நினைவேற்றம்: 11 'கதைகளின் விஷேசம்'

 


அளவிட முடியாப் பயணங்களும் தூரங்களும் அவற்றிடை நிகழும் சம்பவங்களும் அவ்வக் கணமே தம் அனுபவ வித்துக்களை மனத்துள் விதைத்துவிடுவதில்லை. அவை காலம் ஆகஆக மனத்துள் புதைந்துபோனாலும்  புழுதி விதைப்பின் நெல்மணி ஒரு மழைக்காகக் காத்திருப்பதுபோல்  அவதிகள் நீங்கி மனச் சமனம் அடையும் தகுந்த ஒரு பொழுதுக்காகக் காத்திருந்து குரலெடுக்கின்றன. சில காத்திருக்கவும் செய்யாமல் பெருந்தொனி எழுப்புகின்றன. அக் குரலைச் செவி மடுப்பவர்கள் பாக்கியவான்கள்.

2010இன் பின் ஏ9 பாதையூடாக பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமாய்ப் பயணித்திருக்கிறேன். ஒருபோது கொழும்புப் பயணத்தில்  கிளிநொச்சி தாண்டி பஸ் வந்து ஓரிடத்தில் தரித்து நின்றது. அருகிலிருந்தவரை விசாரிக்க முறிகண்டியெனத் தெரிந்தது. கால்கள் தாமாகவே பஸ்ஸைவிட்டு இறங்கின. அது இரவுவேளையாக இருந்தாலும் நான் கண்ட அந்த இடம், நான் முன்பு அறிந்த முறிகண்டியாக இருக்கவில்லை. யுத்தத்தின் முன் அது கண்டிவீதியெனப் பெயர் பெற்றிருந்த காலத்திலிருந்து கோயில் வீதியோரத்தில்தான் அமைந்திருந்தது. பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தால் சிதறிய சில்லுகள் நடு வீதியில் வந்து கிடக்கும். அப்போதோ தன்மீது சொல்லப்பட்ட கதைகள், தான் நிகழ்த்திய அற்புதங்களென அனைத்தையும் கடந்ததுபோல் வீதியைவிட்டு விலகிப்போய் பிள்ளையார் தூரத்தில் அமர்ந்திருந்தார். யுத்தம் எதையெதையோ மாற்றியிருக்கிறது; முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மாற்றிவைப்பதா பெரிய விஷயமென எண்ணிக்கொண்டேன்.

அன்றைக்கு தொடர்ந்த பயணத்தில் தூக்கமற்ற வேளைகளில் பிள்ளையாரின் மகிமைபற்றிச் சொல்லப்பட்ட நூறு நூறான கதைகளினை எண்ணிக்கொண்டிருந்தேன். தெய்வங்களுக்கு மட்டுமில்லை, மனிதர் உண்மையில்  அபிமானம் கொள்ளும் எந்த இடத்தின் மேலும் கதைகள் பிறந்துவிடுகின்றன என்பதும் அப்போது தெரிந்தது. உண்மையும், உண்மை கலந்த பொய்யும், பொய்யுமாய்க் கதைகள். மனிதர்களின் கதைகள் அவ்வாறுதான் அமைகின்றன. ஏனெனில் மனிதர்களின் குணாம்சமில்லாமல் மனிதக் கதைகள் அமைவதில்லை.

பஸ் பயணத்தில் மேலே பயணம் தொடர்கையில் என் சின்ன வயதில் அங்கு நடந்த சம்பவமொன்று காலங்கிழித்து மேலெழுந்து வந்தது. அது நடந்தபோதே நான் அதுபற்றிப் புரிந்துகொண்டதில்லை. நிகழ்ந்தது கண்டதும், கண்டவர் சொன்னதைக் கேட்டதுமென சம்பவத்தின் முழுமையொன்று எனக்குத் தரிசனமாகிற்று.

அது 1958க்கு முற்பட்ட ஒரு காலம். பெரும் இனக் கலவரமேதும் நடந்திராத பூமியாக இருந்தது இலங்கை. எனக்கு அப்போது பத்து வயதிருக்கலாம்.  ஒருநாள் வெள்ளிக் கிழமை குடும்பமாக முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு நேர்த்திக்கடன் பொங்கல் வைக்கப் போயிருந்தோம். இப்போது என் ஞாபகத்திலுள்ளபடியே கண்டிவீதியின் ஓரமாக பிள்ளையார் கோவில் அமைந்திருக்கிறது. பக்கத்திலும் முன்புறத்தில் வீதியின் எதிர்ப்புறத்திலுமாய் மக்கள் பானைவைத்து பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

கடையில் விறகு வாங்கிப் போய் நாங்களும் பொங்கலைத் தொடங்குகிறோம். என்னை மரத்தோடு அமரவைத்துவிட்டு தண்ணீர் அள்ளுவதிலிருந்து தேங்காய் துருவுவதுவரை அய்யாதான் வேண்டிய உதவிகளை அம்மாவுக்குச் செய்துகொடுக்கிறார்.

பிள்ளையார் பெரு மகத்துவத்தோடு இருந்த காலமாதலின் தூரதூர இடங்களிலிருந்து வந்து பொங்கல் வைக்கும் மக்கள் தொகை அந்த வெயிலேறும் நேரத்திலும் அதிகமாகத்தான் இருக்கிறது. பொங்கல் முடிய படைத்து, மீதியைப் பகிர்ந்து உண்டுவிட்டு மாலையில் வெய்யில் தாழத்தான் இனி அவர்களது வீடுநோக்கிய பயணம் இருக்கும். அப்போது கோயிலுக்குச் சென்று வருவதின் கைங்கர்யமாக கடலை வாங்கிக்கொள்வார்கள். அதுபோல் காலமெல்லாம் நினைத்துக்கொள்ள ஓய்வுப் பொழுதில் முறிகண்டிப் பிள்ளையாரின் அற்புதக் கதைகளையும் கேட்டு சுமந்துகொண்டு செல்வார்கள். அம்மா பரவசத்தோடு அக் கதைகளைக் கேட்பாள்; அய்யா உணர்வெதனையும் முகத்தில் காட்டாமல் கேட்டுக்கொண்டிருப்பார். நான் அக்கறையோடு விளங்காமல் கேட்பேன்.

பொங்கல் முடிய படையலை முடித்துக்கொண்டு சாமான்களையெல்லாம் எடுத்து கட்டிவைக்கிற நேரத்தில்தான் அம்மா பதறியபடி கேட்கிறாள், ‘உங்கட கைச் சங்கிலி எங்க, காணேல்ல?’ என்று. நானும் பார்க்கிறேன், அய்யாவின் கறுப்புக் கையில் மஞ்சள் கயிறாய் மின்னிக் கிடந்த சங்கிலி காணாமல் போயிருக்கிறது. நான் எனது கையிலிருந்த சங்கிலியின் இருப்பை உறுதி செய்துகொண்டு அய்யாவின் சங்கிலியைத் தேடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பரதவிப்பைக் கொட்டியபடி பொங்கிய இடத்துக்கும் கிணற்றடிக்குமாய் அய்யா நடந்துதிரிந்த இடங்களை குந்தியிருந்து விரல்களில் அவசரம் அவசரமாய் அம்மா மண்ணை அரிக்கத் துவங்கியிருந்தாள்.

கண்ணீரும் வியர்வையும் வழியும் அம்மாவின் கோலம்கண்டு அக்கம் பக்கம் போய்வருவோர் ‘ஏன்… என்ன… நடந்தது? என்னத்தையும் துலைச்சிட்டியளோ?’ என்று வினவுகிறார்கள்.

அய்யா எதுவோ சொல்ல வாயெடுக்க, அவரை அடக்கிவிட்டு அம்மா சொல்கிறாள், ‘இல்லை, அதொண்டுமில்லை…’ என்பதாக. அது ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் கைச்சங்கிலியைக் கண்டெடுத்துவிடும் ஆர்வத்தோடு மணலைக் கிளறி கிளறித் தேடுகிறேன்.

அப்போது எங்கள் அயல்வீட்டுக்காரர் அப்புத்துரை வந்து, ‘என்ன தங்கச்சி தேடுறியள்?’ என்று விபரம் கேட்க, அய்யா கைச்சங்கிலி தொலைந்த விபரத்தைச் சொல்கிறார். அது கேட்டவர், ‘ஆ… கடவுளே!’ என்று பதறியபடி அவரும் கூடவே தேட ஆரம்பிக்கிறார்.

வெய்யில் மேற்கே சாயத் தொடங்குகிறது. சாத்தியமான எல்லா இடங்களும் தேடிப் பார்த்தாகிவிட்டன. இப்போது அப்புத்துரையோடு, பொங்க வந்தவர்கள் சிலரும் பிச்சைக்காரர் சிலரும் விபரம் புரிந்து தேடுதல் தொடங்கியிருந்தனர். இனி கிளம்பலாமென அய்யா அம்மாவிடம் சொல்கிறார். எழும்பி மடியை ஒருமுறை உதறிக்கொண்டு தாவணியை இழுத்து இடுப்பில் இறுகிச் சொருகுகிறாள் அம்மா.  திரும்பிக்கொண்டு கோயில் உள் இருட்டில் பார்வையைக் குவிக்கிறாள். ‘உம்மட்ட வந்த இடத்தில இப்பிடி நடந்திருக்கக்குடாது. இதுக்கு எனக்கொரு ஞாயம் வேணும். அதுமட்டும் உம்மட வாசல் நான் மிதிக்கமாட்டன்.’

அம்மாவின் கோபம் எனக்குப் புரிந்தது. ஆனால் வாசகம் புரியவில்லை. சூழநின்று கேட்டு விளங்கியவர்கள் பொருளைத் தொலைத்தவளாகவல்ல, தெய்வத்துக்கு சவால் விடுத்தவளாய் எண்ணி மரியாதையோடு அம்மாவைப் பார்க்கிறார்கள்.

அம்மா மேலே அங்கு நிற்கவில்லை. தன் முழு பலமும் இழந்தவளாய் தள்ளாடி நடந்து மரத்தடியிலிருந்த பையை எடுத்தபடி என் கையைப் பிடித்தபடி அய்யாவின் பக்கம் திரும்பினாள். ‘உவன் அப்புத்துரை அங்ஙன நிண்டு தடவிக்கொண்டு நிக்கப்போறான். சொல்லியிட்டு வாருங்கோ, போவம்.’

வீடு சேர்ந்த பிறகும் யாருக்கும் கலகலப்பு மீளவில்லை. திண்ணையில் வரிசையாக அமர்ந்திருக்கிறோம். எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்கள் பெற்றோர். ஒருபோது திரும்பி அய்யாவிடம் அம்மா கேட்கிறாள், ‘கோயிலடியில வெளிக்கிடேக்க அப்புத்துரையிட்ட சொல்லியிட்டு வந்தியளோ?’ என. அதற்கு அய்யா, அவனைக் காணாததால் சொல்லவில்லை என்கிறார். ‘கூட தேடிக்கொண்டு நிண்டவன் சொல்லாமல் கொள்ளாமல் எங்க போனான்? எனக்கது பெரிய புதினமாய் இருக்கு’ என்கிறாள் அம்மா.

ஆம், நீண்டநேரமாய் அவரை நானும் அந்த இடத்திலே கண்டதாய் நினைப்பு வரவில்லை.

அய்யா அம்மாவிடம் சொன்னார்: ‘அவன் அப்பவே எதோ கள்ளஞ்செய்ததுமாதிரி அந்தரப்பட்டுக்கொண்டு நிண்டவன். இத்தறுதியில வந்திருப்பான். போய் இழுத்துக்கொண்டு வந்து விசாரிப்பமோ?’

‘வேண்டாம். எல்லாப் பழியளயும் பிள்ளையாற்ர தலையில போட்டிட்டு வந்தாச்சு. இனி அவரே பாத்துக்கொள்ளட்டும்.’

அய்யா ஏதோ மறுத்துச் சொன்னார்.

அதற்கும் மறுத்தான் போட்டாள் அம்மா.

அவர்களுக்குள் தொடர்ந்து வேறு விஷயங்கள் பிரஸ்தாபமாகி மாறி மாறிக் கத்திக்கொண்டார்கள்.

அடுத்த சனி, ஞாயிறு இரண்டு நாளும் இருவரும் பேசிக்கொண்டதைக்கூட நான் காணவில்லை. அய்யா வேலைக்கு போய் வந்தார். அம்மா சமைத்து வைத்துவிட்டு எந்நேரமும் விழுந்து படுத்திருந்தபடி அவ்வப்போது குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள்.

மறுநாள் திங்கள் கிழமை.

பள்ளி நாள் ஆனதால் நான் வெளிக்கிட்டு நின்றிருந்தேன். காலையில் பலகாரம் தயாரிக்கிற முயற்சியில் அடுக்களையில் அம்மா. கிணற்றடியில் அய்யா நின்றிருந்தார்.

அப்போது வாசலில் அழைத்துக்கேட்டது.

அம்மா வெளியே வந்தாள். கையில் தட்டோப்பை இருந்தது; மேனி வியர்த்திருந்தது; ‘இவனேன் இப்ப இஞ்ச வந்தான்?’ என்பதுபோல புருவம் ஏறியிருந்தது.

கேற்றைத் திறந்துகொண்டு ஓடிவந்தார் அப்புத்துரை. வந்த வேகத்தில் அலறிக்கொண்டு அம்மாவின் காலடியில் விழுந்தார். ‘என்னிய மன்னிச்சிடுங்கோ, தங்கச்சி. புத்தி கெட்டுப் போய்ச் செய்திட்டன். ஆயிரம் உதவிசெய்த உங்களையும் யோசிக்கேல்லை; காப்பாத்தி வந்த கடவுளையும் நெக்கேல்லை. சூலைநோய் பிடிச்சிட்டுது, தங்கச்சி. என்னால தாங்கேலாமக் கிடக்கு. நான் முறுகண்டியில போய்க் கிடக்கப்போறன். இந்தாருங்கோ’ என்றபடி எழுந்து மடியிலிருந்து கைச் சங்கிலியை எடுத்துக் கொடுத்தார்.

அய்யா கையை ஓங்கிக்கொண்டு அப்புத்துரையை அடிக்க வந்தார். அம்மா தடுத்தாள். ‘அந்தாள் செய்ததுக்கு கைமேல பலன் கிடைச்சிட்டுது. இனி அந்தாளாச்சு, பிள்ளையாராச்சு; நீங்களொண்டும் செய்யவேண்டாமப்பா.’

அப்புத்துரை மெல்ல மெல்ல திரும்பிப் போனார் பஸ் எடுக்கிற தெருப் பக்கமாய்.

அந்தளவில் வாசலில் அய்ந்தாறு பேர் கூடியிருந்தார்கள். பிள்ளையாரின் மகிமையை ஒருவர் சொன்னார்; அப்புத்துரையின் கெடுமதியை ஒருவர் சொன்னார். அம்மாவின் பிள்ளையார் பக்தியை ஒருவர் சொன்னார். அவர் அதையறிந்த அடுத்தவீட்டுக்காரராய் இருந்தார். எனக்கென்றால் எதுவும் புரியவில்லை.

ஆனால் பஸ்ஸில் சம்பவத்தை நினைத்துக்கொண்ட போதில் ஒன்றுமட்டும்  புரிவதுபோல் இருந்தது.

நம்பிக்கை! அம்மாவுக்கு பிள்ளையாரிடத்திலிருந்த நம்பிக்கையல்ல, முறிகண்டிப் பிள்ளையார்மீது கட்டியெழுப்பப்பட்டிருந்த கதைகளின் மேல் மக்களுக்கிருந்த நம்பிக்கை.

கதைகளெல்லாம் அதற்காகத்தானே புனையப்படுகின்றன! கதைகள் ஒரு சமுதாயத்தின் நம்பிக்கையின் வேர்கள். சொல்லப்படும் கதைகளாயினும் சரி, எழுதி வைக்கப்பட்ட புராணம் இதிகாசம் ஆகிய கதைகளாயிருந்தாலும் அவை நம்பிக்கையை வளர்க்கின்றன. அவற்றின் உயர்நோக்கமே அதுவாக இருந்ததால்தான் ஓரினத்தின் கலாச்சாரத்தில் அவை ஐதிகங்களாகி காலகாலத்துக்கும் நின்று நிலைக்கின்றன.

சொல்லப்பட்ட கதைகளை மக்கள் நம்பினார்கள்; அதை அப்புத்துரை நம்பினார்; அம்மாவும் நம்பினாள்.

அப்புத்துரைக்கு சூலைநோய் வந்ததோ வரவில்லையோ, ஆனால் அந்த நம்பிக்கையில் பயம் வந்தது.

அதுதான் கதைகளின் விஷேசம்.

0

 

 தாய்வீடு, ஜன. 2021

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்