‘குமார்மூர்த்தி கதைகள்
‘குமார்மூர்த்தி கதைகள்’ நூலை முன்வைத்து படைப்பு, படைப்பாளி, படைப்பின் இயங்குதளம் குறித்த விசாரணை (2011 ஜூலை 30 ஞாயிற்றுக் கிழமை மாலை தமிழர் வகைதுறை வள அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குமார்மூர்த்தி நினைவுக் கூடலில் தேவகாந்தன் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவம்.) குமார்மூர்த்தி உயிர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ‘முகம் தேடும் மனிதன்’ (1995) சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னால், அவர் மறைந்து ஓராண்டின் பிறகு 'குமார்மூர்த்தி கதைகள்'(2002) வெளிவந்திருக்கிறது, அவரின் ஒட்டுமொத்த படைப்புகளின் தொகுப்பான இந் நூல். குமார்மூர்த்தியின் படைப்பாளுமை, அவரின் கருத்தியல், கலைஞான இயங்குதளங்கள் குறித்து படைப்பினூடாக ஓர் அலசலை மேற்கொண்டு பார்க்கும் முயற்சியே என்னது. இத் தொகுப்பு இருபத்தைந்து கதைகளினைக் கொண்டது. ‘முகம் தேடும் மனிதன்’ தொகுப்பிலுள்ள 11 கதைகளுடன், தொகுப்பின் பின்னால் இதழ்களிலோ பத்திரிகைகளிலோ வெளிவந்த 2 கதைகளையும், வெளிவராத 12 கதைகளையும், முற்றுப்பெறாத ‘சிதைவுறும் சித்திரங்கள்’ என்ற நாவலின் பகுதி, சுயவிசாரிப்பான ‘என்னைப்பற்றி’ என்ற தலைப்பிலான கட்டுரை ஆதியனவற்றையும் கொண்டிருக்கிறத...