சாம்பரில் திரண்ட சொற்கள் (நாவல்) 6

 



 

6

அவளது சொல்லால், விழியால் வதைபட்ட அந்த நாளிலிருந்து சில தினங்கள் கடந்துபோயிருந்தும், அவற்றில் உறைந்திருந்த தீவிரத்தின் அளவில் எதுவித மாற்றத்தையும் சுந்தரம் காணமுடியாதவராய் இருந்தார். அதிலிருந்து தன்போலவே அவளிலும் அந்தச் சம்பவம் ஆழ்ந்த பாதிப்பைச் செய்திருப்பதாய் அவர்  யூகம்செய்துகொண்டார்.

நடந்த சம்பவத்திற்கான ஆதிமூல சம்பவம்கூட அவ்வாறான பாதிப்பை இருவரிலும் விளைத்திருக்கமுடியும். அவள் கண்களில் இன்னும் அந்த ‘நல்லாய் வேணும்’ என்ற வஞ்ச மகிழ்ச்சியும், அதன் பின்னணியில் விரிந்திருந்த இளக்காரத்தின் தொனிப்பும் அதையே சுட்டிப்பதாய் அவர் எண்ணினார்.

குளிர்காலம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டிருந்து அவரது நடமாட்டத்தை ஆசுவாசப்படுத்தியது.  பனி கொட்டியிருந்த ஒரு நாள் மாலையில், இறுகாத பனி சறுக்காதென நடக்க முயற்சித்து கடைக்குப் போய்வரும் வழியில் சறுக்கி விழுந்துபோனார். நல்லவேளையாக நோகிற அளவு அடியேதும் படாமல் தப்பித்துக்கொண்டார். அவர் கடக்கச் சிரமப்படும் கடந்த காலத்தைப்போலவே, அங்கே அந்தப் பனிகாலமும் அவரைச் சிரமம் படுத்தியது.

எப்படியோ அந்த ஆண்டின் பனிகாலம் முடிவுக்கு வந்துவிட்டது. இளவேனில் சிவப்பாய் பச்சையாய் தன்னை அடையாளப்படுத்தத் துவங்கிவிட்டது. முதல்நாள் பின்முற்றம் சென்றிருந்தவேளை பச்சை இலை செறித்த தன் கொடி படர்த்த காட்டு மல்லிகைச் செடி துடித்துக்கொண்டு இருப்பதும் கண்டிருந்தார். ஆயினும் அவர் மனம் பூரண நிம்மதியில் இருந்திருக்கவில்லை.  

அன்று முழுவதும் ‘நானாய்த் தேடி வரேல்லையே!’ என மலர்  வெடித்திருந்த வார்த்தைகள் ஏனோ மனத்தின் ஞாபகப் படுக்கையிலிருந்து அடிக்கடி எழுந்துகொண்டிருந்தன. அது விரிக்கக்கூடிய காட்சிகள் ஒரு நீண்ட காலப்பரப்பின் பிரமாண்டம் கொண்டது. அது பவளமாச்சியை அவருக்கு நினைவில் இழுத்துவந்தது.

அவரது மண அவலங்களின் காரணஸ்தி அவளாகவா இருந்தாள்?

அவள் மறைந்து போய் இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவருடன் அவ்வளவு நெருக்கமாக இருந்த அவளை நினைக்கவும் அவருக்கு  அதிகம் பொழுது அங்கே இருந்திருக்கவில்லை. அவர் வாழ்க்கையைத் தேடியுமல்ல, வாழ்க்கையென்று தான் கருதியதின் பின்னால் ஓடிக்கொண்டிருந்துவிட்டார்.

ஆனால் அண்மைக் காலமாய் அவருக்கு அவள் நினைப்பு தோன்றியிருப்பினும், அனுசரணைப் பாங்கில் அது அமைந்திருக்கவில்லை.

இப்போது பொழுது இருந்ததோ இல்லையோ, அவர் நினைத்தே ஆகவேண்டும். ஏனெனில் அவர் அந்த வலையில் வீழ்ந்து, கடந்த நாற்பதாண்டுகளாக அடையவேண்டிய வாழ்வின் ஸ்திதிகளை அடைய முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதான ஏக்கமொன்று அவரிடத்தில் எழுந்திருக்கிறது. அவற்றையெல்லாம் பவளமாச்சியால் தவிர்த்திருக்கமுடியும் என்கிறதான எண்ணம் அவர் நினைவில் ஊறிக்கொண்டு இருக்கிறது.  

அந்தத் திருமணப் பேச்சின் இறுதித் தருணத்தில் எதுவும் பேசாதிருந்தது அவள் விட்ட பெருங்குறையாக அவருக்குத் தோன்றுகிறது.

அது அப்படித்தானா? அவர் அவ்வாறு நினைப்பதற்கான ஏது இருக்கிறதா?

இல்லை. அவள் தாடை இழுத்து, நாக்கு உள்வாங்கி நோய்வாய்ப் பட்டிருந்தாள். அவளே அதைத் தடுக்கவும் நினைத்திருக்கலாம். இயலாது போயிருப்பாள். அந்தக் கண்கள் ஏதோ சொல்லத்தான் முயற்சித்தன என்பதை அவரே கண்டிருந்தார். அவளால் முடியாதுதான் போயிருக்கும். அப்போதும் தன்னிழப்பின் வலிதினை எண்ண, அவள் கைகளை அசைத்தாவது கல்யாணத்துக்கான சின்ன மாமாவின் சாதகமான அபிப்பிராய உதிர்ப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் எந்தவோர் அபாண்டத்தையும் பாட்டிமீது அவர் திணித்துவிடக் கூடாது. அவள் அவரைக் கதைகளால் வளர்த்தவள். இன்பமான, ஏற்றமான, வெற்றியான, தோல்வியான, வீழ்ச்சியான, அவரது அப்போதைய பருவத்தின் விருப்பமான கதைகளாக அவை இருந்தன. தானுறாத அனுபவ அறிவினை அவ்வாறுதானே அவளிடமிருந்து அவரடைந்தார்!

தன்னூர்போல் அயலூரெங்கும் தெரிந்திருந்தவள் பவளம் ஆச்சி. அவன் காணாத வாழ்வுதான் அவள் வாழ்ந்தது. ஆயினும் தன் வாழ்வினை ருசிதரும் கதைகளாக்கி தன்னை அவனிடத்தில் முழுமையாகவும் அவள் வெளிப்படுத்தியிருந்தாள்.

செற்றியில் படுத்து நிலக்கீழ் வீட்டின் கண்ணாடி ஜன்னல்வழி மெல்ல மெல்ல இரவின் காலத்தைக் கவர்ந்து வரும் இளவேனிலின் மாலை வெளியைப் பார்த்தபடி கிடந்தவருக்கு நெஞ்சு நெகிழ்ந்தது. கண் கலங்கியது. அவர் ஒரு காலத்தில் விற்பன்னம் கொண்டிருந்த ஓவியக் கலையின் மூலம்கூட ஒருவகையில் அவளாகத்தானே இருந்தது!

அவர் அவளது நினைவுக்கு மாசு கற்பித்துவிடக்கூடாது.

எல்லாம் யோசித்தார் சுந்தரம்.

அன்றிரவு முழுக்க அவள் நினைவே தன்னை ஆக்கிரமிக்கப்போகிறதென்று அவருக்குத் தெரிந்தது. அதை அவர் பிரியத்தோடு செய்வார். அவள் எப்போதும் எண்ணப்படவேண்டியவள்; அன்றெனினும், அவ்வப்போதாவது அவர் எண்ணியாகவேண்டும்.

அவளை அன்பாகவும் ஆதரவாகவும் அனுதாபத்துடனும் எண்ணப்படவேண்டிய நிறைந்த கடப்பாடு அவருக்குண்டு.

அவளது பொலிந்த முகம், அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுபோலவே பிறரை எண்ணவைத்திருந்தாலும், அவனுக்குத் தெரியும், அவனுக்கு மட்டும்தான் தெரியும், அவள் வாழ்வு மணமான சிறிதுகாலத்துக்குப் பின்னால் தொடர்ந்தும் அதுபோலவே இருந்திருக்கவில்லையென.,

அவள் காதலினதும் காமத்தினதும் வண்ணமெல்லாம் கண்ட வாழ்வு ஒருபொழுதில் தனிமையும் துயரும் பிரிவும் ஏக்கமுமாய் ஆகிப்போனது.

வன்னிக் கமத்துக் குடிசையில் உச்சபட்ச வாழ்வின் அனுபவங்களை செம்பவளமும் கதிரமலையும் அடைந்துகொண்டிருந்த வேளையில், அவளது அன்னையும் மாமனும் தங்கமணி அக்காவும் வந்தழைத்து வடமராட்சிக்கு கூட்டிவந்த பின்னால், ‘ஒட்டலி’யாய் அப் பகுதியில் ஊர்சுற்றிக்கொண்டிருந்த செம்பவளம் ஆங்காங்கே பிடிக்கணக்கில் தசை வைத்துப்போனாள். உளப் பூரிப்பு காரணமென எல்லோரும் வாய்ச்சொல் அருளினார்கள்.

பார்வைக்கு அது பெரும் வசீகரத்தை அவளுக்கு அளித்தது. குழந்தை வேண்டுமென்றொரு தவனம் அவர்களில் தோன்றியிராத காலமாகயிருந்தது அது. அவர்களே குழந்தைகளாக பட்டைக் கிணற்று நீரை பாலாற்று நீராக ஒருவர்மீது ஒருவர் மாறிமாறி அபிசேகித்து காமன்விழா கொண்டாடினார்கள். முதல் சாமமென்ன, நடுச் சாமமென்ன, வைகறையென்ன எந்தப்பொழுதிலும் அவள் வெறியடங்கிக் கிடந்தெழுப்பும் கலீர்ச் சிரிப்பு வீட்டின் சமீபத்திலிருந்து கிழக்கநோக்கிப் பரந்திருந்த வல்லைவெளி கடந்தும் இசை பரத்தியது.

‘அடங்கு… அடங்கு… அடியே செம்பவளம், காடுலவும் பேய்களும் உன் சிரிப்புக் கேட்டு உன்னோடு சரஸத்துக்கு வந்துவிடு’மென கதிரமலை அவளை ஒவ்வோர் ஆலாபனைகளின் பின்பும் அடக்கவேண்டியதாயிற்று.

வெளியே திண்ணையில் அல்லது பழைய வண்டிற் கொட்டிலில் படுத்துறங்கும் தாயின் வைதவ்யத்திற்கும் அது சவாலாக இருந்திருக்கக்கூடும். எப்படியோ ஏது விக்னமுமின்றி, மகளின் சந்தோஷமான வாழ்க்கையைக் கொண்டாடிவிட்டுத்தான் அந்த ‘அரக்க’ விரதகாறியான தாய் கண்ணை மூடினாள்.

சராசரி மாதத்தின் பாதி நாட்களில் வடமாகாணத்தின் எந்தத் திசையிலாவது கொடியேறும் எந்தக் கோயிலது விரதானுஷ்டானத்தையும் அவள் தவற விட்டிருக்காததில் அந்த அரக்கத்தனம் அவளில் ஏறியிருந்தது.

அவளது அந்தச் சாவை ‘நல்ல சா’வென்றது ஊர். தோய்ந்து, கண்ணகையம்மன் கோவிலுக்குப் போய்வந்து, சோறு வடித்து மைசூர்ப் பருப்பின் வாசம் கமகமக்கும் ஒற்றைக் கறியோடு அம்மனுக்குப் படைத்து, அதில் கிள்ளி காகத்தின் பங்கு வைத்து, அவள் ‘கா… கா…’வெனக் கரைந்தழைக்கு முன்னமே எங்கிருந்தோ தாவிவந்து அவளது படையலைக் கொத்திவிட்டு காகங்கள் பறந்துபோக, தான் வந்து சாப்பிட்டுவிட்டு திண்ணையில் சரிந்தவள் பின்னால் எழும்பவில்லை.

சாணமிட்டு மெழுகிய புதுத் திண்ணையில் ‘அப்பாடி…!’யெனச் சரிந்தவள் குரலை சற்றுத் தள்ளி முற்றத்து பூவரசு மர நிழலில் நின்றிருந்த கதிரமலை கண்டான். அவ்வாறு ஒரு களைப்பை அவள் என்றும் காற்றில் ஊதியதில்லயென அறிந்திருந்த செம்பவளம் ஆச்சரியமுடன் திரும்ப ‘கெக்… கெக்…’ என்று விக்கல் கேட்டாள்.

அவள் கண்டுகொண்டிருக்கையிலேயே தாயின் கழுத்து முறிந்ததுபோல் தொங்கிச் சரிந்தது. ஓடிக் கிட்டப் போய் ‘ஆச்சி… ஆச்சி’யெனக் கத்தினால் பதிலில்லை. அவள் நீண்டவழி அந்நேரம்வரை போய்விட்டிருந்தாள்.

அது நல்ல சாவுதான்.

உயிர் பிரிந்தவேளையிலும் ஒரு துன்பம் உற்றி  ருக்கவில்லை.

 

 

தாயின் மரணம் செம்பவளத்தின் வாழ்க்கையில் ஒரு புள்ளியாக மாறிப்போனது. அவளது காதல் வாழ்வின் திருப்புமுனை அது.

அடக்கத்துள்ளிருந்த கதிரமலையின் இன்னோர் ஆவி தடையுடைத்துக் கிளம்பிய நாளின் எல்லையாகவும் அதனைக் கொள்ளமுடியும்.

கதிரமலையின் உள்ளே இருந்த ஆவியின் குணவிஸ்தாரம் அவ்வப்போது வெளித் தெரியச் செய்திருந்ததாயினும், பின்னால் அது தனதான குண விஸ்தாரத்தைக் முழுதுமாய்க் காட்டத் தொடங்கியமை வேறுவிதழாகயிருந்தது.

வடபகுதிக் கோயில்களின் பங்குனி, சித்திரை, வைகாசி மாத இரவுகள் கூத்துமேடைகளின் இசையும் ஆட்டமுமாய்ப் பொலிந்த காலமது. காத்தவராயன், பவளக்கொடி, நல்லதங்காள் என கூத்துக்கள் சாதாரணர்களின் மனங்களையும் கொள்ளைகொண்டிருந்தன. ஒருவகையில் அவர்களே அதிகளவில் ஆகர்ஷிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அந்த எழுப்பத்தில் மாதத்துக்கு பத்திலிருந்து இருபதுவரையான கூத்துக்கள் மேடையேற்றப்பட்டன. கோயில்களின் முன்றில்கள் இதனால் விசேஷம் பெற்றன.

இந்தச் சிறப்பின் மய்யமாக அல்வாய் முத்துமாரி அம்மன் கோயில் சிறந்திருந்ததாய் ஊர் பேசியது. நெல்லண்டைப் பத்திரகாளியம்மன் கோயில் அதற்கடுத்ததாய் விசேஷம் பெற்றது.

மாலைகளில் கிளம்பி இரவிரவாய் நடந்து கூத்துகளைக் கண்டு களித்துவிட்டு, வீட்டிற்கு விடியற்புறங்களில் கதிரமலையின் வரவிருந்துகொண்டிருந்தது கொஞ்சதக் காலமாய்.

அவனது உழைப்பின்மீதிருந்த ஆக்ரோஷமும் மெல்ல மெல்லக் குறையலாயிற்று.

கூத்துக்கள் முடிந்து அதிகாலைகளில் வந்துகொண்டிருந்தவன் பின்னால் வீட்டுக்கு இரண்டு மூன்று நாட்கள் வராதிருக்கவும் ஆரம்பித்தான்.

செம்பவளத்தால் கேட்டு எதையுமே அறிந்துகொள்ள முடியவில்லை. கேட்பதற்கெல்லாம் முழுப் பல்லையும் காட்டிச் சிரிப்பவனிடமிருந்து எதைத்தான் ஒருவர் புரிந்துகொள்வது?

கூத்திசை மெட்டுக்களை அவ்வப்போது அவன் முணுமுணுப்பதிலிருந்து தனக்கான ஒரு பதிலை அவள் கல்லி எடுத்துக்கொண்டாள். அவனது கூத்தின் மோகம் ஏற்கனவே ஓரளவு தெரிந்திருந்தவள் அந்தப் பதிலோடு அமையவேண்டியதாயிற்று.

சிலநாள் இடையறுந்த அந்த வரவும்  வாரங்கள் மாதங்களென ஆனபோது செம்பவளம் திடுக்கிட்டாள்; செய்வதறியாது திகைத்தாள். அயலூர்களுக்கும் மற்றும் கரைச்சி, கிராஞ்சிபோன்ற இடங்களுக்கும் கூலிகளாய்ச் செல்லும் சிலரிடம் கதிரமலைபற்றி விசாரித்தாள். அதுபற்றிக் கவனிப்பதாய்ச் சொன்ன அவர்களிடம் சிலநாட்களின் பின் சென்று செம்பவளம் கேட்டபோது சொல்வதற்கு சரியான பதில் அவர்கள் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் வல்லைவெளியில் கொடிகாமம் நோக்கிய திசையில் கதிரமலைபோல் ஒருவன் அலைந்து சென்றதாய் சேதியறிந்து, அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தினாள். தன் பாதத்தை மட்டுமன்றி,  கூடச் சென்றிருந்த நொண்டியப்புவின் பாதத்தையும் தேய்ந்ததுதான் மிச்சமாயிற்று.

செம்பவளம் நினைத்தே இருக்கவில்லையே, அந்தளவு பேரானந்தத்துடன் விகசிக்கத் துவங்கிய தன் வாழ்வுக்கு அப்படியோர் இடைவரல் நிகழுமென்று. இரவிரவாய் தனிமையில் கிடந்து கண்ணீராய்க் கொட்டினாள். செம்பவளத்தின் முகத்தில் முன்னொரு காலத்தில் சிரிப்பிருந்ததின் அடையாளத்தையும் காணமுடியாததாயிற்று.

ஒரு நாளிரவு அழுது முடிந்து, கொஞ்சம் துயில முயன்றுகொண்டிருந்த பொழுதில் காற்றில் உயர்ந்தும் தாழ்ந்துமாய் மிதந்து வந்துகொண்டிருந்த அலறல் சத்தமொன்று அவள் கேட்டாள். அலறல், கதறல், கூச்சலென எப்படி அது சொல்லப்படலாமாயினும், அது தானறிந்த குரல்வளையிலிருந்து பிறப்பதாய் ஏனோ எண்ணினாள் செம்பவளம்.

மறுநாள் நொண்டி அப்புவிடம் அதைச் சொல்ல அவள் மறக்கவில்லை. ‘அப்பு… ராத்திரி… ஆரோ கத்தின சத்தமொண்டு கேட்டன் உந்தப் பக்கமாய். கனநேரமாய்க் கேட்டுக்கொண்டிருந்திது. கடலும் ராத்திரி நல்லாய் இரைஞ்சுதெல்லோ… அந்த இரைப்புக்கிடையிலயும் கேட்ட சத்தம் இந்தாளின்ர தானெண்டு வடிவாய்த் தெரிஞ்சிது.’

‘கடல்ப் பக்கமெண்டால் …. நீ சொல்லுறது சரிதான். உந்தப் பக்கத்திலதான் பயித்தியக்காற ஆஸ்பத்திரி இருக்கு. முந்தியெண்டா ஆக்கள் வாறது குறைவு; இப்ப கொஞ்சப் பேரை வைச்சு அங்க வைத்தியம் செய்யினம்.  நானும் சில ராத்திரியளில பேய்கத்திறமாதிரிச் சத்தங்களை அந்தப் பக்கத்திலயிருந்து கேட்டிருக்கிறன். ஆனா நீ என்னண்டு அதை கதிரமலையின்ர சத்தமெண்டு அவ்வளவு அறுதியாய்ச் சொல்லுறாயெண்டுதான் எனக்கு விளங்கேல்ல’ என்றார் நொண்டி அப்பு சின்னத்துரை.

காரணத்தை விபரிக்கவியலாமல் அப்போதும் அது தன் கணவனின் குரலேயென பிடிவாதத்துடன் சாதித்தாள் செம்பவளம்.

‘எதுக்கும் போய்ப் பாத்திடுவம். நீ காலமை வெள்ளண வெளிக்கிட்டு நில்.’

அவர்கள் வெய்யில் எழுமுன்னான ஒரு பொழுததில் சுமார் ஒரு கட்டை தூரத்திலிருந்த ஆஸ்பத்திரியைச் சென்றுசேர்ந்தார்கள். சின்ன வயதில் வல்லிபுரக் கோயிலுக்கு  தாய் தந்தையருடன் பயணித்தபோது மஞ்சள் வெள்ளையாய் அதிசயம் காட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தை தான் கண்டிருந்ததை செம்பவளம் ஞாபகமானாள்.  பின்னாலும் பல வேளைகளில் அதைக் காண முடிந்திருந்தபோதும்  கவனம் அவள் அதில் குவித்திருக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்ததுபோல் பளீரென்ற வர்ணத்திலும் அது அப்போதெல்லாம் இருந்திருக்கவில்லைத்தான்.

உள்ளே செல்ல இயலவில்லையெனினும் கம்பி வலை போட்டிருந்த எல்லையில் நின்று பார்க்கக்கூடியதாய் அனுசரணைபெற முடிந்தது.

செம்பவளம், சின்னத்துரை இருவர் பார்வையிலும் கதிரமலை தட்டுப்படவில்லை.

‘இப்ப என்ன சொல்லுறாய், மோன?’ என்றார் சின்னத்துரை.

‘அந்தாளின்ர குரல்தான், அப்பு. அதில எனக்குச் சந்தேகமில்லை. எதுக்கும் உனக்குத் தெரிஞ்ச அந்த ஆளிட்டப் போய் இன்னொருக்கா விபரமாய்க் கேட்டிட்டு வாவன். அந்தாளை உள்ள வைச்சிருந்தாலும் வைச்சிருப்பின.’ தன் முடிவை அப்போதும் மாற்றிக்கொள்ளாமலே செம்பவளம் வேண்டுதல் விடுத்தாள்.

சின்னத்துரை தனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த அந்த ஊழியனை மறுபடி நயமாக அணுகி, டாக்குத்தர் வாற நேரமெண்டு அவன் ஒதுங்கிப்போகவும் விடாமல் பின்தொடர்ந்து சென்று நயமான வார்த்தைகள் சொல்லி நயமான உபசரிப்புச் செய்ய, ‘உந்தளவு பேரும்தான் இப்ப இஞ்ச இருக்கின’யென முடிவாய்த் தெரிவித்தான் அவன்.

சின்னத்துரை வந்து சொன்னார். அதைக் கேட்ட பின்னரும்கூட தன் கருத்து மாறாமலே சின்னத்துரையின் வற்புறுத்தலுக்காய் வீடுசெல்ல செம்பவளம் சம்மதித்தாள்.

ஆனால் சின்னத்துரை இல்லாமலும் பல நாள்களில் செம்பவளம் அந்த விசர் ஆஸ்பத்திரி வந்து கதிரமலையைத் தேடிவிட்டுப் போயிருக்கிறாள். எட்ட நின்று நீண்டநேரமாய் உள்ளே நிலத்தில் படுத்திருப்போரையும், அவ்வப்போது எழுந்து விறாந்தையில் நடந்து போய்வருவோரையும் கவனித்தும் ஒரு வெள்ளிச் சல்லிக்கு பிரயோசனம் கிட்டவில்லை. அவளது அழுகையை ஆற்றுவதற்கல்ல, பெருக்கவே அந்த முயற்சிகள் கைகூடிப்போயின.

ஊர் செம்பவளத்தின் புருஷன் அவளைவிட்டு ஓடிவிட்டதாகக் கதைக்க ஆரம்பித்தது. அதற்கு  போலியோ நோயில் இளமையிலேயே வலது கால் ஊனமாகிப் போன சின்னத்துரைக் கிழவனைக் காரணமென சிலராவது கதைத்தார்கள்.

அவள்மட்டும் அது கேட்டு மனத்துக்குள்ளாய் சிரித்து அலுத்துக்கொண்டு, விசர் ஆஸ்பத்திரியிலிருந்து ராவுகளில் எழும் தன் கணவனின் கூச்சல்களைச் செவிமடுத்தவாறும், கண்ணீராய்க் கொட்டி பாயை நனைத்தபடியும் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தாள்.

சிலநாள் விட்டுச் சிலநாள் அபூர்வமாய்க் கேட்ட கதிரமலையின் ராக் கூப்பாடு, ஒருபோது துப்புரவாய் அற்றுப்போனது. அப்போது அவள் எண்ணினாள், தன் புருஷன் மீளாவுலகு சென்றுவிட்டானென. அதைத் தவிர வேறு சாத்தியமான எந்த முடிவை அவளால் எட்டியிருக்கமுடியும்?

சுந்தரம் அவள் சொன்ன கதைகள்மூலமே அவள் வாழ்வு  அறிந்தார். தன் கதையென்று தெரிவித்தே அவளும் அக் கதைகளைச் சொல்லியிருந்தாள்.

அவள் அழுதழுது சொல்வதை அழுதழுதுகொண்டே கேட்டான் நடனமும். தன்னை அழப் பண்ணியதாலும் அந்தக் கதைகள் அவளின் நிஜமென அவன் நம்பினான்.

அவளது சோகத்தின் அளவு தெரிந்தவன் அவன்.

அவள் அழுவதை ஒருநாள் நிறுத்திவிட்டு சந்நதி கோயில் போய்வந்தாள். வந்தபோது என்றுமில்லாதவாறு அவளது நெற்றியிலே மூன்று வெண்கோடுகள் பளீரென்று இலங்கிக்கொண்டிருந்தன.  அந்தக் கோலம் அவளில் நீண்டகாலம் நிலைத்திருந்தது.

அது அவளை தன் சோகத்திலிருந்து மீட்டெடுத்திருப்பினும், அவளது போராட்டம் மேலேதான் ஆரம்பமானது.

அதையும் அவள் நடனத்துக்குச் சொல்லியிருக்கிறாள்.

 

எதிர்நின்ற யுத்தத்தை முகங்கொள்ள முழுத் தயாராவதுபோல் முதல்முறையாக வெற்றிலைக்கு பொயிலைக் காம்பு திருகியெடுத்து வாய்க்குள் திணித்தாள் செம்பவளம்.

காலின் பெருவிரலிலிருந்து தலைவரை ஒரு கிறுகிறுப்பு ஏறுவதை அவளால் உணரமுடிந்தது. அந்தக் கிறக்கப்பொழுதில் நனைந்து முடிய வீட்டுத் திண்ணையில் ஒடுங்கிப்போயிருந்த சின்னத்துரையிடம், ‘அப்பு, கொடிகாமச் சந்தை எந்த நாளிலயெணை கூடுறது?’ எனக் கேட்டாள்.

காரணத்தினை ஊகிக்கவும் இயலாதவர், சிறிதுநேரம் அவளையே பார்த்தபடி இருந்துவிட்டு, ‘திங்களிலயும் வெள்ளியிலயும் பெருஞ்சந்தை’ என்றார்.

‘அச்சா. இண்டைக்கு என்ன நாள், அப்பு? வியாழக்கிழமையல்லோ? அச்சா. நாளைக்கு வெள்ளிக்கிழமை கொடிகாமஞ் சந்தையில மரக்கறி யாவாரத்துக்கு நான் போறனப்பு. என்ர தோட்டத்தில விளைஞ்சதுமட்டும்தான் கொண்டுபோறன். பாப்பம், எப்பிடிப் போகுதெண்டு’ என்றுவிட்டு ஏகாங்கியாய் வானம் பார்த்தபடி நின்று ஒரு மெல்லிய சிரிப்பைக் கிணுகிணுத்தாள்.

சின்னத்துரை முக்கி முனகி நிமிர்ந்து திண்ணைச் சுவரோடு சாய்ந்தமர்ந்தார். ‘உனக்கு அது தோதுப்படா. சரியான கயிற்றமாயிருக்கும்.’

‘கயிற்றம்தான். தெரியும். கயிற்றம் எதில இல்லையெண்டிறாய், அப்பு? தோட்டஞ் செய்யயிறதில இல்லையோ? வயல்வேலை செய்யிறதில இல்லையோ?’

‘அதுகளெல்லாம் உடம்புக்கு வாற வருத்தங்களாயிருக்கும், மோன. சந்தை யாவாரத்தில உன்னைப்போல சகமனிசரால கயிற்றம் வரும். அதுகும் உந்த வயசில…. வேறவேற விதமாய்க் கயிற்றம்வரும்.’

கேட்ட செம்பவளம் சிரித்தாள். வேலியோரம் போய் வெற்றிலைத் துப்பலை உமிழ்ந்தாள். பின் சின்னத்துரையைத் திரும்பிப் பார்த்தாள். ‘அந்தமாதிரிக் கயிற்றங்கள் இப்ப எனக்கு வரேல்லயெண்டு நெக்கிறியோ, அப்பு? தாங்கிக்கொண்டுதான வாறன். சந்தை யாவாரத்தால வாறதயும் தாங்கியிட்டாப் போச்சு. நாளைக்கு நான் கொடிகாமம் சந்தைக்கு போறன். காலம முதல் வானுக்கு வெளிக்கிடுவன். நீ குடிநீர் மருந்தைக் குடிக்க மறந்திடாத. குரக்கன் புட்டுத்தான் கொஞ்சம் கிடக்கு. மத்தியானப்பாட்ட ஒருமாதிரிச் சமாளிச்சுக்கொள். நான் திரும்ப, எப்பிடியும் பொழுதுபட்டிடும்.’

சின்னத்துரை எதுவும் பேசவில்லை. சிறிதுநேரம் பொறுத்து தனக்குள்ளாய் அங்கலாய்த்தார். ‘கொடிகாமம் சந்தைக்கு எண்டைக்காச்சும் போயிருக்குமோவெண்டும் தெரியாது. இந்தப் புள்ள அங்க போய் என்ன செய்யப்போகுதோ?’

அது காதில் விழுந்த செம்பவளத்துக்கு அதன் அர்த்தம் புரிய முகத்தில் துலங்கிக்கொண்டிருந்த மலர்ச்சி மெல்ல மங்கியது. ஆனால் கண்களில், நெரிந்து நின்றிருந்த இமைகளில் தீர்மானம் மாற்றமின்றி நிறைந்திருந்தது.

மறுநாள் அதிகாலையில் மந்திகை – கொடிகாமம் வீதியில் தட்டி வேனுக்காக ஒரு சாக்கு முட்டவும், ஒரு கடகம் நிறையவும் காய்கறிகளுடன் காத்திருந்த செம்பவளம், கொடிகாமச் சந்தையடியில் இறங்கி, அதுவரை மனத்திலிருந்த வீறு துணிவு நம்பிக்கையெல்லாம் நொடிப் பொழுதில் எரிந்துபோனவளாக  கூடியிருந்த சந்தையின் பிரமாண்டத்தில் வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்தாள்.

சிறிதுநேரத்தில் தனது சமகால வாழ்நிலையை, அதற்கெதிரான தனது பந்தயத்தை மனத்தில் உள்வாங்கி ஏற்கனவே வாயுள் அதக்கியிருந்த வெற்றிலைக்கு மேலும் ஒரு துண்டு பொயிலைக் காம்பினைத் திருகிப் போட்டுக்கொண்டு தன்னிலை சிறிது மீளப்பெற்றாள்.

சந்தையுள் நுழைந்து வியாபாரத்தைத் துவக்கினாலும், அநுபவ பாத்தியதையுள்ள பிற வியாபாரிகளின் நேரடி, மறைமுக இடைஞ்சல்களால் அன்றைய வியாபாரம் அவளுக்கு படுதோல்வியில் முடிந்தது.

அடுத்த திங்கட்கிழமை சின்னத்துரையின் பொச்சரிப்பையும் கவனம்கொள்ளாமல் சந்தையை எதிர்கொள்ள சன்னதி முருகனுக்கு பாற்செம்பு எடுக்கிற நேர்த்தி வைத்துக்கொண்டு போனாள். முருகன் முன்னரே தன் துணையை அவளுக்காக அனுப்பியிருந்ததுபோல் ஒரு தொம்மைக் கிழவன் அநாயாசமான சக்தியுடன் அவளது கடகம் சாக்குகளை தானே வலியவந்து இறக்க உதவியது. மட்டுமன்றி, அவள் ஓரளவு வசதியாகயிருந்து வியாபாரத்தை நடத்த வாய்ச் சண்டையில் ஓரிடமும் ஒதுக்கிக் கொடுத்தது.

படிப்படியாக மூன்றாம் நான்காம் சந்தைகளில் சந்தையின் வியாபார நுட்பம் தெரிந்து தனது நம்பிக்கையீனத்தின் ஆழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தாள் செம்பவளம்.

சனி செவ்வாய் வியாழன் ஆகிய நாட்களில் கச்சாய் மட்டுவில் கெருடாவில் மீசாலை சரசாலை தச்சன்தோப்பு கைதடி ஆகிய தோட்டக் கிராமங்களுக்கு மய்யமான சாவகச்சேரியின் பெருஞ் சந்தையிலும் அவள் வியாபாரத்தை விரித்துக்கொண்டாள்.

தன்னந்தனியைனாய் தன்மீது சுமத்தப்பட்ட வாழ்வின் நிர்க்கதிக்கு எதிராக அவள் நடத்தியது எவ்வகையானதொரு பெருயுத்தம்!

அவளை அறிய அவ்வளவும் போதுமானவை சுந்தரத்திற்கு.

நேரம் சிறிது நகர எல்லா அவசமும் அடங்கி அவர் மனம் ஒரு தெளிவையுற்றது. அவள்பற்றி பொல்லாப்பாய் நினைத்ததற்காய் நாணினார் அவர். பாதகம் தனக்குச் செய்தவள்போலவே ஒரு காட்டமான மனநிலையை அவள்மீது கொண்டிருந்ததற்காய் அவர் மனம் நெக்குருகத் தொடங்கியது.

 

(தொடரும்)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்