சாம்பரில் திரண்ட சொற்கள் (நாவல்) 6

6 அவ ளது சொல்லால், விழியால் வதைபட்ட அந்த நாளிலிருந்து சில தினங்கள் கடந்துபோயிருந்தும், அவற்றில் உறைந்திருந்த தீவிரத்தின் அளவில் எதுவித மாற்றத்தையும் சுந்தரம் காணமுடியாதவராய் இருந்தார். அதிலிருந்து தன்போலவே அவளிலும் அந்தச் சம்பவம் ஆழ்ந்த பாதிப்பைச் செய்திருப்பதாய் அவர் யூகம்செய்துகொண்டார். நடந்த சம்பவத்திற்கான ஆதிமூல சம்பவம்கூட அவ்வாறான பாதிப்பை இருவரிலும் விளைத்திருக்கமுடியும். அவள் கண்களில் இன்னும் அந்த ‘நல்லாய் வேணும்’ என்ற வஞ்ச மகிழ்ச்சியும், அதன் பின்னணியில் விரிந்திருந்த இளக்காரத்தின் தொனிப்பும் அதையே சுட்டிப்பதாய் அவர் எண்ணினார். குளிர்காலம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டிருந்து அவரது நடமாட்டத்தை ஆசுவாசப்படுத்தியது. பனி கொட்டியிருந்த ஒரு நாள் மாலையில், இறுகாத பனி சறுக்காதென நடக்க முயற்சித்து கடைக்குப் போய்வரும் வழியில் சறுக்கி விழுந்துபோனார். நல்லவேளையாக நோகிற அளவு அடியேதும் படாமல் தப்பித்துக்கொண்டார். அவர் கடக்கச் சிரமப்படும் கடந்த காலத்தைப்போலவே, அங்கே அந்தப் பனிகாலமும் அவரைச் சிரமம் படுத்தியது. எப்படியோ அந்த ஆண்டின் பனிகாலம் முடிவுக்கு வந்...