சாம்பரில் திரண்ட சொற்கள் 5


 


மலைமேலுள்ள மொன்றியல் புனித அந்தோனியார் தேவாலயத்தைக் கண்டபடி வீட்டிலிருந்து தெருவுக்கு சாய்ந்திறங்கிய படிக்கட்டுகளின் ஓரத்தில் இறுகிவரும் குளிர்ச் சூழலையும் மறந்து சற்றுநேரமாய் நின்றிருக்கிறார் மயில்வாகனம்.

குளிருணர்ந்த மனிதர் சிலர் தெருவில் வீடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள். திடீரென வெகுக்ககத் துவங்கிய வாகனங்களின் நெரிசன் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் முடிவுற்ற நேரத்தினைச் சுட்டுகின்றன.

அண்மையில் வடமராட்சி போய் வந்திருந்த பிரான்ஸிலிருக்கும் ஒரு நண்பரின் காலைத் தொலைபேசிச் செய்தியில் மனம் அடைந்த பரவசம் இன்னும் மாறாததாய் அவரில் இருந்துகொண்டிருக்கிறது. நல்லிசையின் ஒலியலைகள் அடங்கிய பின்னரும் அகலாத இனிமையின் பிரவாகம்போல் அது.

‘டேய், மயில்…!’ காலையில் அழைத்த நண்பரின் தொனி அவர் செவிகளில் அப்போதும் அதிர்கிறது. அவரை அவ்வாறு அழைக்கக்கூடிய அந்நியோன்யமும், அவரின் இளமைக் காலத்தைப்பற்றிய முற்றான  அறிகையயும்கொண்டு இருந்தவர்தான் அந்த நண்பரும்.

அழைப்பில் ஒரு முரட்டுத்தனம் தெரிந்திருந்தாலும், அவர்களுக்கிடையில் ஊடாடிநின்ற அந்நியோன்யத்தின் வயது நாற்பதென்ற அறிகை, அந்த அபிப்பிராயத்தை வெகுநேரம் நிலைக்க விட்டுவிடாது. 

‘உன்ர மச்சாள் மலர் உங்கை கனடாவிலதானாமடா.’ நண்பர் உதித்த வார்த்தைகள் உடனடியாகவே அவரை உயிர்ப் பரவசம் கொள்ளச்செய்தன. ஏன்?  அவரறியார். அவளது இருப்பிடத் தகவலின் தேடலில் அவர் இருந்திருக்கவுமில்லை. ஆனாலும் பரவசத்தில் தோய்ந்தார். பின்னால் அவளது வதிவிடத்தின் மேலோட்ட வரைபடத்தை நண்பர் சொன்னபோது, ‘அவ்வளவு போதும். விலாசமில்லாட்டி என்ன, இனி நான் விசாரிச்சு அறிஞ்சுகொள்ளுவன்’ என்றார். அதை அவாவி நின்றிராதபோதும் ஏனோ அந்த வார்த்தைகளை மிக நிதானமாக உதிர்த்தார் மயில்.

உரையாடல் அதற்குமேல் வளரவில்லை. மாலைவரையிலும்கூட அவர் நினைவிலிருந்து அப் பரவசம் இனிமை செய்துகொண்டிருந்தது.

ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள செந்நதி தீரத்தில் புதிதாகக் குடியேறிய ஒரு வாடகை நிலக்கீழ் வீட்டில் சிவயோகமலர் தன் கணவனுடன் வாழ்ந்துகொண்டிருப்பதான அச் செய்தி அவரளவில் சாதாரணமானதில்லை. இடம்பெயர்வு புலம்பெயர்வுகளின் காரணமாய் அவரின் அவள்பற்றிய நினைவுகளுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாறு இருந்திருக்கவில்லை. ஆரம்பத்தோடு முடிந்துபோன ஓர் ஆசையின் வெம்பல் கதையாகவே அது அன்றுவரை இருந்திருந்தது. ஆயினும் அவர் அந்த இழப்பில் என்றுமொரு வதைப்பாட்டை உணர்ந்ததில்லை. அதேவேளை அவளை மனத்திலிருந்து அப்பால் தூக்கிவைக்கவும் முடியாதிருந்தது. அந்த அழகு அவ்வண்ணம் செய்யப்பட முடியாததும். யாராலும்.

பனி முடியும் காலத்தின் இருள் படர்ந்து அந்தோனியார் தேவாலயம் வெளிச்சப் புள்ளிகளாய் மின்னத் துவங்க வெளியில் நின்றிருந்தவர் கூடத்துள் வந்தமர்ந்தார்.

மயில்வாகனம் குடும்பஸ்தராகி சற்றொப்ப இருபத்தைந்து வருஷங்களைத் தாண்டிய ஒரு பெருங்காலமாய் இருந்தது. 1983 ஜுலை இனக் கலவரத்தோடு எழுந்த புலம்பெயர் புயலில் அள்ளுண்டு கொழும்புத் தலைநகரையே நன்கு தெரிந்திராத  வாலிபனாய், கரவெட்டியிலிருந்து பம்பாய்க்கு ஓடி, அங்கிருந்து வசதியான மார்க்கமென்று ரஷ்ய மண்ணைச் சென்றடைந்து, பின் தரைவழியெடுத்து பிரான்ஸ் நாட்டில் அகதித் தஞ்சமடைந்த ஆண்டு 1985.

நிறைந்த அலைச்சல்களினதும் அவசங்களினதும் பின்னாக ‘பப்பியெ’ கிடைத்து நிரந்தர வேலையொன்றையும் உறுதியாக்கிய பின்னர் தாய், சகோதரி புவனேஸ், அவள் கணவர் சுந்தரமூர்த்திஆகியோரின் அழைப்பில் இந்தியா போய் கல்யாணம்செய்து வந்தது 1990இல்.

ஒரு பிள்ளையை பிரான்ஸில் பெற்றுக்கொடுத்த அவரது மனைவி, பல்வேறு காரணங்களில் அவர் தம் இரண்டாவது புலம்பெயர்வை கனடாவைக் குறியாக்கி குடும்ப சகிதமாக  கியூபெக் மாகாணத்தை அடைந்த பின்னால் இரண்டாவது பிள்ளையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அவர் எதிர்பார்த்தபடி வாழ்வின் எல்லா முகப்புகளும் சிறப்பாக விரிந்திருந்த வேளையில் அவரைவிட்டுப் போய்விட்டாள்.

அடிக்கடி சுள்ளெனக் கிளரும் வயிற்றுவலியென்று ஆஸ்பத்திரி போக, புற்றுநோய் ஆபத்தான நிலை அடைந்துவிட்டதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவளுக்கு, நடந்த ரண சிகிச்சையின் மூன்றாம் நாளில் அந்த மரணம் சம்பவித்திருந்தது.

மயில் நினைத்தே இருக்கவில்லை. ஆனாலும் விதி வலியதென்று ஆறுதல் பட்டார். அவர் பிறந்து வளர்ந்து வாலிபனாகிய மண்ணின் ஆசார வேர் விழுத்திய நம்பிக்கையது.

கடந்த இருபது ஆண்டுக் காலத்தை தன்னிரு பிள்ளைகளை வளர்த்தபடி தனிமையில் கழித்தபோதுகூட, பழைய சுவடுகள் வழி அவர் மனம் என்றும் பயணிக்க முயன்றதில்லை. மனத்தில் ஆழக் கிடந்த கோலங்களை மீட்டெடுக்கும்படியான ஞாபகத் தொடர்ச்சியேதும் அதுவரை அவர் கொண்டிருக்கவுமில்லை. புதிய துணை கண்டடைவதையும் அவர் தவிர்த்திருந்தார்.

ஆனால் நிகழ்கால வாழ்வின் தனிமைச் சூழல் அந்த திட்டமிடாத நினைவு மீட்பை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

தனக்கு மட்டுமானதாகவே அந்த நினைவுமீட்பை அவர் வைத்திருக்கவும் முடியும். மாலையில் வாரத்துக்கு இரண்டொரு தடவைகள் கோப்பிக் கடையில் சந்தித்து வம்பளக்கும் தமிழ் நண்பர்களிடத்தில், அவர்களிலும் மிக நெருங்கிய சண்முக வாத்தியிடம்கூட, அதை அவர் பகிர்ந்துவிட முடியாது. விஷயம் வயதளவால் விரசமானது.

வருஷங்கள் பெருகியிருந்த காலத்தின் முதிர்வு உடலில் ஓர் அசைவிறுக்கத்தை இட்டிருந்தாலும், இணைவிழைச்சுச் சுகக் கனவுகளின் உராய்வுகள் அவருள்  தீயைப் பிறப்பிக்கவே செய்திருந்தன. 

பிள்ளைகள் இரண்டும் பெண்களானதில் தன் வாழ்வை வெகு நிதானமாய்த்தான் நடத்திவந்தார் அவர். ஆனால் அவர்கள் தத்தம் விருப்பங்களின் மேல் தனிவழியெடுத்துச் சென்ற பின்னால், தனிமையின் அழுத்தம் சுமையாகிப் போனது. நினைவுகள் சாந்திசெய்தன..    

ஞாபகங்கள் மனத்தின் அடிப் படுகையைக் கிழித்தன. ஐம்பது வருஷங்களுக்கு முன்னாக மனத்தை அமல் செய்திருந்த இளங்காலத்தின் காட்சிகள் விரிந்தன.

 

ரு கீற்று வேலி இடையிட்ட மாமன் வீரகத்தியின் வீட்டுக்கு நினைத்த நேரம் போய்வரக்கூடிய நெருங்கிய உறவின் உரிமமிருந்தும், அம்மா அல்லது அக்கா புவனேஸ்வரி செல்லும் வேளையில் மட்டுமே கூடிப் போய் வருவதை இயல்பாக்கிக்கொண்டிருந்தான் மயில்.

கடுகடுவெனப் பார்க்கும் வித்துவானையோ, எதுவும் எனக்கு விளங்குவதில்லை, அது எனக்குக் கவலையுமில்லை என்பதுபோல் எப்போதும் ஒரு வெங்கிணாந்திச் சிரிப்பைக் கிலுக்கியபடியிருக்கும் வித்துவான் மனைவி அன்னபூரணத்தையோ, கூடவிருக்கும் வித்துவானின் தாய் ஆச்சிப்பிள்ளையையோ எதிர்கொள்வதில் பிரச்னையேதும் அவன்  கண்டதில்லை. சிரிக்கத் தெரியாத அந்த ஆகக்கூடுதல் அழகினை எதிர்கொள்வதில்தான் மயில் சிக்கல்பட்டான்.

பள்ளி வழியில், கடைத் தெருவில் காணும் வேளைகளில் அறிமுகப் பார்வைகூட காட்டாதவளின் அந்த விறைத்த கண்களில்  துளியேனும் விருப்பத்தின் சமிக்ஞை கிடைக்காதவரை அவன் அந்தத் தயக்கத்தை அடைந்துகொண்டுதான் இருப்பான். அவன் நெருங்க அவள் விலகினாளென்றில்லாமல், அவனே நெருங்கப் பின்னின்றதில் அவள் ஓர் இடைவெளியை முயலாமலே சுலபத்தில் தக்கவைக்க முடிந்துபோனாள்.  

இன்னும் இரண்டு நாட்களில் ஜி.சி.இ. ஒ\எல் பரீட்சை தொடங்கவிருந்தது. தேர்வின் முதல்நாளிலேயே அட்சர, கேத்திர கணித பாடங்கள் காலை மாலைப் பரீட்சைகளாக நடைபெறவிருந்தன. புத்தகத்தில்  திறந்த பக்கத்தைத் தாண்டி மயிலினால் செல்ல  இயலவில்லை.

அவனது மனம் மலர்பற்றிய, தன் தயக்கங்கள்பற்றிய எண்ணங்களில் சுழன்றுகொண்டிருந்தது.

அவன் எதையாவது செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அந்த வயதின் நிழலோட்டத்தில் அவன் பிந்திப்போவான்; தோற்றுப்போவான். மலரின் அண்மைக்காலப் போக்குகள் அதையே சூசகம் செய்கின்றன.

போன வாரத்தில் ஒரு மழைபெய்த மதிய நேரம். அவர்களது வீட்டில் அவ்வப்போது தேவையான வேலைகள் செய்துகொடுக்க வரும் துன்னாலைத் தங்கம்மாவின் மகள் சின்னக்கிளியோடு மலர் தெருவில் வந்துகொண்டிருக்கிறாள். அவர்கள் கடையிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அதுவொன்றும் மயிலுக்கு மனவுளைச்சலைக் கொடுத்துவிடவில்லை. அவன் சைக்கிளில் முடக்கால் திரும்புவதைக் கண்டுவிட்டு, அவர்களோடு பேசியபடி சைக்கிளில் வந்துகொண்டிருந்தவன் அவசரமாய் விலகிப்போனதாய் தோன்றியதிலிருந்துதான் அந்த வேதனை. மலரும் அவசரமாக தன் கையிலிருந்த எதையோ கைப்பிடிக்குள் மறைத்துக்கொண்டதாகவும் தோன்றியது. அவன் யாரென அறிவதற்குக்கூட அவனுக்கு அவகாசமிருக்கவில்லை. அக் காட்சி அவனது ஆசைகளுக்கோர் அச்சுறுத்தல்.

அது எவரினது உணர்ச்சிகளையும் தூண்டும் பருவத்தின்  வயதுப் புலமெனில், அவளுக்கான தேர்வுகளின் ஆகக்கூடுதல் களத்தை அவன் அளித்தாகவேண்டும். சுருண்ட கேசமுள்ள, சிவந்த, மெய்வல்லுநர்த் திறன் மிக்க, படிப்பில் சுமாரான கெட்டித்தனமுள்ள தன்னையும் தேர்வுக்காய் அவள் முன் நிறுத்துவது தவிர்க்கமுடியாதது. ஆனால் எப்படி?

இரண்டு வாரங்களுக்கு முன் கல்லூரியில் நடைபெறவிருந்த கேத்திர கணித மீட்டல் பயிற்சிச் சோதனைக்கு மலர் அவனது கொம்பாஸ் பெட்டியை புவனேஸ்மூலம் இரவல் வாங்கிக்கொண்டு போயிருந்தாள். கல்லூரிப் பரீட்சைக்கு கொம்பாஸ் பெட்டி இல்லாதிருந்தவள் இரண்டு நாட்களில் வரப்போகும் அரசாங்கப் பரீட்சைக்கு என்ன செய்வாள்? கல்லூரிக்குக் கிட்டவுள்ள புத்தகக் கடையிலும் கொம்பாஸ் பெட்டி தீர்ந்துபோயிருந்தது. என்ன திட்டத்திலோ தன் உண்டியல் முட்டியைக் குலுக்கிக் குலுக்கி உருவியெடுத்த காசில் பெரியகடைக்குப் போய் மயில் ஒரு கொம்பாஸ் பெட்டி வாங்கிவந்து வைத்துக்கொண்டான்.

ஆனால் அதை அவளிடம் கொடுப்பதற்கான மார்க்கத்தைத்தான் அவனால் காணமுடியாதிருந்தது.

தானொரு புதிய கொம்பாஸ் பெட்டி வாங்கியதாகவும், பழையபெட்டி அவளுக்கு அல்லது அவளது சிநேகிதிகள் யாருக்காவது தேவையானால் தருவதாகவும் சொன்னாலென்ன? கொம்பாஸ் பெட்டியொன்றின் தேவையுடன் அப்போதும் அவள் இருந்திருப்பதால் சிநேகிதிகளைச் சாட்டிக்கூட அவள் ஏற்றுக்கொள்ள முகாந்திரமிருக்கிறது. கொம்பாஸ் தொலைந்துபோன விஷயம் அவளது தந்தைக்குத் தெரியவந்து, அவர் கையால் குட்டுப்பட்டு மண்டை பிளப்பதைவிட, அதுவொரு நல்ல வாய்ப்பென அவள் கருதமுடியும்.

மறுநாளில், அவன் அதைத்தான் செய்தான். அவன் சொல்வதை அசிரத்தையுடன் கேட்டுவிட்டு, ‘அதை உந்த வாங்கில வைச்சிட்டுப் போ; ஆருக்கும் குடுக்கலாம்தான்’ என்றாள் மலர்.

அவன் உடைந்துபோனான். ஆனாலும் வருங்காலத்தின் நம்பிக்கைமீதாக அந்த ஏமாற்றத்தைத் தாங்கியபடி, கொம்பாஸை வாங்கினில் வைத்துப்போனான்.

பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகவிருந்த நாள்.  மனப் பதைப்புடன் கல்லூரி சென்றான் மயில். ஹாட்லிக் கல்லூரி பெருவெடிப்புக்கான அடர் மௌனத்தில்போல் உறைந்திருந்தது. பெறுபேறு பார்க்கவிருந்த பரீட்சார்த்திகளின் அத்தனை ஆர்வக் கிளர்வுகளும் அதனுள் அடங்கிப்போய் இருந்தன.  

அன்றைய தபால்களை விநியோகிக்கும் தபால்காரர் கல்லூரி வாசல் தாண்டியதும் அது வெடித்தது.

கல்லூரி அலுவலகம் அந்தப் பரபரப்பைத் தாங்கமுடியாததாயிற்று. மயிலும் முண்டியடித்தான் பெறுபேறு பார்க்க.

அவனே ஆச்சரியப்படும்படி ஆறு பாடங்களில் அவன் சித்தியெய்தியிருந்தான். அந்தப் புளுகத்தை அவனால் தாங்கவே முடியவில்லை. மனத்தில், முகத்தில் ஆனந்தத்தின் வரிகள் தீர்க்கமாய் வரைபட்டுக்கொண்டு இருந்தன.  சாதாரண சித்தியென்றாலும் அது அவன்வரையில் அதிகபட்ச மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. அதை வைத்துக்கொண்டு அவனால் அங்கே உயர்தர வகுப்பைத் தொடர்ந்துவிட முடியாதென்றாலும், அவன் சித்தியடைந்துவிட்டான் என்பதுதான் முக்கியம்.

வீட்டில் அதன் தாக்கம் வேறாயிருக்க வாய்ப்புள்ளது. மலர் பெற்றிருக்கக்கூடிய பெறுபேற்றின் அடிப்படையில் அவனது பரீட்சை முடிவினை அவர்கள் காண்பார்கள். ரியூசனுக்கு ஆறு மாதங்களாக அலைந்து அவன் பெற்ற அந்தச் சித்தியில் அக்காள் புவனேஸ் திருப்தி அடைந்துவிடமாட்டாள். ஆனாலும் பயப்பட ஏதுமில்லை. அவனுக்கு அப்பா இல்லாதது அந்த விஷயத்தில் எவ்வளவு அனுகூலமாகப் போய்விட்டது!

மயில் மலரின் மத்திய  கல்லூரிக்கு சைக்கிளை உழக்கினான். மலரை எங்கேயும் காணக்கிடைக்கவில்லை. அவளது சிநேகிதி ஒருத்தியைக் கண்டு விசாரிக்க அவள் தனக்கில்லாத ஒரு சோகத்தோடு மலர் வீடு சென்றவிட்டதைத் தெரிவித்தாள். அவ்வளவில் அவளது பெறுபேற்றின் திசை அவனது அனுமானத்திற்கு வந்துவிட்டது. அவன்  நேரடியாகவே கேட்டான். ‘எத்தினை பாடம்?’

அவள் உதட்டைப் பிதுக்கி, ஐந்து விரல்களை விரித்துக் காட்டினாள். ஆங்கிலமும் கணிதமும் டிஸ்ரிங்ஷன், மற்ற மூன்று பாடங்கள் கிறெடிட் என்றாள் தொடர்ந்து. 

ஐந்து பாடங்களின் விசேஷ சித்தி கவனத்திற்குரியதுதான். ஆயினும் மூன்று பாடங்களின் தோல்வியே கணக்காகும். அவள் அப் பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதுதான் எவர் முன்னாலும் விஸ்வரூபம்காட்டி எழுந்துநிற்கப் போகிறது. அவ்வளவு ராங்கிக்காரியாய் இருந்ததாலேயே அந்தத் தோல்வியை அவளாலும் தாங்கமுடியாமல் இருந்துவிடும்.

தந்தை வித்துவான் வீரகத்தி குட்டிக் குட்டியே அவளது மண்டையைக் கலங்கிப்போகச் செய்துவிடுவார். விரல்களை மடித்து மொக்குப்பத்தினபோன்ற பெரிய மொழிகளினால் டங்கென விசையோடு இறங்கும் அவரது குட்டுகளை அவன் தன் சின்ன வயதில் அனுபவித்திருக்கிறான். குட்டுவதாக அன்றி செல்லமாகத் தட்டுவதாக மற்றவர்களுக்குத் தோன்றச்செய்யும்படியான சூட்சுமத் தாக்குதலாயிருக்கும் அவை. அந்தப் பிள்ளையின் மண்டையை அவர் என்னமாதிரியான உக்கிரத்துடன் தாக்குவாரோவென எண்ணியபோது அவனில் மலருக்கான துயரம் படர்ந்தது.

அது அவளைமட்டுமன்றி அல்வாய் கணேச வித்தியாலத்தின் தலைமையாசிரியர் வித்துவான் வீரகத்தியை மட்டுமன்றி, அந்தக் குடும்பத்தையே அவமானத்தில் ஆழ்த்திவிடக்கூடியது. யார் இல்லாவிட்டாலும் வித்துவான் வீரகத்தியும், சிறிய தந்தை சண்முகராசாவும் அவ்வாறுதான் உணர்வார்கள். வித்துவான் வீரகத்தி தலைகுனியாமல் இனி அந்தத் தெருவில் நடந்துவிட முடியாது. அது அவருக்கோர் அறிவுப்புலத் தோல்வியாகிவிட்டது.

பரீட்சை முடிவுகள் வெளிவந்த நாளிலிருந்து அந்த வீடே பகலிலும் இருள் மூடியிருந்ததாய்த் தோன்றியது. மதிற்சுவரின் வேல் கம்பிகளுக்கு மேலாகப் படர்ந்திருந்த செவ்வரத்தை  சோகமாய்ப் பூத்திருந்ததாய்த் தென்பட்டது.

அந்த வீட்டிலுள்ளவர்கள் வழி தெருவில் மட்டுமல்லாது, வீட்டு விறாந்தையில்கூட காணப்படவில்லை. வசந்தமலரென்று மலரின் தங்கையொருத்தி இருக்கிறாள். தாயைப்போல எவரைக் கண்டும், எதைக் கண்டும் சிரிக்கிற ஒரு பிறவி. அவளைக்கூட முற்றத்திலோ விறாந்தையிலோ காணமுடியவில்லை.

அடிக்கடி அங்கே ஓடியோடிப் போகும் புவனேஸே செல்ல அச்சப்பட்டதுபோல் நிலைமை ஆகிவிட்டிருந்தது. மலர் அங்கே இருக்கிறாளாவென்பதே தெரியவில்லை. தாயாரின் சிரிப்பொலி அடங்கிப்போனது. ஒரு மௌனமும் துயரமும் அந்தச் சூழலில் திணிந்துவிட்டதாய் உணர்ந்தான் மயில்.

முன்னிரவு முழுக்க நிசப்தத்தின் வரிகளால் அந்தப் பகுதியே மூடப்பட்டதாயிற்று. முந்திய இரவுகளில் எங்கோ ஓரிடத்தில் கடப் பயிற்சியொலி கிளரும்; பயிற்சித் தவிலொலி அதிர்வெழுப்பும்; நாதஸ்வர நாதம் எழும்பி இதயங்களைக் கவ்வும்; வாய்ப் பாட்டிசை படரும்; வித்துவான் வீரகத்திகூட அவ்வப்போது கேட்டார் மெய்யுருக தேவார இசையெழுப்புவார். எல்லாம் அடங்கி மௌனத்தின் பேயாட்சி அப்போது விரிந்திருந்தது.

நிலா வந்தது போனது காண்டாரில்லை. நட்சத்திரங்கள் அச் சித்திரை முன்னடியில் வழமைபோல் ஜொலித்தனவாவென யாரும் அறிந்தாரில்லை. ஒரு வீட்டின் சோகம் ஓர் ஊரினதுபோல் அந்தளவு கனதியாக முடியுமென்பதை மயிலினால் நம்பவே முடியவில்லை.

காலம் எதனையும் ஆற்றுப்படுத்துகிறது என்பது சரிதான். அந்த வீடும் சூழலும் மெல்லத் தெளிந்துவந்தன. ஒருநாள் ஆர்மோனியம் கேட்டது; மறுநாள் வாய்ப்பாட்டிசை; இன்னொருநாள் வீணையின் நாத மழை. வித்துவான் வீரகத்தி விறாந்தையில் காணப்பட்டார். அவர் மனைவி வளவுக்குள் தேங்காய் எடுத்துப் போட, ஆட்டுக்குக் குழையொடிக்கவென எடுபிடி வேலை செய்யவரும் தங்கம்மா சகிதம் அங்கங்கே நடந்து திரிவது காணப்படலாயிற்று.

புவனேசும் மெல்ல அங்கே போய்வரத் துவங்கினாள். ஒரு மாலை அங்கிருந்து வந்தவள், மலர் தஞ்சாவூரில் சங்கீதம் கற்க போகவிருப்பதாக பேச்சடிபடுவதைத் தெரிவித்தாள்.

மயில் அதிர்ந்துபோனான். குறைந்தது மூன்றாண்டுகளாவது பயிற்சி நீளக்கூடியது. அவளை முற்றுமாய்த் தொலைக்கப்போவதை அவனால் தாங்கவே முடியவில்லை. தன் கனவுகளை வெளிப்படுத்த அவனுக்கொரு தருணம் அதுவரை அமையவில்லையே!

ஒருநாள் விடிந்தவொரு பொழுதில் தெரிந்தது, முந்திய நாள் மாலை மெயிலெடுத்து வித்துவான் வீரகத்தியும் மலரும் இந்தியப் பயணத்துக்காய் கொழும்பு சென்றுவிட்டதாக.

அந்தளவு துரிதத்தில் அது நிகழுமென அவன் நினைத்தேயிருக்கவில்லை. மயிலின் சோகம் தாங்கமுடியாததாயிற்று.

காலப் போக்கில் அவன் அதை மறக்கச் செய்தான்; அவளையல்ல.

 

தற்கு மேலும் எவ்வளவோ நடந்தன நினைப்பதற்கு உரியனவாய். அவற்றைவிட அந்த ஒல்லி வடிவத்தின் சிரிப்பறியா முகம் முக்கியம். ஐம்பது ஆண்டுகளானாலென்ன, நினைவின் தகிப்பு அடங்காததாகவே இன்னும்.

அவள்தான் இப்போது எந்த வசதியும் அற்றவளாய், அந்த ஆர்ட் மாஸ்ரர் நடனசுந்தரத்தைக் கலியாணம் செய்துகொண்டு, ஒன்ராரியோ மாகாணத்தின் யாரினதோ நிலக்கீழ் வீட்டில் நோயாளியாய் அல்லலுறுகிறாள் என்பதை நினைக்க உண்மையில் அவரது நெஞ்சில் படர்ந்திருந்த பரவசத்தின் மேல் துக்கம் பொங்கி மூடியது.

 

 

 

10

இனி கடும் பனி கொட்டாது, நிலவெலி (Ground Hog) இரண்டு நாட்களுக்கு முன் வெளிநிலத்தில் ஓடித் திரியக் காணப்பட்டதாய்ச் செய்தியிலும் வந்திருந்தது.

அம்பாரமாய்க் குவிக்கப்பட்டிருந்த சில இடங்களில்மட்டும் பெரும்பாலும் ஊத்தை நிறமடைந்த பனி இன்னும் இருந்துகொண்டிருந்தது. வானம்கூட சாம்பர் நிறத்திலிருந்து இளவேனிலை எதிர்கொள்ள மென்நீலம் அடைந்து கொண்டிருந்தது. இலையுதிர்த்து நின்ற மரங்களில் துளிர்ப் புடைப்புகள் இந்தளவில் தோன்றியிருக்குமென ஆவலோடு கண்ணோடினார் சுந்தரம். இல்லை, இன்னுமில்லை. அடுத்த வாரத்துக்குள்ளே மரங்கள் சிவப்பு பச்சை நிற முகைகளால் பொலிந்துவிடுமென நம்பிக்கையோடு எண்ணிக்கொண்டார். முதல்நாள் அதிகாலையில்கூட அவர் சில குருவிகளின் இளவேனில் குரலைக் கேட்டிருந்த ஞாபகம் அந்த அனுமானத்தை ஊர்ஜிதம் செய்தது.

இருள் விழ ஆரம்பித்திருந்த நேரத்தில் சற்று தாமதமாகிவிட்டதோவென்ற ஐயத்துடன் வீடு திரும்பிய சுந்தரம்,  சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அவசரமாய் மனைவியின் அறைக்குள் நுழைந்தார்.

முன்பும் பல தடவைகளில் கண்டிருந்தாராயினும் எதிர்ப்பட்ட  அக் கணத்தில் அவளின் பார்வை தாங்கமுடியாத கடூரத்துடன் இருப்பதைத் தெரிந்தார். அவளது தினம் தினம் மோசமாகி வரும் உடல்நிலையில் அம்மாதிரிக் காரண காரியமற்ற உணர்ச்சி வெடிப்புகள் இயல்பென்று தெரிந்திருந்ததில், தன் மனப் பொருமலை அடக்கிக்கொண்டு அவள் முன்னால் சாப்பாட்டுக் கோப்பையை வைத்தார்.

அவதானம் சிறிது பிசகியிருந்த தருணமாதலின், ஏற்கனவே   அவள் மாலைத் தேநீர் அருந்திவிட்டு மேசையில் வைத்திருந்த பாத்திரத்தில் மோதிய  கோப்பை டங்கென்ற ஓசையுடன் அதை மேசையில் சரியவைத்தது. மீந்த தேநீருடனிருந்த பாத்திரம் உருண்டு கீழே விழுந்து நிலத்தில் உருண்டது. மென் மஞ்சள் நிற கார்ப்பெற்றில் சட்டென ஊத்தை நிறத்தில் கறையாய்க் காயத் துவங்கியது.

அவளது குரல் நேரடித் தாக்குதலாய் இல்லாவிடினும் ஒரு வெடிப்போடு பிறந்தது. ‘மேல பேசிக்கொண்டிருந்ததில நேரம்போனது தெரியேல்லப்போல?’

‘உங்களுக்கு சப்பாத்தி முடிஞ்சுதெண்டுதான் வாங்கப் போன்னான் கடைக்கு’ என்ற அவரது நிதானமான பதிலளிப்பிலும் அடங்கிக்கொள்ளாதவள் வேறொரு முனையிலிருந்து பாய்ந்தாள்: ‘எதையும் வேண்டாவெறுப்பில செய்தா… இப்பிடித்தான். ஒருநாளைக்கு கோப்பையும் உடையப்போகுது; சுடுகறியும் என்ர மேல்ல கொட்டுண்ணப் போகுது.’

அவர் அடங்கினாலும் அவள் அடங்காதவளாய்க் கிளர்ந்தாள். ‘ஒழுங்காய்ச் செய்ய கஷ்ரமாயிருந்தா அதை வெளிவெளியாய்ச் சொல்லுறது. கடமைக்காண்டி இஞ்ச ஒண்டும் செய்யவேண்டாம். நாளைக்கே ராசனிட்ட சொல்லி வேற எதாவது ஏற்பாடு பண்ணியிடுறன்.’

பார்வையின் கடூரத்தில் நிதானம் சிதறாமல் ஒரு பிரயத்தனத்தில் தடுத்துக்கொண்டிருந்தவரை அவளது வார்த்தைகளில் இழையோடியிருந்த எச்சரிக்கை கட்டுப்பாட்டை இழக்கவைத்தது. ‘கடமையில இல்லாமல், வேற என்னத்தில, இந்தமாதிரிக் கிடந்து இழுபடுறனெண்டு நினைச்சியள்?’ என்றார் அவர்.

அவர் சொல்லி வாய் மூடி ஒரு முழு நிமிஷம் அவரைப் பார்த்தபடி மௌனமாயிருந்தவள் தொடர்ந்து அபூர்வ தருணங்களின் தன் சிரிப்பைச் சத்தமாய்ச் சிந்தினாள்.

அவள் சிரிக்கும்படி அதில் என்ன இருந்ததென்று வெடித்துக் கிளர்ந்த சினத்தை மீறியும் ஆச்சரியம் கிளர்ந்தது சுந்தரத்திடம். ‘மழை வா! வெய்யில் போ!’ எனக் கூவி மழை வரக்கண்டு சின்ன மலர் சிரித்த சிரிப்பின் முதிர் வடிவமே அதுவென சுந்தரம் கணிப்பீடு செய்தார்.

சிறிதுநேரத்தில் சிரிப்பை நிறுத்திவிட்டு சிறிய ஜன்னலூடு தெரிந்த வானம் பார்த்தாள்; சுவரில் இருந்த கலண்டர் பார்த்தாள்; மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோடை காலப் பாவிப்புக்கான மின்விசிறியில் பார்வையைச் சுழற்றினாள்; பின் திரும்பி தொலைக்காட்சியை உற்று நோக்கினாள். அத்தனை வேளைகளிலும் தன் சிரிப்பின் அளவை அவள் மாற்றவேயில்லை.

அவரது முகத்தை ஏறிட்ட கணத்தில்தான் தன் சிரிப்பை எரித்தாள்.

‘நல்லாய் வேணு’மென்றாள். ‘நானாய்த் தேடி வரேல்லையே! தானா வந்தா இந்தமாதிரி அனுபவிக்கத்தான் வேணும். இதுமட்டுமே? இன்னுமிருக்கு எவ்வளவோ’ என்றபடி தலை குனிந்தவளின் முகத்தில் முந்திய வெற்றியின் அலை தெறித்த சிரிப்பு. அடங்காச் சிரிப்பு.  

என்ன சொன்னாளென்று சிறிதுநேரம் நின்று திகைத்து, பின் ஏன் சொன்னாளென்று கலங்கி, மறுபடி அவள் கலகலத்துச் சிரித்த சிரிப்பில் கவனம் பதியாது தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சுந்தரம் அறையைவிட்டு வெளியேறினார். குளிர் கோட்டை மாட்டிக்கொண்டு பின்விறாந்தைக்கு நடந்தார்.

ஆறு நிமிடங்களளவில் தன் சிகரெட் புகைப்பை முடித்துக்கொண்டாலும், உள்ளே திரும்ப மனமின்றி மேலும் சிறுபொழுதை அந்தக் குளிரில் நின்றபடி கழித்தார். வெடித்துச் சிதறவிருந்த மனம் ஓரளவு அடங்க, உள்ளே சென்று அவள் சாப்பிட்ட கோப்பையை எடுத்துப்போய் கழுவு தொட்டியில் வைத்துவிட்டு சோபாவிலே சாய்ந்தமர்ந்தவருக்கு, ‘மனநிலை பேதலிச்சா உந்தமாதிரி எல்லாம் ஏறுமாறாய்த்தான் யோசிக்க வருமோ? அந்த அழகை நினைச்ச பிழையொண்டைத் தவிர, காத்து நிண்ட… பின்னால திரிஞ்ச…. கதையொண்டும் எங்கட வாழ்க்கையில நடக்கேல்லயே!’ என்று மனத்துள் கிளர்ந்தார் அவர்.

காயங்கள் ஏற்படுவதற்கான கனவுகளும் எழுந்திராத பருவமாகயிருந்தது அது. காணும்போது அந்த ஆங்கார அழகின் அற்புதத்தில் அவரது கண்கள் மொய்த்துத் திரிந்ததென்பது, அவரே அவள்மீது ஆதர்ஷம்கொண்டு அலைந்தாரென்பதின் அர்த்தமாகாதே.

காலம் போகப் போக தனக்குள் கிடந்த ஆசையின் வெடிப்புக்களை அவர் எவ்வளவு இங்கிதமாக அடக்கிவைத்து தன்னைத் தானாக, ஒரு சட்டம்பியாகப் பராமரித்தார்! அவள் தஞ்சாவூர் போய்விட்டதாகத் தெரிந்த கணத்தில் அதிர்வொன்று நெஞ்சில் விழுந்ததுதான். ஆனால் அதையும் தன் நிதானமான போக்கினால் எவ்வளவு அநாயாசமாகக் கடந்தார்!

 

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலிருந்து ஒரு சனி ஞாயிறு விடுமுறைக்கு நடனம் வீடு வந்திருந்தவேளையில் எதிர்ப்புற பெருங் கல்வீட்டின் வெறுமையை, அது கொண்டிருந்த துயரார்ந்த மௌனத்தை அவதானித்து தாயிடம் உசாவியபோதுதான் தெரிந்தது, சங்கீதம் கற்பதற்கோ வீணை பயில்வதற்கோ அவளை தகப்பன் தஞ்சாவூர் கூட்டிப்போய்விட்டதாக.

‘அவ போன சங்கதி அயல்ல தெரியிறதுக்கே ரண்டு மூண்டு நாளாச்சு; எல்லாத்தையும் காதும் காதும் வைச்சமாதிரிச் செய்திட்டின’ என்றவள், ‘எங்களுக்கென்னத்துக்கு உந்த விடுப்புக் கதையெல்லாம்?’ என்று மேலும் அனுங்கியபோதிலேயே, சங்கீதம் படிக்கவோ, வீணை பயிலவோ அல்லாத ஒரு காரணமுமிருந்ததை உணர்கிறான் நடனம். அதை தாயிடமிருந்தே பிடுங்கி எடுத்துவிட முடியாதென்பது அவனுக்குத் தெரியும். மேலும் அது அந்தளவு அக்கறைப்படுவதற்கான விஷயமாயும் அப்போது தோன்றவில்லை. ஒரு துக்கத்தின் வியாப்திமட்டும் மனம் முழுக்க எழுந்து நின்றிருந்தது. பின்னால், ஆங்காரத்தில் ஜொலிக்கும் அந்த மலரையும் நாளடைவில் அவன் மறந்தேபோனான்.

நில்லென்று சொல்லி நிறுத்த முடியாக் காலத்தின் நகர்ச்சியில் ஆண்டுகள் நகர்கின்றன. ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை முடிக்கிறான் நடனம். தென்மராட்சி மகாவித்தியாலத்தில் நீண்ட விடுப்பில் சென்ற ஓவிய ஆசிரியரின் இடத்தில் பணியாற்ற அதன் அதிபர் நடராசா அவனுக்குத் தற்காலிக நியமனம் கொடுத்திருந்த காலத்தில், தஞ்சாவூரிலிருந்து இசைப் படிப்பு முடிந்து வீடு திரும்பியிருந்த மலரை ஒருநாள் வீட்டு விறாந்தையில் நிற்க காணுகிறான் நடனம்.

உடம்பு பொலிந்தும், இன்னும் வடிவேறியும், சேலையில் உயரமானவளாயும் தோன்றிய மலரைக் கண்டவன் திகைத்தப்போனான். கைகளும் நீண்டு விட்டனபோல் அருகுகளில் தொங்கிக்கொண்டிருந்தன.வீணைப் பயிற்சியில் விரல்களும் நீண்டிருக்குமோவெனக் காண கூர்ந்து பார்த்து சாத்தியமற்ற முயற்சியைச் செய்தான். இவையெல்லாம் அதுவரை இருந்திராத ஓர் ஈர்ப்பை தன்னுள் கிளர்ந்தெழச் செய்வதை அவனால் உணரமுடிந்தது. அந்தளவு ஈர்ப்பு அந்த வயதில் இல்லாவிட்டால் எப்படியென அவனும் எண்ணியிருக்கக் கூடும். மேலும் அவனுள் முகிழ்த்துக்கொண்டிருந்த ஓவியக் கலையின் ஆர்வம் இன்னொரு காரணமாயிருந்து அவனை ஒதுங்கப்பண்ணிற்று.

இலங்கை ஓவியக் கலை வரலாற்றில் அதுவொரு முக்கியமான காலகட்டமாகயிருந்தது.

இலங்கையின் புராதன சிற்ப சித்திர வரலாற்றுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டெனினும், அதன் நவீன ஓவிய வரலாறு அந்தளவு பெயர்பெற்றில்லை; பெரும் பாய்ச்சல்களெதுவும் அதன் வழியில் நிகழ்த்தப்பெற்றிருக்கவில்லை. இந்திய மற்றும் ஐரோப்பிய ஓவிய மாதிரிகளின் அடியொற்றுதலாகவே அதன் முயற்சிகளின் வரலாறு இருந்திருந்தது. அவ் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்துசெல்ல பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் நிலைக்களன்களாய் நாற்பதுகளில் கோப்பாயில் இயங்கத் துவங்கிய வின்ஸர் கலைக் கழகத்தையும், கொழும்பில் இயங்கிய ‘43 குழுவினர்’ ஓவியக் கழகத்தையும் குறிப்பிட முடியும்.

இதன் செல்வழியில் 60களின் ஆரம்பம் இன்னும்கூடிய முக்கியத்துவமுடையது. இக் காலப்பகுதியில்தான் விடுமுறைக் கால ஓவியர் கழகம் என்ற அமைப்பு மாற்கு, எம்.எஸ்.கந்தையா, க.நல்லநாதன், சி.பொன்னம்பலம் ஆகியோரின் முயற்சியில் இயங்க ஆரம்பித்தது. இக் கால ஓவிய முயற்சிகளில் தமிழ் இலக்கியத் துறையில் ஏற்பட்டதுபோன்ற ஒரு வீச்சு காணப்பட்டதென்பதைச் சிறந்த அவதானமாகக் கொள்ளலாம்.

இன்னும் குறிப்பாகச் சுட்ட ஒருபோது சித்திர வித்தியாதிகாரியாகயிருந்த எஸ்.ஆர்.கனகசபையின் முயற்சியைச் சொல்லவேண்டும். அவரே, அதுவரை வழக்கத்திலிருந்த நீர் வர்ண ஓவிய முறையிருந்த ஓவியப் பாதையில் தைல வர்ண ஓவிய முறையினை அறிமுகப்படுத்தினார்.

ஓவியர் பெனடிக்றினால் ஆரம்பிக்கப்பட்ட  ஈழக் கலை மன்றத்து ஓவியர்களுடனான பரிச்சயத்தின் பின்னாகவே தைல வர்ண ஓவிய முறைமையில் அவன் தீவிரம் கொள்கிறான். வகுப்புக்கு வெளியே கலை முயற்சிளில் ஈடுபட்டவர்களையும், தொழில் கற்பித்தலாக இல்லாதவர்களையும்கொண்ட இக் குழுவால் இலங்கை ஓவிய உலகில் செய்வதற்கு நிறைய வாசல்கள் திறக்கப்பட்டன. ஆரம்ப கால முதல் மதம் என்கிற வட்டத்துள் திணிக்கப்பட்டிருந்த ஓவியக் கலை, அதிலிருந்தும் வெளியேறி சிந்தனை அளவிலாவது சுதந்திரமாய் இயங்க அதன்மேல்தான் முடிந்திருந்தது.

எப்படியோ நாளடைவில் கோப்பாய்த் தென்னங் கள்ளிலும்  நடனத்துக்கு தீவிரம் விழுந்துபோயிற்று. ஆயினும் ஊரில் பெயர் கெடாத நல்லபிள்ளையாக இருந்துகொண்டான். அந்த ஓவியக் கனவில் மலரை அவ்வப்போது நினைக்க முடிந்தானே தவிர, ஆசைப்படுமளவு செல்ல அவனுக்கு நேரமில்லாதும் போய்விட்டது.

ஆனால் உண்மையில் அவன் நினைத்திருந்த அளவிலன்றி அதற்கு மேலேயே அந்த ஈர்ப்பு வளர்ந்திருந்ததை, அக்கம்பக்கத்தில் அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதென்ற தகவல் காதில் விழுந்த கணத்தில்தான் அவனாலுமே தெரிய முடிந்தது. 

பருத்தித்துறையில் தோட்ட நிலங்களாய், தென்னந் தோட்டங்களாய், வீடு பணம் நகைகளாயென பெரும் சீதனம் பேசப்பட்டதாய் மக்கள் பேசி ஆச்சரியப்பட்டனர். ஒருகாலத்தில் நல்லூர் ராஜதானியில் செல்வாக்குள்ளவராய் இருந்தவர்களின் பரம்பரையென்ற அவர்களது பிரலாபத்தில் கொஞ்சமும் பொய்யில்லையென்பது அதிலிருந்து நிரூபணமாயிற்று.

அப்படியான சம்பந்தப் பேச்சு கேட்டு, நான்கு பரப்பு தோட்டக்காணியையும் மூன்று பரப்பு வீட்டு நிலத்தையும்  கொண்டிருக்கும் ஒரு குடும்பத்துப் பிள்ளை மனம் துவள்தலில் எந்த நியாயமுமில்லை.

இவ்வாறான தன்னிலைத் தெளிவிருந்த நடனம் ட்றிபேர்க் கல்லூரியில் கிடைத்த தன் புதிய ஆசிரிய நியமனத்தோடு தன்னையும், தன் சமூகத் தளத்தையும், வாழ்வின் சவால்களையும் எதிர்கொள்ளத் துவங்கினான். ரத்தம், மரணங்கள் இல்லையெனினும் அது ஒரு யுத்தமெனப்படலாம். கீழ்மையாய், மகத்துவமாய் அதில் எத்தனை எத்தனை சம்பவங்கள்!

(தொடரும்)

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்