Thursday, December 26, 2013

‘குமார்மூர்த்தி கதைகள்

‘குமார்மூர்த்தி கதைகள்’ நூலை முன்வைத்து 
படைப்பு, படைப்பாளி, படைப்பின் இயங்குதளம் குறித்த விசாரணை

(2011 ஜூலை 30 ஞாயிற்றுக் கிழமை மாலை தமிழர் வகைதுறை வள அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குமார்மூர்த்தி நினைவுக் கூடலில் தேவகாந்தன் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவம்.)


குமார்மூர்த்தி உயிர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ‘முகம் தேடும் மனிதன்’ (1995)  சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னால், அவர் மறைந்து ஓராண்டின் பிறகு 'குமார்மூர்த்தி கதைகள்'(2002) வெளிவந்திருக்கிறது, அவரின் ஒட்டுமொத்த படைப்புகளின் தொகுப்பான இந் நூல். குமார்மூர்த்தியின் படைப்பாளுமை, அவரின் கருத்தியல், கலைஞான இயங்குதளங்கள் குறித்து படைப்பினூடாக ஓர் அலசலை மேற்கொண்டு பார்க்கும் முயற்சியே என்னது.

இத் தொகுப்பு இருபத்தைந்து கதைகளினைக் கொண்டது. ‘முகம் தேடும் மனிதன்’ தொகுப்பிலுள்ள 11 கதைகளுடன், தொகுப்பின் பின்னால் இதழ்களிலோ  பத்திரிகைகளிலோ வெளிவந்த 2 கதைகளையும், வெளிவராத 12 கதைகளையும், முற்றுப்பெறாத ‘சிதைவுறும் சித்திரங்கள்’ என்ற நாவலின் பகுதி, சுயவிசாரிப்பான ‘என்னைப்பற்றி’ என்ற தலைப்பிலான கட்டுரை ஆதியனவற்றையும் கொண்டிருக்கிறது இது.

ஆனால் ‘சப்பாத்து’ என்ற குமார்மூர்த்தியின் சிறகதை இத் தொகுப்பில் இல்லை. அது தற்செயலாகத் தவிர்ந்துகொண்டதா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று ஒரு ஐயம் என்னில் உண்டு. குமார்மூர்த்தியின் இக் கதையிலிருந்து ஒரு குறும்படத்தின் கதை உட்பட தலைப்புமே 'கொப்பியடிக்கப்பட்டதாக', காஞ்சனா மணியன் திண்ணை இணையதளத்தில் பிரச்சினை கிளப்பிய பிறகு, இத் தொகுப்பில் ‘சப்பாத்து’ கதைக்கான இருத்தலின் நியாயம் மிக்க வலுவாக இருந்த நிலையிலும், அக் கதை தொகுப்பில் வெளிவராது போனது இவ்வையத்தின் காரணம்.

ஆனாலும் அது இங்கே இப்போது என் கவனமில்லை. ‘சப்பாத்து’ உள்ளடங்கிய 26 கதைகளின் விமர்சனத்தையே இங்கே நான் முன்வைக்கிறேன்.
ஒரு ஒட்டுமொத்தத் தொகுப்பென்பது சிறந்தது, நல்லது, சுமாரானது, மோசமானது என்ற பலதரத்தினதாக இருப்பது தவிர்க்கமுடியாதது. இத் தொகுப்பும் இந்த விதிக்கு விலக்கானதில்லை. எந்தவொரு படைப்பாளியினதும் படைப்புக்கள் ஒரு ஒருமித்த பார்வைக்கான வாய்ப்புத் தளத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பதுதான் அத் தொகுப்பின் தோற்றத்துக்கான நியாயமும். இதிலிருந்து குமார்மூர்த்தி என்கிற படைப்பாளி ஈழத்து அல்லது புலம்பெயர் இலக்கியத்தில் பெறும் இடத்தை வரையறைவு செய்வது ஒரு விமர்சனத் தேவையே.  

இத் தொகுப்பின் 26 கதைகளையும் இவ்வாறு வகைப்படுத்தலாம்: 1) ஈழத்தைத் தளமாகக் கொண்டவை 2) தளமாற்றக் கதைகள் (ஈழத்தையும் பெயர்ந்துள்ள புலத்தையும் இணைப்பவை) 3) பெயர்ந்துள்ள புலத்துக் கதைகள்.
இதன்படி முதலாவது வகைக்கு நூலிலுள்ள முதல் எட்டுக் கதைகளையும், கடைசி நான்கு கதைகளையும் கொள்ளமுடியும். இரண்டாவது வகைக்கு, ஒன்பதாவது கதையான ‘எங்கள் ஊரும் பள்ளிக்கூடமும்’ தேறும். பத்தாவதிலிருந்து இருபத்தோரம் கதைவரை, ‘வாழைக் குலை’ என்ற கதை நீங்கலாக, மூன்றாவது வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

இன்னொரு முறையிலும் இத் தொகுப்பை அணுக முடியும். அ) ‘முகம் தேடும் மனிதன்’ தொகுப்பில் வெளிவந்த முதல் பதினொரு கதைகள் ஆ) முதல் தொகுப்பின் பின்னால் வெளிவந்து முழுத் தொகுப்பில் இடம் பெறுபவை இ) அதுவரை வெளிவராத கதைகள். ‘சப்பாத்து’ கதையை ஏதோவோர் இடத்தில் பொருத்திக்கொள்ள வேண்டும். 

இது ஓர் அசாதாரணமான சிரமமான பணி. ஏனெனில் ஒரு தொகுப்பு கொண்டிருக்க வேண்டியதான கதைகள் வெளிவந்த இதழ்களினதோ பத்திரிகைகளினதோ பெயர்கள், காலம் ஆதியன தொகுப்பில் இல்லை. இதனால் படைப்பாளியின் வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், கருத்தியல் நெறிகள் குறித்தும் கொள்ளவேண்டிய முடிவுகளை எடுப்பதில் சிரமங்கள் தோன்றுகின்றன. காலவாரியாகக் கதைகளை அணுகுவதுதான் ஆய்வுக்கான உகந்த வழி. அவையில்லாத பட்சத்தில் ஒரு பொத்தம்பொதுவான அணுகுமுறையே சாத்தியம். அச் சாத்தியமான வழியையே இங்கே கையாண்டிருக்கிறேன்.

‘ஹனிபாவும் இரண்டு எருதுகளும்’, ‘பயணம்’ இரண்டும் முஸ்லீம் மக்களின் இடப்பெயர்ப்புப் பற்றியவை. மீதிக் கதைகள் ஈழத்தில் போராட்டச் சூழலிலும், கனடாவிலும் உள்ள தமிழர்களது வாழ்நிலைகள் சார்ந்தும் எழுந்தவை.
இந்த இருபத்தாறு கதைகளிலும் பின்வரும் கதைகளை குறிப்பிடத் தகுந்தவையாகக் கொள்ளமுடியும்.

1) முகம் தேடும் மனிதன்
2) சின்னத் துப்பாக்கி
3) கேஸ்
4) சந்திரா
5) இறுதி அத்தியாயம்
6) மஞ்சள் குருவி

1.முகம் தேடும் மனிதன்

ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்தில் அதை ஆதரிக்கிறவராக இருக்கிறார் பிரகாசம். மகன் போராட்டத்தில் இணைகிற காலத்தில் இயக்க உட்பூசல்களின் காரணமான இயக்கக் கொலைகள் வெகுப்பதும், கருத்து முரண்பாடானவர்கள் தாக்கப்படுதலும், துரோகிகள் என்று கொல்லப்படுதலுமான ஒரு சூழ்நிலை வளர்ந்திருக்கிறது. வீதிகளில் மனிதர்கள் கொன்றுபோடப்படுகிறார்கள்.

சமூகம், மகன் என்ற அக்கறைகளினால் நிம்மதியிழந்து தடுமாறுகிறார் அவர். ஒருகாலத்தில் போராட்டத்தை ஆதரித்தமைக்கான வருத்தம் அவரிடத்தில் அதிகரிக்கின்றது. படைப்பு பின்வரும் வரிகளைப் பதிவாக்குகின்றது: ‘தன்னைப் பழிவாங்குவதற்குத்தான் வீதியோரங்களில் முகங்கள் வீசியெறியப்பட்டிருப்பதாகத் துடித்துப்போவார். மரண வேதனையை வாங்கிக்கொண்ட அந்த முகங்களோடு தன்னுடைய முகத்தைப் பொருத்திப் பார்ப்பார். அது பரந்து விரிந்து சூரபத்மனாகி…ஐயோ என்று அலறுவார். சத்தம் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும்.’

மனவுலைச்சலின் வெளிப்பாடு சிறப்புற அமைந்திருக்கும் இக்கதையில் பிரகாசத்தின் மகனே இறுதியில் கொல்லப்படுகிறான்.  மொழியின் ஆளுமை நன்கு வெளிப்பட்டிருக்கும் இக்கதை இவ்வாறு முடிவடைகிறது: ‘கூக்குரல்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் இரத்த விளாறாக அடிக்கப்பட்ட மகனின் உடல் முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. அதில் மரணத்தின் வேதனை கோடுகளாகி வழிந்திருந்தது. மறுபடியும் மறுபடியும் காரணமில்லாமல் மின்கம்ப மனிதனின் முகமும் நினைவுக்கு வந்து அழிய மறுத்தது. வலுக்கட்டாயமாக மகனின் உண்மையான முகத்தைப் பார்ப்பதற்காக மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

‘இப்போது சுவரொட்டிகளில் மகனின் முகத்தைத் தேடுகிறார்.’


2) சின்னத் துப்பாக்கி

துரோகியாகக் கணிக்கப்பட்ட ஒருவனைக் கொன்று புதைப்பதற்கான குழியை அவனே வெட்டும்படிக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறான். அக் குழியை வெட்டுகையில் ஏற்படும் அவனது மனநிலை, மாறிமாறியெழும் நம்பிக்கை நம்பிக்கையீனங்கள், மரணம் குறித்த உயிர்வதை போன்றன சிறப்புற இக்கதையில் வெளிப்பட்டுள்ளன. உயிர்வதையின் உச்சபட்ச சாத்தியத்தை அடைவதற்கான முயற்சியில் இக்கதை தோற்றுவிடவில்லை.

இக்கதையின் முடிவு இவ்வாறு அமைந்துள்ளது: ‘பசியும் தாகமும் களைப்பும் மேலிட மணிவண்ணன் அண்ணாந்து கெஞ்சுபவனைப்போல் அவர்களைப் பார்த்தான். அவன் கண்கள் பஞ்சடைத்ததுபோல் வெளிறி ஓரங்களில் நீர் திரையிட்டது. முழங்கால்களும் கொஞ்சமாக மண்டியிட்டன. கைகள் இரண்டையும் கூப்பி, தண்ணீர் கேட்கும் பாவனை காட்டியது வாய். ஏதோ காணக்கூடாத காட்சயைக் கண்டதுபோல் கண்கள் மிரட்சியுடன் சுற்றிச் சுற்றிப் பார்த்தன. அதே நேரத்தில் முரளியின் கையில் இருந்த சின்னத் துப்பாக்கி அந்த வண்ணப்படத்தில் இருந்ததுபோல் அவனுக்கு நேராக உயர்ந்தது. முன்னைப்போல் சற்றுத் தள்ளிக்கொள்ள எத்தனித்தபோது அந்தச் சின்னத் துப்பாக்கி சீறியது.

‘குழிக்குள்ளிருந்து ‘அம்மா!’ என்றொரு சின்னக் குரல் குழியைவிட்டு மேலெழும்பி மரத்தின் இலையைத் தொட்டபோது மரங்கள் அதைப் பத்திரப்படுத்திக்கொண்டன.’


3. கேஸ்

சிறுகதையளவில் தோல்வியுறும் கதையெனினும், இது முக்கியத்துவம் வெறுவது அதன் எடுத்துரைப்புத் தன்மை காரணமாகவே. தேடகம் எரிந்த அல்லது எரிக்கப்பட்ட நிகழ்வின் பின்னணியில் உருப்பெறும் கதையிது.
குமார்மூர்த்திக்கு தேடகத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் அதைப் பதிவாக்கும் எண்ணம் மட்டுமே அவர் கொண்டிருந்தார் என்று சொல்லமுடியாது. அது ஒருவகையில் அவரது படைப்பின் நோக்கம் தனியே பதிவாக்குதல், அல்லது பிரச்சாரம் மட்டுமே இல்லையென்ற நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார் என்பதைச் சொல்லுவதுமாகும்.

இக்கதையில் தேடகம் என்ற பெயர் மட்டுமில்லை, நூலகம் என்ற சொல்கூட வருவதில்லை. கதையின் ஆரம்பத்தில் ‘அங்கு’ என்றும், பின்னர் ‘அந்த இடம்’ என்றும் மட்டுமே தேடகம் குறிப்பிடப்படுகிறது. ஒரு எழுத்து முயற்சியில் அதன் கலாபூர்வமான தன்மையையே அவர் பிரதானமாகக் கருதியிருந்ததை இது வெளிக்காடுகிறது.


4) சந்திரா

கணவன் ராணுவத்தால் கைதுசெய்யப்படுகிறான். திரும்பி வருவானா, எப்போது வருவான் என்ற ஏக்கத்துள் ஆழ்கிறாள் கர்ப்பிணியாயிருக்கும் அவனது மனைவி சந்திரா. நித்திரை, சாப்பாடு வெறுத்து அவளது சுயவதை தொடர்கிறது. அவனது கைதுக்கு தன் விரத அனுட்டானக் குறைகள் காரணமாகலாமோ என மன விசாரிப்பில் இறங்குகிறாள் அவள். செவ்வாய் விரத நாளில் தன் சுத்தம் கெடும்படிக்கு கணவனோடு கொள்ளும் உடலுறவுகளை மனத்துள் கடிகிறாள். அவன் விரைவில் வருவது முடியாததென எண்ணுகையில் அவளுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வரும். உடனே காணிக்குள் இருக்கும் குச்சுக் கோயிலுக்குச் சென்று கற்பூரமெடுத்து ஏற்றுவாள்.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அன்றுகூட தான் சுத்தமாக இல்லையென்பது நினைவாகிறது அவளுக்கு. அப்படியே துடித்துக் போகிறாள். அப்போது ‘சந்திரா’ என்ற அவளது கணவனின் குரல் எழுகிறது. அவசரத்தில் திரும்புகிறாள். எதிலோ இடறுப்பட்டு விழும் அவளை மரணம் வாரியெடுத்துக் கொள்கிறது.

கதை முடிகிறது. கூட, சிறுகதையும் சாகிறது. ஆனாலும் சந்திரா என்ற பாத்திரம் வாசகன் மனத்தில் நிலைபெறுதல் தவறாமலே நிகழ்கிறது.


5) மஞ்சள் குருவி

இறந்து கிடக்கும் ஒரு மஞ்சள் குருவியை வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் ‘நான்’ காண்கிறார். அழகான இறகுகள்கொண்ட அதன் மரணம் அவரை வருத்துகிறது. அதைக் காலடிகளில் மிதிபடாமல் ஒரு புதருக்குள் வைத்துவிட்டு பஸ் ஏறும் ‘நான்’, பறவை குறித்த மனவுளைச்சலை தொழிற்சாலையிலும் அடைகிறார்.

மாலையில் வீடு திரும்பும் அவருக்கு மஞ்சள் குருவியின் மரணம் விளைத்திருந்த சோகம், மனைவியின் தரிசனத்திலும், குழந்தையின் ஸ்பரிசத்திலும், குளிர் பியரின் மணத்திலும் மெல்லமெல்லமாய் மறைகிறது. கனடாவின் வாழ்வுச் சுழல் ஒரு மனிதனின் இரக்கவுணர்வுகளைக்கூட கொன்று அவனையும் எவ்வாறு ஒரு எந்திரமாய் மாற்றிவிடுகிறது என்பதை எடுத்துரைக்கும் கதையிது.


6)இறுதி அத்தியாயம்

சமூகத்தில் நடைபெறும் தனிமனிதக் கொலைகளையும், மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்புக்களையும் பதிவாக்க நினைக்கும் ஒரு பாடசாலை ஆசிரிய வட்டம், அதனை நிறைவேற்ற ஒரு ஆசிரியையை  நியமிக்கிறது. பதிவாக்க முயற்சிகள் பூர்த்தியாகிற நிலைமையில் ஆசிரியை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார். பின்னால் வந்துகொண்டிருக்கும் இரண்டு சிறுவர்களைப்பற்றி அவரது எண்ணவோட்டம் எழுகிறது.
பள்ளி போகிறவர்களாக இருப்பார்களோ, பசியால் வாடுபவர்களாகத் தோன்றுகிறார்களே சாப்பிடவில்லையோ, பொழுது சாய்கிற இந்த நேரத்தில் ராணுவம் வந்தால் அவர்களுக்கு என்ன நேரும் என்று பலவாறு மனம் பதைக்கிறார். போராட்டச் சூழல் குழந்தைகளின் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது அவரால் ஜீரணிக்கப்பட முடியாத நிஜமாக முன்னெழுந்து நிற்கிறது. அவர்களை விரைவில் வீடு சென்றுவிடச் சொல்லும் நினைப்போடு நடையைச் சுணக்குகிறார்.

படைப்பாளி மேலே கதையை இவ்வாறு நடத்தி முடிப்பான்: ‘அவர்கள் அண்மித்ததும் சிநேகமான புன்சிரிப்போடு சொல்லவேண்டியதைச் சொல்ல வாயெடுத்தவள், மிரண்டு போனவளாய் வார்த்தைகள் வெளிவராமலே துவண்டு நிலத்தில் விழுந்தாள். பிடரித் துவாரத்தினூடாக குருதி கூந்தலை நனைத்து மண்ணில் இறங்கியது. கண்கள் அவர்கள் போகும் திசையைப் பார்க்க  எத்தனித்தது. ஆனால் பார்க்க முடியாமல் இருள் முழுவதுமாக அவளை முந்திக்கொண்டது.’

மொத்தத் தமிழ்ப் பரப்பிலும் வெளியான கதைகளில் இன்றும் என்னைப் பிசைந்துகொண்டிருக்கும் ஒரு சிறுகதை மலேசிய எழுத்தாளர் இளங்குமரன் எழுதிய ‘பாக்கி’ ஆகும். அது செய்த பாதிப்புப்போல் தமிழ்ச் சிறுகதைகளில் ஓர் அனுபவத்தை நான் அடைந்ததில்லையென்று துணிந்து சொல்லமுடியும். அந்தக் கதைக்கு பின்னாலேயாவது வரக்கூடிய வலு கொண்டது குமார்மூர்த்தியின் ‘இறுதி அத்தியாயம்’.

தன்னளவில் சிறுகதையாய்க் கட்டமைந்து, முடிவுறும் கணத்திலும் ஒரு பாதிப்பினை நிகழ்த்திய இக்கதையை இவரினது மட்டுமில்லை, ஈழ புகலிட இலக்கியப் பரப்பினுள்ளும் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகக் குறிப்பிட எனக்குத் துளியேனும் தயக்கமில்லை.

ஒரு படைப்பு பன்முக வாசிப்பினைக் கோரி நிற்பதுபோல், பன்முறை வாசிப்பும் ஒரு சிறந்த படைப்பைக் கண்டடைய வைக்கிறது. இம்முறையான வாசிப்பின்மூலமே உன்னதமான படைப்பொன்று இனங்காணப்பெற முடியும். இத்தொகுதியின் கதைகளையும் பலமுறை நான் வாசித்தேன். சிலவற்றை மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள்கூட. ரசிப்பின் சுகங்களுக்கூடாய் விமர்சன நோக்கலை எறிகிற பொழுதில்கூட இக்கதையைச் சிறந்த தமிழ்க் கதைகளுள் ஒன்றாக நான் நிச்சயமாகச் சொல்வேன்.

‘உச்சகட்ட படைப்பாக்க காலம் என்ற ஒன்று குமார்மூர்த்திக்கு நேராமல் மரணம்  இடை புகுந்துவிட்டது துரதிர்ஷ்டமானது’ என்ற சி.மோகனின் முன்னுரை வாசகத்தோடு எனக்கு நிறைந்த உடன்பாடு.
சுட்டவேண்டிய இன்னொரு விடயம், அவரது சுயவிசாரிப்புப் பகுதியிலுள்ள ஒரு கருத்து. ஓர் இடத்தில் அவர் சொல்கிறார், ‘சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் மனித சமுதாயம் வன்முறையைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது’ என்று.

தீவிரவாதமென்ற சொல்லே இன்று ஆதிக்க அரசுகளால் கொச்சைப்படுத்தப் பட்டிருக்கிறது. உயர்ந்துநின்ற இரட்டை அதிகாரக் கோபுரங்களின் தகர்ப்போடு தீவிரவாதம் பயங்கரவாதமாகவும் உருப்படுத்தப்பட்டுவிட்டது. ஏகாதிபத்திய, இனவறுப்பு அரசுகள் இன்று தங்கள் முகமூடிகளாக எதிர்ப்பியக்கங்களின் மீதான இத் தூற்றுதலையே கைக்கொள்கின்றன என்ற உண்மை, வரலாற்றுரீதியிலான வன்முறைகளைப் புரிந்துகொள்ள மிக முக்கியமானது. அந்த வகையில் குமார்மூர்த்தியின் புரிதல், ‘சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் மனித சமுதாயத்தை அதிகார பீடங்கள் வன்முறையைநோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன’ என்று இருந்திருக்கவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.
இது அவரது சிறுகதைகளில் தவிர்க்கமுடியாத சில கருத்து இடறல்பாடுகளை ஏற்படுத்தியுள்ளமையை இத் தொகுப்பில் வேறு சில இடங்களிலும் நான் அவதானித்திருந்தேன். இது படைப்பின் அடியாதாரமான விடயமல்லவெனினும், அதையே சிலவேளைகளில் இது அசைத்துவிடக் கூடும்.


00000

 2011

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...