நினைவேற்றம்: பிள்ளை பிடிக்கும் குரங்கு

 


நிலைபேறற்ற மனத்தின் இயக்கத்தை குரங்கின் செயலுக்கு ஒப்பிடும் மரபு கீழ்த்திசையில் உண்டு. என் விஷயத்தில் இது சிறிது மாற்றமாகி, குரங்குகளே என் மனத்தில் சிறிதுகாலம் தாவிக்கொண்டிருக்கும் அபூர்வம் நிகழ்ந்து போயிற்று.  காலப் பெருவெளியில் நினைவின் அடுக்குகள் என்றோ ஒருநாள், ஏதோவொரு காரணத்தில் குலையவே செய்கின்றன. அதனால் ஒரு ஞாபகத் துணுக்கு கால ஒழுங்கில் பதிவாகிவிடும் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் மனித மன அமைப்பு தந்துவிடவில்லை. சுமார் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட  என் நினைவின் பதிவு இது. எனினும் அந்த நிகழ்வையன்றி அந்தக் காலத்தின் பதிவையே முதன்மையாகக் கருதியிருக்கிறேன் என்பதை இங்கே சொல்லிவிடல் தக்கது.

நான் ஆரம்பக் கல்வி கற்ற பள்ளிக்கு அப்போது ‘கந்தர் மடம்’ என்ற பெயர் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கான இடைத்தூரம் சுமார் அரை மைலுக்கு மேலேயும் ஒரு மைலுக்கு உள்ளாகவும் இருக்கலாம். நான் பள்ளி செல்வதற்கு எனக்கு இரண்டு பாதைகள் இருந்திருந்தன. வீட்டிலிருந்து மக்கி ரோட்டில் இறங்கி தார் வீதியில் ஏறிச் செல்கிற நேர்வழி ஒன்று. மற்றது ஒழுங்கையால் நடந்து வயலுக்குள் இறங்கி வாய்க்கால் கடந்து பள்ளி சேர்கிற குறுக்குப் பாதை. மழையற்ற காலத்தில் கணிசமான நேரத்தை மிச்சமாக்கித் தரக்கூடிய பாதைதான் இது.

வீட்டிலிருந்து இறங்குவதற்கும் பள்ளி ஆரம்பிப்பதற்கும்  இடையிலிருக்கும்  நேரத்தைப் பொறுத்து இந்த இரண்டு வழிகளில் ஒன்று மாணவர்களின் தேர்வாகும். பெரும்பாலும் நான் இந்த தெரிவுமுறைக்குள் அகப்பட்டுக்கொள்வதில்லை. காலைகளில் தார் வீதியாகவும் மாலைகளில் வயல்வெளிப் பாதையாகவும் என் விருப்பம் ஏற்கனவே தேர்வாகியிருந்தது. இரண்டு வழிகளுமே நான் பரவசமடையக்கூடிய சம்பவங்களின், காட்சிகளின் அற்புதங்களைக் கொண்டிருந்தன.

தார் வீதியில் அண்மையில்தான் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ்கள் ஓடத் துவங்கியிருந்தன. காலையில் மதியத்தில் மாலையிலென மூன்று வேளைகளிலும் பருத்தித்துறையிலிருந்து சாவகச்சேரிக்கு பஸ்கள் வந்துபோகும். எட்டரை மணிக்கு சற்று முன் பின்னாக தார் வீதியில் வரக்கூடிய பஸ்ஸை கண்டு பரவசிக்கும் வாய்ப்பை காலைகள் எனக்கு அளித்தன. பெரியவர்களில் பலர் அதைப் பார்த்துக்கூட இருக்கவில்லை. இன்னம் சிலர் பஸ்பற்றி கேள்வியே பட்டிருக்கவில்லை. அப்படியான நிலையில்  வாரத்தில் ஓரிரு தடவைகளாவது அதைப் பார்க்கக்கூடிய அந்த வாய்ப்பு என் பரவசத்தின் ஆதாரம்.

என்றாலும் பள்ளி செல்லும் காலைகளிளெல்லாம் அந்த வாய்ப்பு கிடைத்துவிடுமென்றும் சொல்லிவிட முடியாது. என்போல பஸ் பார்ப்பதற்காகவே அந்தப் பாதையில் வரும் மாணவர்கள் சிலரை நான் அறிவேன். பஸ்ஸை காணமுடியாது போகும் நாட்களில் அவர்களும் ஏமாற்றம் அடைவதில்லை. ஏனெனில் அதையொரு தரிசனமாய்க் காத்திருக்கவேணும் என்ற ரகசியம் எங்களுக்குத் தெரிந்திருந்தது.

முதலில் அதன் இரைச்சல்தான் வடக்கின் தொலை வெளியிலிருந்து மெல்லவாய்க் கேட்கத் துவங்கும். அப்படியெல்லாம் கேட்குமாவென நாங்கள் யாரும் ஐயப்படுவதில்லை. மாரி காலத்தில் பருத்தித்துறைக் கடல் இரைவதை பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ள எங்கள் வீடுகளிலிருந்தே கேட்டிருக்கிறோமே!

அந்த இரைச்சல் பஸ் வரப்போவதன் ஒரு முன்னறிவிப்பு மட்டும்தான். சிவப்பு நிறத்தின் அப் பேருருவை  பள்ளிக்குள் நுழைவதன் முன் கண்டுவிட முடியுமென்ற எந்த நம்பிக்கையையும் அந்த இரைச்சல் தந்துவிடாது.  சந்திகளில் மட்டுமில்லை, வீட்டுப் படலைகளுக்கு முன்னால் நின்று கைநீட்டினாலும், ஒழுங்கையில் ஓடிவந்தபடி ‘ஓல்டோன்… ஓல்டோன்’ (Hold Down) என கத்தினாலும்கூட பயணி வரும்வரை  காத்திருந்து பஸ் ஏற்றிச்செல்லும். சந்தை செல்கிற, சின்னாஸ்பத்திரி செல்கிற, யாழ்ப்பாணம் பெரிய கடை செல்கிற அவசியங்களில் அதிகம் பேர் பயணிக்கிற பஸ் அது. அதனால் நின்று நிதானித்து கன்றுத் தாய்ச்சி எருமைபோல ஆடி அசைந்துதான் அது வரும்.

காற்றின் விசைக்கேற்ப ஏற்ற இறக்கமான சத்தத்தின் பின், அடுத்த கட்டமாக அது கிளர்த்தி வரும் புழுதிப் படலம் கண்ணில் தெரியும். அப்போதும் பஸ் வரும் தூரத்தை அந்தப் புழுதிப் படலத்தைக்கொண்டு தெரிந்துவிட முடியாது. ஏனெனில் அது காற்றின் விசையில் அலைவது. அதனால் அது சரியான அளவுகோல் ஆவதில்லை. ஆனாலும் ஒரு நம்பிக்கையின் துளிர் அப்போது முளைக்கும். அந்த நம்பிக்கையில் பள்ளிக்கிருக்கும் தூரத்தைக் கணித்து அதற்குத் தக நமது நடை வேகமெடுக்கும்.

பெரிய பெரிய சில்லுகள்கொண்டு உயர்ந்து  சிவந்த அந்தப் பிரமாண்டம் மெதுமெதுவாக கண்ணுக்குப் புலனாகியதும் மனம் பொங்கியெழும். அது பள்ளியின் சமீபத்திலுள்ள  12MPH போர்ட்டுக்கு அண்மையில் வந்ததும், பஸ் ஊரத் தொடங்கும். 12MPH இன் அர்த்தம் அந்த போர்ட் இருக்கிற இடத்திலிருந்து அடுத்த போர்ட்வரையான எல்லைக்குள் வாகனங்கள் மணிக்கு பன்னிரண்டு மைல் வேகத்துக்குள் செல்லவேண்டும் என்பதே. அதனால் பஸ் ஊர்ந்து செல்லும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பள்ளிச் சிறுவரெல்லாம் களிகொள்வோம். அந்த சொற்ப நேரத்தில் வலது புற பெண்கள் பக்கத்திலுள்ள  தலைகளைக் கூட சிலர் எண்ணிவிடுவார்கள். அதுவும் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று மறையும். ஆனால் இரைச்சலும் புழுதியும் புகையும் புகையின் மணமும் அடங்க வெகுநேரம் பிடிக்கும்.

இந்த பரவசத்தின் தரிசனத்துக்காய் காலைப்பொழுதின் பள்ளிக்கான தார்வீதிப் பயணம் எனது விருப்பத் தேர்வாக இருந்தபொழுதில், வயல்வெளியினூடான வீடு திரும்புகை இன்னொரு வகையான பரவசத்தின் வாசலை எனக்குத் திறந்திருந்தது. மனத்திற்கு அப்போதுதான் இறக்கைகள் முளைக்கத் துவங்கினவென இப்போது எண்ணத் தோன்றுகிறது. அந்தப் பாதையில் வீடு திரும்புகை திடீரென ஒருபோது ஒரு அவமானகரமான நிகழ்வோடு நின்றுபோனாலும், அன்று முளைத்த இறக்கைகளில்தான் நான் பின்னால்  பறக்கவே ஆரம்பித்தேன்.

அந்தப் பாதையில் என் பயணம் நின்றுபோன அந்தக் கதையைத்தான் இப்போது நான் சொல்லப்போகிறேன்.

‘அரிவரி’ என்கிற பாலர் வகுப்பும் முதலாம் வகுப்பும் மதியம் பன்னிரண்டரை மணியோடு முடிவதாகவும், ஐந்தாம் வகுப்புவரை ஒன்றரைக்கும், மேலே மூன்றரைக்குமாக பள்ளிகள் முடிந்துகொண்டிருந்தன. வேறுவேறு தரங்கள்கொண்ட பள்ளிகள் வேறுவேறு நேரங்களில் முடிந்ததாக இப்போதும் மெல்லிய ஒரு ஞாபகமிருக்கிறது.

அப்போது எந்த வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்தேன் என்பது தெரியவில்லை. பள்ளிவிட்டு நான் வயலுக்குள் இறங்கி வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். அது இளவேனிலோ முதுவேனிலோவான காலம். வெய்யில் தாழ்ந்திருந்தாலும் அன்றைக்கு அபூர்வமாய் வெப்பம் கடுமையாயிருந்தது. நெல் அறுவடையின் பின் கிணறுள்ள வயல்களில் தோட்டம் போட்டவர்கள் சிலர் இறைப்புக்கோ வேறு வேலைகளுக்கோ போய்க்கொண்டிருந்தார்கள். நிலைத்து நின்ற வெருளிகளுக்கிடையே நடமாடும் மனிதர்களின் தலைகளைக் கணக்கிடுவது சுலபமாக இருக்கவில்லை. கால்நடைகளுக்கு வரப்புகளில் புல் செதுக்க வந்தவர்கள் சிலரும் அங்கே காணப்பட்டனர். கிளி மைனா காகமென பறவைகள் மதியச் சோர்வு நீங்கி கூடடைவதன் முன்னம் மறுபடி கலகலப்புக் கொள்ளும் நேரமும் அதுதான்.

அறுவடை முடிந்து இரண்டொரு மாதமென்றால் சணல் விதைத்த வயல்களிலே மஞ்சள் பூக்கள் சிரித்தபடி காற்றிலாடி நின்றிருக்கும் காட்சி கொள்ளை அழகு. மேலே நீல ஆகாயம். கீழே மஞ்சளும் பச்சையுமென விரிந்த வயல்வெளி. எனக்கு அவசரமில்லை. உடம்பெங்கும் விட்டு விடுதலையாகிய உணர்வுடன், நான் இயல்பான என் மெதுவான நடையில் வரப்பிலே சறுக்குவதும் மறுபடி பாய்ந்து ஏறுவதுமாக சென்றுகொண்டு இருக்கிறேன்.

வழக்கமாக இரண்டு மூன்று மாணவர்களாவது அந்தப் பாதையிலே வீடு திரும்புவது வழக்கம். அன்றைக்கு நான் மட்டுமேதான் வந்துகொண்டிருக்கிறேன். அஞ்ச சூழலில் எதுவுமில்லையாதலால் அச்சமும் வந்திருக்கவில்லை.

குளமுள்ள தாழ் பூமிப் பிரதேசத்தில் வயல்கள் அமைந்தனவெனில், சூழ்ந்த மேட்டு நிலத்தில் குடிமனைகள் எழுந்து கிராமம் ஆகியிருந்தன. வயல்களில் குளங்களின் நிச்சயம்போல், குளத்தோரங்களில் முருகனோ பிள்ளையாரோ அம்மனோ குடிகொண்டதான கோவில்கள் இருப்பதும் நிச்சயம். கோவிற் குளங்களில் அல்லிகளும் தாமரைகளும் நிறை பூப் பூத்திருக்கும்.

வயல்கள் ஒவ்வொன்றும் பெயர்கொண்டிருந்தன. ஒன்றுக்கு சிலுவில்… இன்னொன்றுக்கு இல்லாரை… மற்றதுக்கு அம்பலவன்துறை… வேறொன்றுக்கு மானாவளை… எனப் பெயர்கள். அதன்படி நான் அப்போது சென்றுகொண்டிருந்த வயல் அம்பலவன்துறை.

அம்பலவன்துறை வயலின் ஒரு பக்கத்தில்  பெரும் பற்றை இருந்தது. பற்றைக்கப்பால் ஊர். வலது பக்கத்தில் தார்வீதிக்கும் வயலுக்குமிடையே தென்னந் தோப்பு. அதன் எதிர்ப் புறத்தில் மாரி நீர் கடலுக்கோடும் தரைவை வழி.

திடீரென அந்தப் பகுதியில் மரக் கிளைகள் முறிந்த, தென்னோலைகள் இடுங்குப்பட்ட, குரும்பைகள் சிதறி விழுந்த பெருவொலி. திரும்பிப் பார்க்காமலே அது என்னவென நான் தெரிந்துகொண்டேன். அவ்வாறுதான் இருந்துவிட்டு ஒருமுறை குரங்குக் கூட்டங்கள் வந்து விழுந்து தென்னந்தோட்டங்களை, மாந் தோப்புகளை துவம்சம் செய்துவிட்டுப் போகும்.

எனக்கு மனம் துண்ணென்றது. குரங்குகள்கூட எனக்கு அவ்வளவு அச்சத்தைத் தந்துவிடாது. வீடு வீடாய் வரும் வித்தைகாரனின் குரங்கை எவ்வளவோ சமீபத்திலிருந்து பார்த்திருக்கிறேன். சிறுகுரங்கு வளர்க்கிற சாத்திரக்காரியின் தோளிலிருந்து அது பேன் பார்க்கிறதைக் கண்டுமிருக்கிறேன். அதுதான் என்னைக் கண்டு சிலவேளைகளிலாவது வெருண்டு ஓடியிருக்கிறது. ஆனால் தாட்டான் குரங்குகள்….? அவை பயங்கரமானவை.

தாட்டான் குரங்கு என்பது குரங்குகளில் பெரிதான இனம் என்பதுதான் அப்போதுபோலவே இப்போதும் என் எண்ணமாக இருக்கிறது. அவற்றின் நினைப்பே என்னை நடுங்கவைத்துவிடும். அவற்றின் உருவத்தின் பிரமாண்டம்மட்டுமே அந்த அச்சத்தை என்னில் விளைப்பதில்லை. அவை ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கும், மரத்திலிருந்து நிலத்துக்கும் பாயும் அதிர்வும் முக்கியமானது.

நான் திரும்பிப் பார்க்கிறேன். தென்னந் தோட்டம் முழுவதும் தாட்டான்கள். மரங்களில் ஏறுபவை சில. தென்னோலையில் தொங்கி அடுத்த மரத்துக்குப் பாய்பவையாய்ச் சில. தரையில் ஒன்றையொன்று துரத்திப் பிடிப்பவையாய்ச் சில. சில கத்தியும்… சில இழித்தும்… சில மசுவாது வேலைகளிலுமாய்க் காணப்படுகின்றன. தாட்டான்கள் இழிக்கும்போதும் அதிலொரு கடூரமிருக்கும். என் அவதானத்தைத் திசை திருப்ப நான் வேறுபுறம் திரும்புகிறேன்.

நான் ஒழுங்கையேறவேண்டிய சிறுகாட்டு முனையிலும் தாட்டான் கூட்டம். பட்டுப்போய் ஈச்சம் பற்றைமேல் சரிந்திருந்த ஒரு பனைமரத்தில் அவை ஏறுவதும் இறங்குவதும் சறுக்குவதுமாய் ஒரு கடூர விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றன. சில குட்டிகளுடன்; சில இணைகளுடன். ஆனால் ஒரு தாட்டான்மட்டும் ஒரு பசுமாடளவு ஆகிருதியுடன்  நிலைத்து ஒரே இருக்கையாய் இருந்துகொண்டிருக்கிறது.

தோளில் கையை புரட்டி கொளுவியாய்ப் போட்டு அதில் புத்தகப் பையை மாட்டிக்கொண்டு மெதுவாக இருபக்கமும் மஞ்சள் பூ சொரிந்த சணல்களுக்கிடையில் வரப்பில் வந்துகொடிருந்த நான் என் நடையின் வேகத்தைக் குறைத்தேன்.

அந்த தாட்டான் அமர்ந்திருந்த தோரணையே சரியில்லையென்று மனத்துள் ஏதோ சொல்லியது. அதன் கனத்த இரு பக்க நெஞ்சுத் தசைகளும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.  காலை மடித்து குந்தியிருந்த குரங்கின் உறுத்துப் பார்வையையும், அதிலுள்ள வெறுமையையும் நான் காண்கிறேன். அப்போதைய அதன் அசைவின்மை, அது அப்படியே கடைசிவரை இருந்துவிடும் என்பதின் அடையாளமில்லை. அது எந்த விநாடியிலும் தன்னைச் சுதாரித்தெழுந்து என்மீது ஒரு பாய்ச்சலைச் செய்யலாம். என்னைத் தூக்குவதொன்றும் அந்தளவு பெரிய ஆகிருதிக்கு சிரமமாய் இருந்துவிடாது.

நான் நின்றேன்.

தாட்டான் அசையவில்லை. நானும் அசையவில்லை.

அந்த அச்சம் தாட்டான்களைப் பார்த்ததினால் மட்டும் விளைந்ததென்று சொல்லமுடியாது. அவைபற்றி எனக்குச் சொல்லப்பட்ட கதைகளாலும்தான் என் சிந்தை அப்போது தடுமாறி நின்றிருந்தது. அதில் குறிப்பாக வள்ளியம்மையின் குழந்தை கதை முக்கியமானது.

எங்களது கிராமம்போல வயல்வெளிகளும் நீர்வெளிகளும் சூழ்ந்ததுதான் அந்தக் கிராமமும். அங்கேயும் வயல்வெளி ஓரத்தில் மாஞ் சோலைகளும் தென்னஞ் சோலைகளும் நிறைந்திருந்தன. அங்கேயும் இதுபோலத்தான் அவ்வப்போது குரங்குக் கூட்டங்கள் வந்து சதிராட்டம் போட்டுவிட்டுப் போகுங்கள். அவற்றை விரட்டுவதற்கான உபாயங்களும் ஊரில் அருகியே இருந்தன. சீனவெடி கொளுத்தினால் அவை பயந்து ஓடுமென ஊரிலே சொல்வார்கள். ஆனால் சீனவெடி எந்தநேரத்திலும் கைவசத்தில் கிடைத்துவிடாது. ஏதோ ஆங்காங்கே கூ… சூ…வென சத்தமெழுப்புவார்கள். அவையொன்றையும் குரங்குகள் சட்டை செய்வதில்லை. சாதாரண குரங்குக் கூட்டத்துக்கே இந்த நிலையென்றால், தாட்டான் குரங்குக் கூட்டம் வந்து விழுந்தால் ஊரே கதிகலங்கிப் போய்விடும்.

செல்லத்தம்பு – வள்ளியம்மை கல்யாணம் நடந்து வெகுகாலமில்லை. அவர்கள் அந்த வயலோரக் கிராமத்துக் காணியொன்றில் குடிசைபோட்டு புதிதாகக் குடியேறி வந்திருந்தார்கள்.

ஓராண்டுக்குள்ளாக அவர்களுக்கு ஒரு அழகான கறுப்புப் பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளைமீது அவர்கள் தங்கள் உயிரையே வைத்திருந்தார்கள். குழந்தையோடு விளையாடிவிட்டு எட்டு மணிக்கெல்லாம் செல்லத்தம்பு வேலைக்குப் புறப்பட்டானென்றால், அடுத்து வள்ளியம்மையின் நேரம் தொடங்கிவிடும். அதற்கு மேலேதான் அதை நித்திரையாக்கி ஏணையில் வளர்த்திவிட்டு கிணற்றடியிலே துணி துவைக்கவோ, சமையலைக் கவனிக்கவோ அவள் செல்வாள்.

அன்று காலையில் செல்லத்தம்பு வேலைக்குப் போனபின் குழந்தையோடிருந்து சிறிதுநேரம் விளையாடிய வள்ளியம்மை வெய்யிலேறிவர சென்று துணியைத் தோய்த்த பின் சமையலைக் கவனிக்க அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அன்று நண்பகலை அண்மிக்கும் நேரத்திலிருந்தே   தோப்புகளில் எழுந்த குதிமன்களை வள்ளியம்மை கேட்டிருந்தாள். ஆளடங்க அடங்கத்தான் குரங்குக் கூட்டத்தின் கொண்டாட்டம் தொடங்குமென்பதை அவள் அறிந்திருந்தாள். அதனால் வயல் விளிம்போடிருந்த தமது தோட்டத்தில் குரங்குகள் வந்து சேஷ்டைகள் விட்டுவிடாதபடி அடிக்கடி வெளியே வந்து கவனிப்புச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக அக் கண்காணிப்புக்காக வந்தபோது தூரத்து தென்னந் தோப்பில் தாட்டான்கள் கூத்தாடிக்கொண்டிருப்பதையும், அவற்றின் கிரீச்சிடும் குதிக்கும் சத்தங்களால் குழந்தை அருளாமல் தூங்குவதையும் கண்டு திருப்தியோடு உள்ளே போயிருந்தாள்.

துர்பாக்கியசாலியாய் இருந்திருப்பாள்போல. வயலோர வாகையில் ஒரு தாட்டான் பெண் குரங்கு அவளையே கவனித்தபடியிருந்ததை அவள் கண்டிருக்கவில்லை.

சிறிதுநேரத்தில் வள்ளியம்மை வெளியே வந்தபோது வெறும் ஏணைமட்டும் வயற் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டாள். நெஞ்சு துணுக்குற திரும்பினாள். வயல்கரையில் அவளது குழந்தையை அள்ளி நெஞ்சோடு அணைத்தபடி தாட்டானொன்று போய்க்கொண்டிருந்தது. ‘ஐயோ, என்ர பிள்ளை’யென அலறியபடி தாட்டானின் பின்னால் வள்ளியம்மை ஓடினாள். எதுவொன்றையும் கண்டுகொள்ளாத தாட்டான் எந்த அவசரமும் பதட்டமுமின்றி நடந்துபோய் வாகையிலேறிக்கொண்டு மரங்களில் தாவித் தாவியே தென்னந் தோப்பை அடைந்தது.

வள்ளியம்மையின் கூக்குரலில் அக்கம் பக்கத்துப் பெண்கள் இரண்டொருவர் வந்தனர். வயலில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டொரு ஆண்கள் வந்தனர். விபரமறிந்து தென்னந் தோப்புக்கு அவர்களும் ஓடத்தான் செய்தனர். மூன்று நான்கு பெண் தாட்டான்கள் தம் குட்டிகளோடு மரங்களில் பாய்ந்து திரிகையில் குழந்தையை எந்தக் குரங்கு வைத்திருக்கிறதென எப்படிக் கண்டுபிடிப்பது? அப்படியே குரங்கைக் கண்டு எதனாலாவது அதை எறிந்து கஷ்ரம் கொடுக்கும்போது அது குழந்தையை மேலேயிருந்து போட்டுவிட்டு ஓடினால் என்ன செய்வது? அப்படியேயானாலும் குரங்கு குழந்தையைக் கொண்டுபோகட்டுமென விட்டுவிடவும் முடியாதல்லவா?

அந்தக் கதையை எனக்குச் சொன்னவர் முடிவைச் சொல்லவில்லை. தன் குட்டியை இழந்திருந்த பெண் தாட்டானொன்று வள்ளியம்மையின் குழந்தையை தான் வளர்க்கவென தூக்கிக்கொண்டு ஓடிவிட்டது எனக் கூறியதோடு முடித்திருந்தார்.

என்னை நடுங்க வைத்தபடி வயற்கரையோர பெண் தாட்டான் குரங்கு என்னையே உறுத்து நோக்கியபடி இருப்பதை நானும் பார்த்தபடி நிற்கிறேன். வள்ளியம்மையின் குழந்தையையும் ஒர பெண் தாட்டானே தூக்கிக்கொண்டு ஓடியதென்ற கதையின் ஞாபகப் புரட்டலில் உடம்பு உறைந்து வருகிறது. சிறிது நேரத்தில் என் காற்சட்டையை நனைத்துக்கொண்டு கால்களில் ஈரம் வழிகிறது. அதை நான் உணர்கிறேன்; ஆனால் தடுக்க வழியில்லை. காக்கி நிற கழிசானில் கருமையாய் அதன் தடம் பதிந்திருக்கிறது. அதைப் பொருட்படுத்தும் நிலையிலும் நான் இல்லை.

குரங்கின் பெருத்த உருவமும், அதன் கடுகடுத்த பார்வையும், என்னையே தூக்கிக்கொண்டு ஓடிவிடக்கூடிய வாகான இடத்திலும் ஸ்திதியிலும் அது இருப்பதும் உணர்ந்த நான் மெல்லத் திரும்பி சணல்களுக்குள் தலையை மறைத்துக்கொண்டு வாய்க்காலை நோக்கி  பதுங்கிப் பதுங்கி  நடந்தேன். பின் ஓடத் துவங்கினேன். ஓடிக்கொண்டிருந்தபோது திரும்பி பார்த்தேன். குரங்கு அந்த இடத்திலேயே இன்னும் அமர்ந்துகொண்டு இருந்தது. நல்லவேளையாக புத்தகப் பையைத் தவறவிடாமல் வாய்க்காலைக் கடந்து தார்வீதியிலேறி வீடடைந்தேன்.

எனது கோலம் கண்ட அம்மா பதறியபடி ஓடிவந்து நடந்தது விசாரித்தாள். எனக்கு அழுகைதான் வந்தது. என் வெற்றியைப் பறைசாற்றக்கூடிய வீரக் களமது. தாட்டான் பிடியிலிருந்து தன்னந்தனியனாய்த் தப்பி வருவதொன்றும் சாதாரணமான விஷயமில்லையே! ஆனால் நான் அழுதேன். பின் ஒருவாறு அழுகையை அடக்கிக்கொண்டு நடந்ததெல்லாம் சொன்னேன்.

கேட்டு அம்மா சிரித்தாள்.

நான் கோபத்தோடு, ‘என்னணை, ஏன் சிரிக்கிறாய்?’ என்று அதட்டினேன்.

‘உன்னளவு வயதுப் பிள்ளையளை குரங்கு பிடிக்குமெண்டு ஆருனக்குச் சொன்னது?’

‘அது தாட்டான்.’

‘இருக்கட்டுமன்.’

‘நானும் அதுகின்ர நிறந்தான…?’

‘அது குரங்கோ தாட்டானோ…  நீ கறுப்போ சிவப்போ,.. உன்னளவு வளந்த பிள்ளையை அதுகள் ஒண்டும் செய்யா.’

‘எண்டாலும் இனிமே நான் அந்தப் பள்ளிக்குடம் போகமாட்டன், என்னை வேற பள்ளிக்குடத்துக்கு மாத்துங்கோ… ’

நான் பள்ளிக்கூடத்தை மாற்றும்படி சொன்ன காரணம் அம்மாவுக்கு விளங்காமல் இருந்திராது. ஆனாலும் வழியில் தாட்டான் குரங்குகள் வருவதால் அந்தப் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதையே நான் காரணமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தேன். ‘ஐயா வரட்டும் சொல்லுவம்’ என்றாள் அம்மா. பின் ஐயா வந்தபோதும் அம்மா சொல்லவில்லை.

ஒரு நாளோ இரண்டு நாட்களோ  நான் பள்ளி போகாதிருந்ததாய் ஞாபகம். பின்னால் அந்தமாதிரி எண்ணம் தோன்றவுமில்லை, வெட்கம் தொடரவுமில்லை, பெற்றோர் என்னை பள்ளி மாற்றுவதற்காக அலையும் தேவையும் உண்டாகவில்லை.

பின்னால் சில காலம் தாட்டான் தூக்கிச் சென்ற வள்ளியம்மையின் குழந்தைபற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். நினைத்தபோதெல்லாம் கேள்விகள்தான் கிளர்ந்தெழுந்தன. தாவர பட்சணியான குரங்கினம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போயிருப்பின் வளர்க்கவே செய்திருக்கும். ஆயின், அந்தக் குழந்தை குரங்குகளோடிருந்து குரங்காகவே மாறியிருக்குமா? அதுவும் கைகளையும் கால்களாக்கிக்கொண்டு மரத்துக்கு மரம் தாவித் திரிந்திருக்குமா? அல்லது அவ்வாறு பாய முடியாத குழந்தையை உண்மையில் தமது குட்டியில்லையென்று குரங்குக் கூட்டமே ஒதுக்கி வைத்திருக்குமா?

குரங்கின் குதியாட்டம் நினைவில் நீண்டகாலத்துக்கு இருந்தது.

0

 தாய்வீடு, ஒக். 2020

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்