நினைவேற்றம்: 11 'கதைகளின் விஷேசம்'
அளவிட முடியாப் பயணங்களும் தூரங்களும் அவற்றிடை நிகழும் சம்பவங்களும் அவ்வக் கணமே தம் அனுபவ வித்துக்களை மனத்துள் விதைத்துவிடுவதில்லை. அவை காலம் ஆகஆக மனத்துள் புதைந்துபோனாலும் புழுதி விதைப்பின் நெல்மணி ஒரு மழைக்காகக் காத்திருப்பதுபோல் அவதிகள் நீங்கி மனச் சமனம் அடையும் தகுந்த ஒரு பொழுதுக்காகக் காத்திருந்து குரலெடுக்கின்றன. சில காத்திருக்கவும் செய்யாமல் பெருந்தொனி எழுப்புகின்றன. அக் குரலைச் செவி மடுப்பவர்கள் பாக்கியவான்கள். 2010இன் பின் ஏ9 பாதையூடாக பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமாய்ப் பயணித்திருக்கிறேன். ஒருபோது கொழும்புப் பயணத்தில் கிளிநொச்சி தாண்டி பஸ் வந்து ஓரிடத்தில் தரித்து நின்றது. அருகிலிருந்தவரை விசாரிக்க முறிகண்டியெனத் தெரிந்தது. கால்கள் தாமாகவே பஸ்ஸைவிட்டு இறங்கின. அது இரவுவேளையாக இருந்தாலும் நான் கண்ட அந்த இடம், நான் முன்பு அறிந்த முறிகண்டியாக இருக்கவில்லை. யுத்தத்தின் முன் அது கண்டிவீதியெனப் பெயர் பெற்றிருந்த காலத்திலிருந்து கோயில் வீதியோரத்தில்தான் அமைந்திருந்தது. பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தால் சிதறிய சில்லுகள் நடு வீதியில் வந்து...