மிகப்பெரும் பிரதியெனக் கொண்டால், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’ பஞ்சபாண்டவர் தவிர்ந்த உபபாண்டவர்களின் மூலமாக ஒரு பௌராணிக காலத்தை நிதர்சனத்துக்கு உருவாக்கிய சாதனையெனக் கொள்ள முடியும். இவைபோல் ‘காவல் கோட்ட’த்தையும் தன்னளவில் உச்சமடைந்த நாவலாகவே கொள்கிறேன். எப்படி?

3

தாதனூரினதும் அதன் மக்களினதும் கதையென்று மொத்தமாகச் சொல்லிவிட முடியாவிட்டாலும், ஓரளவில் அது அப்படித்தான். மதுரையின் ஆதாரமாக இருந்து காலங்காலமாக தாதனூர் இயங்கிக்கொண்டிருந்தது. அதன் மக்கள் எப்படியானவர்களாக இருந்தனர்? நாவலின் கடைசிப் பகுதியில் இவ்வாறு வருகிறது: ‘சோகம் சொல்லிமுடியாதபடி அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைத் தந்தது இரவும் பகலும் மாற்றிப் போடப்பட்டதுதான். மூதாதையரின் காலங்களிலிருந்து இருள் எனும் பெரும்பரப்பில் ஓடியபடி இருந்த கால்கள்! இருளைக் குடித்து, இருளைத் தின்று, இருளால் வளர்ந்த உடல்கள்!’

தாதனூர் காவலும் களவும் கலந்த ஊராக இருந்தது. அதுபோல் தாதனூரும் மதுரையும் பிரிக்கமுடியாதவாறு ஒன்றின் ஆதாரத்தில் ஒன்றுபோல் இணைந்தே கிடந்தன.

மாலிக் கபூரின் படையெடுப்புக் காலத்தில் காவலாளி கருப்பணனின் கொலைப்பாட்டோடு தொடங்கும் நாவல், கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் தாதனூர் பெரியாம்பள மகள் அங்கம்மாக் கிழவி பொலிஸினால் அடித்துக் கொல்லப்படுவதோடு முடிவெய்துகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் இடையிலும் மதுரையையும், தாதனூரையும் கவிந்தெழுந்த காலத்தின் கதைதான் ‘காவல் கோட்டம்’. இதற்கு மேலே கீழே இல்லை.

காலம் எப்படி இருக்கிறது? அதன் வடிவம் என்ன? கழிந்த காலம் வரலாறாக இருக்கிறது. அது கதைகளின் வடிவத்தில் நிற்கிறது. காலம் ஒரு வட்டத்தில்போல் நடந்துகொண்டே இருக்கிறது எனலாம். அதனால்தான் வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கின்றன. கதைகளும் வெவ்வேறு வடிவங்களில் கிளைத்துக் கிளைத்து எழுந்துகொண்டிருப்பதும் அதனால்தான்.

ஊரைக் கொள்ளையடித்து, அகப்பட்ட பெண்களையெல்லாம் கவர்ந்து சென்றுகொண்டிருந்த மாலிக் கபூரின் படைகளின்மேல் சடைச்சி கொடுத்த வேலோடு பாய்ந்து சில குதிரைப் படையினரைக் கொன்றுவிட்டு தானும் மடிந்து போகும் காவலாளி கருப்பணனின் கதை, எப்போதுமே வேறுவடிவில் நாவலில் வந்துகொண்டேதான் இருக்கிறது. கருப்பணனின் மரணத்தின் பின் தன் தாயாதிக்காரரின் ஊர் நோக்கிச் செல்லும் சடைச்சி இடையில் நோக்காடு கண்டு அமணமலைப் பக்கமாயுள்ள ஒரு குகைக்குள்ளே நுழைகிறாள். சடைச்சியின் வம்சத்திலிருந்து பெருக்கெடுக்கிறது களவினதும், காவலினதும் சமூகம். சடைச்சிகளும், கருப்பணன்களும் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள் அதில்.

முகம்மதியர் மதுரையைக் கைப்பற்றியிருந்த காலத்தில் அப் பழம்பெரு நகர் எப்படியிருந்தது? குமார கம்பணனின் விஜயநகரப் படைகள் வந்து மதுரையை முற்றுகையிட்டிருக்கின்றன. வைகைபற்றியும் மதுரைநகர்பற்றியும் கேள்வியில் பட்டிருந்த வடுகத் தளபதிகள் திகைத்துப்போகிறார்கள். ‘வைகை கம்பிளி நாட்டுக் காட்டோடைகளைவிடவும் ஒடுங்கி மணலாய்க் கிடந்தது. சின்னஞ்சிறு நகரான மதுரையை ஐந்தே நாழிகையில் குதிரையில் சுற்றிவிடலாம். அதன் குட்டையான கோட்டை மதில்கள் காலத்தில் முதுமை பூண்டு அரித்துக் கிடந்தன. சுட்ட செங்கல்கள் செதில் செதிலாய் வங்குபற்றி நின்றன. பனையை வெட்டிக் கிடத்தினால் மதிலை எட்டிவிடும் அகலம்தான் அகழி கிடந்தது. அரவ நாட்டில் கல்கோட்டைகளே இல்லையென்ற தகவல் ஆச்சரியமளித்தது’ என நாவல் கூறுகின்ற நிலைமையைக் கற்பனைசெய்து பார்க்க முடியும். இந்த நிலைமையிலிருந்துதான் மதுரை வளர்ந்தது. படிப்படியாக வளர்ந்தது. ஒருவகையில் மதுரைக் கோட்டையின் வளர்ச்சியும், அதன் அழிப்பும்தான் நாவலின் பெரும்பகுதியை நகர்துகின்றன.

வரலாறாக அன்றி, கதைகதையாக நாவல் நகர்வதிலேதான் அதன் கட்டுமானச் சிறப்பு அடங்கியிருப்பதாகப் படுகிறது. இன்னொருவகையில் சொல்லப்போனால் பல சிறுகதைகளும், பல குறுநாவல்களும்கொண்டு நாவல் நடந்திருக்கிறது என்றாலும் சரிதான். கருப்பணன் கதை, தொடர்ந்து குமார கம்பணன் - கங்கா கதை, ராணி மங்கம்மா கதையெல்லாம் சிறுகதைக் கட்டமைப்போடு விளங்கிக்கொண்டிருக்கின்றன. விசுவநாத நாயக்கன் கதை, தொடர்ந்து நல்லதங்காள் குஞ்சரத்தம்மாள் கதைகளெல்லாம் குறுநாவலின் குதிப்புகளோடு இருக்கின்றன. ‘இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அவை வெறும் கதைகள் அல்ல, கதையும் வரலாறும் கிளைபிரியா முதுமொழியில் சொல்லப்பட்டவை. அம் மொழியில் முளைத்து என் போக்கில் வளர முயன்ற ஆசைதான் இது (நாவல்)’ என படைப்பாளியே குறிப்பிடுவதுபோல் கதைகதைகளாகவேதான் நாவல் வளர்ந்திருக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் அடங்க மறுத்த மதுரையின் வலிமையெல்லாம் அறுக்கும்வகையில், நகர விஸ்தரிப்பு மற்றும் வர்த்தகத்துக்கான பாதைகளின் அமைப்புக்கென்று  பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு கோட்டையிடிப்புக்கு திட்டமிடப்படுகிறது. அதற்கு முன்னதாக கோட்டைச் சுவர்களில் காவலுக்கு வாலாயம் பண்ணி வரவேற்கப்பட்டிருந்த ஏழு கருப்பன்களும், ஏழு மாடன்களும், ராக்காயி, பேச்சி, இருளாயி ஆகிய மூன்று சக்திகளும், மதுரைவீரன், லாடசன்னியாசி, சப்பாணி, சோணை ஆகியவர்களுமான இருபத்தொரு சிறுதெய்வங்களும் கோட்டை வாசஸ்தலத்திலிருந்து குடிகிளப்பப்பட்டாக  வேண்டுமென்று ஊர்ப் பெரியோர் அபிப்பிராயப்படுகிறார்கள். ராமச்சந்திர ஐயர் என்பவர் அவ்வாறு தெய்வங்களை வேறு இடங்களில் குடியேற வைத்துவிட முடியுமென்று பரிகார பூஜை முறை கூறுகிறார்.

ஒரு நிறை அமாவாசை இரவில் அதற்கான பூஜை தொடங்குகிறது. செல்லத்தம்மன் கோயிலில் இருபத்தொரு எருமைக் கடாக்களை வெட்டிப் பலியிட்டு, அத் தெய்வங்களை அக் கோயிலில் குடியேற வைப்பதுதான் திட்டம். ‘கோட்டைச் சுவரில் இருக்கும் தெய்வங்களை பலியேற்றுக்கொள்ள வெளியேறி வருமாறு மூலைக்கு மூலை கோடாங்கிகளும், சாமிகளும், பூசாரிகளும் நின்று நரம்பு புடைக்கக் கத்தி ஆடிக்கொடிருந்தனர். உடுக்குச் சத்தமும், கொட்டுச் சத்தமும், மேளச் சத்தமும் இரவின் செவிப்பறையை அதிரச் செய்தது.’ ஆயினும் தெய்வங்கள் தம்மிருப்பிடத்தை விட்டு விலகிச் சென்று பலியேற்க மறுத்துநின்றன. எப்படியோ முதலில் நல்லமாடன் கோட்டைச் சுவரைவிட்டு இறங்கிவரச் சம்மதித்தான். தொடர்ந்து மற்றைய தெய்வங்களும் இறங்கிவந்தன. நேரமாக ஆக சங்கிலிக்கருப்பனும் இறங்குகிறான். ‘எட்டுப் பேர் இழுத்துப் பிடிக்க சங்கிலிக்கருப்பன் இறங்கியபொழுது, கோட்டையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல் இருந்தது. அவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு, இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.’ அழுகையும் ஆவேசமும் கத்தலும் கதறுலுமாக விடிகிறவரையில் இருபத்தொரு சிறுதெய்வங்களும் செல்லதம்மன் கோயிலில் சென்று குடியேறிக்கொள்கின்றன. அன்றைய மதுரை மட்டுமல்ல, வாசிக்கும் மனங்களும் நடுங்கி அலறுகின்றன. இவ்விடத்தில் படைப்பாளியின் மொழியாளுமை உச்சம். வாசக மனத்தை அது பதறவைக்கும். கோட்டை மதிலோர மரங்களிலிருந்த மாடப்புறாக்கள் ஒரு மாலையில் திரும்பிவந்து தமது கூடுகளைக் காணாது பதறியடித்து அலமருவதுபோல் மனம் பறந்தடிக்கும்.

‘விஷ்ணுபுரம்’ நாவலில் ஒரு மதம் பிடித்த யானை வரும். அதை அடக்க போர் யானையொன்றைக் கொண்டுவருவார்கள். அப்போதைய வழக்கம் அதுதான். போர் யானைக்குத் தெரிந்தது யுத்தம்மட்டுமே. யுத்தத்தில் கொலை. போர் யானை வருவதும், மதம் பிடித்த யானையை ஒரு மூலைப்படுத்தி தன் கூர்த்த தந்தங்களால் குத்திக் கொல்வதும் வாசிக்கையில் வாசக மனம் பதறிச் சிலிர்க்கும். ஏறக்குறைய அதற்குச் சமமான பதற்றத்தை வாசக மனத்தில் ஏற்படுத்துபவை சு.வெங்கடேசனது இப்பக்கங்களும். அதுபோலவே கொள்ளைநோய்க் காலத்தில் மனிதர் கூட்டம் கூட்டமாய் இறப்பதும், தாது வருஷ பஞ்ச காலத்தில் ஜனங்கள் அடையும் வறுமை வாட்டம் அலைந்துலைவுகளும், பின்னால் வெள்ள காலத்தில் அடையும் இன்னல்களும் நாவலில் துயரம் தோய்ந்த கவி மொழியில் சொல்லப்பட்டிருக்கின்றன.



4

கோட்டை இடிக்கப்பட்டதோடு மதுரையின் உச்சம் முடிவடைகிறது. ஆக முன்பகுதியின் கதை மதுரைக் கோட்டையின் வரலாறாக இருப்பது தவிர்க்க முடியாதவாறு அமைந்துவிடுகிறது. கண்ணகியின் திருகி எறியப்பட்ட முலையிலிருந்து எழுந்த கனலில் எரிந்த மதுரை, ஒருவகையில் கனல் ஆறாததாகவே என்றும் இருந்திருப்பதாகப் படுகிறது. அதன் வசந்தங்களைவிட கோடைகளே அதிகமென்பதுதான் வரலாற்று உண்மையும். முகமதிய ஆட்சியும், பின்னர் விஜயநகர ஆட்சியும், பின்னர் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியும், பிறகு ஆங்கிகலேய ஆட்சியுமாக அது கண்ட கோடைகள் கணக்கிலடங்காதவைதான். ‘மதுரையில் பிறந்த என்னாலேயே மதுரையை நாவலில் காணமுடியவில்லை’யென்று பிரலாபித்தார் ஒரு வாசகர். அன்பரே ‘காவல்கோட்டம்’ மதுரையின் கதையே எனினும் அதன் உடலின் கதையல்ல அது, மாறாக அதன் ஜீவனின் கதையேயாகும் என்பதே அதற்கான சரியான பதிலாகும்.

எனின் இது மதுரையின் கதை மட்டும்தானா? இது தாதனூரின் கதையும் ஆகும்தான். மதுரையும் தாதனூரும் பிரிக்கக்கூடியவையல்ல. ஒன்றின்மேலொன்று ஆதாரங்கொண்டிருப்பவை. மதுரையின் காவலுக்கும் சட்டம் நீதி ஒழுங்குகளுக்குமாக பொலிஸ்படை நிறுவப்படுவதிலிருந்து அதுவரை மதுரையின் காவல் ஆதாரமாகவிருந்த கள்ளர் சமூகம் முக்கியத்துவம் இழக்கிறது. அவர்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்மூலம் ஒடுக்கப்படுகிறார்கள். மதுரை வரலாறு நெடுக நடந்த போர்களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கள்ளர்கள் அடைந்த இன்னலும், உயிரிழப்பும்போல் எப்போதும் ஓர் இன்னலோ உயிரிழப்போ நடைபெறவில்லை என்று கூறுமளவிற்கு அவை இருந்திருக்கின்றன.

இவ்வாறு பார்க்கையில் மதுரைக் கோட்டையின் அழிப்பு முடிய தொடங்குவது தாதனூர் அழிப்பு என்றாலும் பொருந்தும்.

புனைவும் வரலாறுமாக ‘காவல் கோட்டம்’ எதை ஸ்தாபிக்க முயல்கிறது? வெறும் நாவல் என்ற இலக்கிய வகைமையினை மட்டும்தானா?



5


நாவலின் ஏறக்குறைய ஒரு முந்நூறு ஆண்டுக்கால வரலாற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் நமக்கு ஓர் உண்மை தெரியவரும். வரலாற்று நாவலின் வரவு ஆரம்ப காலங்களில் ரொமான்ரிஸ தன்மை வாய்ந்ததாகவே இருந்திருக்கிறது. அது பல்வேறு கிளைகளை எடுத்தது பின்னாளில். மிகப் பிந்திய காலத்தில் அதன் வகையிமொன்றின் வருகைதான் மாற்று வரலாற்றுப் புதினம் என்பது. Alternate historical novel என்று அதை ஆங்கில நாவல் வகைப்பாடு செய்துநிற்கிறது. அந்த வகையான நாவலுக்கு தமிழில் உடனடியாகச் சொல்லக்கூடிய ஆதாரமெதுவும் நம்மிடம் இல்லை. அந்தவகையில் தமிழ்ப் பரப்பு பெருமைகொள்ளக்கூடிய ஒரே நாவல் ‘காவல்கோட்டம்’தான்.

வரலாறு என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறோம்? சொல்லப்பட்டிருப்பது வரலாறு என்பதாக மட்டும்தானே? அது யாரினது வரலாறாக இருக்கிறது என்பதை யோசிக்க நம்மில் பலபேருக்கு வாய்த்ததில்லை. உண்மையில் அது அதை எழுதியவன் பார்வையிலுள்ள வரலாறாக இருக்கிறது. அவனது பார்வையை அவன் வாழ்ந்த சமூகமும், அந்தச் சமூகம் அறிவாய்ச் சேகரித்து வைத்திருக்கும் கல்வியும் உருவாக்கியதாகத்தானே கொள்ளமுடியும்? ஆக, அதை உண்மை வரலாறு என எப்படிக் கூறிவிட முடியும்?

கதைகளில், அனுபவங்கள் உறைந்துள்ள கிராமியப் பாடல்களில் விடுபட்டதும், மறைக்கப்பட்டதுமான வரலாறு மறைந்திருக்கிறது. அதை வெளிச்சமிட்டுக் காட்டுவது மாற்று வரலாறு. அதை நாவலில் சொல்லிவிட்டால் அதுவே மாற்று வரலாற்று நாவல். ‘காவல்கோட்டம்’ மறைக்கப்பட்டதும், திரிக்கப்பட்டதுமான வரலாற்றை கண்டடைய முனைந்திருக்கிறது. அதுவே அதன் தனித்தன்மை. அதில் அது தனி முத்திரை பொறித்திருக்கிறது. அதுவே முதன் முத்திரையாகவும் இருக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு.

00000


காலம் -36, Dec.2010

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்