Thursday, October 15, 2015

உண்மையைத் தேடுதல் சாளரம்:4


கலகமும் முரணும் கண்டனமும்

‘கலக மானுடப் பிறவி’ என்கிறான் முதுவோன். ‘கலக மானுடரே கேளுங்கள்’ என்கிறான் ஒரு சித்தன்.  கலகக் குணம் மனிதருள் இயல்பாய் இருக்கிறது என்பது இதன் அர்த்தம். மதவழி மீறி இச்சைப்படி வாழ்தலை மேலே சொன்ன அடி குறித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இலக்கியக் கலகம் வேறானது. அதில் இரண்டு வகையான தன்மைகளை தெளிவாகவே காணமுடியும். ஒன்று, தன்னை இனங்காட்டவும் முன்னிலைப் படுத்தவுமாக. அடுத்தது, உண்மையில் தவறுகள் பிழைகளை இனங்கண்டு அவற்றை மறுதலிப்பதற்கான முனைப்பாக எடுக்கப்படுவது. இதில் பிந்திய கலக குணத்தையே இங்கு நான் சொல்ல முனைகிறேன்.

முன்புபோலவே இவ்வகைக் கலகம்பற்றி எனக்கு வேறு அபிப்பிராயமில்லை. கலகம் ஒரு விசாரணைக்கான அழைப்புத்தான். அதுவே நியாயத்தை உரைப்பதில்லையெனினும், அதிலிருந்து நியாயத்துக்கான ஒரு தீர்வு பிறக்கும் என்பதே அதை முன்னெடுப்பதற்கான காரணமும் ஆகும்.
முரணென்பது ஒரு நியாயத்தை முன்னிறுத்திக் கொள்ளப்படுவது. அதுவே முழுமையான நியாயமாக இல்லாதபோதும், அது நியாயத்தின் பெரும்பங்கை தன்னுள் கொண்டேயிருக்கும். இதுவரையான நவீன தமிழ் இலக்கியத்தின் நீண்ட பாதையைத் திரும்பிப் பார்ப்போமானால், முரணும் கலகமும் கண்டனமும் சார்ந்து நிகழ்ந்துள்ள பல்வேறு சம்பவங்களை நம்மால் இனங்காண முடியும்.

இலக்கியக் கலகக்காரராக நம் ஈழத் தமிழிலக்கியத்தில் முதன்மையாய் அறியப்பட்டவர் நாவலர். நாவலரெனச் சொல்ல நல்லூர் ஆறுமுகத்தைத் தவிர வேறுபேரிலர் என ஆக்கிவைத்திருந்த அதே நாவலர்தான். கண்டனங்கள் தெரிவிப்பதில் மகா சமர்த்தராயிருந்தவர். பிரதிகளில் சொற்பிழைகளைப் பொறுக்கமுடியாதிருந்தவரும்.

நாவலர் காலமாவதற்கு சில ஆண்டுகள் முன்னர்தான் இலங்கைச் சட்டமன்றத்துக்கான தேர்தலொன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்துக்கு பொருத்தமான உறுப்பினரை தேர்வது சம்பந்தமாக அப்போது ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் போட்டியிட்ட பிரபல வழக்கறிஞரான பிரிட்டோவுக்கும், இளம் வயதினரான பொன். இராமநாதனுக்கும் சார்பானவர்கள் தமது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். நாவலர் சமூகமாயிருந்தாலும் சுகவீனம் காரணமாய் விவாதத்தில் பங்குகொள்ளாமல் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஒருநேரத்தில் விவாத நிலையைப் பொறுக்கமுடியாது போகும் நாவலர் தலைவராயிருந்த விசுவநாதபிள்ளையை விலகென்று சொல்லிவிட்டு மேடைக்கு வந்து பிரிட்டோவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார். அந்தத் தேர்தலில் பொன்.இராமநாதனே பின்னால் வெற்றிபெற்றார்.

முரண் அவ்வாறிருக்கும்.

‘கண்டனம் கீறக் கல்லடியான்’ என்று ஒரு சொலவடையுண்டு. கல்லடி வேலுப்பிள்ளைக்கு ‘கல்லடியா’னென்று சுருக்கமான பேரிருந்தது. எங்கே தவறு நடந்தாலும் அதைக் கண்டித்து கருத்துச் சொல்ல பின்னிற்காத இந்தக் குணம் மதிக்கப்பெறுவது.

இவர்களுக்கடுத்து நம் காலத்தில் கலகத்துக்கு மிகப் பிரபலமாகயிருந்தவர் எஸ்.பொ. கருத்துச் சார்ந்து அவர் செய்தவற்றைவிட மரபுமீறும்படியாக அவர் செய்துகொண்ட ஒரு வி~யத்தை இங்கே கவனத்திலெடுக்கலாமென நினைக்கிறேன். அதிகமான வெகுஜன ஆங்கில நாவல்களை எழுதியவர்களுள் முக்கியமான ஒருவர் ஹரோல்ட் ராபின்ஸ். ‘A stone for Danny Fisher’ அவரது மிகச் சிறந்த நூல். ஒரு காலத்தில் ஆங்கில வாசக உலத்தை அந்தளவுக்கு ஆகர்ஷம்கொண்டிருந்த எழுத்தாளராக அவர் இருந்தார். ஜே.கே. ரோலின்ஸைவிட அதிகமாகச் சம்பாதித்தவர். அவரது மூன்று நூல்கள் இன்றும் இங்கிலாந்து சாதாரண பதிப்பு விற்பனையில் ஒன்று, மூன்று, ஆறு ஆகிய இடங்களில் இருந்துகொண்டிருக்கின்றன. மிக்க புகழ் விரும்பி அவர். அவரது சுயவிபரத்தோடு கூடிய நூலின் பின்னட்டையில் சிகரெட் புகைப்பது, சிகரெட்டை மூட்டுவது, சிகரெட்டிலிருந்து இழைபிரியும் புகை தெரிய  காரில் சாய்ந்தபடி நிற்பது மாதரியான படங்களே இடம்பெற்றிருக்கும். இவ்வாறான படங்களை வெளியிடுவதை ஒரு பதிப்புப் பாணியாக மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கிருந்தது.  அவ்வாறான படங்களை முதன்முதலில் தன் நூல்களில் இடம்பெற வைத்த முதல் ஈழத் தமிழ்ப் படைப்பாளி எஸ்.பொ. என்றே கூறலாம். அவரது இரண்டாம் பதிப்பு ‘தீ’ நாவலில் அவ்வாறான புகைப்படமே இடம்பெற்றிருந்தது.

ஆனந்த விகடன் சஞ்சிகையில் ‘சிலம்பு’வில் கஞ்சா புகைக்கும் ஜெயகாந்தனின் புகைப்படம் இன்னொரு முரணின் வெளிப்பாடு. இவையெல்லாம் சரியென்றோ இல்லையென்றோ வாதாடுவதல்ல எனது நோக்கம். மாறாக மரபுகளை மீறிவிடுவதை மிகக் குறியாக சிலரால் செய்துவிட முடிகிறது என்பதைக் காட்டத்தான்.

ஒரு காலத்தில் தாடிமீசை இல்லாமல் முழுக்க மழிப்பதே வழக்கமாக இருந்துவந்ததை யாழ்ப்பாணத்தில் நான் கண்டிருக்கிறேன். ஆரம்பகால தமிழ்ச் சினிமாக்களில்கூட அதுதான் வழக்கமாக இருந்தது. இவ்வாறான நிலையில் மூக்குத் தண்டு அளவுக்கு மீசைவிடுகிறதை சிலர் செய்திருந்தார்கள். இதை ஹிட்லர் மீசையென்று அப்போது சொன்னார்கள். ‘பொயின்ற் கட்’ மீசை எனப்பட்டதும் உண்டு. இவ்வாறான மீசை விட்டிருந்த படைப்பாளிகளில் முக்கியமானவர் பாவேந்தர் பாரதிதாசன். இவ்வாறான மீசை விடுவதற்கான தேவையை எனக்குத் தெரிகிறது. ஆனால், வழமையை மீறி இதைச் செய்யவேண்டியிருந்தபோதும் அசைவுறாமல் அதை அவர்கள் செய்திருந்தார்கள்.

நவீன தமிழ்க் கவிஞர்களுள் முக்கயமானவர் விக்கிரமாதித்யன். திருநெல்வேலிக்காரர். தனக்கான  தனித்துவமான ஒரு கவிதை நடையை அவர் கையாண்டாரென்று சொல்லமுடியும். ‘திருஉத்தரகோசமங்கை’ என்ற தொகுப்புக்குப் பிறகு இவ்வாறான ஒரு கவிதை நடையை அவர் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருந்தார். தனது தந்தை இறந்த துக்கத்தில் ‘அப்பாவுக்கு’ என அவர் எழுதிய கவிதை அவ்வகையான கவிதைகளுள் மிக முக்கியமானதென்று நான் கருதுகிறேன். அது நான் அப்போது நடத்திக்கொண்டிருந்த ‘இலக்கு’ சிற்றிதழில் வந்திருந்தது.
தாடிமீசை வைத்து மிக அட்டகாசமாக இருப்பார். பாகவதரின் கிராப்புபோல தலைமயிர் தொங்கிக்கொண்டிருக்கும். அவ்வாறான தோற்றம் கவிஞர் ந.பிச்சைமூர்த்தியை அச்சொட்டியது. தாகூருக்கும் இணையாகச் சொல்லலாம். ஆனாலும் அவை நேர்த்தியானவை. விக்ரமாதித்யனதோ நேர்த்தி இல்லாமலிருக்கவென முனையப்பட்டவை. வழக்கத்துக்கு மாறாக முரணைக் காட்டிவிடுகிற தன்மையின்பாற்பட்டவை.

தொண்ணூறுகளில் மாதந்தோறும் ‘விருட்சம்’ இலக்கியக் கூட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சமீபத்தில் நடந்துவந்தது. முக்கியமான ஆளுமைகளின் பேச்சும், சமகால இலக்கிய விவகாரங்கள் குறித்த வி~யங்களும் அக்கூட்டத்தில் அலசப்பட்டன. ஞானக்கூத்தன், அழகியசிங்கர், ‘வெளி’ ரங்கராஜன், ம.ராஜேந்திரன், கே.எஸ்.சுப்பிரமணியம் போன்றவர்களை அங்கேதான் அறிமுகமானேன்.

ஒரு விருட்சம் கூட்டத்துக்கு கவிஞர் விக்கிரமாதித்யன் அழைக்கப்பட்டிருந்தார். கவிதைபற்றி விரிவாக உரையாற்றிவந்த அவர் இடையில் நிறுத்திவிட்டு, “யாரிடமாவது சிகரெட் இருக்கிறதா?” என்று கேட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு, “கூட்டங்களில் சிகரெட் புகைத்துக்கொண்டு பேசுவது வழக்கமில்லை. ஆனாலும் அதை மீறி நடப்பதில் தவறுமில்லை” என்றுவிட்டு புகைத்துக்கொண்டுதான் மீதி உரையை ஆற்றிமுடித்தார். சிகரெட் கொடுத்தது நானென்பதை இங்கே சொல்லவேண்டியதில்லை.
இவற்றையெல்லாம் தங்களின் அடையாளங்களென்று இவர்கள் செய்தார்களென இவர்களை நேரில் அறிந்திருந்த காரணத்தாலேயே என்னால் சொல்லமுடியாதிருக்கிறது. இது இவர்களது குணாதிசயமாக இருந்தது. மாறுபடுவதை, கலகம்செய்வதை ஒரு நியாய நிலைப்பாட்டில் இவர்கள் விடாப்பிடியாகச் செய்துகொண்டேயிருந்தார்கள்.

இதெல்லாம் ஒரு காலம் என்று ஆயாசப்படுவதைத்தவிர இப்போது சொல்ல ஒன்றுமில்லை. இதற்கான காரணங்கள் இலக்கியத் தீவிரத்தை கறையான்போல் அரித்துக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தபோதும் செய்ய எதுவும் தோன்றவில்லை. பொய்மையின் நிழல் எங்கும் விரிந்திருக்கும் வெளியில் எதை யார்தான் செய்துவிடல் கூடும்? ஆனாலும் உண்மையைத் தேடும் வழியில் எதையாவது செய்தும்தானாக வேண்டும். பார்க்கலாம்.

000

இ-குருவி, ஐப்பசி 2015

1 comment:

Nagendra Bharathi said...

அருமை. நன்றி

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...