உண்மையைத் தேடுதல் சாளரம்:4
கலகமும் முரணும் கண்டனமும் ‘கலக மானுடப் பிறவி’ என்கிறான் முதுவோன். ‘கலக மானுடரே கேளுங்கள்’ என்கிறான் ஒரு சித்தன். கலகக் குணம் மனிதருள் இயல்பாய் இருக்கிறது என்பது இதன் அர்த்தம். மதவழி மீறி இச்சைப்படி வாழ்தலை மேலே சொன்ன அடி குறித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இலக்கியக் கலகம் வேறானது. அதில் இரண்டு வகையான தன்மைகளை தெளிவாகவே காணமுடியும். ஒன்று, தன்னை இனங்காட்டவும் முன்னிலைப் படுத்தவுமாக. அடுத்தது, உண்மையில் தவறுகள் பிழைகளை இனங்கண்டு அவற்றை மறுதலிப்பதற்கான முனைப்பாக எடுக்கப்படுவது. இதில் பிந்திய கலக குணத்தையே இங்கு நான் சொல்ல முனைகிறேன். முன்புபோலவே இவ்வகைக் கலகம்பற்றி எனக்கு வேறு அபிப்பிராயமில்லை. கலகம் ஒரு விசாரணைக்கான அழைப்புத்தான். அதுவே நியாயத்தை உரைப்பதில்லையெனினும், அதிலிருந்து நியாயத்துக்கான ஒரு தீர்வு பிறக்கும் என்பதே அதை முன்னெடுப்பதற்கான காரணமும் ஆகும். முரணென்பது ஒரு நியாயத்தை முன்னிறுத்திக் கொள்ளப்படுவது. அதுவே முழுமையான நியாயமாக இல்லாதபோதும், அது நியாயத்தின் பெரும்பங்கை தன்னுள் கொண்டேயிருக்கும். இதுவரையான நவீன தமிழ் இலக்கியத்தின் நீண்ட பாதையைத் திரும்பிப் ப...