சாம்பரில் திரண்ட சொற்கள் 5

மலைமேலுள்ள மொன்றியல் புனித அந்தோனியார் தேவாலயத்தைக் கண்டபடி வீட்டிலிருந்து தெருவுக்கு சாய்ந்திறங்கிய படிக்கட்டுகளின் ஓரத்தில் இறுகிவரும் குளிர்ச் சூழலையும் மறந்து சற்றுநேரமாய் நின்றிருக்கிறார் மயில்வாகனம். குளிருணர்ந்த மனிதர் சிலர் தெருவில் வீடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள். திடீரென வெகுக்ககத் துவங்கிய வாகனங்களின் நெரிசன் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் முடிவுற்ற நேரத்தினைச் சுட்டுகின்றன. அண்மையில் வடமராட்சி போய் வந்திருந்த பிரான்ஸிலிருக்கும் ஒரு நண்பரின் காலைத் தொலைபேசிச் செய்தியில் மனம் அடைந்த பரவசம் இன்னும் மாறாததாய் அவரில் இருந்துகொண்டிருக்கிறது. நல்லிசையின் ஒலியலைகள் அடங்கிய பின்னரும் அகலாத இனிமையின் பிரவாகம்போல் அது. ‘டேய், மயில்…!’ காலையில் அழைத்த நண்பரின் தொனி அவர் செவிகளில் அப்போதும் அதிர்கிறது. அவரை அவ்வாறு அழைக்கக்கூடிய அந்நியோன்யமும், அவரின் இளமைக் காலத்தைப்பற்றிய முற்றான அறிகையயும்கொண்டு இருந்தவர்தான் அந்த நண்பரும். அழைப்பில் ஒரு முரட்டுத்தனம் தெரிந்திருந்தாலும், அவர்களுக்கிடையில் ஊடாடிநின்ற அந்நியோன்யத்தின் வயது நாற்பதென்ற அறிகை, அந்த அபிப்பிராயத்...