நினைவேற்றம்: பிள்ளை பிடிக்கும் குரங்கு
நிலைபேறற்ற மனத்தின் இயக்கத்தை குரங்கின் செயலுக்கு ஒப்பிடும் மரபு கீழ்த்திசையில் உண்டு. என் விஷயத்தில் இது சிறிது மாற்றமாகி, குரங்குகளே என் மனத்தில் சிறிதுகாலம் தாவிக்கொண்டிருக்கும் அபூர்வம் நிகழ்ந்து போயிற்று. காலப் பெருவெளியில் நினைவின் அடுக்குகள் என்றோ ஒருநாள், ஏதோவொரு காரணத்தில் குலையவே செய்கின்றன. அதனால் ஒரு ஞாபகத் துணுக்கு கால ஒழுங்கில் பதிவாகிவிடும் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் மனித மன அமைப்பு தந்துவிடவில்லை. சுமார் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட என் நினைவின் பதிவு இது. எனினும் அந்த நிகழ்வையன்றி அந்தக் காலத்தின் பதிவையே முதன்மையாகக் கருதியிருக்கிறேன் என்பதை இங்கே சொல்லிவிடல் தக்கது. நான் ஆரம்பக் கல்வி கற்ற பள்ளிக்கு அப்போது ‘கந்தர் மடம்’ என்ற பெயர் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கான இடைத்தூரம் சுமார் அரை மைலுக்கு மேலேயும் ஒரு மைலுக்கு உள்ளாகவும் இருக்கலாம். நான் பள்ளி செல்வதற்கு எனக்கு இரண்டு பாதைகள் இருந்திருந்தன. வீட்டிலிருந்து மக்கி ரோட்டில் இறங்கி தார் வீதியில் ஏறிச் செல்கிற நேர்வழி ஒன்று. மற்றது ஒழுங்கையால் நடந்து வயலுக்குள் இறங்கி வாய்க்கால் கடந்து ப...