Sunday, January 29, 2012

தேவகாந்தன் பக்கம் 11

தேவகாந்தன் பக்கம்
பதினொன்று 

கரக்கட்டான்


மனித அறிவினை பட்டறிவு, நூலறிவு என வகைப்படுத்தியுள்ளார்கள் முன்னோர். உலக அனுபவத்தினால் ஏற்படுவது பட்டறிவென்றும், நூல்களை வாசிப்பதனால் வருவது நூலறிவு என்றும் வரைவு சொல்லப்பட்டிருக்கிறது.

‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது’ என்ற பழமொழியினை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதனுள் பொதிந்திருக்கும் அர்த்தம் கல்வியறிவினால் வாழ்க்கைக்கு நன்மை இல்லை என்பதுதான்.

ஒருவன் கல்வி கற்பதனால் எந்த நன்மையும் இல்லையென்ற பொதுக் கருத்தின் மேவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலவசக் கல்விக்கும், பெண் கல்விக்கும், சமமான சமூகக் கல்விக்குமாய் உழைத்த மகா மனிதர்களின் உயர்ந்த பிம்பங்கள் அந்த அதிர்ச்சியில் ஆட்டங் கண்டன. கல்வியினால் பயனே இல்லையா வாழ்க்கைக்கு?

என் வீட்டுக்கு அண்மையிலுள்ள பல்கடைக் கூடம் (Mall) ஒன்றில் சிறிதுநேரம் காத்திருக்க நேர்ந்த தருணத்தில், அங்கிருந்த வாங்குகளில் சும்மா அமர்ந்திருந்த வேலையற்ற வயது மூத்த நான்கைந்து தமிழர்களின் உரையாடலைச் செவிமடுத்ததில் விளைந்தது இந்தக் கேள்வி.

இதுபற்றி நான் சிந்தித்தே ஆகவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டேன். அந்தச் சிந்திப்பினை ‘தாய்வீடு’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதும் எண்ணமாயிற்று.

ஐப்பசி மாதத்து தாய்வீடு பத்திரிகையின் எனது இந்தப் பக்கம் வழக்கம்போல் இறுக்கமாயில்லாமல் கொஞ்சம் வளவளவாக இருக்க நேர்ந்தாலும், பிரயோசனமற்றதாக இருக்காது என்பது என் நம்பிக்கை. இங்கிருந்துதான் அந்த ‘கரக்கட்டான்கள்’பற்றிய தலைப்பு குறிக்கும் விஷயத்தையும் நான் அணுகவேண்டியிருக்கிறது. அது உங்களை சற்று சுவாரஸ்யத்திற்கும், கொஞ்சம் அதிர்ச்சிக்கும், சிறிது யோசிப்புக்கும் உள்ளாக்கும் என்று மெய்யாலுமே நம்புகிறேன்.

ஆக, கல்வியினால் பயனே இல்லையா என்ற கேள்வி அந்தப் பழமொழிபற்றிய நம் மூத்தோரின் பொழுதுபோக்குப் பேச்சிலிருந்து யாருக்கும் அடைவது தவிர்க்கமுடியாதே நிகழும். இங்கேதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. கல்வியறிவு என்பதையும், நூலறிவு என்பதையும் நாம் பொதுப்பேச்சில் வித்தியாசமானவையாக இனங்காணாவிட்டாலும், அவற்றுள் தெளிவான வேறுபாடு இருக்கிறது என்பதுதான் அது.
கல்விக்கான நூல்களைப் படிப்பதையும், மற்றும் நூல்களை வாசித்தலையும்தான் நாம் செய்கிறோம். இந்த படிப்பு, வாசிப்பு ஆகிய இரண்டு தொழிற்பாடுகளுமே வேறுவேறானவை. பள்ளி நூல்களை நாம் வாசித்துவிடக்கூடாது. மாறாக படிக்க வேண்டும். மற்றும் நூல்களை நாம் படித்துவிடத் தேவையில்லை. பதிலாக வாசிக்க வேண்டும். ‘இந்த மாத தாய்வீடு பேப்பரைப் படிச்சாச்சு’ என்று சொல்லாதீர்கள். மாறாக ‘இந்த மாச தாய்வீடு பேப்பரை வாசிச்சாச்சு’ என்று சொல்லுங்கள். ஒரு நாவலை நாம் படிப்பதில்லை. அதுபோல் இரசாயன பாடத்துக்கான ஒரு கல்லூரிப் புத்தகத்தை நாம் வாசிப்பதில்லை.

இந்த படித்தல், வாசித்தல் ஆகிய இரண்டு தொழிற்பாடுகளுமே நன்மையானவைதான், பயனுள்ளவைதான். படித்தலில் உடனடியாக அதன் பலன் இல்லாதிருந்தாலும், அதன்மூலம் அடைகின்ற கல்வியின் பெறுபேறுதான் நம் பிற்கால வாழ்க்கைக்கான தொழில் ஆதரத்தைத் தருகிறது. ஆனால் வாசித்தல் செயற்பாட்டில் உடனடிப் பலனான இன்பமும், பின்னடிப் பலனான அறிவும் கிடைக்கின்றன. வாசித்தல்பற்றி ரோலன்ட் பார்த் சொன்ன ஒரு கருத்தை இங்கு சொல்லுதல் பொருந்தும். ‘இலக்கியப் பிரதிக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு, களிப்பு என்ற பார்வையில் பாலியல் இன்பம்போன்றது’ (Pleassure of text) என்கிறார் அவர்.

வாசித்தலின் இன்பத்தை விளக்க இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.
இந்த வாசித்தலை நம் சமூகம் ஒரு பயனற்ற முயற்சியாகவே கருதி வந்திருக்கிறது என்பதைத்தான், நம் சமூகத்தினிடையே அந்தப் பழமொழி தோன்றியதன் முக்கியமான காரணமாகக் கொள்ள முடியும்.

இந்த வாசித்தலின் நன்மை ஒன்றல்ல, பல்வேறாகும். அது ஒருவரைச் செதுக்குகிறது, கல்லைச் சிலையாக்குவதுபோல. அது ஒருவரை நெகிழப் பயிற்றுகின்றது. கடின இதயங்கள் வாசிப்பின்மூலம் கனிவானவையாக மாறியதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

நான் மாணவனாக இருந்த காலத்தில் ஒருமுறை திரு.அ.ச.ஞானசம்பந்தன் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது நமது கல்லூரிக்கும் வருகை தந்திருந்தார். இராமாயணம் குறித்து அவர் அன்று மாணவர்கள் முன்னிலையில் பேசினார். இலக்கியம் என்ன நன்மை செய்கிறது என்பதைக் கூறவந்த அவர், ‘இலக்கியம் ஒருவரை அதுவாக மாற்றுகிறது. இப்போது பாருங்கள், ஒரு கிழவி சாலையைக் கடக்கின்றபொழுது தடுக்கி விழுந்துவிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள். எத்தனைபேர் ஓடிச்சென்று அவளைத் தூக்கிவிடுகிறார்கள்? ஒருசிலர்தானே? சிலருக்கு அவ்வாறான மனநிலை இருந்தாலும் செய்ய உடல்ரீதியாக உந்துதல் பெறுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அந்தப் பயிற்சி இல்லை. அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஒரு மூதாட்டியை சாலையில் நடக்கவைத்து, அவளைக் கீழே விழவைத்து, அப்போது அவர்கள் உடனடியாக ஓடிச்சென்று தூக்கிவிடுகின்ற பயிற்சியைக் கொடுக்க முடியுமா? முடியாது. ஆனால் இலக்கியம் அதைச் செய்கிறது. அவர்களை இரக்கப்படுபவர்களாக ஆக்குகின்ற அதேவேளை அவர்களைச் செயற்படுபவர்களாக மாற்றும் பயிற்சியையும் அதுவே கொடுக்கின்றது. அதுவே இலக்கியத்தின் பெரிய நன்மை’ என்றார்.
இதிலிருந்து வாசிப்பு ஷ பிரதியென்பது ஒருவரின் மனத்தைப் பாதிக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்.

நம் சமூகத்தில் அரசியல் இல்லாத மனிதர்களே இல்லை. ஒருவர் இதை ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் அவருக்குள் ஒரு அரசியல் இருக்கவே செய்கிறது. கொள்கை, கட்சி என்ற அடிப்படைகளிலான அரசியலாக அது இல்லாவிட்டாலும், சமூகம் சார்ந்த கருத்து ஷ அபிப்பிராயம் என்ற அளவிலான அரசியலாகவாவது அது இருக்கவே செய்கிறது. இன்றைய திறனாய்வியல், அதை நுண்ணரசியல் என்கிறது. இந்த அரசியல் நல்லதாகவோ அல்லாததாகவோ இருக்கக்கூடும். அந்த நுண்ணரசியலின் கூறை மாற்றுகின்ற வன்மை இந்த வாசிப்பு அனுபவத்துக்குத்தான் உண்டு, இலக்கிய வாசிப்புக்குத்தான் உண்டு.

தன்னுள் ஒரு அரசியலின் இருப்பை ஒருவர் இலகுவில் ஒப்புக்கொளவதில்லை. அந்தளவான சூக்கும இருப்பரசியல் செயற்படுகிற வேளையிலும் பெருஞ்சக்தியாக மாறமுடியும். பாரிய விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

வாசிப்பில் தம்மை பதப்படுத்தத் தொடங்குகின்றவர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனாலும் வாசிப்பை ஒரு பொழுதுபோக்காக மட்டும் வைத்துக்கொண்டு, அதில் ஒரு சிறிதுகூட அசைவு காட்டாதவர்கள் பலரை நாம் கண்டிருக்க முடியும்.

இந்த ‘வாசகர்க’ளையே கரக்கட்டான்கள் என நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.
கரக்கட்டான் மனநிலை மனிதர்கள் பலபேர் நம்மிடையே உலவிக்கொண்டிருக்கிறார்கள். ஓநாய் மனநிலையாளரைவிடவும், பாம்பு, வேங்கை மனநிலை மனிதர்களைவிடவுமே இந்தக் கரக்காட்டான் மனிதர்கள் மிக்க சமூகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவர்கள். நம்ப முடியாதவர்கள். படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன்கோவில் என்ற கணக்கில் வாழ்பவர்கள். அவர்கள் குறித்து எச்சரிக்கை எமக்கு அவசியம்.
அதுசரி, இந்த கரக்கட்டான் என்பது என்ன? கரக்கட்டான் மனிதர்கள் என்பவர்கள்தான் யார்?

அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லவேண்டும்.

எனது நண்பன் ஒருவன் ஆசிரிய நியமனம் பெற்று முதலில் உத்தியோகப் பொறுப்பெடுக்க ஈழத்து மலைநாட்டிலுள்ள பூண்டுலோயா மகாவித்தியாலயம் சென்றிருக்கிறான். அங்கே முதலாம் வகுப்புக்கு பாடம் எடுக்கக் கேட்கப்பட்டிருக்கிறான். ஆனாவுக்கு அம்மா உருவமும் எழுத்துக்களும் உள்ளதாயும், ஆவன்னாவுக்கு ஆடு உருவமும் எழுத்துக்களும் உள்ளதாயும் இப்படியே பன்னிரண்டு உயிரெழுத்துக்களுக்கும் அதுஅதற்கான எழுத்துக்களும் உருவங்களும் உள்ளதான பன்னிரண்டு பெரிய படங்கள் வகுப்பறையில் இருக்கின்றன. ஆனாவிலிருந்து தொடங்கி ஓவன்னாவுக்கு வருகிறார் நண்ப ஆசிரியர். ஓவன்னாவுக்கு ஓணான் உருவமும் எழுத்துக்களுமுள்ள படத்தை கரும்பலகையில் கொளுவிவிட்டு, தான் சொல்லும் எழுத்துக்களை முந்திய படங்களுக்குப்போலவே எல்லா மாணவர்களையும் சொல்லச் சொல்கிறார்.

‘ஓவன்னா…ணாவன்னா…இன்னன்னா…’ என்கிறார்.

மாணவர்கள் எல்லோரும் கோஷ்டிகானம் பாடுகிறார்கள், ‘ஓவன்னா…ணாவன்னா…..இன்னன்னா’ என.

இப்போது நண்ப ஆசிரியர் ஒரு மாணவனைச் சுட்டி, ‘ராமசாமி, இப்ப நீ சொல்லு, ஓவன்னா…ணாவன்னா…இன்னன்னா…என்ன?’ எனக் கேட்கிறார்.

இராமசாமி உடனே எழுந்து, ‘ஓவன்னா… ணாவன்னா…. இன்னன்னா… கரக்கட்டான், சார்’ என்கிறான்.

நண்ப ஆசிரியர் திகைத்துப்போகிறார். ‘ஓவன்னா… ணாவன்னா… இன்னன்னா…கறக்கட்டானா?’

ஆசிரியரின் திகைப்பில் மாணவர்களுக்கு ஆச்சாரியம். இராமசாமிக்கோ மகாபெரிய ஆச்சரியம். ஏனெனில் அவன் சரியாகச் சொல்லிவிட்டதான நம்பிக்கையில் இருந்தவன்.

அந்தளவில் பாடம் முடிந்துவிடுகிறது.

தனது தங்குமிடத்துக்குத் திரும்பும் நண்பனுக்கு, இயல்பில் வாத்தித் தொழிலுக்கான மனநிலை அற்றிருந்தபடியால், படிப்பிப்பதில் சிரமங்கள் இருக்கப்போவது சிறிதுசிறிதாகப் புரியவாரம்பிக்கின்றது. வந்த புதிதிலேயே மிக விருப்பத்துக்குரியதாய் மாறியிருந்த அந்த மலைவெளியும், கீழே கையில் தொடக்கூடிய மாதிரித் தொங்கும் மேகங்களும், பசிய தேக்கொழுந்தின் பரப்பும், மெல்லிய குளிரும், இடைக்கிடையான பன்னீர்த் தெளிப்புப்போன்ற மழைத் தூறலும் கைவிட்டு ஊர் போகும்படி ஆகிவிடுமோ என்ற வேதனை துளிர்க்கிறது.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் மாலையில் கடைவரை போய்வர எண்ணிப் புறப்படுகிறான். முந்திய நாட்களில் அறிமுகமாகியிருந்த ஒரு யாழ்ப்பாணத்து மூத்த வியாபாரியைச் சந்திக்க நேர்கிறது. ‘எப்பிடிப் போகுது பள்ளிக்குட வேலையெல்லாம்?’ என விசாரிக்கிறார் வியாபாரி. அதற்கு அன்று பாடசாலையில் நடந்த விஷயத்தை அவரிடம் சொல்லிச் சிரிக்கிறான் நண்பன்.

நிலைமையை உணர்ந்துகொண்ட வியாபாரி சிரித்துவிட்டு சொல்கிறார், ‘மாஸ்ரர், இஞ்சை ஓணானை கறக்கட்டான் எண்டுதான் சொல்லுவினம். அதாலைதான் நீங்கள் ஓணான் படத்தைக் கொளுவியிட்டு, ஓவன்னா…ணாவன்னா…இன்னன்னா எண்டால் என்ன எண்டு கேக்க, பொடியன் ஓணான் படத்தைப் பாத்திட்டு கரக்கட்டான் எண்டிருக்கு’ என்று விளக்குகிறார்.

மனத்தில் பதிந்திருக்கும் கருத்துக்களும் அல்லது கருத்துநிலைகளும் ஏறக்குறைய இதுமாதிரித்தான். எவ்வளவுதான் வாசித்தாலும் சிலபேரது மனம் அசைந்துகொடுப்பதேயில்லை. வாசிப்பதை ஒப்புவிக்குகிற பாணியில் அவர்களது கதை பேச்சுகள் அருமையாகத்தான் இருக்கும். பெரிய விஷயகாரர்போலவேதான் அவர்களும் தோன்றச் செய்வார்கள். ஆனால், ஒரு விஷயத்திலான அபிப்பிராயம் என்று வருகையில், அவர்கள் தமது எண்ண அமைப்பிலிருந்து மாறுவதேயில்லை.

உயர்சாதியினரில் பலரும் வாசித்தவரும் படித்தவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். சாதி இரண்டொழிய வேறில்லையென்ற மூதன்னை வாக்கை அவர்களும் மனதார ஒப்புக்கொள்பவர்களாகவே இருப்பர். ஆனால், ஏதோ ஒரு பிரச்சினை தோன்றி சாதி சார்ந்த கூறு அதில் இடம்பெறுகையில், அவர்களது உள்மன அமைப்பு செயலாற்றத் தொடங்கிவிடுகிறது. சாதி ஏற்றத் தாழ்வுக்கான ஆதரவுடன் அவரது அபிப்பிராயம் வெளிப்பட்டுவிடுகிறது.

மார்க்சியம் குறித்த விஷயத்திலும் இதுதான் நிலைமை. வீதியிலும் மேடையிலும் மார்க்சியக் கருத்தை மனமுவந்து பேசுகிறவரின் மனநிலை தனது இருப்பும் தன்னிலையும் சார்ந்த விஷயத்தில் வேறுவிதமாக மாறிவிடுகிறது. ஓவன்னா…ணாவன்னா…ன்னன்னா…கரக்கட்டான் என்கிறார்.

இப்போது கரக்கட்டான் என்பது என்ன என உங்களுக்குத் தெரிகிறதல்லவா? இனி கரக்கட்டான் மனிதர்களை அடையாளங்காண்பது உங்கள் பொறுப்;பு. எச்சரிக்கையாக இருப்பது உங்கள் விருப்பம்.

00000

தாய்வீடு, ஐப்பசி 2011

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...