படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும்
படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும் சமகால ஈழத்து இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் அல்லது தாக்கமின்மையும்: மொழிவெளியினூடான ஓர் அலசல் ஒரு படைப்பு முயற்சியில் வாசகப் பரப்பு கவனத்திலெடுக்கப்பட வேண்டியதில்லையென்று நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சரிதான். தீவிர படைப்பாளி ஒருவருக்கு அந்தக் கரிசனம் பெரும்பாலும் எழுவதில்லையென்பது பல்வேறு படைப்பாளிகளின் நேர்காணல்களில், நேர்ப் பேச்சுக்களில் வெளிப்பட்டிருக்கிற உண்மையும். நமது நவீன இலக்கிய வடிவங்கள் நம் தேயங்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியென்ற மெய்ம்மையிலிருந்து கவனமாகிறபோது, சமகால அய்ரோப்பிய, அமெரிக்க இலக்கிய உலகினைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியம் குறித்த விஷயத்தை நாம் அலசிவிட முடியாதென்பது வெளிப்படை. படைப்பு வாசிப்பு என்ற இந்த இரண்டு இயங்கு தளங்களுக்குமிடையே, பதிப்பு என்பது இக் கண்டங்களில் மிக்க வல்லபமான நிஜமாக இருந்துகொண்டிருக்கிறதைப் பார்க்க முடிகிறது. இதைத் தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்ப்பதற்கு இன்றைக்கு வலுவான தேவையிருக்கிறது. நம் இலக்கிய முயற்சிகளை இதனோடு இனங்கண்டு நம்மைப் புரிவதன் அவசியத்தை அவசரமாக்குவதே என் முதன்முதலான பிரயாசை. ...